அஜிதன், அனுபவங்களின் வழியே

அன்புள்ள ஜெ

அஜிதனின் காதல்  பற்றி வாசித்தேன். ஏற்கனவே அஜிதன் எழுதிய அக்குறிப்பை முகநூலில் எவரோ பகிர்ந்திருந்தார்கள். அக்குறிப்பு பொய் என நினைத்தேன். அஜிதனின் மொழிநடை அதில் இல்லை. அஜிதனின் தமிழ்நடை மிகமிக நேர்த்தியானது. ஒரு சொல்கூட மிகையற்றது. தேய்வழக்குகளே அற்றது. அவனுடைய ஆங்கிலக்கட்டுரைகளையும் முன்பு வாசித்துள்ளேன். (மைனாக்கள் பற்றியும் காந்தியின் உணவு பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகள்) ஆகவே சந்தேகமாக இருந்தது. அந்த கடிதம் மிக ரொமாண்டிக்காகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. உங்கள் குறிப்பு சந்தேகத்தைப் போக்கியது. மகிழ்ச்சி.

சுந்தரராமன்

அன்புள்ள சுந்தரராமன்

அஜிதன் பற்றி எழுதியிருந்த குறிப்புக்கு பலநூறு வாழ்த்துக்கள் வந்தன. அனைவருக்கும் மனம்நிறைந்த நன்றி. பொதுவாக எல்லாவற்றையுமே பகிர்ந்துகொள்வது என் வழக்கம். இதுவும் அவ்வாறே.

தன் காதல் பற்றி அஜிதன் வாட்ஸப்பிலும் டிவிட்டரிலும் பகிர்ந்துகொண்டிருந்தான். அவனுடன் தொடர்பிலுள்ள நண்பர்கள் மட்டுமே அவற்றைப் பார்க்கமுடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறான். அனைவரும் பார்க்கமுடியும் என்பதும் இப்படி பரவலாக அது பகிரப்படும் என்பதும் அவன் எதிர்பாராதவை.  பகிரப்பட்டு சில நையாண்டிகள் வெளிவந்ததும் கொஞ்சம் அதிர்ந்து நீக்கிவிட்டான். அவ்வாறு நீக்கவேண்டியதில்லை என்பது என் எண்ணம்.

அவன் அக்குறிப்பை எழுதியமையால், நான் என் அறிவிப்பை கொஞ்சம் விரிவாக எழுதவேண்டியிருந்தது. நம் சூழலில் எல்லாமே ஏதோ ஒருவகையில் சிறுமைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு செய்பவர் மிகச்சிலர்தான். அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் அது நிகழ்கிறது ஆனால் அதுவும் ஒரு சந்தர்ப்பமே. அதையொட்டி எழுத்தாளனின் தனிவாழ்வு பற்றி சில கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பு அமைந்தது.

அஜிதனின் கடிதம் எனக்கு முதலில் அளித்தது மகிழ்ச்சியைத்தான். இளங்காதலனுக்குரிய எல்லாவகை அசட்டுத்தனங்களும் கொந்தளிப்புகளும் கொண்டாட்டங்களும் கொண்ட கடிதம். நான் எதிர்பார்ப்பதே அதைத்தான். அஜிதன் சொல் எண்ணி எழுதுபவன், பலமுறை நடையைச் செப்பனிடுபவன். அதே தரத்தில் ஒரு நேர்த்தியான கடிதத்தை எழுதியிருந்தால்தான் ஏமாற்றம் அடைந்திருப்பேன்.

ஏனென்றால் அந்த நேர்த்தி தான் எழுதுவது உலகுக்காக, எதிர்காலத்துக்காக என எண்ணும்போது உருவாவது. ஒருவருக்காக, அந்தக் கணத்துக்காக மட்டும் எழுதுகையில் அந்நேர்த்தி அமையலாகாது. அது ஒரே ஒருவரை நோக்கி மேடைப்பேச்சுபோல பேசும் அபத்தம். பேசும் எல்லாவற்றையும் நேர்த்தியாகப்பேசுவது அறிஞனின் வழி, எழுத்தாளனின் வழி அல்ல. எழுத்தாளன் ஓர் அறிஞன், ஆனால் அறிஞன் எழுத்தாளனாக முடியாது.

