யுவனின் புனைவுலகம் ஏற்கனவே இருக்கும் கதை சொல்லல் தன்மையை மறுதளிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்நவீனத்துவம் என்ற கருத்துரு இலக்கியத்திற்கான மாற்றுக் கருவிகளை முன் வைத்தது. சென்ற 2022 விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் படைப்புகள் வழியே பின்நவீனத்துவத்தின் கருவிகளை அறியமுடிந்தது. கதை என்றவுடனேயே தர்க்க கட்டுமானத்திற்குள் அடுக்கிச் சொல்லும் ஒன்று என அறிமுகமாகியிருந்த வாசகர் முன் அது வேறொன்றை வைத்தது. நேர்கோட்டுத்தன்மையின்மை, சாரமின்மை, மையமின்மை, ஒருமையின்மை என்ற வகையில் அதை எழுதும் எழுத்தாளர் பிரக்ஞை பூர்வமாக அதிக உழைப்பைத் தர வேண்டியதும் கூட. அதுவே வாசக உழைப்பையும் கோரி நின்றது.
சாரு இக்கருவிகளைக் கொண்டு வெறுமே கலைத்துப் போடுதலைச் செய்தவர். ஒரு போதும் கலையின் உச்ச சாத்தியத்தை இக்கருவிகளின் வழி மட்டுமே அடைந்துவிட முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்ததாகவே இன்று தோன்றுகிறது. அல்லது அதையே பரிகசிக்கும் குரலாக நின்று வாசகர்களைக் கைவிடுபவர். ஆனால் யுவன் கலைத்துப் போட்டு கதை சொல்லி அவற்றைக் கோர்ப்பதற்கான ஆயுதங்களையும் வாசகர்களிடம் கையளிக்கிறார். காலபரிமாணத்தின் நேர்கோட்டின்மை, நிகழ்த்தகவுகளின் மாயம், இணைப்பிரபஞ்சங்களின் ஊடாட்டங்கள், நிலையாமை, மரணத்தின் உசாவல், அறியமுடியாமைகளின் மீதான மயக்கம் எனப்பலவற்றின் மூலம் அவற்றைக் கோர்ப்பதற்கான வாய்ப்பை வாசகனுக்கு அளிக்கிறார். இந்த நிச்சயமற்ற பாதையில் வாசகர்கள் தொலைந்து போகா வண்ணம் கதைசொல்லியாக உடன் நின்று காதில் சதா முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார். யுவன் வாசகர்களைக் கைவிடுவது அதை கலைத்து அடுக்கி கொணர்ந்து ஆர்வமாக நீட்டும்போது தான்.
உண்மையில் இந்த கோர்க்கும் ஆயுதங்கள் தத்துவார்த்த தளத்தைச் சார்ந்தவை. அவை உதிரிகளாக கையாளப்பட்டிருப்பதை மிக சாமர்த்தியமாக சித்தர்மரபுடன் இணைக்கிறார் யுவன். பிரக்ஞைபூர்வமாக மிகப்பெரும் உழைப்பைக் கோரி நிற்கும் இந்தக் கூறுமுறையை ”மறுபாதிகளின் கதை”யைச் சொல்ல பயன்படுத்திக் கொண்டார் எனலாம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான விதிகள் செயல்படும் விதத்தை கலையில், இலக்கியத்தில் சொல்ல அசாதாரணமான மனிதர்கள், சூழல்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் எளிய மனிதர்கள், எளிய விடயங்கள், எளிய உசாவல்கள் என யாவற்றிற்கும் கூட பிரபஞ்சத்தின் இதே பிரம்மாண்டமான விதிகளே பொருந்துகிறது என்பதை யுவனின் புனைவுகள் வழி அறிய முடிகிறது. இலக்கியத்தில் சொல்லப்படாத சொல்லப்படாத உதிரிகளின், மறுபாதிகளின் உலகை கரட்டுப்பட்டி எனும் புனைவுப்பிரபஞ்சமாக விரித்திருக்கிறார்.
*
யுவன் புனைவுகளில் உசாவும் கால மயக்கம், மாயை, தற்செயல், நிகழ்த்தகவுகள் போன்றவற்றை முதிரா இளமையில் பல வகைகளில் புனைந்து வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அவற்றை மீட்டிப் பார்க்கும் ஒன்றாக இந்தப்பயணம் அமைந்தது.
“Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both” (Robert Frost)
என்ற வரிகளை முதன் முறையாக பள்ளி காலத்தில் சந்தித்தபோது துணுக்குறலையே அடைந்தேன். ”The Road Not Taken“ என்ற அதன் தலைப்பும் அமானுஷ்யமாகப் பட்டது. அதுவரை என் முன் அவ்வாறு இரு வழிப்பாதையாக வாழ்க்கை பிரிந்து நின்ற தருணங்களை மீட்டியிருந்தேன். நானல்லாமல் பிறர் எனக்காக அப்படி பிரிந்திருந்த இருவழிப்பாதையில் ஒன்றை தேர்வு செய்திருந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தத் தருணத்திற்குப் பிறகு வாழ்க்கை அளிக்கும் அத்தகைய நிகழ்த்தகவை கூர்மையாக கவனித்து பாதையின் பயணத்தை நான் தீர்மானிப்பதாக முடிவெடுத்தேன். இரு வழிப்பாதைகளைப் பொறுத்து ஒன்றில் தான் பயணிக்க முடியும் என்றாலும் மனதளவில் இன்னொரு பாதையை நாம் மீட்டிக் கொண்டே இருக்கிறோம்.
இணைப்பிரபஞ்சங்களைப் பற்றி கேள்விப்பட்ட போது வாழ்வில் பிரிந்து கிடக்கும் பல்லாயிரக்கணக்கான அவ்வாறான பாதைகளில் நானே பயணம் செய்வதாக மறுகியிருக்கிறேன். காலம் (Time), வெளி(Space) சார்ந்த கருத்துருவாக்கங்களும் அவ்வாறு பல வகையான மயக்கத்தை அளித்திருக்கின்றன. அதற்கும் அப்பால் ஐந்தாம் பரிமாணமாக ஈர்ப்புவிசை (Gravity) என்ற ஒன்றைக் கொண்டு இண்டர்ஸ்டெல்லார் என்ற அறிபுனைவு திரைப்படத்தைப் பார்த்தபோது மேலும் மேலும் இந்த பித்தை விரித்தெடுத்திருந்திருக்கிறேன். இன்னும் காணாத பரிமாணங்களை சிந்தித்தபோது அது மேலும் திகைப்பையே அளித்தது. நம்மால் ஒரு போதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாதவைகளை பற்றிய ஒன்று நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது. அறிவின் எல்லையை விரித்து நம்மை பணிவாக்குகிறது. அறியப்பட்டவையாவையும் அருகே சென்று அறிந்தால் அது ஒரே சமயம் தத்துவார்த்தமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் இருந்திருக்கின்றன.
இப்படியான மயக்கங்களோடே அறிந்தவை யாவற்றையும் அள்ளி அள்ளி நிறைத்தாலும் வரும் வெறுமையின் முடிவில் ”அறிந்தவை, அறிபவை அறியப்படப் போகிறவை என காலம் மூன்றெனில், அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்கக் காலம் ஒடுங்குமா? அறிதல் என்பது என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது எது?” (விஷ்ணுபுரம்) என்ற வரி வாழ்வில் முன் வந்தபோது மனம் அமைதியடைந்தது. பயணத்தின் பாதை தெளிவானது.
இன்று அத்தனை மயக்கங்கள் இல்லை. அமைதல் என்பது அறியத்துவங்கும்போதே, அதை முழுமையாக அறிய இயலாது எனும்போதே, முடிவற்று சென்று கொண்டே இருக்கப்போகும் பயணப்பாதை எனும்போதே வந்து விடுகிறது. இப்போது இணைப்பிரபஞ்சங்களோ, இரு/பல வழிச்சாலைகளோ திகைப்பிற்குள் ஆழ்த்துவதில்லை. உள்ளுணர்வின் கைகளில் அதைக் கொடுத்துவிட்டு பிரக்ஞையின்றி ஒழுகிச் சென்று கொண்டிருப்பது போன்ற உணர்வு. “நீர்வழிப்படூஉம் புணை போல ஆருயிர் முறைவழிப்படூஉம்” என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கும் காலமும் கூட. உடன் “ஊழ்” என்ற ஒன்றும் சேர்ந்து கொண்டபின் இன்னும் விடுதலையான பயணம். அதனுடன் இந்த மானுடத்தின் ஒரு சிறு கண்ணியான என் வாழ்க்கை எனும் போது வேறு சில மயக்கங்களும் உடைந்து விட்டன.
