ஒரு சிம்மம்

‘சொக்கிட்டு வருது’

அருண்மொழி முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருநாளும் தவறாமல் தொலைபேசியில் அழைத்துகுட்டிங்க சாப்பிட்டாச்சா?” என்று விசாரிப்பாள். அவள் கேட்பது என் நாய்களை. ஒன்று லாப்ரடார், இன்னொன்று டாபர்மான். இரண்டுமே ஐம்பது கிலோவுக்கு மேல் எடைகொண்ட பெரிய நாய்கள். நாய்வாழ்க்கையில் நடுவயதில் இருப்பவை. ஆனால் அவை வீட்டுக்கு வந்தபோது குட்டிகள்தானே? அதே குட்டித்தனம் கடைசிவரை விலகவுமில்லையே.

நாய்கள் என்றுமே வளராத குழந்தைகள் போன்றவை. நாய்களை பலர் வளர்ப்பதற்கு முதன்மைக் காரணமே அதுதான். குழந்தைகள் வளர வளர நாம் அவர்களை இழக்கத் தொடங்குகிறோம். குழந்தைமைக்கான ஏக்கம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. பேரப்பிள்ளைகள் பிறக்கலாம், ஆனால் அவர்கள் நம்முடனேயே இருப்பதில்லை. நமக்கேயான குழந்தைகள் என வருபவர்கள் பைரவர்களே.

குழந்தை தன்னலம் மிக்கது. அதற்கு உணவு வேண்டுமென்றால் வேண்டும்தான். குழந்தை கெஞ்சுவதில்லை, ஆணையிடுகிறது. அடம்பிடிக்கிறது. அதட்டுகிறது.  குழந்தை நம்முடன் அது கொண்டுள்ள உறவை ஓர் ஒப்பந்தமாக நினைப்பதில்லை. கொடுக்கல் வாங்கலென எண்ணி கணக்குப் பார்ப்பதில்லை. அது நம்மில் ஒரு பகுதியென தன்னை நினைக்கிறது. தன்னுடைய நீட்சி என நம்மை நினைக்கிறது. ஆகவே அது இயல்பாக நம் மடியில் அமர்கிறது. நம் கையை தலையணையாகக் கொள்கிறது. நம் உடலை தன் உடலென பயன்படுத்திக்கொள்கிறது

இது அந்த கவிஞன்தானே, என்ன திடீர்னு நாயா ஆய்ட்டான்?

குழந்தை இவ்வுலகின்மேல் பெரும் பற்று கொண்டிருக்கிறது. இங்குள்ள எல்லாமே அதற்குப் பிடித்திருக்கிறது. குழந்தை பசியோ தூக்கமோ வலியோ இல்லாமல் இக்கையில் இயல்பாகவே மகிழ்வுடன் இருக்கிறது. மேற்கொண்டு மகிழ்வாக இருக்க ஒரு காரணம் அதற்குத் தேவையில்லை. குழந்தைக்கு எல்லாமே அறியவேண்டியவை, ஆராயவேண்டியவை. ஓயாத ஆர்வமே குழந்தையென நம் முன் திகழ்கிறது.

நாய்கள் எத்தனை வளர்ந்தாலும் குழந்தைகள்தான். அவை நம்மீது முழுமையான உரிமை கொண்டுள்ளன. நம்மிடம் அவை இயல்பான எதிர்பார்ப்புடன் உள்ளன. நம்மை விரும்புகின்றன. நம்மை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. நாய் எப்போதும் மகிழ்வுடன் இருக்கும் ஒன்று. ஆர்வமே உருவானது. ஒரு புதியவர் வீட்டுக்கு வந்து அவரை முகர்ந்து பார்க்க, அவர் செருப்பை முகர்ந்து அவர் வந்த பாதையை புரிந்து கொள்ளத் துடிக்கிறது.

நாம உண்டு நம்ம ஸ்பூன் உண்டுன்னு இருக்கோம்

நாயே குட்டியாக இருக்கையில் அது இருமடங்குக் குழந்தை.அது ஒரு உற்சாகப் பந்து. வளரவேண்டும் என்னும் விழைவு மட்டுமேயானது. ஆகவே உணவு உணவு என உடலே துடிக்கிறது. உணவைக் கண்டதும் பாய்ந்து நெருப்பு சருகை உண்பதுபோல உண்கிறது. மனிதர்கள் உடனிருப்பதனாலேயே உச்சகட்ட களிவெறியை கொள்கிறது. மடிமேல் ஏறி அமர்ந்து கையை தூக்கு என ஆணையிட்டு அந்தக் கைமேல் படுத்து தூங்குகிறது. விழித்ததும் ஐயய்யோ சாப்பாடு என ஒரு கூச்சல். சாப்பிட்டதும் கால்பரப்பி நின்று சிறுநீர் அல்லது புழுக்கை. உடனே சுற்றிச்சுற்றி வாலாட்டியபடி ஓட்டம். 

