Quoraமைகள்

அன்புள்ள ஜெ

Quora என ஓர் இணைய ஊடகம் உண்டு. கிட்டத்தட்ட விக்கிப்பீடியா போல ஒரு பொதுச்செய்திமையம் அது. பொதுமக்களே கேள்விகேட்கலாம். பொதுமக்களே பதில் சொல்லலாம். உலகம் முழுக்க மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் ஒரு தளம் இது. ஏராளமான அன்றாட செய்திகளுக்கு இது உதவுகிறது. நாம் ஒரு செய்தியை நம்மைப்போன்ற நாலுபேரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம் அல்லவா அதுதான், இதன் கான்செப்ட்.

ஆனால் தமிழில் இந்த தளம் போல கேவலமான ஒரு தளம் இல்லை. தெரியாமல் நான் ஒரு கேள்விகேட்டு இதை இன்ஸ்டால் செய்துவிட்டேன். தினசரி அன்றைய கேள்வி-பதிலை கோரா டைஜஸ்ட் என்று தொகுத்து மெயிலுக்கு அனுப்பும். 90 சதவீதம் ஆபாசச்செய்திகள்.சினிமா அரசியல் சார்ந்த அசட்டுக்கேள்விகளுக்கு மிகமிகமிக அபத்தமான அரைகுறைக் கேள்விகள். ஒரே முறை மனைவி அந்த மின்னஞ்சலை பார்த்துவிட்டு வசைபாடிவிட்டாள். அப்படியே பிளாக் செய்துவிட்டேன்.  நான் தெலுங்கும் தெரிந்தவன். தெலுங்கு குவாரா கூட தரமானதாகவே உள்ளது. தமிழில் மட்டும் ஏன் இந்த கோராமை?

எஸ்.மகாதேவன்

அன்புள்ள மகாதேவன்,

எனக்கும் இதே அனுபவம் உண்டு. ஒரே ஒருமுறை உள்ளே சென்றேன். அன்றே பிளாக் செய்துவிட்டேன். ஆனால் இப்போதும் மின்னஞ்சல் வந்து அழிக்கப்பட்ட குப்பைக்கூடைப் பகுதிக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. உங்கள் கடிதம் கண்டபின் எடுத்துப் பார்த்தேன். என்னென்ன கேள்விகள். பெரும்பாலும் சினிமா, சாப்பாடு, செக்ஸ். கொஞ்சம் அரசியல். அதுவும் இனவாத மூடத்தனம் நிறைந்த அரசியல் கேள்விகள், அதே தரம்கொண்ட பதில்கள்.

உதாரணமாக ஒரு கேள்வி. ‘மனைவி உடலுறவின்போது சத்தம் எழுப்புகிறார். என் வீடு சிறியது. நான் என்ன செய்யவேண்டும்?’. அதற்கான பதில் ‘உங்கள் மனைவி உடலுறவுகொள்வதை எவருக்கோ தெரிவிக்க விரும்புகிறார். அவரை தூண்டிவிட்டு கள்ள உறவுக்கு முயல்கிறார். ஜாக்ரதை’ என்ன ஒரு அறிவு. அந்தக் கேள்வி மெய்யானது என்றால் பதில்சொன்ன அந்த அடிமடையன் அல்லது அயோக்கியன் அந்தக் குடும்பத்தையே அழித்துவிடுவான். இந்த வகையில் ஏராளமான கேள்விகள்.

எல்லா கேள்விகளும் இதே ரகம். நான் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களில் 30 கேள்விகளை பார்த்தேன். ஒன்றுகூட, ஒரே ஒன்றுகூட, எவ்வகையிலும் உருப்படியான கேள்வி இல்லை. எல்லாமே அசட்டுத்தனங்கள். எல்லா பதில்களும் உச்சகட்ட அசட்டுத்தனங்கள்.

ஓர் ஆர்வத்தில் ஆங்கில கோரா சென்று பார்த்தேன். அற்பமான, ஆனால் தேவையான எவ்வளவு தகவல்கள். மின்பொறிகளில் இருக்கும் திருகாணியில் திருகியை பொருத்தும் கோடு இல்லையே என ஒருவர் கேட்க, மின்பொறிகளிலுள்ள திருகாணியில் பூவடிவில்தான் பிடிமானம் இருக்கும், அதற்கு வேறு திருகி தேவை என ஒரு பதில். அது தெரியாத எத்தனையோ பேர் இருக்கலாம்.

ஆப்பிளில் உள்ள மெழுகு உடலுக்கு கெடுதலா என்று ஒரு கேள்வி. அது மெழுகு அல்ல, தாவரப்பிசின் மட்டுமே, மெழுகை பூசினால் ஆப்பிள் மூன்றுமணிநேரத்தில் மூச்சுத்திணறி அழுகிவிடும் என ஒரு பதில். கழுவிவிட்டு ஒரு துவாலையால் அழுந்த துடைத்து தோலுடன் சாப்பிடலாம், ஆப்பிளின் தோல் உடலுக்கு மிக நல்லது என்று பதில். நான் பார்த்த இருபது கேள்விகளில் ஒன்றே ஒன்றுதான் பயனற்றது.

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? ஏனென்றால் இது நம் பொதுச்சமூகத்தின் இயல்பு. டிவிட்டர், முகநூல், யூடியூப், விக்கிப்பிடியா என எல்லாவற்றையும் இப்படித்தான் அழிக்கிறோம். பொது இடங்களில் குப்பை போட்டு சீரழிப்பதுபோல. இன்னொன்றை எதிர்பார்க்கவே முடியாது. இரவுபகலாக இங்கே அரட்டைகளில் என்ன இருக்கிறது? சினிமா வம்பு, தீனி, செக்ஸ், அரசியல் – அவ்வளவுதான். எதையும் எவரும் தெரிந்துகொள்வதில்லை. ஒரு தொழிலைச் செய்பவன் அத்தொழிலையேகூட தெரிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை. அவனைமீறி தெரியவந்தால்தான் உண்டு. சட்டியில் என்னவோ அது அகப்பையில் வருகிறது.

கோராவை உடனடியாக மூடிவிடுக. அது நம் பாமரர்களின் அசட்டுத்தனங்களின் பெருங்குப்பை மலை. நீங்கள் சமூகவியல்- உளவியல் ஆய்வு செய்பவராக இருந்தால் அதை ஒரு தரவுத்தளமாக பயன்படுத்தலாம். நோய்க்கூறு தகவல்களை பயன்படுத்துவதுபோல.

ஜெ

முந்தைய கட்டுரைஜான் கோஸ்ட்
அடுத்த கட்டுரைஅஞ்சலி – இராசேந்திர சோழன்