அன்புள்ள ஜெ,
இப்போதுதான் தீயின் எடை படித்து முடித்தேன். முதன்முறையாக அறம் கூற்றென வந்து பாண்டவர்கள் முன் நின்றிருக்கிறது. சற்று தாமதமாக என்றாலும் இறுதியில் அது வந்தேவிட்டது.
தர்மனின் வில்லான ‘தயை‘ பற்றிய பகுதி மிகவும் அருமையாக இருந்தது. அதேபோல ஸ்தூனகர்ணனின் கதையும், சகுனி பார்பாரிகனிடம் “அக்கையிடம் சொல்லுங்கள்” என கூறும் பகுதியும் சிறப்பாக இருந்தது.
இருட்கனி மற்றும் தீயின் எடையின் மூலம் தந்தை சல்யர் என் மனதை கவர்ந்துவிட்டார். களத்தில் அவர் ஆற்றும் பெருஞ்செயல்கள் திகைக்கச் செய்தன. அவருடைய முடிவும் எதிர்பாரா வண்ணம் அமைந்திருந்தது.
போர் முடிந்த பின், சல்யரால் ஆடையிழந்து, ஆணவம் அழிந்து, பித்தேறிய பார்த்தன் களத்தில் கீழே கிடக்கும் ஆடைகளையும் கவசங்களையும் எடுத்தெடுத்து அணிந்து கொண்டே இருக்கும் இடம் அருமையிலும் அருமை. இந்த பகுதி ஜாக் லண்டனின் “Love of Life” சிறுகதையையும், யான் மார்டலின் “Life of Pi” நாவலையும் எனக்கு நினைவுப்படுத்தியது.
போரில் பீமன் தன்னுடைய கதையை இழந்துவிட்டதால் துரியோதனன் அவனை கொல்லாமல் விட்டு விலகிச் செல்லும் இடம் அவனுடைய மாண்பை காட்டியது.
துரியோதனனுக்கும் பீமனுக்குமான இறுதி போரில் பீமன் நெறிபிறழ்ந்து துரியோதனனின் தொடையறைந்து கொல்லும் இடம் பீமனின் எல்லையில்லா கீழ்மைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது.
துரியோதனன் இறந்தது தெரியாமல், போர் முடிந்ததும் அறியாமல் பீதர்ஆடியின் மூலமாக துரியோதனனின் பாவையை துரியோதனன் என்றே எண்ணி சஞ்சயன் ஆற்றும் போர் வர்ணனைதான் இந்நாவலின் உச்சம் என்று நினைக்கிறேன்.
அதேபோல் துரியோதனனை கொன்றபின் துரியோதனனுடைய பாவையிடம் சண்டையிடும் பீமன், அதனை வெல்ல முடியாமல் தப்பியோடும் இடம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
தனது பெரிய தந்தை நெறிபிறழ்ந்து கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அறிந்து சதானீகன் குமுறும் இடமும், அதன் பின் பிரதிவிந்தியனுக்கு அவன் இடும் தீச்சொல்லும் மிகவும் கூர்மையாக வந்து இறங்கியது.
சதானீகனின் கூற்றை ஆமோதிக்கும் சர்வதனும் சுதசோமனும் சுருதகீர்த்தியும் என் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டனர்.
// சுருதகீர்த்தி நகைக்க சர்வதனும் சுதசோமனும் அச்சிரிப்பில் இணைந்துகொண்டனர்.//
என்ற இந்த வரிகள் என் உள்ளத்தை அசைத்துவிட்டது.
திசைதேர் வெள்ளம், கார்கடல், இருட்கனி ஆகியவை என்னுள் ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கும் காயத்துக்கும் தீயின் எடை அருமருந்தாக அமைந்தது.
– மணிமாறன்