காதலர் தினம்:கடிதங்கள்

 ஜெ..

உங்கள் பதில்காதலர் தினமும் தாலிபானியமும் படித்து மிக வருத்தப் பட்டேன்.

ராம் சேனா பற்றிய அவர் கேள்வி வேறு தளம். உங்கள் பதில் வேறு தளம்.

ஒரு சாதாரண இந்துவாகத் தன்னை உணர்ந்து கொள்ளும் மனிதர்களின் பார்வை இதில் வேறு. சுற்றி வர, கட்டுப் பாடுகள் நிறைந்த மதங்களும் அவற்றின் அடக்குமுறைச் செயல்பாடுகளும் நிறைந்த உலகில், சுதந்திரமாக வாழும், நாத்திகத்தைக் கூட ஒத்துக் கொள்ளும் ஒரு inclusive ஆன கலாச்சாரமே இந்து மதம்  என்பது ஒரு சாதாரண இந்துவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதிலிருந்து விலகி, லது சாரிகளின் பூஜாரித்துவ இந்து மதமாகி விடுமோ என்ற அச்சத்தில் வரும் கேள்விதான் அது. 

 

ராம் சேனா செய்யும் வன்முறையைப் பற்றிக் கேட்டால், கம்யூனிஸ்ட்கள் செய்ய வில்லையா, திராவிட இயக்கங்கள் செய்ய வில்லையா, இஸ்லாமியர்கள் செய்யவில்லையா என்பது சப்பைக் கட்டு.

 

அதுவும் திராவிட இயக்கங்களைப் பற்றிய உங்கள் பார்வை ஒரே கோணத்திலேயே இருக்கிறது. திராவிட இயக்கங்கள் தாம் வன்முறைக் கலாச்சாரத்தைத் துவங்கின என்பதுவும் தில் ஒன்று. சப்பைக் கட்டுக் கட்ட வேண்டுமெனில் கேட்கலாம், திராவிட இயக்கங்கள் ஆட்சி நடத்தாத பூமியெங்கும், ராம ராஜ்யமா நடந்து கொண்டிருக்கிறது??

 

Your biases are overflowing.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள பாலா,
உங்கள் கடிதம். என்னுடைய முன் தீர்மானங்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் எழுதிய கடிதத்தில்தான் முன் தீர்மானங்களின் சுமை இருக்கிரது.  ஆகவே என் கட்டுரையை நீங்கள் புரிந்துகொள்ளவே முடியாமலாகிவிட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகள் உருவாக்கும் கலாச்சார வன்முறை மட்டுமல்ல அவர்கள் உருவாக்கும் கலாச்சார ஒற்றைப்படையாக்கமே இந்துப் பண்பாட்டுக்கு எதிராது என்பதையே நான் எப்போதும் சொல்லிவருகிறேன். இந்தத்தளத்தில் தொடர்ச்சியான கட்டுரைகளை நீங்கள் காணலாம்.  மாறும் காலத்தை அவர்களைப்போன்ர அடிபப்டைவாதிகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதை மீண்டும் இக்கட்டுரையில் தெளிவான சொற்களில் பதிவுசெய்திருக்கிறேன்.

அதேசமயம் சிலர் தாங்களே கலாச்சார அடிபப்டைவாதிகளாக இருந்துகொன்டு, கலாச்சார அடிபப்டைவாதத்தை மேடைகளில் ஆதரித்துக்கொன்டு இந்த கண்டனத்தை எழுப்புவதில் உள்ள போலித்தனத்தையும் சுட்டிக்காட்டியாகவேண்டும் . ஏனென்றால் அதை இங்கே எவருமே சொல்வதில்லை. கலாச்சார அடக்குமுறையை எதிர்த்துப்பேசும் தகுதி எல்லாவகையான கலாச்சார அடிப்படைவாதத்துக்கும் எதிராகப் பேசும் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு மட்டுமே உண்டு என்பதே என்னுடைய கட்டுரையில் மிக வெளிப்படையான சொற்களில் சொல்லபப்ட்டிருக்கும் செய்தி

அப்படி நான் சொல்வதை அவர்களும் இவர்களும் இவர்களும் செய்கிறார்கள், ஆகவே இவர்கள் செய்தால் தப்பில்லை என்று சொல்வதாக நீங்கள் புரிந்துகொன்டால் அது உங்கல் சிக்கல். நீங்கள்கான் அதை தீர்த்துக்கொள்ள வேன்டும்