இந்த நெடும் பயணப்பாதையில் வெறுமே மாய உலகங்கள் சார்ந்த கதைகள் கிளர்ச்சியூட்டுவதில்லை. அது குழந்தைமையில், முதிரா இளமையில் சிலாகிக்கக்கூடியது என்ற எண்ணமே முதலில் வருகிறது. ஆனால் அறிபுனைவுகளில், மாயப்புனைவுகளில் கூடுமானவரை தர்க்கங்களும் வலுவான உணர்வுப் பிணைப்புகளும் முயங்கும் போது அது உச்சத்தை அடைகிறது. இண்டர்ஸ்டெல்லாரில் “Love is the one thing we’re capable of perceiving that transcends dimensions of time and space.” என்ற வரி உச்சமானது. ஒட்டுமொத்தமாக ஐந்தாம் பரிமாணத்தை நாம் புரிந்து கொள்வதற்கான சாத்தியத்தை இந்த உணர்வின் உச்சம் அளிக்கிறது.
அறிவின் உச்சியில் சித்தர் பாடல்கள் மேலும் பொருள் படுகின்றன. விஷ்ணுபுரத்தின் சித்தனையும் காசியபனையும் புரிந்து கொள்ள நாம் அஜிதருடன் நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவின் மிக நீண்ட தேடுதலின் உச்சியில் தான் சித்தனைப் பார்த்து முழுமையாக புன்னகைக்க முடியும். ஆனால் அந்த சித்தன் மனநிலையை இந்த நீண்ட பயணப்பாதையை பயணிக்காமல் அடைய இயலுமா? என்ற கேள்வியோடே யுவனின் நாவல்களை அணுகினேன்.
இப்பயணத்தில் யுவன் கதைசொல்லியாக, சிறுவனாக, இளைஞனாக, ஐம்பது வயது ஆசாமியாக, எழுத்தாளராக நம்முடன் பயணப்படுகிறார். அவர் தெளிவானவர், அறிவானவர், மிகுந்த உழைப்புடன் இக்கதைகளை, கதைக்குள் கதைகளை கட்டமைப்பவர். மேலிருந்து ஒரு பார்வையை வாசகருக்கு வழங்கிக் கொண்டே இருப்பவர். எளிய மானுடர்கள் அவர்களின் சிக்கல்கள், அன்றாடங்கள் இவையாவையும் குள்ளச்சித்தனால் அல்லது ஒரு அமானுடத்தால் அன்றாடத்திலிருந்து வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் மாயத்தைச் செய்கிறார்.
அன்றாடங்களும் சிக்கல்களும் கதையாவதில்லை. யாருடைய அன்றாடத்தையும் யாரும் பொறுமையாக கேட்கும் மனநிலை யாருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. நான் ”அன்றாடம்” என இங்கு சொல்வது புறமாக, அகமாக நிகழும் யாவற்றையும் முழுமையாக எடுத்துரைப்பதை. யுவன் கரட்டுப்பட்டி எனும் புனைவுப் பிரபஞ்சத்தை தன் முப்பது வருட கால இலக்கியப் பயணத்தில் உருவாக்குகிறார். அதுவல்லாத பிரபஞ்சத்திலும் எளிய மனிதர்களின் சிக்கல்களே பெரும்பாலும் கதையின் பேசுபொருளாக உள்ளது. அது பெரிய ஒன்றுடன், அறிதலுக்கு அப்பாற்பட்ட இன்னொரு தளத்தில் முடிச்சிடப்படுகிறது.
இறுதியில் இத்தனை மெனக்கெடல்களுக்குப் பின் கதையானதா? என்ற கேள்வி எழுகிறது. இது கதை சொல்லப்படுவது என்ற தோரணையாலேயே கதையாக ஆகும் மயக்கத்தை அளிக்கிறது. கதையாக்கும் வாய்ப்பை கதைசொல்லி வாசகரின் கைகளில் அளித்துவிடுகிறார்.
