வேதாளம் சொல்லும் கதைகள்: கடலூர் சீனு

இனிய ஜெயம்

யுவன் சந்திரசேகர் அவர்களுக்கான விஷ்ணுபுரம் விருது விழா நெருங்கிவிட்டது.சூழலில் கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே நண்பர்கள் கூடுகையின் போது விஷ்ணுபுரம் விழாவுக்கு வருகை தரும் பிற எழுத்தாளர்கள் உள்ளிட்டு யுவன் கதையுலகு வரை பலவும் உரையாடல் களத்துக்குள் வரும். அத்தகு உரையாடல் ஒன்றில் புதிய வாசகர் ஒருவர் யுவனின் வேதாளம் சொன்ன கதை நாவல் குறித்து ஒரு கேள்வி கேட்டார்

இந்த வடிவம் வழியாக எழுத்தாளர் வாசகனுக்கு அளிக்க உத்தேசித்தது என்ன? இதை நாவல் என்று முன் வைக்கும் எழுத்தாளர், இல்லை இல்லை இது குறுங்கதைகளின் தொகுப்பு மட்டுமே என்று வாசகன் சொல்லி விட்டால் ஒரு வட்டம் பூர்த்தி அடைந்து விடும் என்று பின்னுரையில் சொல்கிறார். எனக்கும் இது குறுங்கதைகளின் தொகுப்பு என்றே படுகிறது. ஆனால் தலைப்பு வேதாளம் சொன்ன கதைகள் என்று இல்லாமல், வேதாளம் சொன்ன கதை என்றுதான் இருக்கிறது. அப்படியென்றால் இது ஒரே கதை கொண்ட ஒரே நாவல்தான் என்றாகிறது. கொஞ்சம் விளக்குங்களேன் என்றார்.

நாவலை வாசித்த வாசகர், இனிமேல் வாசிக்கப்போகிற வாசகர் என இரு சாரருக்குமே ஒரு இணை உரையாடலாக இருக்கக்கூடும் என்பதால் அங்கே தொகுத்தளித்த என் பதிலை இங்கே தருகிறேன்.

கிருஷ்ணன் எனும் எழுத்தாளர் வாழ்வில் சில காலம் வந்து போகும் ஒரு வேதாளத்துக்கும் அந்த எழுத்தாளருக்கும் இடையே முகிழும் உறவு, அதில் விளைந்தவை என இவற்றில் மேல் பயணிக்கும் இந்த வேதாளம் சொன்ன கதை நாவல் கொண்ட வடிவம் என்பது, நவீனத்துவ அழகியல் வளர்த்தெடுத்த வடிவ ஒருமை கச்சிதம் கூர்மை, இவற்றின் மீதான விமர்சனப்பூர்வ எதிரிடை வடிவம் என்று சொல்லலாம்.

இந்த வாழ்வு இவ்விதம் இருக்குறது எனும் நோக்கை வாசகனுக்கு அவ்விதமே கடத்த நவீனத்துவம் தேர்ச்சி கொண்ட வடிவம் அது. அதில் இயல்பாக ஒரு மேலாதிக்கம் உள்ளது. எல்லா நிலையிலும் மேலாதிக்க நோக்குக்கு எதிரான பார்வை கொண்ட பின்நவீனத்துவ அழகியல், தான் கொண்ட பார்வைக்கு உகக்க உருவாக்கி எடுத்ததே, இந்த வேதாளம் சொன்ன கதை நாவல் கொண்ட வடிவமற்ற வடிவம்.

