நூல்கொடைகளின் பயன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

ஒருவரின் வாழ்க்கை அது தொடங்கிய இடத்தில் இருந்து எப்படி எவ்வளவு மாறியுள்ளது என்பதே அது வெறும் இருத்தலா வாழ்வா என்பதற்கான ஆதாரம். ” இந்த ஒற்றை வரியை சுற்றி வருகிறது  என் மனம் இன்று செயல் எழும் நாட்கள கடிதத்துக்கு மிக்க நன்றி.

எனக்கு ஒரு சந்தேகம். தற்போது வழக்கத்தை விட ..வாசிப்பின் வேகத்தை மிஞ்சும் அளவுக்கு புத்தகங்கள் வாங்குகிறேன். அதிலும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் இணையத்தளத்தில் அதிகமாக.

எந்த நிகழ்வாயினும் புத்தகங்கள் அங்கு இருக்க வேண்டுமென நினைத்து செயல்படுகிறேன். குழந்தைகளின் பிறந்தநாள் விழாவில்  ‘திருப்பித் தரும் பரிசு‘, நண்பர்களின் இல்லத்துக்கு செல்லும்போது தருவது  உள்பட .

ஆனால் அப்படி புத்தகத்தின் அருமை தெரியாதவர்களுக்கு( அதை பணமாகவோ அல்லது பிணமாகவோ  மதிப்பிடுவோருக்கு ) அதை அன்பளிப்பாக அளிப்பது சரியா . அது ஒரு புத்தகத்திற்கு செய்யும் அவமரியாதை என எண்ணத் தோன்றுகிறது சில நாட்களாய் .

அன்புடன்

கே.எம்.ஆர்.விக்னேஸ்

அன்புள்ள விக்னேஸ்,

இதே கேள்வியை நான் சுந்தர ராமசாமியிடம் கேட்டிருக்கிறேன். தேவையில்லாதவருக்கு புத்தகத்தை அன்பளிப்பாக அளிப்பது என்பது அந்நூலை வீணடிப்பதோ அவமதிப்பதோ அல்லவா என்று கேட்டேன். சு.ரா சொன்ன பதில் என்னை நிறைவுசெய்தது.

அன்பளிப்பு என்பது ஒருவரின் தேவைக்குரிய பொருளை இன்னொருவர் வாங்கித்தருவது அல்ல. தேவையானவற்றை வாங்கிக்கொள்ள அவர்களுக்கே தெரியும். அது ஓர் அடையாளச் செயல்பாடு. நம் அன்பை, மதிப்பை தெரிவிப்பது. அச்செயல்பாட்டில் நாம் யார் என்பதும், அவர்களை நாம் எப்படி நினைக்கிறோம் என்பதும் உள்ளது.

இன்று உண்மையில் நுகர்பொருட்கள் அனைவரிடமும் உள்ளன. மிக விலைமதிப்பான பொருட்களைத் தவிர எவையுமே பெரிய அளவில் பரிசாகக் கருதப்படுவதில்லை. குறிப்பாக உணவுப்பொருட்கள் பெரும்பாலும் வீணாகவே ஆகின்றன. இன்னும் பலர் அதை புரிந்துகொள்ளவில்லை.

நாம் ஒரு புத்தகத்தை கொடுக்கையில் முதலில் நாம் எவர் என அவருக்கு அறிவிக்கிறோம். ஏதோ ஒரு புத்தகத்தை கொடுக்கலாகாது. நமக்கு உகந்த நூலாக இருக்கவேண்டும். நாம் வாசித்த நூலாக இருக்கவேண்டும். அந்நூலைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லவும் வேண்டும். 

அதேபோல ஒரு நூலைப் பரிசளிக்கையில் பரிசு பெறுபவர் மீதான நம் கருத்தையும் தெரிவிக்கிறோம். அவர் அறிவியக்க நாட்டம் கொண்டவர் என்று, அல்லது அந்நாட்டத்தை அவர் கொள்ளவேண்டும் என்று நாம் எண்ணுவதாகவே அப்பரிசு பொருள் கொள்கிறது. ஆகவே பரிசுநூல் சம்பந்தமில்லாத ஒன்றாக இருக்கலாகாது. பரிசுபெறுபவருக்கு அது உதவும் என்று உண்மையாகவே நீங்கள் நம்பவேண்டும்.

வாசிக்கும் வழக்கமில்லாத ஒருவர் கூட பரிசாகக் கிடைத்த நூலை வாசிக்கலாம். அப்படி வாசிக்க ஆரம்பித்து என் வாசகர்களான பற்பலரை எனக்குத்தெரியும். ஒரு நூல் அருகே இருந்தமையாலேயே அதை வாசித்தவர்கள் பலர் உண்டு.

ஆனால் எல்லா நூல்களும் அப்படி பொதுவாகக் கொடுக்கத்தக்கவை அல்ல. குறிப்பாக இலக்கியவாசகர்களுக்கு உரிய நூல்கள். பொதுவான அறிவுத்தளம் சார்ந்து, எளிய மொழியில் அமைந்த நூல்களே உகந்தவை. அவை மிக எளியவையாக, பயனற்றவையாகவும் இருக்கலாகாது. நம் சூழலில் ஆன்மிகம், மதம் பற்றிய நூல்கள் எவராலும் விரும்பப்படுபவை. என் நூல்களில் சில பரிசுகளாகவே விற்றுக்கொண்டிருப்பவை.

குறிப்பாக அறம், குமரித்துறைவி, தன்மீட்சி, ஒளிரும் பாதை , இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், சங்கசித்திரங்கள் போன்ற நூல்கள் பரிசுகளாகவே பல்லாயிரம்பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன.   திருமண அன்பளிப்புகளாக அந்நூல்களை நூற்றுக்கணக்கில் வாங்கி அளித்தவர்கள் உண்டு.  பல நிறுவனங்கள் நூல்களை வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் அளித்ததுண்டு

ஈரோடு வாசிப்பியக்கம், தன்னறம் பதிப்பகம் ஆகியவை இலவசப்பிரதிகளாக பல்லாயிரம் நூல்களை கொண்டுசென்று சேர்த்துள்ளன.  அவை உருவாக்கிய பெரும்செல்வாக்கை நான் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் வாசிக்கும் வழக்கமில்லாத ஒருவருக்கு பரிசளிப்பதே கூடுதல் பொருள் கொண்டது. வாசிப்புப் பழக்கம் கொண்டவர் எப்படியாயினும் வாங்கி வாசித்துவிடுவார். வாசிக்காதவர்களுக்கே நாம் ஒரு தொடக்கத்தை  அளிக்கிறோம்.

திருமணங்களில் நூல்களை அளிக்க சில நண்பர்கள் முடிவுசெய்தபோது ஒரு எதிர்ப்பு வந்தது. ஆர்வமற்றவர்கள் நூல்களை வீசிவிட்டுச் செல்வார்கள் என்று. உண்மையில் அப்படி நிகழவில்லை. ஒருவர்கூட நூல்களை அலட்சியமாக தூக்கிப்போடவில்லை. அந்த மனநிலை தமிழர்களிடம் இல்லை. கொஞ்சம்கூட ஆர்வமற்றவர் கூட ஆர்வமுள்ள ஒருவரை கண்டடைந்து கையளித்துவிடுவார். பெரும்பாலும் குழந்தைகளிடம்.

ஆகவே நூல்களை கொடுப்பதுபோல் பொருளுள்ள அன்பளிப்பு வேறொன்றில்லை.

ஜெ 

முந்தைய கட்டுரைசெயல் எழல், கடிதம்
அடுத்த கட்டுரையுவன் விழா உரைகள்