சுதந்திர சினிமா

வணக்கம் சார்.

தற்போது என் நண்பன் மூலம் தங்கள் இணையதளம் அறிமுகம் கிடைத்தது, காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். உங்கள் சினிமாப் பயிற்சி வகுப்புகள் பற்றியும் கண்டேன். இதில் உள்ள பயிற்சிகள் மீண்டும் நடக்குமா அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்குமா?
ஜீவா

அன்புள்ள ஜீவா

திரை ரசனைப்பயிற்சி என நான் கூறுவது வெறும் ரசனைப்பயிற்சி மட்டும் அல்ல. திரைப்பட உருவாக்கத்துக்கான பயிற்சியும் கூடத்தான். அதன் தொழில்நுட்பத்தை எளிமையாக, நேரடியாக, மிகைப்பாவனைகள் ஏதுமில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பல முகாம்களை கேரளத்தில் கண்டுள்ளேன், திரைக்கதைக்கான வகுப்புகளை நடத்தியுமுள்ளேன்.  அவ்வாறு ஒன்றை நிகழ்த்துவது பற்றிய கனவையே முன்வைத்தேன்.நானே திரைக்கதைப் பயிற்சி அளிக்கும் எண்ணமும் உண்டு.

மிகக்குறைந்த செலவில், சிற்றிதழ்போல, சிறிய கலைப்படங்களை எடுக்கமுடியுமா என்னும் கனவு எனக்கு உண்டு. சாத்தியம்தான். இன்றையசூழலில் அதற்கான தேவையும் உண்டு. படங்களை வணிகரீதியில் கொண்டுசெல்வதற்கு மட்டுமே இன்று நிதிமுதலீடு பெருமளவு தேவைப்படுகிறது.

எந்த ஒரு கலைவடிவுக்கும் மிகமிக எளிய, மிகமிகச் சிறிய அளவிலான ஒரு வடிவம் இருக்கமுடியும். அதையே சுதந்திரக்கலை என்கிறோம்.Independent Art என்பது இன்று உலகமெங்கும் முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு கலை இயக்கம். எந்த ஒரு வணிக அமைப்புக்கும் கட்டுப்படாமல் இயங்குவது அது

உதாரணமாக, இன்று திரைப்படமாக ஒன்று அரங்குகளில் வெளியாகவேண்டும் என்றால் அதற்கு பெப்ஸி போன்ற திரைத்தொழிலாளர் அமைப்புகளின் பங்களிப்பு கட்டாயம். அது குறைந்தபட்சமாக இருந்தாலே ஒரு படம் ஒருகோடிக்கு குறைவில்லாமல் செலவை இழுத்துவிடும். ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளியாகவேண்டும் என்றாலும் குறைந்தபட்ச நிபந்தனைகள் சில உள்ளன. ஆனால் இவற்றுக்குக் கட்டுப்படாத சினிமாக்கள் உருவாக முடியும். அவை இவ்விரு வினியோக முறைமைகளை தவிர்த்து தங்களுக்கான வினியோக முறைமையை தேர்வுசெய்யவேண்டும்.

இன்று உலகமெங்குமுள்ள சுதந்திர சினிமா என்பது பெரும்பாலும் அரசியல் சார்ந்தே உள்ளது. வணிகசினிமாவுக்கு மாற்று என்றெல்லாம் பேசுபவர்கள் கடைசியில் முன்வைப்பது துண்டுப்பிரசுர சினிமாவைத்தான். ஏதேனும் கட்சிசார்ந்த சினிமா. ஒரு கட்டத்திற்குப்பின் அவ்வியக்கம் அப்படியே ஏதாவது கட்சிக்கு விலைபேசப்படும்.

மையத்திற்கு வெளியே செயல்படும் அரசியலை பேசும் படங்களே ஐரோப்பாவின் சுதந்திர சினிமாவில் மிகுதி. அவற்றை எடுப்பவர்கள் அந்த அரசியலில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள் என்று பொருளில்லை. அந்த மாற்று அரசியலைப் பேசும் குழுக்கள் மிக வலுவானவை, மிகமிக ஒருங்கிணைக்கப்பட்டவை. அவற்றின் உடனடி ஆதரவு அந்த படங்களுக்கு அமைகிறது. அவற்றுக்கு ஒரு பார்வையாளர் வட்டமும் சிறு நிதிவருகையும் உறுதியாகிறது

உதாரணமாக  எல்ஜிபிடி உரிமைகள் போன்ற ஏற்கனவே நிறுவப்பட்ட பொதுவான கருத்துக்களை பிரச்சாரநெடியுடன் முன்வைக்கும் சினிமாக்களே இன்று சுதந்திர சினிமாவின் வகைமையில் மிகுதி. அண்மையில் திருவனந்தபுரம் திரைவிழாவுக்குச் சென்றவர்கள் பலர் புலம்பித்தள்ளிவிட்டனர். விளிம்புநிலையினர் வாழ்க்கை என்ற பேரில் கடுமையான சித்திரங்களை அளிக்கும் சினிமாக்கள் இன்னொரு வகை.

