அன்புள்ள ஜெ,
விஷால்ராஜாவின் சிறுகதைத்தொகுதியை இன்றுதான் வாசித்து முடித்தேன். அண்மையில் தமிழில் வெளியான ஒரு சிறந்த சிறுகதைத் தொகுதி. இந்தக்கதைகளின் சிறப்பு என்று எதைச் சொல்வேன் என்றால் யதார்த்தவாதக் கதைகளும் மாயக்கதைகளும் கலந்து இருப்பதுதான். திருவருட்செல்வி ஓர் அழகான யதார்த்தவாதக் கதை. ஆனால் அந்தக்கதை இந்நூலின் முகப்படையாளம் அல்ல. பல்வேறு பரிசோதனைக் கதைகளும் இத்தொகுதியிலுள்ளன. எல்லா கதைகளுமே நுணுக்கமான விவரணைகளுடன் செறிவான மொழியில் அமைந்துள்ளன.
தொடர்ச்சியாக நாம் வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் ஒரு சிக்கல் என்னவென்றால் நம்மால் கொஞ்சம் வளவளவென்றிருந்தால்கூட சலிப்படைகிறோம். நீட்டிநீட்டிச் சொன்னால் பிடிப்பதில்லை. எவ்வளவு நீளமாக இருந்தாலும் எல்லா வரிகளும் முக்கியமானவையாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம். திருவருட்செல்வியின் எல்லா கதைகளுமே அப்படிப்பட்ட மொழியுடன் அமைந்துள்ளன.
பலருக்கும் இத்தொகுதியில் பிடித்தமான கதை என்பது திருவருட்செல்விதான். ஏனென்றால் அது கருணை, அன்பு என்னும் விழுமியங்களைக் கொண்ட படைப்பு. எனக்கு அதைவிட பிடித்திருந்தது நிழலின் அசைவு என்னும் கதைதான்.மிக நிதானமாக வெவ்வேறு குணச்சித்திரங்களை வெறும் சித்தரிப்பு வழியாகவே காட்டும் இந்தக்கதை மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்
டி.குணநிதி ராஜா