தமிழகத்தில் கலாச்சார அடிப்படைவாதத்தின் விதைகள் திராவிட இயக்கத்தால் தூவப்பட்டன என்றால் உலகத்தில் வேறுபகுதியில் அது இல்லையா என்று கேட்பதன் நியாயமே எனக்குப் பிடிபடவில்லை. இருக்கிறது ஜெர்மனியில் கிட்லரும் இத்தாலியில் முஸோலினியும் அதை உருவாக்கினார்கள். மகாராஷ்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கியது. ஆனால் தமிழ்நாட்டில் இவர்கள் உருவாக்கினார்கள். அந்த வரலாற்றை ஏன் மறைக்க வேன்டும்.?

இப்போது இந்து கலாச்சார அடிபப்டைவாதத்தைக் கண்டிப்பவர்கள் தங்கள் மொழிவழி- இனவழி கலாச்சார அடிப்படைவாதச் செயல்பாடுகளை கைவிடுகிறோம் என்று  ஒரு சொல் சொல்லடும். அல்லது நீங்கள் அதைக் கணிக்கிறீர்கள் என்று ஒரு சொல் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு அதைப்பற்றிப் பேசினாலே எரிச்சல் அடைவதென்பது ஆழமான தார்மீக பலவீனத்தின் வெளிப்பாடு மட்டுமே.

 ஒரு வகை கலச்சார அடிப்படைவாதம் முற்போக்கு , இன்னொரு வகை கலாச்சார அடிப்படைவாதம் பிற்போக்கு என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்ளமுடியாது. வழக்கம்போல எனக்கு முத்திரை குத்துவீர்கள். கவலையே இல்லை. குத்துங்கள். ஓய்வாக இருக்கும்போது நீங்கள் உங்களுக்கே குத்திக்கொன்டிருக்கும் முத்திரையையும் சற்று கவனியுங்கள், அவ்வளவுதான்
ஜெ

ஜெ..
 
இதற்கு நான் என் வாழ்க்கையைக் கொண்டே உங்களுக்குப் பதில் சொல்ல விழைகிறேன்.

 

ஈரோட்டில் பிறந்ததால், பெரியார் தான் எனக்கு முதலில் அறிமுகம். முதலில் பிராமணர்களை விரட்டு என்னும் கோஷம் தான் என்னைப் பீடித்திருந்தது. ஆனால் வளர வளர, நான் கண்ட பெரியவர்களுள், பிராமணர்கள் இருந்தது குழப்பம் விளைவித்தது. பாரதியையும், வ.ரா வையும், தி.ஜா வையும், சுந்தர ராமசாமியையும், கமல ஹாஸனையும், , ராமானுஜனையும் கண்டடைந்த போது பிராமண எதிர்ப்பு என்னும் வாதத்தின் ஓட்டை தெரிந்தது. பகுத்தறிவு என்று சொன்ன பெரியாரின் லாஜிக் இடித்தது. அதனால், மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்தல் என்னும் கொள்கையை மட்டும் எடுத்துக் கொண்டு அவரைத் தாண்டி வந்தேன். அண்ணாவும் கலைஞரும்  மொழியை ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்தினார்கள். கட்டாய இந்தி என்று சில முட்டாள்கள் போட்ட சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் வெற்றி கண்டார்கள். ஆனால், ஒரு இயக்கமாக, மாபெரும் சமூக மாற்றம் அவர்களால்தான் வந்தது. தொழிலிழும், கல்வியிலும் சாதனைகள் அவர்கள் காலத்தில் நிகழ்ந்ததே. அதன் அஸ்திவாரம் காமராஜர் போன்ற தலைவர்களால் இடப் பட்டதென்றாலும், கட்டிடம் இவர்கள் எழுப்பியதே. பாபர் மசூதியை இடித்த பாஜபா தான் தங்க நாற்கரச் சாலையையும் கட்டினார்கள் என்பதே சரியான மதிப்பீடு.