ஜெல்லி மீன் போலவோ, கூட்டு உயிர் போலவோ அமைந்த இந்த வடிவத்தின் முதன்மை இலக்கு, ஆதிக்கம் செலுத்தும் மையம்ஒன்றால்விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டபலகுறித்த நிலைகளை உரையாடலுக்கு கொண்டு வருவதே. உதாரணத்துக்கு இந்த நாவலில் கிருஷ்ணனின் அப்பா மரணம் குறித்த நினைவுகள் வருகிறது. (மரபார்ந்த ஆக்கங்களில் அதுவே மையமாக விளங்கும்) அந்த மய்யமான மரண நினைவுகளை பின்னுக்கு தள்ளி, விளிம்பு நிலையில் கிடக்கும் கிருஷ்ணன் அனுபவித்த எத்தனை மரணம் சார்ந்த நிகழ்வுகளை குறுங்கத்தைகள் வழியே நாவல் பரிசீலிக்கிறது என்று பார்க்கலாம். வாத்சல்யத்தின் கசப்பு என்று கிருஷ்ணன் நினைவு கூறும் ஒரு குட்டி நாயின் மரணம், அம்மா பன்றிக்கு உணவாகி சாகும் ஒரு குட்டி பன்றி, உடல் ஊதி அழுகி மிதக்கும் பிணம், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே வாழ்நாள் பணியாக கொண்டிருத்தவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி தடங்கலில் முடிவது என எத்தனை எத்தனை மரணங்கள். கவனத்தில் பதியாத இந்த மரணங்கள் எனும் பிரமிட் உச்சியில்தான், வாழ்நாள் எல்லாம் நினைவில் கிடந்து அலைகழிக்கும் அப்பா மரணம் அமர்ந்திருக்கிறது என்பதை உணர்த்தால், பின்நவீன நோக்கு எதை இலக்காக்குகிறது என்பது புரியும்.

சம்பந்தம் அற்ற வரிசை போல தோற்றம் அளிக்கும் இந்த குறுங்கதைகளின் தொகுப்புக்கு எங்கே சம்பந்தம் அமைகிறது என்பது இந்த நாவல் கொண்ட சப் டெக்ஸ்ட் களில் ஒன்று. முன்னர் ஒரு கவிதை ஒன்றுண்டு மிக பெரிய கரண்டி ஒன்றை போட்டு கிணற்றில் உள்ளே விட்டு தேடி எடுப்பார்கள். ஆழத்திலிருந்து வித விதமான பொருட்கள் வரும். அடித்து துரத்தப்பட்ட அந்த வேலைக்காரி திருடி விட்டாள் என்று நம்பப்பட்ட வெள்ளி கிண்ணம் உட்பட. அப்படி இந்த கதைகள் எல்லாம் கிருஷ்ணன் எனும் எழுத்தாளர் ஆழ் மனதில் இருந்து வேதாளம் வெளியே எடுத்து போடும் கதைகளாக இருக்கிறது. இதில் எழுத்தாள மனம் எந்தெந்த விஷயங்களால் பாதிக்கப்பட்டியிருக்கிறது, எதுவெல்லாம் எழுத்தாளனின் அக்கறைக்குள் வருகிறது என்பதன் சித்தரிப்பாக இருக்கிறது. அடுத்ததாக நாவலுக்குள்ளேயே பேசப்படும் இந்த வாழ்வு குறித்த எழுத்தாளரின் பார்வை. இறுதிப் பொருள் என்பது அலையா துகளா? இந்த நிச்சயமின்மையோடு அந்தரத்தில் மிதப்பதாக கிருஷ்ணன் என்ற எழுத்தாளரின் வாழ்வு குறித்த பார்வை இருக்கிறது. இதில் உள்ள குறுங்கதைகள் பல இதன் எதிரொலியை ஏந்தியவை என்று காணலாம். உதாரணத்துக்கு இக் கதைகளில் ஒன்றில் மலையேறும் இருவர் கண்டெடுக்கும் வில்லையில் இரு பக்கமுமாக பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், M 6 ஆ அல்லது W 9 ஆ என்று முடியும் கதை. மற்றொரு மகா பாரத கதை ஒன்றில் அணுக்க நண்பர்கள் இருவர், போரில் எதிர் எதிர் அணியில் நின்று கொல்லப்படும் வரை சண்டை போடுகிரார்கள். அவர்கள் நண்பர்களா? எதிரிகளா? மற்றொரு கதையில் கூட்டம் நிறைந்த பேருந்து ஒன்றில் ஏறும் முன்பாக அந்த பெண் கொண்ட வாழ்வு ஒன்று, இறங்கும் போது அவள் கண்ட வாழ்வு வேறொன்று, இப்படி உறவு, பிரிவு, மரணம் என  இந்த நிச்சயமின்மை, அந்தர நோக்கு நாவலில் எல்லா கதைகள் ஊடாகவும் ஒரு சப் டெக்ஸ்ட் என அவற்றை தொடுத்து செல்வதைக் காணலாம்.