அவற்றின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. ஏனென்றால் அவை ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட, ஏற்கப்பட்ட நிலைபாட்டையே எடுக்கமுடியும். உண்மையான கலை என்பது சொல்லப்பட்டவை எவையானாலும் அவற்றை ஐயப்படுவது, மீறிச்செல்வது, மாற்றுக்கோணங்களைச் சொல்வது, மேலும் நுண்மைகளை நோக்கி கூர்கொள்வது. பிரச்சாரப்படங்களில் அவை இயல்வதில்லை. எவை ஏற்கப்படுமோ அவற்றையே அவை சொல்லியாகவேண்டும்.

விளைவாக என்ன ஆகிறதென்றால், இந்தவகை சுதந்திர சினிமாக்கள் பொதுரசிகர்களுக்கு தாளமுடியாத அலுப்பை அளிக்கின்றன. குறைந்த செலவில், எளிமையான படமாக்கலில், ஒரு ஆழமற்ற பிரச்சாரத்தை பார்ப்பதை இந்த காலகட்டத்தில் மிகச்சில குழுக்கள் அன்றி எவரும் செய்யப்போவதில்லை. ஆகவே சுந்ததிர சினிமா இயக்கமே உலகமெங்கும் முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்றும் படுகிறது.

சுதந்திர சினிமாவின் சவால்கள் பல. முதன்மையானது, அவற்றுக்கான பார்வையாளர்களைக் கண்டடைவது. இயல்பான பொதுப்பார்வையாளர்கள் வராதபோது எல்ஜிபிடி போன்ற தனிக்குழுக்களை பார்வையாளர்களாகத் தேடிச்சென்று தங்கள் நோக்கத்தையே இழந்துவிடுகிறது சுதந்திர சினிமா.

பார்வையாளர்கள் இயல்பாக வந்தமைய மாட்டார்கள். அதற்கு ஓர் அறிவியக்கம் தேவைப்படும். நவீன இலக்கியத்திற்கு சிற்றிதழ்சார்ந்த ஓர் அறிவியக்கம் எப்படி உருவாகி அதை தாங்கி நின்றதோ அதைப்போல. சினிமா பற்றிய விவாதங்கள், சினிமா பற்றிய செய்திகள் ஆகியவற்றுடன்.

அவ்வாறு ஓர் அறிவியக்கம் இல்லாமல் ஒரு கலை நிலைகொள்ள முடியாது. அந்த அறிவியக்கமே இங்கு இன்று நிகழும் மாபெரும் வணிகமுயற்சிகளுக்கு மாற்றான ஒரு பார்வையாளர்களை உருவாக்கும். அப்படி ஒன்றை கேரளத்தில் எழுபதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் -சூரியா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உருவாக்கினர்.

தமிழில் அப்படி ஓர் அறிவியக்கம் இல்லை. ஒரு நல்ல இணையதளம் கூட இல்லை. சினிமா பற்றிய ரசனையே இல்லாத வெறும் அரசியல்பிரச்சாரர்களே இங்கே சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக எளிய அரசியலையே இங்குள்ள சினிமா இதழ்கள் சினிமாவின் உள்ளடக்கமாக முன்வைக்கின்றன. உண்மையான கலைரசிகர்கள் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இங்கே நிலைநிறுத்தப்படுபவை மூன்று வகை பிரச்சாரங்கள். ஒன்று கட்சியரசியல். இரண்டு கேளிக்கை. மூன்று நுகர்பொருள் வணிகம். இம்மூன்றும் அளிக்கும் சலிப்பினாலேயே நாம் கலைக்கு வருகிறோம். இங்கும் அதே கட்சியரசியல் என்றால் உருவாகும் சலிப்பு எத்தனை ஆர்வமுள்ளவரையும் உடனே வெளியே தள்ளிவிடும்.

இரண்டாவது சிக்கல், சுதந்திர சினிமாவின் அமைப்பும் ஒழுக்கும். பொதுவாக, எளிமையான அரசியல் உள்ளடக்கம் அதற்கு அமைந்தாலே வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது. அந்த உள்ளடக்கத்துடன் சுதந்திரசினிமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் வடிவம் சார்ந்த இறுக்கமும் இணைகையில் அர்த்தமே இல்லாமல் மெல்ல நகர்ந்து சலிப்பூட்டும் சினிமாக்கள் உருவாகின்றன.

நவீன இலக்கியம் பற்றி 80களில் நாங்கள் கேட்ட அதே கேள்விகளையே இந்த சுதந்திர சினிமா பற்றியும் கேட்கவேண்டியுள்ளது. ஏன் அதில் ஒரு பேய்க்கதை வரலாகாது? ஏன் ஒரு துப்பறியும் கதை வரலாகாது? ஏன் காதல் நிகழலாகாது? ஏன் எப்போதும் அது மந்தமான யதார்த்தச்சித்தரிப்பாகவே இருக்கவேண்டும்? ஏன் விறுவிறுப்பான, சீண்டக்கூடிய, நெகிழச்செய்யக்கூடிய புனைவுகள் வரலாகாது?

ஆனால் இது ஒரு கனவுதான். உண்மையில் இங்கே அத்தகைய ஒரு சுதந்திரக் கலைக்கான தேவை கொஞ்சமேனும் இருக்கவேண்டும். அந்நிலையிலேயே ஆதரவு உருவாகும்.  பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைகாட்டுப் பெருமாள்
அடுத்த கட்டுரைஉளக்குவிப்பு, தியானப் பயிற்சி