சிந்தனைப் பயிற்சி

கால்வின் ஹோப்ஸ் காமிக்ஸில் 1971ல் வரையப்பட்டது

வணக்கம் ஜெ,

இன்றைய நவீன உலகில், அடிப்படை எழுத்துப் பயிற்சி என்பது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அவசியமாகிறது.

கார்ப்பரேட் உலகில் ஒரு தொழில்நுட்பத் திட்ட வரைவை உருவாக்குவது, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது, விக்கிப்பீடியாக்களில் எழுதுவது என எழுத்தாற்றலைக் கோரும் பல செயல்கள் உள்ளன.

  • இதற்கான அடிப்படை எழுத்துப் பயிற்சியை எப்படி வளர்த்துக் கொள்வது?
  • ஒரு ஆயிரம் சொற்கள் கொண்ட தரமான கட்டுரையை விரைவில் எழுதி முடிக்க என்ன செய்ய வேண்டும்?
  • படிக்கும் போதோ, பேச்சுக்கான(அல்லது கலந்துரையாடலுக்கான) உரை தயாரிக்கும் போதோ வராத சோம்பல், எழுதும் போது மட்டும் எனக்கு வருகிறது. எழுத்து என்பது ஒரு தனிமையான செயல் என்பதாலோ
  •   படிக்கும் போது கூட ஆசிரியர் நம்மோடு இருக்கிறார். எழுதும் போது நாம் மட்டும் தான்.

மேடையுரைப் பயிற்சி போல இதற்கும் ஒரு பயிற்சி முகாம் வைத்தால் சிறப்பாக இருக்கும்

நன்றி,

ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,

இன்றைய உலகில் தேவையான பல பயிற்சிகள் உள்ளன. தெளிவாகவும் கோவையாகவும் சிந்திப்பது, சரியான சொற்றொடர்களிலும் சரியான அமைப்பிலும் சொல்வது, சுருக்கமாகவும் செறிவாகவும் கட்டமைப்புடனும் எழுதுவது ஆகியவை அடிப்படையானவை. என்ன எழுதவேண்டும், எதைச் சிந்திக்கவேண்டும் என்பது அடுத்த கேள்வி. அதற்கு நவீனக் கலாச்சாரம், கலைகள் பற்றிய அறிமுகம் தேவை.

இவற்றை எழுத்துக்கள் வழியாக சரியாக அளிக்க முடியாது என உணர்ந்தமையால்தான் பயிற்சிவகுப்புகள் தொடங்கப்பட்டன. தத்துவம், இலக்கியம், ஓவியம், புகைப்படக்கலை என பல களங்களில் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பயிற்சிவகுப்புகளில் செறிவான பயிற்றுதலும் கூடவே செய்முறைப்பயிற்சிகளும் உள்ளன. அவை மிகமிக வெற்றிகரமானவை என நடைமுறையில் கண்டேன்.

நான் அளிக்கும் 7 நிமிட உரைப்பயிற்சி, நூல் விமர்சனப் பயிற்சி எல்லாமே சுருக்கமாகவும் செறிவாகவும் சிந்திப்பதற்கும், சிந்தனையை சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வதற்கும், உரைநடைவடிவம், வெளிப்பாட்டு வடிவம் ஆகியவற்றை பயில்வதற்குமான பயிற்சிகளே. 7 நிமிட உரைப்பயிற்சி எடுத்தவர் எளிதாகக் கட்டுரைகளை எழுத முடியும். இதெல்லாமே ஒன்றுதான். அடிப்படையில் இவை சிந்தனைப் பயிற்சிகள்.

இன்றைய கல்வி ‘சிக்கலை தீர்த்தல்’ (Problem solving) என்னும் வகைமையை கற்பிக்கிறது. அது அடிப்படையானது. தொழில்- வேலைக்கு. ஆனால் மொழியில் வெளிப்படுத்திக்கொள்ளும் பயிற்சி அதில் இல்லை. ஆகவே பெரும்பாலானவர்களுக்கு கோவையாக யோசிக்கத் தெரிவதில்லை, பேசமுடிவதில்லை. (பேசக்கற்பதும் எழுதக் கற்பதும்தான் சிந்திக்க கற்பதன் வழிமுறைகள்) அந்த போதாமைக்கு இத்தகைய பயிற்சிகள் பேருதவியானவை.

கோவையாகவும் தெளிவாகவும் நம்மால் பேசமுடியாமலிருப்பதற்கு முக்கியமான காரணம் என்பது இன்றைய பெருஊடகம். குறிப்பாகத் தொலைக்காட்சி. அதன் நீட்சியான யூடியூப். காணொளி ஊடகம் விரைவு என்பதையே அடிப்படையாகக் கொண்டது. அதாவது கேட்பவனுக்கு புரியவேண்டும், அவன் நினைவில் நீடிக்கவேண்டும் என்பது அதன் நோக்கம் அல்ல. கேட்பவனின் மனம் ஓடும் வேகத்தில் காணொளி ஊடகத்தில் சொற்கள் ஓடவேண்டும். 

வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்களின் ஒரே தகுதி அறிவோ தெளிவோ உச்சரிப்போகூட அல்ல. வேகம் மட்டுமே. அந்த வேகத்துக்கு நாம் பழகிவிட்டோம். அந்த வேகத்தைக் கூர்ந்து கவனியுங்கள். மிக வேகமாகப் பேசுவார்கள். ஆனால் ஐம்பது சொற்களில் சொல்லவேண்டியவற்றை ஐநூறு சொற்களை அள்ளி இறைத்துச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அச்சொற்றொடர்கள் பெரும்பாலும் வெற்று இடம்நிரப்பிச் சொற்கூட்டுகளாகவே இருக்கும். ‘இப்ப பாத்தீங்கன்னா இதிலே என்ன இருக்குன்னாஎன்பதுபோல. 

இவற்றைக் கேட்டுக்கேட்டு நம் மனம் இதேவகையான ஓட்டம் கொண்டதாக நம்மையறியாமலேயே மாறிவிட்டிருக்கிறது. குறிப்பாக தொலைக்காட்சி வந்தபின் பிறந்தவர்களுக்கு. அவர்களின் மனம் வேகமானது, ஆனால் துண்டு துண்டான ஓட்டம் கொண்டது. வெற்றுச்சொற்கள் நிறைந்தது. பெரும்பாலான இளைஞர்கள்அட் த என்ட் ஆப் த டே’ ‘ஆக்சுவலிஎன்று இடநிரப்பி சொற்களை போட்டுப்போட்டு பேசுவதை காணலாம். Filler words பெரும்பான்மையாகவும், சொல்லவேண்டிய சொற்கள் கால்பங்காகவும் இருப்பதே அவர்களின் பேச்சுமுறை. 

அந்த பேச்சுமுறையை எளிதில் மாற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது நம் மனமாக மெல்லமெல்ல மாறியிருக்கிறது. நம் அகம் அப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை உடைத்து வெளிவந்தாகவேண்டும். அதற்கு நாம் தெளிவான சிந்தனை, பேச்சு ஆகியவற்றுக்கு முறையான பயிற்சி எடுத்துக்கொண்டே ஆகவேண்டும். இது உலகமெங்கும் உணரப்பட்டுள்ள ஒரு பெருஞ்சிக்கல்.

நம் உரைநடை இவ்வளவு மோசமாக இருப்பதற்குக் காரணம் முகநூல். பழைய பெரிசுகள் எழுதிய கடிதங்களை எடுத்துப்பாருங்கள். அவை பலவகையான சம்பிரதாயங்களுடன் இருந்தாலும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும். 

ஆனால் முகநூல் குறிப்புகள், வாட்ஸப் குறிப்புகள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் நாம் மிகமிக சூம்பிப்போன ஒரு மொழியை பயன்படுத்துகிறோம். காரணம் அவை மிக அவசரமாக எழுதப்படுகின்றன. ஆகவே நம் அகமொழியை அப்படியே பதிவுசெய்கின்றன. நம் அகமொழி துண்டுபட்டது, கோவையற்றது, குழப்பமானது, வீண் இடநிரப்பிச் சொற்களாலானது. 

பயிற்சி வழியாகவே இந்தக் குறைபாட்டை கடக்க முடியும். வணிகப்பேச்சுக்கான, தொழில்முறைப் பேச்சுக்கான பயிற்சிகள் பெருஞ்செலவில் அளிக்கப்படுகின்றன. அவை ஒருவகையான பழக்கப்பயிற்சிகள் மட்டுமே. சிந்தனைப் பயிற்சிகள் அல்ல. அவற்றை அப்படி சராசரிப்படுத்தி பெருமளவுக்கு அளிக்கமுடியாது. சராசரிக்குமேல் அறிவுத்திறன் கொண்டவர்களுக்கு அவை சலிப்பையும் அளிக்கும்

ஆகவேதான் சிறு குழுக்களாக திரட்டி இப்பயிற்சிகளை அளிக்கலாமென முடிவுசெய்தோம்.ஆனால் நான் எண்ணிய அளவுக்கு பங்கேற்பாளர்கள் இல்லை. நம் இளைஞர்களுக்கு இந்தத்தேவை பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. தங்களிடம் ஒரு போதாமை உள்ளது என்றே அவர்கள் அறிவதில்லை. ஆகவே நிகழ்வு இரண்டுமுறைக்கு மேல் தொடரவில்லை. மீண்டும் தொடரலாம். ஆதரவு இருக்குமென்றால்.

ஜெ 

முந்தைய கட்டுரைஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை
அடுத்த கட்டுரைசுற்றிலும் ஒலிக்கும் குரல் – கடிதம்