குருஜி சௌந்தரின் யோக முகாம் மீண்டும் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழவிருக்கிறது. இதுவரை நிகழ்ந்த யோகமுகாம்களில் பங்குகொண்டவர்களில் பலர் முன்னரே யோகப்பயிற்சிகளில் பங்குகொண்டவர்கள். இன்று தமிழகத்தில் பிறிதொருவர் இத்தனை தெளிவும் நம்பிக்கையும் கொண்ட பயிற்சியை அளிப்பதில்லை என அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.
ஏனென்றால் யோகப்பயிற்சியாளர்கள் பலர் யோகம் பற்றிய மிகைகளைப் பரப்புகிறார்கள். அவர்களே அதை நம்புகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சர்வரோக நிவாரணியாக, ஒருவகை மாயமந்திரமாகச் சித்தரித்துவிடுகிறார்கள். பலர் யோகத்தை வழிபாடு, ஆசாரவாதம், பக்தி ஆகியவற்றுடன் இணைத்துவிடுகிறார்கள். அங்கே சாதிமேட்டிமையை கொண்டுவந்துவிடுபவர்களும் உண்டு. பல யோகஆசிரியர்கள் தங்களை ஒருவகை ஞானகுருவாக முன்வைக்கிறார்கள்.
யோகம் பயிலவிரும்பும் ஒரு நவீன உள்ளத்துக்கான பயிற்சியையே உத்தேசித்தேன். தர்க்கபூர்வமான, அறிவியல்சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்படவேண்டும். இயல்பான, நட்பான வழிகாட்டுதல்கள் தேவை. பயிற்சிக்காக அழகான அமைதியான குருகுலச் சூழல் அமையவேண்டும். இணையான உள்ளங்கள் அங்கே ஒன்றுகூடவேண்டும்.
யோகப்பயிற்சி இன்றைய சூழலில் நம்முடைய தேங்கிப்போன, மாறாச் சுழற்சி கொண்ட வாழ்க்கைமுறையின் விளைவாக உருவாகும் நீண்டகால உடல்நலச் சிக்கல்களை தீர்க்கிறது. உளச்சிக்கல்களை உடலை செம்மைசெய்வதன் வழியாக சரிசெய்கிறது. நம் தொழில், அலுவலகம், குடும்பம் உள்ளிட்ட சூழல்களில் உருவாகும் பதற்றங்களை எதிர்கொள்ளும் சமநிலையை அளிக்கிறது. நம் கவனத்தை குவிக்க உதவுகிறது.
குருஜி சௌந்தர் நான் நன்கறிந்த ஆளுமை. நம்பும் யோக ஆசிரியர். இன்று கீழைநாடெங்கும் பிரபலமாகி வருகிறார். இலங்கையில் மிக வெற்றிகரமான ஒரு பயணத்துக்குப்பின் அடுத்த மாதம் மீண்டும் ஓர் உலகப்பயணத்திற்கு கிளம்பவிருக்கிறார். இடைவெளியில் இந்த யோகமுகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
டிசம்பர் 22 , 23, 24 (வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் யோகமுகாம் அமைகிறது. ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்