‘நவீன ஓவியக்கலை அறிமுகம்‘ முகாம் முடிந்து ஒரு மாதம் கழித்து நினைவிலிருந்து மீட்டு எழுதுகிறேன். காரணம், ஆசிரியர் எமக்களித்த பார்வையை என் பயன்களில் சோதித்து பார்க்க எண்ணியதே.
‘படிமங்களை பயித்தல்‘, ஆசிரியர் முகாம் முழுமைக்கும் காண போகும், விவாதிக்க போகும் உள்ளடக்கம் என்னவென்பதை பற்றிய அறிமுகத்துடன் தொடங்கினார்.
இத்தலைப்பின்கீழ் வரலாறு மனிதர்களுக்கு உருவாக்கி அளித்திருக்கும் ஆழ்படிமங்கள், சித்திரங்கள் குறித்த விவரணைகள் முன்வைக்கப்பட்டன. மறுக்க இயலாத வகையில் படிமங்கள் ஒருவரின் சிந்தனையில் எவ்வகை தாக்கத்தை நிகழ்த்த முடியும் என்பதை புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் வழியாக ஆசிரியர் முன்வைத்தார்.
இந்தியாவை பற்றி மேற்கின் சித்திரம் என்ன, அவர்கள் கீழை நாடுகளின் கலாச்சாரத்தினை நோக்கும் விதம், அதை மதிப்பிடும் அலகுகள் எவைகள் என விளக்கக்காட்சிகள் மூலம் தெளிவுசெய்யபட்டது. மேரி எலன் மார்க் போன்ற ஆளுமைகள் இந்தியாவின் சித்திரமாக மேற்குலகுக்கு அளிப்பவை ஒரு சிறு பகுதியில் நிகழும் கீழ்மையின், இருளின் ஆடலை மட்டுமே. இந்திய மனங்களிடமும் இந்த இமேஜ்தான் நிரம்பியுள்ளது. இந்திய மக்களை, அதன் மரபை காட்டும் புகைப்படம் கோரப்படுமென்றால் நம்மவர்கள் சென்று எடுப்பது பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், வேடமிட்ட குழந்தைகள், தெரு சண்டைகள், டீ கடையில் புகைப்பவர்கள், கோவிலில் தேங்காய் உடைபவர்கள், அரை நிர்வாண ஆண்கள், பழங்குடிகள், கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்கள், வெறியாட்டம்மிடும் பூசகர்கள், சுமை தூக்கும் தூங்குபவர்கள் மற்றும் இதைப்போல துயரமும் அவலமும் நிறைந்த இடங்களை, மனிதர்களை.
மேலே கூறப்பட்ட இடங்களில் மகிழ்ச்சியும், களிப்பும் நிகழும் தருணங்களை அவர்கள் பதிவு செய்ய விரும்புவது இல்லை. இங்கே வாழ்க்கையில் இன்னல்கள், இடர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் வாழ்க்கை ஒன்றும் மீள முடியா துயரிலுமில்லை. மேர்குலகைக்காட்டிலும் கொண்டாட்டங்களும், பண்டிகைகளும் இங்கே மிகுந்தே இருக்கிறது .
இளைஞனாக இத்தகைய புகைப்படங்களை காணும் உள்ளம் இந்தியர்களை அருவருக்கத்தக்க உயிர்களெனவே காண்கிறது. இன்னொரு பக்கம் அது வெள்ளையரின் சுமை(whiteman’s burden) என்ற நிலையையும் ஏற்கிறது. இதை மாற்ற பெரும் முயற்சியும், தன்மதிப்பும் தேவை.
அதே புகைப்பட கலைஞர்கள் மேற்கின் சித்திரங்களென முன்வைப்பது ஆனந்தமும், சாந்தமும், ஒளியும் நிரம்பிய தருணங்களை மட்டுமே. புன்சிரிப்புடன் கைகோர்த்து செல்லும் காதலர்கள், பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடும் பெற்றோர்கள், ரயிலில் புத்தகங்களோடு அமர்ந்திருக்கும் இளைஞர்கள், யாருமில்லா தெருவில் நேர்கொண்ட பார்வையுடன் நடக்கும் யுவதிகள், சிரித்த முகங்களுடன் தேவாலயத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள் என முழுக்க ஒளிநிறம்பிய சமூகத்தின் ஒரு பகுதியை மட்டுமே முன்வைக்கிறது.
மேற்குலகம் முற்போக்கானது மற்றும் பகுத்தறிவு மிக்கது என்றும் மற்ற கலாச்சாரங்கள், குறிப்பாக கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவை, மூடநம்பிக்கை மற்றும் வறுமையின் தன்மையால் வகைப்படுத்தப்படுவதை, மேற்கத்திய ஓவியத்தின் செல்வாக்கின் மூலம் அறியலாம். மேற்கத்திய கலை பாரம்பரியம் வரலாற்று ரீதியாக ஒரு உலகக் கண்ணோட்டத்தை வடிவமைத்துள்ளது, இது பொதுமைப்படுத்துதல் மற்றும் ஒரே மாதிரியானது. பெரும்பாலும் உலகின் பிற பகுதிகளை குறுகிய லென்ஸ் மூலம் சித்தரிக்கிறது.