யுவனின் புனைவுப் பரப்பு மிகக் குறுகியது. காலம், மாயம், நிகழ்த்தகவு, தற்செயல், அமானுடம் போன்றவைகளால் அதன் பரப்பு பெரிதாகக் காட்சியளிக்கிறது. அவர் நாவல்களில் உதிர்க்கும் தத்துவார்த்தமான வரிகள் தொடர்ச்சியான தர்க்க கட்டுமானங்களால் அல்லது புனைவுக் கட்டுமானங்களால் சமன்செய்யப்படுவதில்லை. மாறாக உதிரி சம்பவங்களாலும், உதிரி மனிதர்களாலும், அவர்களின் உதிரி தேடல்களாலும் சமன்வயப்படவே செய்கின்றன. இவை இரண்டும் முயங்கும் மறுபாதிகளுக்கான தளத்தை யுவன் புனைவின் மூலம் கட்டமைக்கிறார்.
*
யுவன் கையாளும் எளிய மனிதர்கள், எளிய பேசுபொருள் சார்ந்து நாவலை விட சிறுகதை சிறந்த வடிவமாகப்பட்டது. சிறுகதை என்ற வடிவம் தன்னளவில் பரப்பு குறைவானது. எனவே ஒற்றைக் கதையில் மீபுனைவை ஏற்றும்போது கிடைக்கும் அனுபவம் பெரியதாகிறது. வாசகர்கள் தொகுத்துக் கொள்ளவும் ஏதுவானது. “ஒற்றறிதல்” சிறுகதைத்தொகுப்பு அவ்வாறாக சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்தது. இதிலும் கதைக்குள் கதையல்லாத சிறுகதைகளே இல்லை எனலாம். யதார்த்தத்தை சுவாரசியமாக்க, அன்றாடத்தை எளிதாக எதிர்கொள்ள, எல்லாப் பிரச்சனைகளுக்கும் வேற்று கிரகத்திலிருந்து வரும் சித்தன் ஒருவன் நமக்கு விடை சொல்வான் என்ற பொய் நம்பிக்கையும், நம் கனவுகளில் புதைத்து வைக்க ஏதுவானவைகளை கதை அளிக்கிறது.
சடையனுக்கும் அப்பாவுக்குமான ஓர் விளங்கிக் கொள்ள முடியாத உறவைப்பற்றி கதைசொல்லியான சிறுவன் சொல்வதாக அமைந்த கதை “மர்மக்கதை”. சுவாரசியமான கதை சொல்லலுடன் ஆரம்பித்து, சென்று முடியும் தருவாயில் வெடித்து சிரிப்பை வரவழைக்கக்கூடியது. சித்து வேலைகள், வேற்று கிரகம், குள்ளச்சடையன் பறக்கும் காட்சிகள் என அக்கதையில் வரும் சிறுவனாக நின்று சற்று நேரம் பார்க்க முடிந்தது. வாசித்து முடித்த போது அவர் வாசகர்களை அந்தக் கதையின் இறுதியில் புதைத்துவிட முடிவு செய்துவிட்டதை உணர்ந்தபோது மேலும் சிரிப்பையே வரவழைத்தது.
மூன்றே அடியுள்ள சடையன். “அட ஏளடி ஒசரம் ஒருத்தன் வளந்துருக்கான்னே வச்சுக்கிருவோம், அவனுக்கும் நெலாவுக்கும் இருக்கற தூரம், நமக்கும் நெலாவுக்கும் உள்ள அதேதானப்பா? தரையில கிடக்குற வஸ்துவ எடுக்க அவன் எம்புட்டுக் குனியறானோ அதே அளவுதான் நம்மளும் குனியிறோம். கஜக்கோலாலெ அளந்தா வித்தியாசம்தெரியும், அனுபவத்திலே அதே ஆளம்தானப்பா” என்பார். யுவனின் உலகத்திலிருந்து மீண்ட பின் எப்போதும் தொடரும் இந்த சித்தனின் வரிகள் அன்றாடத்தை எளிதாக்கிவிடுகிறது. மிகப்பெரியவையும் அதன் மறுபாதியான எளியவையும் யாவும் ஒன்றென மயங்கி நிற்கும் ஒன்றின் சித்திரத்தை அது அளிக்கிறது.