 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் கட்சிகள் நிறைய நல்லது செய்திருக்கின்றன – ஏன் இந்த வாரம் துவக்கப் பட்ட, தமிழக நதிகள் இணைப்புத் திட்டம் ஒரு மிகப் பெரிய முன்மாதிரி. ஜெயலலிதாவின் கட்டாய மழை நீர் சேகரிப்பும் ஒரு நல்ல திட்டமே. சென்னையின் கட்டமைப்பும் இவர்களால் உருவானதே. குடிசை மாற்று வாரியம், கண்ணொளி, மற்ற மாநிலங்களில் இருந்து காப்பி அடிக்கப் பட்ட உழவர் சந்தை – எல்லாமே நல்ல திட்டங்கள் ஆனால் எப்போது பார்த்தாலும் காலாவதியாகிப் போன “விஷ விருக்ஷம்” போன்ற கோஷங்கள் சலிப்பூட்டுகின்றன. திராவிட இயக்கம் என்பதே என்னவோ ஒரு கெட்ட வார்த்தை போல் பேசப் படுவது ரொம்ப போரடிக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. (மாற்றாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யோக்கியதை எல்லோருக்கும் தெரியும்). என்னால் சோவையும், சுப்பிரமணிய ஸ்வாமியையும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

 

இன்று திராவிட இயக்கம் ஓரிடத்தில் குடும்ப நிறுவனமாகவும், இன்னொரு இடத்தில் விண்ணளவு ஈகோ கொண்ட ஒரு ஆளுமையிடம் சிக்கியும் அதன் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது  – அதை நியாயப் படுத்தவோ, ஆதரவாகப் பேசவோ வரவில்லை. அதற்கு மாற்றான சக்திகள் இன்னும் shallaow ஆகவும் இருக்கின்றன. அரசியல் எல்லா ஊரையும் போல, மிகக் கேவலமாகவே இங்கும் இருக்கிறது. அதனால், உங்கள் comparison சரியே. இன்று பெரும்பாலான தமிழர்கள் இவர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  தமிழர்கள் ரொம்ப business like. ஆரியக் கூத்தாடினாலும், திராவிடக் தாண்டவக் கோன்கள் காரியத்தில் கண்ணானவர்கள். திராவிட இயக்கத்தின் சமூக நியாயம் அண்ணாவுடன் சமாதியாகி விட்டது.

 

ஆனால், இந்த கேள்வியின் context க்கு இது தேவையில்லை என்பதே என் கருத்து.  ராம் சேனா போன்ற  பெண்களை இழிவு படுத்தும் சக்திகளைக் கண்டிக்கும் இடத்தில்/நேரத்தில் உங்கள் பதில்,  உலகில் உள்ள எல்லா அநியாயங்களையும் பேசுவது, விவாதத்தை நீர்க்கச் செய்யும் என்பதென் கருத்து. இந்த இடத்தில், ராம் சேனா செய்வது தப்பு என்றால் அவர்கள் முகத்தில் உமிழ்வோம்.  இன்னொரு இடத்தில் திராவிட இயக்கங்கள் தவறு செய்தால், அவர்கள் முகத்திலும் உமிழ்வோம். ஒரு பிரச்சினையை அதற்குரிய focus உடன் விவாதித்தல் நல்லதென்பது என் கருத்து.

 
அன்புடன்
 

பாலா

 

 

 

 8888

 பெரியது கேட்கின் அன்புள்ள ஜெ.,
பெரிது பெரிது பாரதம் பெரிது ! பாரதமோ பிரம்மத்தின் படைப்பு
பிரம்மமோ இந்துஞான தரிசனத்தின் கருத்து இந்து ஞானமோ இந்துத்துவ அரசியலின் மேடைப்பேச்சு ந்துத்துவமோ பாஜகவின் ஓட்டிருப்பு
ஓட்டுரிமையோ ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு
ஜனநாயகமோ வாக்காளனின் அறிவில் அடக்கம்
வாக்காளனோ ஊடகத்தின் கைக்குழந்தை
ஊடகத்தின் வலிமை சொல்லவும் பெரிதே

பிகு: ராம்சேனையின் பெயரை இந்த அளவு பிரபலப்படுத்தியதற்கு நம் ஊடகங்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
இந்துத்துவ மதவெறியராக நீங்கள் மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தப்படும் போதும், அது பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் உங்கள் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வருகிறீர்கள். நன்றி.

ரத்தன்
அன்புள்ள ரத்தன்

நன்றி.

இந்து மத வெறியர் என்று குற்றம் சாட்டப்படாத ஆளே இப்போது இந்தியாவில் இல்லை1
ஜெ

 

 

 
 

 

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 11
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 12