எழுத்தாளன் அத்தகைய தருணத்தில் உணர்ச்சிபூர்வமானவனாக, கட்டற்றவனாகவே இருப்பான். அக்குறிப்பு செல்பேசியில் கட்டைவிரலால் தட்டப்பட்டு உடனே அனுப்பப்பட்டது. அதில் தன்னிச்சையான வெளிப்பாடு இருந்தது. நடுங்கும் கைகளுடன் அது எழுதப்பட்டது என என்னால் உணரமுடிந்தது. உலகமெங்கும் பெரும் படைப்பாளிகளின் அத்தகைய கடிதங்களும் குறிப்புகளும் வெளியாகியுள்ளன, பல கடிதங்கள் தூய உளறல்கள். பிழைகள் மலிந்தவைகூட உண்டு. பல கடிதங்களில் எழுத்துக்கான வடிவமே கூட அமைவதில்லை.

(நான் அருண்மொழிக்கு எழுதிய கடிதங்கள்கூட அவ்வாறுதான். ஆகவேதான் அவற்றை வெளியிடவே கூடாது என்று சொல்லியிருக்கிறேன். தேர்ந்தெடுத்த சில பகுதிகள், அன்றைய கையெழுத்தைக் காட்டுவதற்காக மட்டும் பெருந்தேன் நட்பு நூலில் உள்ளன)

மைத்ரி வெளிவரவிருந்தபோது ஒரு முதல்நூல் வெளிவரும் எழுத்தாளனின் எல்லா கிறுக்குத்தனங்களுடன் அஜிதன் பதிப்பாளரை, வடிவமைப்பாளரை படுத்தி எடுத்ததை நினைவுகூர்கிறேன். அச்சில் முதல் கதை (முடியாட்டம், நீலம் இதழ் ) வெளிவந்தபோதும் அதே பரவசம், கொண்டாட்டம். அப்போதெல்லாம் அவனிடமிருக்கும் முதிராச் சிறுவன் வெளிவருவதையே நான் விரும்புகிறேன். ஒவ்வொரு கதைக்கும் அதன் தீவிரத்துக்குள் சென்று சமநிலையை இழந்து அவன் மீள்வதைக் காண்கிறேன். அதுவே கலைஞனின் வழி.

ஒவ்வொரு அனுபவங்களின் முன்னிலையிலும் முற்றிலும் புதியவனாக நின்றிருத்தலே எழுத்தாளனின் வாழ்வாக இருக்கவேண்டும். அந்த அனுபவத்திற்கு முழுமையாக தன்னை அளிக்கவேண்டும். அசட்டுக்காதலானாக, பித்தெழுந்த தந்தையாக, சம்பந்தமற்ற பெருங்கனவுகளில் உழல்பவனாக எல்லாம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். தனக்கென மாறாத ஆளுமையோ நிலையான கருத்துநிலையோ இருக்கலாகாது.

அனுபவங்களின்போது எழுத்தாளனின் தர்க்கம் செயல்படலாகாது. அனுபவங்களைக் கண்காணிக்கும் விலக்கம் முற்றிலும் இருக்கலாகாது. ஆகவே அக்கண்காணிப்பின் விளைவான சமநிலையும் அமையாது. அந்தந்த அனுபவங்களில் இருந்து முடிந்தவரை அள்ளிக்கொண்டு அடுத்த தளத்திற்குச் செல்லவேண்டும். அதன்பின்னரே அனுபவங்களை மதிப்பிடவேண்டும்.

எழுத்தாளன் எழுதுவது ’அறிந்த’ அனுபவங்களை அல்ல, ’அனுபவித்த’ அனுபவங்களை. அவன் வெளியே நின்று பார்த்தவற்றை பதிவுசெய்பவனல்ல. அவன் எழுதுவன அனைத்துமே அவனுடைய சொந்த அனுபவங்கள்தான். அந்தந்த அனுபவங்களில் மூழ்கி அவன் பெற்றவை. பெற்றவற்றில் இருந்து மேலும் சென்றவை. தன்னை உருமாற்றிக்கொள்ளாதவன் புனைவுகளை எழுத முடியாது. சிந்தனைகளை மட்டுமே முன்வைக்கமுடியும்,

தத்துவஞானிக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு. (மெய்ஞானிக்கும் விதிவிலக்கு என நான் ஒருமுறை சொல்ல அல்ல என்று நித்யா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது மலையாளத்திலெங்கோ பிரசுரமும் ஆகியிருக்கிறது. மெய்ஞானி மாறாத காதல்பித்து மனநிலையில் நீடிப்பவன் என்கிறார்) மற்ற அனைவருக்குமான வாழ்க்கைமுறை இதுவே.