நாவலின் பின்னுரையில் எந்த அத்யாய வரிசையில் இருந்தும் ஆரம்பித்து முன் பின்னாக கலந்து கட்டியும் இந்த நாவலை வாசிக்கலாம் என்று எழுத்தாளர் சொல்லி இருந்தாலும், இந்த நாவலுக்குள் கிருஷ்ணன் எனும் எழுத்தாளரின் 12 வயது துவங்கி, அவன் கிராமத்தை பிரிவது, மேற்படிப்பில் சேர்வது, வேலையில் அமர்வது, மனைவி குழந்தை என அமைவது, இடையே அவன் எழுத்தாள வாழ்வு, அவனது அக அமைப்பு, தேடல்கள், ரசனை, நட்புகள், உறவுகள், பிரிவுகள் என கிரிஷ்ணன் நினைவு சிக்கல் கொள்ளும் முதுமை வரை, தொழிற்படும் முழுமையான கிருஷ்ணனின் வாழ்வு பரிணாம கதி இவற்றில்தான் இந்த நாவல் பேசும் அனைத்தும் தோடுக்கப்பட்டிருக்கிறது

இதை நாவல் என்றாகும் மற்றொரு அம்சம் இது.

இவை போக இதை நாவல் என்றாகும் முக்கிய கூறுகள் இரண்டு. முதலாவது இதில் வரும் வேதாளம் யார் என்பது. கிருஷ்ணன் மிக முன்னர் மனச் சிக்கல்களுக்கு மாத்திரைகள் எடுத்தவன். மனச் சிக்கல் எதுவும் தூக்கமின்மையில் துவங்குவதே. இந்த நாவல் நெடுக இரவுகளில் தூங்காமல் அவன் வேதாளத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறான். அந்த வேதாளம், கிருஷ்ணன் விக்ரமாதித்தன் கதைகள் குறித்த தீவிர விவாதம் நிகழ்த்திய இரவில்தான் அவன் வாழ்வுக்குள் வருகிறது. ஆக வேதாளம் என்பது கிருஷ்ணன் கொள்ளும் மெல்லிய ஃபோபியா என்பதற்கான எல்லா உட்குறிப்புகளும் நாவலுக்குள்ளேயே இருக்கிறது.

இதை நாவல் என்றாக்கும் இரண்டாவதும் பிரதானமானதும் ஆன கூறு வேதாளம் வந்த பிறகு, அதனுடனான உறவு வழியே கிருஷ்ணனுக்கு நிகழ்வது என்ன என்பதில் அமைந்துள்ளது. நாவலுக்குள் மிக மிக மேம்போக்காக போகிற போக்கில் சொல்லப்படும் ஒரு விஷயம், கிருஷ்ணன் இந்த கொஞ்ச நாளாக உள்ளே எதுவும் ஊறி எழாமல், எழுதாமல் கிடக்கிறான் என்பது

முன்னர் கிர்லோஸ்க்கர் என்றொரு கம்பெனி ஜெனரேட்டர் உண்டு. அது இயங்க, அதன் மைய்ய அச்சு குறிப்பிட்ட வேகத்துக்கு சுழல வேண்டும். அந்த சுழற்சி வழியேதான் அது தானியங்கியாக இயங்கும். அந்த சுழற்சி வேகத்தை எட்டும் வரை, ஒருவர் அதை கையால் பெடல் போட்டு கர கர என சுற்ற வேண்டும். குறிப்பிட்ட வேகம் தொட்டதும் எஞ்சின் உயிர் கொண்டு இயங்க துவங்கி விடும்.

இங்கே வேதாளம் செய்வது அந்த பெடல் போடும் வேலையைத்தான். ரைட்டர் பிளாக்கில் இயங்காமல் இருக்கும் ஒரு எழுத்தாளன் ஒரு சிறிய ஃபோபோபியா அளிக்கும் உந்துதல் வழியே இயக்கம் பெற்று அடுத்த நாவலை எழுத கிளம்புகிறான். இந்த இழையில் ஒரு புனைவாளனுகும் அவனது புனைவு ஆக்க செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடர்கள் மீதான கதை எனும் சப் டெக்ஸ்ட் டை கணக்கில் கொண்டு வாசித்தால், இது என்ன வகையில் வேதாளம் சொன்ன கதை என்ற தலைப்பில் ஒரே நாவல் என்ற வகைமைக்குள் வந்து அமைகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅஜிதன், அனுபவங்களின் வழியே
அடுத்த கட்டுரைமலாயில் சிகண்டி, ஒரு தொடக்கம்