குழந்தைகளைப்போல நாய்க்குட்டிகளுக்கும் ஒரு நாள் என்பது பல இரவுபகல்கள் கொண்டது. நாலைந்து முறை தூக்கம். நாலைந்து முறை உணவு. நாலைந்து முறை காலைக்கடன்கள். ஒவ்வொரு குட்டிநாளிலும் புத்தம் புதியதாகப் பிறந்தெழுதல். நாயுடன் இருப்பதென்பது இப்புவியின் மிக அழகிய உயிரொன்றுடன் இருத்தல். நாய்க்குட்டியுடன் இருத்தலென்பது இப்புவியின் கனிந்த தேன் துளியை கையிலேந்திக்கொள்ளுதல்.

ஒருவழியா ஏறியாச்சு, எறங்கணுமே

அஜிதனின் நண்பன், எழுத்தாளரும் கவிதைகள் இணைய இதழின் ஆசிரியருமான ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் இல்லத்தில் ஒரு நாய்க்குட்டி வாங்கியிருக்கிறான். பீகிள் (Beagle) இனத்து நாய். கால்கள் குட்டையாக வளரும் இவ்வகை நாய்களை பொந்துகளுக்குள் புகுந்து வேட்டையாடுவதற்காக உருவாக்கினார்கள். கால்கள் குட்டையான காட்டுநாய் இனத்திலிருந்து ஒட்டுபோட்டு உருவாக்கப்பட்டவை. காதுகள் பெரியவை. 

பீகிள் இங்கிலாந்து நாய். சார்ல்ஸ் ஷூல்ஸ் எழுதிவரையும் (Charles Schulz) பீநட்ஸ் என்னும் புகழ்பெற்ற சித்திரக்கதை வரிசையில் வரும் சிந்தனையாளரும், மனிதர்களைப் பற்றிய அக்கறையும் அனுதாபமும் கொஞ்சம் அலட்சியமும் கொண்டவருமான நாய் ஸ்னூப்பி பீகிள் இனத்தைச் சேர்ந்ததுதான். ஸ்னூப்பி ஐரோப்பியக் கலையில் ஆர்வமும், பொதுவாக ஐரோப்பிய நுண்ணுணர்வும் கொண்டது. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை தினம் ஒரு வார்த்தை வீதம் வாசித்துக்கொண்டிருக்கிறது .

வீட்டுக்குள் வளர்க்கப்படவேண்டிய சிறிய இனம் நாய்கள் இவை.  கடைசிவரை குழந்தைகளாகவே இருப்பவை.பிரச்சினை என்றால் வீட்டுக்குள் வந்து நம் காலடியில் பதுங்கிக்கொள்பவை. ஆனால் வெளியுலகின் மேல் தீரா ஆர்வத்துடன் அங்குள்ள சகல வம்புகளையும் இழுத்துக்கொண்டு வந்துசேரும் பண்புநலனும் உண்டு

சிம்பாவை அது தூங்கும்போது நாம் ஒரு கைப்பை என்று நினைத்துவிடலாகும். தூங்காதபோது ஒரு போட்டோ எடுப்பது கடினம். நவீன் ஏன் அதற்கு சிம்பா என்று பெயரிட்டார் என தெரியவில்லை. தான் ஸ்வாகிலி மொழியில் சிங்கம் என அதற்கு தெரியவில்லை. ஒரே மழலைக்கூத்து. பத்து நிமிடத்திற்கொருமுறை நாம் ‘மெயில் செக்’ செய்வதுபோல சாப்பாட்டு டப்பாவை சென்று பார்த்துவருவான். 

அது ஒரு நவீன சாப்பாட்டு டப்பா. வேகமாக சாப்பிடுகிறான் என்பதனால் செயற்கையான இண்டு இடுக்குகள் கொண்டது.அதை நாக்கைவிட்டு சுழட்டி நக்கித்தான் சாப்பிடவேண்டும். ஆகவே நீண்டநாள் சாப்பிட்ட நிறைவு. எப்படி முயன்றும் ஓரிரு உருண்டைகள் அதிலேயே எஞ்சிவிடுவதன் காவியமென்சோகம். நான் என் டாபர்மான் நாய் டெட்டியை நினைத்துக்கொண்டேன். வாயை விட மூக்கு ஒரு இஞ்ச் முன்னால் இருப்பதனால் அது சாப்பிட்டபின் மூக்கின் நுனியின் கொஞ்சம் உணவு எப்போதும் எஞ்சியிருக்கும்.