ஒவ்வொன்றும் வாழ்க்கைத் தருணங்கள். காதல், திருமணம் என்பது அதிலொரு உச்சம். இவற்றில் முழுமூச்சுடன் ’தலைகுப்புறப்’ பாய்வதே நாம் செய்யவேண்டியது. திளைப்பது. நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கைத் தருணங்களில் நான் இதே ஆலோசனையையே வழங்கியிருக்கிறேன். நூற்றுக்கணககன முறை. எந்த கணக்குகளும் தர்க்கங்களும் இல்லாமல் வாழ்வின் அக்கணங்களைக் கொண்டாடுக என்பதே என் வழிகாட்டல்.

அஜிதன் பிறந்தபோது நான் கிட்டத்தட்ட பித்துப்பிடித்து அவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி எனக்கு ஒரு கடிதத்தில் நையாண்டியாக எழுதினார். ‘நாம் சந்திக்கும்போது உங்கள் குழந்தை பற்றிய கதைகளுடன் வேறு சிலவற்றையும் பேச வாய்ப்பு அமையுமென நினைக்கிறேன்’. ஆனால் அச்சந்திப்பிலும் ஒரு சொல்கூட வேறேதும் நான் பேசவில்லை.

இப்போது ஒருவருக்குக் குழந்தை பிறந்தால் நான் அளிக்கும் முதல் ஆலோசனை இனி சிலகாலம் நீங்கள் தந்தை மட்டுமேயாக இருங்களென்பதே. குழந்தையை தன் கைகளால் குளிப்பாட்டுங்கள் என எல்லாருக்குமே எழுதியிருக்கிறேன். குழந்தை வளர்கையில் உடன் வளர்ந்து சிறுவனாகுங்கள். (அவ்வாறு அழகிய சிறுவனாக இருப்பவர் நண்பர் கவிஞர் ஆனந்த்குமார்)

ஆனால் இதை அனைவரிடமும் சொல்லமுடியாதென்றும் எனக்குத் தெரியும். எங்கும் எதிலும் கணக்குகளுடன், தர்க்கங்களுடன் இருப்பவர்களே மிகுதி. எப்போதும் தன் அகங்காரத்தை முன்வைப்பவர்கள் பெரும்பாலானவர்கள். ஓர் இயற்கையழகின் மடியில்கூட எளிய விலங்கின் பரவசத்தை அடையமுடியாதவர்கள். அவர்களுக்கு வசப்படாது போகும் இன்பங்கள் ஏராளம். தன்னை இழக்காமல் இங்கே மகிழ்வை அடைய முடியாது. இன்பங்களுக்கு அப்பால் கணக்குகளுடன் நின்றிருப்பவர்களை அனுதாபத்துடனேயே நாம் அணுகவேண்டும்.

இன்று அறுபது கடந்தபின்னரும் என்னிடமிருக்கும் சிறுவனை இழக்காமலிருக்கிறேன் என்பதே என் சாதனை. பயணங்களில், புதிய அனுபவங்களில் தன்னை மறக்கமுடிகிறது. என் ஒவ்வொரு பயணக்கட்டுரையிலும் அந்த கட்டற்ற திளைத்தலை நீங்கள் காணமுடியும். அந்த திளைத்தல் இரு மடங்கு அருண்மொழிக்கு உண்டு என்பதனால்தான் அவள் என் முதன்மைத் துணை. வாழ்வின் தருணங்களை இதுவரையிலான வாழ்வும் சிந்தனையும் அளித்த தர்க்கங்களும் முன்முடிவுகளும் இல்லாமல் என்னால் எதிர்கொள்ள முடிகிறது.  நேர்நிலை மனநிலை என நான் சொல்வது இதையே.

மீண்டும் அஜிதனின் அக்குறிப்பை வாசித்தேன். புன்னகையுடன், மனம்நிறைந்த வாழ்த்துக்களுடன்.

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.சங்கரநாராயணன்
அடுத்த கட்டுரைவேதாளம் சொல்லும் கதைகள்: கடலூர் சீனு