செயல் எழல், சிவராஜ்

சில சமயங்களில் முளைவிடும் விதையின் மீது ஒரு பெரிய பாறை ஒன்று உட்கார்ந்திருக்கலாம்.  ஆனால் அது இருளில் அமர்ந்தபடி தன் விடுதலை பற்றிய கனவை கண்டுகொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் இலையை இறுகப் பற்றிக்கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து வரும் மங்கலான ஒளியை வழிகாட்டியாகக் கொண்டு அது பாறையின் அடியிலிருந்து ரகசியமாகவும் மெதுவாகவும் வெளியே வர முயல்கிறது. இறுதியில் தன் தலையை வெளியே கொண்டுவருகிறது.  அது தன்னை விடுவித்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டது. பாறையிடுக்கில் வேர்வளர்த்து வேர்வளர்த்து உச்சியில் சென்று கிளைவிரிக்கும் விதை கொண்ட உள்ளுறுதிதான் செயலுக்கும் அடிப்படை”

நித்ய சைதன்ய யதி அவர்களின் இவ்வார்த்தைகளே ‘செயல் எழல்’ நிகழ்வுக்கான அடிப்படை. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புச்சூழலில் சமூகம் சார்ந்து களப்பணி ஆற்றக்கூடிய தோழமைகளின் அகச்சிக்கல்களுக்கான தீர்வுகளை வழிகாட்டும் விதமாக ஓர்நாள் முகாமை ஒருங்கிணைக்க விழைந்தோம். தனது வாழ்நாள் முழுக்க அனுதினமும் செயலூக்கத்துடன் இயங்கிவரும் சாட்சிமனிதரின் வாழ்வனுபவச் சொற்கள் நிறைய தீர்வுகளுக்கான கண்திறப்பாக அமையும் என்றும் நம்பினோம். எங்கள் எல்லோரின் அகத்திற்கும் நெருக்கமான ஆசிரியராக நிலைகொண்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே அதற்கான பொருத்தமான மனிதர் என்பதால் அவரிடம் பேசி நிகழ்வுநாளை உறுதிசெய்தோம்.

டிசம்பர் 2ம் தேதி திருவண்ணாமலை எஸ்.கே.பி.கல்லூரியில் ‘செயல் எழல்’ ஓர்நாள் இலட்சியவாத நிகழ்வு நிகழ்ந்துமுடிந்தது. சத்தீஸ்கர், மைசூர், ஐதராபாத், பெங்களூர் உட்பட பலபகுதிகளிலிருந்து சமூகப்பணி செய்யும் இளையோர்களும் செயல்நாட்டம் கொண்ட மனிதர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். நூற்றியெண்பதுக்கும் அதிகமான நண்பர்கள் அரங்கிலிருந்தனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இந்நிகழ்வினை வழிநடத்திய விதம் எல்லாவகையிலும் வணக்கத்திற்குரிய ஒன்று. அவர் கிட்டத்தட்ட ஏழுமணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே கருத்துத்தொய்வின்றி தொடர்ச்சியாக உரையாற்றினார். அந்த உரை அனைத்து மனவுணர்வுகளும் அடங்கியதாக அமைந்திருந்தது. வெடிச்சிரிப்பும் கண்ணீர்மல்கலுமாக அந்த உரை எல்லோர் மனதுக்குள்ளும் ஆழமாகத் தங்கிப்போனாது. அங்கிருந்த அனைவருக்குள்ளும் நிறைவையும் மகிழ்வையும் ஒருசேர அளித்தது அவடைய அரங்கு நிகழ்கை.

பவுல் இசைப்பாடகியும் தோழமையுமான தேஜாஸ்ரீ இங்க்வாலா நிகழ்வில் நான்கு துதிப்பாடல்களை இறையூறப் பாடினார். தாயுள்ளத்தின் ஈரம் நிரம்பிய அந்த இசைத்துதி வருகையாளர்கள் எல்லோரையும் நெகிழ வைத்துவிட்டது. நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு நண்பர்களும் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்துகொண்டு நிகழ்வை பரிபூரணமாக்கினர். அனைவரது பொறுமையும் இந்நிகழ்வுக்கான பெரிய பலம்.

வழக்கறிஞர் கிருஷ்ணன், அரங்கசாமி, எஸ்.கே.பி.கருணா, சக்திகிருஷ்ணன்… இவர்களின் நல்மனதும் திட்டமிடலும்தான் இந்நிகழ்வை இத்தனை அழகாக நிகழ்த்தியது. முழுநாள் நிகழ்வாக இம்முகாமை வடிவமைத்து உணவும் தங்குமிடமும் அளித்துதவிய பெருந்தகையாளர்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் பணிந்த நன்றிகள். முந்தைய தினமே நிகழ்வுக்கு வந்திருந்து இரவுபகலாகப் பணிகளைப் பகிர்ந்துகொண்ட எல்லா தோழமைகளுக்கும் எங்கள் அன்பின் நன்றிகள் உரித்தாகுக.

இந்தப் பேருரையின் அகத்தாக்கம் எதிர்வரும் காலத்தில் மிகமிகப் பெரியதாக பரவலடையும் என்பதை உள்ளுணர முடிந்தது. சில ஆண்டுகள் கழிந்து இம்மண்ணில் நிறைவேறப்போகும் பல பெருஞ்செயல்களுக்கான முன்சாட்சியமாக இவ்வுரையின் சொற்கள் நிச்சயம் இருக்கும். வாழ்ந்துபெற்ற அனுபவத்தின் மூலம் அச்சொற்களில் உள்ளுறைந்த சத்தியம் அதற்கான சாத்தியத்தை நிகழ்த்தும். மழைமேகங்கள் நீர்தூறிய காலைநேரத்தில் துவங்கிய நிகழ்வு, மலையுச்சி தீபம் இருளில் எரிமலையென தோற்றமயக்கம் தந்ததுவரை நீடித்து என்றும் அகத்துள் எஞ்சும் ஒன்றாக மாறிவிட்டது.

“ஊழ், அது எங்கோ உள்ளது. எப்படியிருந்தாலும் அது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. அதை எண்ணி அஞ்சுவதில் பயனில்லை. துளி ஈரமிருந்தால் எங்கும் கைப்பிடிப் புல் முளைத்துவிடும், அடுத்த துளி நீருக்காக அது நம்பிக்கையும் கொண்டிருக்கும். ஆகவே, உங்களிடம் நான் என்ன சொல்வேன். உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்யத் தொடங்குங்கள்”… எழுத்தாளர் ஜெயமோகன் இவ்வார்த்தைகள் என்றும் நாங்கள் பெருங்கனவேற்க துணிவளிப்பவை. ‘செயல் எழல்’ நிகழ்வு அதற்கான பாதையில் இன்னும் தீர்க்கமாக முன்செல்ல ஒளிப்பந்தம் தந்திருக்கிறது என்பது மாறாவுண்மை.

நன்றியுடன்,
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைபகடையாட்டம்,கடிதம்
அடுத்த கட்டுரைஎஸ்.சங்கரநாராயணன்