“உறங்கும் கடல்” திரு ”எம்” என்பவரின் வாழ்க்கை சார்ந்த மிக எளிய கதை. அதை சொல்லும் விதம் சுவாரசியமாக இருந்தாலும் இறுதியில் இவ்வளவு தானா? இதற்கா இத்தனை பூடகம் என்றே தோன்றச் செய்யக்கூடியது. ஒவ்வொரு ஆள் காணாமல் போகப்போக ஒவ்வொரு அறையாக காணாமல் ஆகி கிராமத்தில் ஒரு வீடே இல்லாமல் ஆகும் ”புளிப்பு திராட்சை” கதை இறுதியில் அளிப்பதும் இத்தகைய எளிமையையே. நதிமூலம் சிறுகதையில் உடல்கள் முயங்கும் அந்த இன்னொரு உலகம் தரும் மாயம் கடத்துவது எதை என்றே யோசிக்க வைக்கிறது. வேலு இதற்கு ஏன் இலக்கிய வாசகராக இருக்க வேண்டும். ஏன் தி.ஜா வை, ஜி. நாகராஜனை இதற்குள் இழுக்க வேண்டும் என்றே கேட்கத் தோன்றியது. ”யாத்திரை” சிறுகதை கதைசொல்லியான பதினேழு வயது சிறுவன் பிற உலகங்களுக்கு செய்யும் அமானுஷ்யமான பயணம் பற்றியது. அந்த உலகங்கள் தட்டையானது என்றாலும் அவன் செல்லும் யாத்திரையே கதையாக அமையும் கதை.
ஒவ்வொரு கதையையும் கதைசொல்லி கதைக்குள் கதையாக மாற்ற எடுக்கும் முயற்சிகள் மிகவும் கூர்மையான கதைசொல்லலைக் கேட்கும் சிறுகதை வடிவத்தை மழுங்கச் செயவதும் நிகழாமலில்லை. உதாரணமாக கேப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் இறப்புச்செய்தியிலிரிந்து ஆரம்பிக்கும் “புளிப்பு திராட்சை சிறுகதை”, மறதியிலிருந்து ஆரம்பிக்கலாம் எனத் தொடக்கும் ’உறங்கும் கடல்’ ஆகியவை கதை முடிந்ததும் ஏன் இப்படி ஆரம்பித்தார் என்றே கேட்கச் செய்கிறது. இங்கு யுவன் கலைத்துப் போட விரும்புவது அப்படி கூர்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதாக இருந்தால் இந்த வரியும் அவசியமில்லை. ஆனால் இவற்றிலெல்லாம் முக்கியமான அம்சமாக எழுந்து நிற்பது ”கதை சொல்லலே பிராதனம்” என்பதும் எழுத்தாளன் முதன்மையாக கதைசொல்லி என்பதும் தான்.
உண்மையில் காலம் சார்ந்து நிகழ்த்தகவு சார்ந்து அதன் முக்கியத்துவத்தை உணரவைக்க வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கதையாக்கப்படுவதே இயல்பு. இத்தனை அழகாக மொழியை, எழுத்தைக் கையாளும் ஒருவர் எளிய விஷயங்களின் மேல் சொல்லிச் செல்லும் இக்கதைகளை பிரக்ஞையுடனேயே நிகழ்த்தியிருக்கிறார் என புலப்படுகிறது. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய இயக்கவிதிகள் யாவும் இத்தகைய எளியவற்றின் மீதும் படிகிறது என்ற மறுபாதிக் கதையை இதன்வழியாக சொல்லியிருக்கிறார்.