இந்த ஐரோப்பிய மையநோக்கு (யூரோசென்ட்ரிக்) பார்வையில் வேரூன்றியுள்ளது அதன் சொந்த மதிப்புகள், அழகியல் மற்றும் கதைகள். ஹலோவீன் பண்டிகை காலத்தில் கோர வேடமிட்ட மனிதர்களையும், அச்சுறுத்தும் முகம்மூடி அணிந்த குழந்தைகளை புகைப்படம் எடுத்து மேற்குலகு இன்னும் காட்டுமிராண்டியாக, மூடநம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது என்று கூறினால் யாரும் நம்பப்போவதுயில்லை.எவ்வாறாயினும், கிழக்கு அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் இதே போன்ற படங்கள் பிடிக்கப்பட்டால், தவறான விளக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களின் மீது ஒரு தனி உலகக் கண்ணோட்டத்தை முன்வைக்கும் இந்த போக்கு மேற்கத்திய ஓவிய மரபுகளில் ஆழமாக உட்பொதிக்கப்பட்டுள்ளது, அங்கு தரப்படுத்தப்பட்ட முன்னோக்கு பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒளியென்றால் நன்மை, இருளென்றால் தீமையென்னும் இறுமைநோக்குடனே அது வளர்ந்திருக்கிறது.வரலாற்று மற்றும் கலாச்சார சூழல்களில் வேரூன்றிய இந்த பைனரி தன்மை , கலை பிரதிநிதித்துவங்களை மட்டுமல்ல, உலகின் பரந்த கருத்துக்களையும் பாதித்துள்ளது.
காலனித்துவ(ஓரியண்டல்) கால ஓவியர்களின் படைப்புகளில் இது தெளிவாக உள்ளது. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டில் ஓரியண்டலிஸ்ட் ஓவியங்கள் பெரும்பாலும் கிழக்கை மர்மமானதாகவும், காமத்தில் துய்ப்பதாகவும், நாகரிகமற்ற வாழ்க்கை வாழ்வதாகவும் சித்தரிக்கின்றன.
இதற்கு நேர்மாறாக, அத்தகைய வரம்புகளிலிருந்து விலகிச் செல்வதற்கு, கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய நுணுக்கமான புரிதலும் பாராட்டும் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்கள் தனித்துவமான வரலாறுகள், மரபுகள், அவற்றின் நடைமுறைகளுடன் இணைக்கப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன என்பதை அங்கீகரிப்பது அவசியம். புகைப்படக் கலைஞர்கள் கலாச்சாரங்களின் சிக்கலான தன்மையைத் தழுவி, குறுகியபார்வையை தவிர்ப்பதன் மூலம் மிகவும் உண்மையான பிரதிநிதித்துவத்திற்கு பங்களிக்க முடியும்.
***
கடந்த இரு வாரமாக வட இந்தியா பயணத்தில் மீள மீள கண்ட பல காட்சிகளுண்டு. அது ரகுபீர் சிங் காட்டும் வண்ணம் நிறைந்த வாழ்க்கையின் கொண்டாட்டங்களை. ரயில் பயணத்தில், சாலை வழியில், நடக்கையில் எங்கும் அவ்வண்ணங்களை கண்டேன். இதற்கு முன்பும் நீண்ட பயணங்கள் செய்ததுண்டு. ஆனால் இத்தனை ஆழமாக, கூர்மையாக காட்சிகளை உள்வாங்கியதில்லை. இது ஒரு ஆசிரியரால் மட்டும் நிகழ்த்த முடியும் தாக்கம் என அறிகிறேன்.
குஜராத் மாநிலம், உமர்காம் தாலுகாவிலுள்ள, டெஹ்ரி கிராமத்தில் தங்கியிருந்தேன். அங்குள்ள கடற்கரை பகல் பொழுதில் நீர் அற்றதாக காட்சியளிக்கும். கடல் பல நூறு மீட்டர்கள் உள்வாங்கியிருக்கும். என்னவென்று கூற முடியாத மோனத்தில் நின்றிருந்தேன். மேற்குலகின் நிலக் கலை (Land Art) நினைவுக்கு வந்தது. அங்கிருக்கும் மனிதர்களுக்கு இந்த காட்சி எத்தகைய படிமமாக ஆழ் மனதில் எஞ்சும் என்று எண்ணிக்கொண்டேன்.
ஆசானுக்கு நன்றிகள்
ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள்
–பரமகுரு