அல் கிஸா – தன்யா

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

https://twitter.com/AjithanJey5925

அஜிதனுக்கு,

அல் கிஸா வாசித்தேன். வழக்கம் போல இரண்டு முறை. முதல் முறை படித்தவுடன் மனம் சற்று கொந்தளிப்பாக இருந்தது. கடலூர் சீனு பேசியதை (ஜூம் மீட்டிங்கில்) வாசித்து முடித்தபின் மேலும் உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடிந்தது. இஸ்லாமிய மதத்தின் சாராம்சத்தை அதன்

சகோதரத்துவத்தை இத்தனை சிறிய புத்தகத்தில் கடத்திவிட உங்களால் முடிந்திருக்கிறதுஅதற்கு எவ்வளவு பெரிய பயணம் உங்களுக்கு தேவைப்பட்டிருக்கும்?!  

உங்கள் படைப்புகள் அனைத்துமே ஒரு மின்னலைப் போல சிலவற்றை காட்டி மறைகின்றன.  அந்த காட்சியின் தாக்கத்தில் அதை மீண்டும் கண்டு விட மாட்டோமாமேலும் தெளிவாகஎன்று எண்ணி மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இரண்டாவது முறை மின்னல் மின்னும் போது, அதில் முடிந்த அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற கவனமும் தவிப்பும் இருக்கும்.அது வாசிப்பை மேலும் ஓர் முக்கிய அனுபவமாக ஆக்குகிறது.

குலாமின் பாடலாக பதிந்ததை விட அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் கண் முன் விரிந்த ஒரு நாடகமாக கர்பலா படுகளம் தோன்றியது.

அழகான முகத்தை காண்பதும் ஊசியால் உடலெங்கும் குத்திக்கொள்ளும் முறையும் இரண்டுமே சூபி முறையில் ஒன்றுதான் சாச்சாஎன்று ஹைதர் சொல்வது பின்னால் நிகழும் அவர்களின் காதல் பயணத்தின் சாரமாக வெளிப்படுகிறது. மேலும் பல கூரிய வரிகள் நாவலெங்கும் வருவது சிறப்பாக இருந்தது.

ஹைதர் காணும் கனவில் இருள் நதியில்  மூழ்கி அவர்கள் பொன்மேனி கொண்ட குழந்தையை கண்டடைகிறார்கள். அஜ்மீர் தர்காவும் மானுடரின் இருண்ட மனங்களின் நடுவில் ஒளிரும் பேரொளியாக நிற்கிறது. இருளே ஒளியை நோக்கி வேகமாக செலுத்துகிறது

அழகிய பெண்ணுக்கு கழுத்து அட்டிகை போல இறப்பும் இவ்வாழ்விற்கு ஓர் அணிகலன். அதை செருக்குடன் அணிந்துகொள்வோம்என்று இறப்பை ஓர் ஆபரணமாக கூறும் இடம் வரும். அனால் ஹைதர்சுஹராவிற்கு குழந்தை பிறக்கும், நம்பிக்கையை விதைக்கும் நாவலின் இறுதி அத்தியாயத்தின் தலைப்பும்ஆபரணம்‘!! இது விந்தையாகவும் பொருத்தமாகவும் ஒரு சமயத்தில் தோன்றுகிறது.

வானை நோக்கி கை உயர்த்தினால் கிசாவினுள் இருப்பதாக ஒரு கணமேனும் இனி நாவல் படிக்கும் அனைவரும் உணர முடியும்.

மிக்க நன்றி.

அன்புடன்,

தன்யா.

(முதற்பிரசுரம் செப்டெம்பர் 30- 2023)

முந்தைய கட்டுரைபரவசமளிக்கும் படைப்பாளி – கா.சிவா
அடுத்த கட்டுரைஷாகீரின் கதைகள்: கடிதங்கள்