‘கனவில் ஒரு சாப்பாட்டு டப்பா’

சிம்பாவுக்கு மென்பற்கள் நமநமவென்கின்றன. ஆகவே உலகையே கறம்பிப் பார்த்துவிடவேண்டும் என்னும் வெறி. எவர் கூப்பிட்டாலும் வந்து மடியில் ஏறிவிடுவான். மறுகணமே கைகளை கடிக்க ஆரம்பிப்பான். அவன் கையையே அவன் வாயில் கொடுத்தால் ‘அதுக்கு வேற ஆளைப்பாரு’ என்னும் பாவனை. சிம்பா தான் கடிக்கையில் அது நமக்கு வலிக்கிறது என நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறான். அதிலென்ன என்ற பாவனையும் உண்டு.

அவன் கடிக்கும்போது நான் அவன் பற்களின் இடைவெளியிலுள்ள வெறும் ஈறில் விரலை கொடுத்தால் கடித்துவிட்டு என்ன நிகழ்கிறது என்று சிந்தித்து பல்லை நகர்த்தி கொண்டுவர முயல்கிறான். இன்னும் சில நாட்களில் நாற்காலிகளிலெல்லாம் சிம்பாவின் இளமைப்பருவம் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கும்.

கல்வெட்டு பொறிக்கும் கடமையில்

சிம்பா எல்லா குழந்தைகளைப்போலஎங்கும் ஏறிவிடுவேன்என்னும் அறைகூவலுடன் வாழ்பவன். நாற்காலிகளில் இருந்து உருண்டு விழுவது, முக்காலிகளில் சமநிலைக்காக தள்ளாடுவது, படிக்கட்டில் காதுகள் பறக்க தாவி மேலே சென்றுவிடுவது சகஜம். கீழே இறங்கத்தான் ஒவ்வொரு முறையும் பிறர் உதவி தேவை. ஏறினால் இறங்கியாகவேண்டும் என்னும் பிரபஞ்ச விதி மேல் அவனுக்கு புகார்கள் உள்ளன. 

எல்லா குழந்தைகளையும்போல சிம்பாவுக்கும் அவனுக்காக வாங்கப்பட்ட எந்த பொம்மையிலும் இம்மியளவும் ஆர்வமில்லை. மாறாக கரண்டிகள், ஆடைகள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களில் பேரார்வம். என்ன காரணத்தாலோ சுவாரசியமானவை எல்லாம் இந்த உலகில் தடுக்கப்பட்டுள்ளன.

எல்லா குழந்தைகளையும்போல சிம்பா செய்யும் எல்லாமே பிழையாக கருதப்பட்டு கண்டிக்கப்படுகிறது. ’சிம்பா நோ’ என்னும் சொற்றொடர் சுருங்கி ’சிம்பா’ என்பதே நோ என ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தன்பெயர் சொல்லப்பட்டதுமே சிம்பாஐயம் ஸாரிஎன்னும் கண்பாவனையை வெளியிட்டு அடுத்த தடைசெய்யப்பட்ட செயலுக்கு நகர்கிறான். 

சிம்மவாகினியின் காலடியில்

சிம்பாவுக்கு பொதுவாக எல்லாமே நிறைவு. எல்லா மானுடரும் நல்லவர்கள். விதிவிலக்கு கவிஞர் ஆனந்த் குமார். நல்லவர்தான். ஆனால் அவர் அவ்வப்போது தன்முன் நான்கு கால்களில் நிற்பது சிம்பாவுக்கு புரியவில்லை. ஆவேசமாக பின்னகர்ந்து வள் வள் என்று குரைத்து, அவர் அணுகி வந்தால் குடல்பதறி ஓடி பதுங்கிக்கொண்டான். அவர் குரைத்தபடி துரத்துகையில் சமையலறையில் தஞ்சமடைந்தான்.

நவீனின் மனைவி கிருபாலக்ஷ்மிக்கு குழந்தை பிறக்கவிருக்கிறது. அது திகழ்வதற்கான ஓர் இனிய வெளியை சிம்பா உருவாக்கிக்கொண்டிருக்கிறான். கிருபாவின் காலடியில் சிம்பா படுத்திருக்க அவள் அதை தூக்க முயல்கையில் ஒரு புகைப்படம் எடுத்தேன். தேவி தன் காலடியின் சிம்மத்துக்கு அருள்புரிவதுபோலிருந்தது. 

முந்தைய கட்டுரையாளி நகர்
அடுத்த கட்டுரைகுள்ளச்சித்தனின் மறைஞானம்