*
உண்மையில் யுவனின் படைப்புகளை முடித்தபின் தொகுத்துக் கொள்ள முற்படுகையில் விமர்சனங்களாக இருந்தவை யாவும் சுருங்கிக் கொண்டது. கதையின் பல உதிரியான சம்பவங்களே முன் வந்து நிற்கின்றன. அவையும் முழுமையானவை அல்ல என்று சொல்லும் யுவனின் குரல் அருகே ஒலிக்காமல் இல்லை. அங்கு கள்ளமில்லாமல் புன்னகையுடன் நின்றிருக்கும் ஒரு சிறுவனைப் பார்க்க முடிகிறது. இக்கதைகள் யாவும் உண்மையில் அவனுக்குள்ளான பயணம் என்பது யாவற்றையும் சற்று ஒதுக்கி வைக்கச் சொல்கிறது.
கதைகள் அனைத்திலும் வாசகர்களுடனேயே துள்ளிக் கொண்டே வரும் யுவன் இதன் வழியாக தனக்கான பாணி எழுத்தை உருவாக்கியிருக்கி இதற்கான வாசகப்பரப்பயும் உருவாக்கியிருக்கிறார். இந்த பாணியே சில சமயம் எழுத்தாளர் செல்ல விரும்பும் தூரங்களை மறுக்கும் ஒன்றாகவும் ஆகக் கூடும். அப்படியல்லாதவரை மட்டுமே கை கொடுக்கக்கூடியது. அவர் உலகம் உண்மையில் மிகவும் சிறியது. அம்மா, அப்பா, தாயம்மா பாட்டி. உலகண்ணா, குஞ்சா, அம்மாவழி உறவினர்களின் நீளும் பட்டியல், இஸ்மாயில், நண்பர்கள், வாசகர்கள், பிற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் யாவற்றிற்கு அடியிலும் இணைக்கும் சரடாக ஒரு சித்தன். கதைக்களம் பெரும்பாலும் கரட்டுப்பட்டி. இப்படைப்புகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்றோ, துக்கத்தின் உச்சமான நிகழ்வுகள் என்றோ எதுவுமில்லை. மாயங்கள், கால மயக்கங்கள், நிகழ்த்தகவுகளின் கண்ணிகளின் புரிதல் தரும் சமநிலையுள்ள ஒருவனே தென்படுகிறான். தன்னால் விளங்கிக் கொள்ள முடியாதவைகளுக்கு அமானுஷ்யத்தை தீர்வாக வைக்கிறார்.
இலக்கியம் வேறெதையும் விட வெளிப்பாட்டு வடிவமே. எழுத்தாளர் உமாமகேஸ்வரியிடம் ஏன் எழுதறீங்க என்று கேட்ட போது “வேறு எப்படியும் நான் வெளிப்பட முடியல.” என்றார். எழுத்தாளர் கமலதேவியும் ”ஏன் எழுதுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “மறதியின் மேலான ஓர் இனம்புரியா பயம் உள்ளது. எல்லாத்தையும் மறந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது. எனக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்” என்றார். யுவன் தன் வெளிப்பாட்டு வடிவமாக எழுத்தைத்தேர்ந்து கொண்டார் என்றே தோன்றுகிறது. இது பின்நவீனத்துவ எழுத்து, மாய யதார்த்தம், மாற்று மெய்மை வகைமை, மீபுனைவு, மிகை யதார்த்தம் என ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட அளவுகோளைக்கொண்டு வாசகர்கள் இங்கு உள்நுழையலாம். இது சிறுகதையானதா, நாவலானதா, கலையின் உச்ச சாத்தியத்தை அடைந்ததா என்பதை விடவும், தனக்கான கரட்டுப்பட்டி சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப யுவன் இலக்கிய வடிவங்களையும், அமானுடங்களையும் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. இங்கு வியாபித்துள்ள பிரபஞ்சத்தின் மாபெரும் ஆட்ட விதியை தர்க்க பூர்வமாக அடுக்கி அறியும் எழுத்தல்ல யுவனுடையது. மாறாக இந்த உலகைப் பார்த்து அதன் மர்மங்களைப் பார்த்து, அது இந்த எளியவர்களின் மேலும், மறுபாதிகளின் மேலும் செல்லுபடியாகும் ஒன்றென நினைத்து பரவசமடையும் எழுத்து.
முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்தையே முதன்மையாகக் கொண்டு தன்னை இந்த இலக்கிய வடிவங்களினூடாக மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் யுவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
ரம்யா (நீலி)