சுயமுன்னேற்றமா?

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா என்பது ஜெயமோகனின் சுயமுன்னேற்றத்துக்கான விழா என்றும், ஜெயமோகன் இணையதளம் ஜெயமோகனை முன்வைக்கும் ஒரு தளம் என்றும் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு நண்பர்கூட்டம் எனக்கு உண்டு. இக்குற்றச்சாட்டு உங்கள்முன் வந்ததுண்டா?

சிவச்செல்வன் குமரவேல்

அன்புள்ள சிவச்செல்வன்,

நெல்லை உரையின்போது சந்தித்தோம் இல்லையா?

இக்குற்றச்சாட்டு வராத மாதமே இல்லை. நான் பலமுறை சொன்ன பதில்தான்.

தமிழில் எந்த எழுத்தாளர் எக்காலத்தில் தன்னை, தன் எழுத்தை முன்வைக்காதவராக இருந்துள்ளார்? எழுத்தாளனின் பணியே அதுதானே? தன்னையும் தன் எழுத்தையும் முன்வைத்தல், அதன் வழியாக அறிவுலகின்மேல் முடிந்தவரை செல்வாக்கைச் செலுத்துதல். அதற்காகத்தானே அவன் எழுதுகிறான்?

என் இடம் நான் எழுதி ஈட்டியது. எந்த வணிக இதழின் ஆதரவும் இல்லாமல் என் எழுத்தின் வழியாக அடைந்தது இது. என் எழுத்து எனக்கு ஈட்டித்தந்த நண்பர்கள் அதை மேலும் முன்னெடுத்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம். ஐயமே இல்லாமல் அது என்னை, என் எழுத்தை, என் இலட்சியங்களை முன்வைக்கும் நோக்கம் கொண்டதுதான்.

ஆனால், நான் அதை என் பார்வையில் முக்கியமான படைப்பாளிகளை அடையாளம் காட்ட, அவர்களை முன்வைக்க பயன்படுத்திக்கொள்கிறேன். என் முன்னோடிகளை முன்வைக்கிறேன். என் சமகால படைப்பாளிகளை முன்வைக்கிறேன். எதிர்காலச் சாதனையாளர்களை முன்வைக்கிறேன். தமிழில் வேறு எவர் இவ்வாறு தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளனர்?

என் தளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண்டு முழுக்க வேறுபடைப்பாளிகள்தான் முன்னிறுத்தப்படுவார்கள். விஷ்ணுபுரம் விருது அக்டோபரில் அறிவிக்கப்பட்டால் ஜனவரி வரை திரும்பத் திரும்ப அந்த படைப்பாளிதான் முன்வைக்கப்படுவார். கடிதங்கள், கட்டுரைகள், பேட்டிகள். குறைந்தது இருநூறு முறையாவது. அதன்பின் குமரகுருபரன் விருது பெறுபவர் ஏப்ரல் முதல் ஜூன் இறுதி வரை. ஜூலை முதல் அக்டோபர் வரை தூரன் விருது பெறுபவர். அதன் ஊடாக இந்த விழாக்களில் பங்குபெறும் படைப்பாளிகள் முன்வைக்கப்படுவார்கள்.

இதைத்தவிர முன்னோடிகள் கட்டுரைகளாகவும் நினைவுகூர்தலாகவும் இத்தளத்தில் வந்துகொண்டே இருப்பார்கள். விவாதங்களாக அவர்கள் இல்லாத மாதமே இருக்காது. இடைவிடாமல் தமிழிலக்கிய முன்னோடிகளை முன்வைக்கும் இன்னொரு ஊடகமே இன்று தமிழில் இல்லை– ஜெயமோகன். இன் இணைய இதழ் தவிர.

இதை அறியாத எவருமே இங்கில்லை. எனில் ஏன் சொல்கிறார்கள்? இங்கே ஓர் அளவுகோல் உள்ளது. இது எவரும் அமரும் பெஞ்சு அல்ல. அழகியல் அளவுகோல் இது. அந்த அளவுகோலில் தேறாதவர்கள், தேறமாட்டோம் என அறிந்தவர்கள் புழுங்குவார்கள். அது இயல்பு

ஜெ 

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

முந்தைய கட்டுரைபெண்கள் ஏன் இல்லை?
அடுத்த கட்டுரைமறுபாதிகளின் கதை- ரம்யா