பா.ரா,சுபத்ரா- கடிதங்கள்

பா.ராகவன்

அன்புள்ள ஜெ,

அண்மையில் பா.ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை வாசித்தேன். நான் அவர் ஒரு இந்துத்துவ எழுத்தாளர் என்று நினைத்திருந்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என்று தெரியவில்லை. அவர் பார்ப்பனர் என்று இணையத்திலே படித்திருந்ததுதான் காரணம். ஆகவே அவருடைய நூல்கள் எதையும் படிக்கவில்லை. உங்கள் தளத்தில் அவருடைய புரஃபைல் பார்த்த பிறகு படிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. உங்களையும் இந்துத்துவர் என்று சொல்லி பத்தாண்டுகளாக வாசிக்காமலிருந்தேன் என்பது உங்களுக்கே தெரியும். 

நிலமெல்லாம் ரத்தம் இப்போது பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முக்கியமான நூல். பா.ராகவன் ஒரிஜினலாக ஆய்வு செய்தார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லா நூல்களையும் ஆழ்ந்து கற்று, வேகமான எளிய தமிழில் ஓர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கிறார். எந்தப்பக்கமும் சாயவில்லை. பாலஸ்தீன பிரச்சினையை எப்படி பாலஸ்தீன தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் ஹைஜாக் செய்தன என்றும் எழுதுகிறார். ஆனால் அதேசமயம் இஸ்ரேல் செய்துகொண்டிருப்பது அப்பட்டமான ஆக்ரமிப்பும் இன ஒழிப்பும் மட்டுமே என்றும் சந்தேகமில்லாமல் சொல்லி நிறுவுகிறார். முக்கியமான நூல் அது.

பா.ராகவனின் மற்ற நூல்களையும் வாசிக்கவேண்டும். முடிந்தால் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்து அவரைச் சந்திக்கவேண்டும்.

ஆர்.  ஜஸ்டின் ராஜ்

பொலிக.. பொலிக.. – பா.ராகவன்ஒரு பகிர்தல்.குமரவேள்

நேரே நில் – நிமிந்து பார் – நெஞ்சில் பட்டதை வளமாய்ச் சொல் – இதுதான் எழுத்தின் மங்கல சூத்திரம் என்று பேனா பிடித்த பலருள் முன் வரிசையில் உள்ளவர் பா.ராகவன் என்பதை பன்னெடுங்கால தமிழ் இலக்கிய வாசகன் (அதாவது ஜெ.மோ. இணையதள வாசகன்) என்கிற முறையில் நான் நன்கு அறிவேன்.

இக்கடிதத்தை எழுதத்தூண்டியது மதிப்பிற்குரிய சுபஸ்ரீ (டிசம்.10 ஜெ.மோ.இணையதளம்) அவர்கள் பா.ராகவன் அவர்களது ‘யதி’ நாவல் குறித்த மதிப்பீடுதான்.   அந்நாவலை – சித்தர் குறித்த தகவல்களுக்கு உயரிய – உரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்காகவே பலமுறை வாசித்தோர் இருப்பார்கள்.   நான் அவர்களுள் ஒருவன்.

அதே தகவல்கள் – மதிப்பிற்குரிய சுபஸ்ரீ அவர்களுக்கு சலிப்பூட்டுவது லேசான புருவ உயர்த்தலைத் தருகிறது.  சரி! நூறு வகைப் பூக்கள் பூக்கும் தானே!  அதே போல் – தினமணிக்கதிரில் – தொடராக வந்து – தொகுக்கப்பட்டதன் தடயங்கள் இந்நாவலில் தெரிவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.  அவ்வாறே தெரிந்தாலும், அந்நாவலுக்கு அது அவசியமான அடர்த்தியை நீர்த்துப்போகச் செய்வதாகத் தெரியவில்லை.  தேநீருக்குப் பாலில் சிறிது தண்ணீர் கலக்கினால் தானே சுவை கூடும்.

எனது வாசிப்பில் – பா.ராகவனின் உச்சம் – “பொலிக பொலிக” தான். இப்புத்தகம் ராமானுஜர் என்கிற வைணவ மகானை மானுட காதலனை மிகச்சிறப்பாக – அற்புதமான உரைநடையில் – தேர்ந்த ரசனை கொண்டவர்களுக்கும் அதை நோக்கிய முயற்சி உடையோர்க்கும் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்கிறது.  அவரை நேரில் சந்தித்து – பாதம் தொட்டு வணங்கி நான் அப்புத்தகத்தை பெற்றுக் கொண்டேன்.  நமது ஆசான் ஜெயமோகன் அவர்களது வெண்முரசு முதற்கனலை பெரும்பாலான நாட்களில் – ராகு காலத்தில் வாசிப்பது எனது வழக்கம்.   ராகு தோஷத்தைப் போக்குவதற்கும் பரிகாரமாகவும் அதை பரிந்துரைத்து வருகிறேன்.   அது போலவே பொலிக பொலிக புத்தகமும் – இலக்கிய மதிப்பும் – உரைநடை தமிழில் புதிய உத்திகளையும் – சொல்லாட்சியும் – கொண்டு இனிமையான வாசிப்பனுபவத்தை தருகிறது.   தமிழ் இந்து நாளிதழில் வந்த – அவரது – ருசியியல் கட்டுரை தொகுப்பும் சிறந்த ரசனையுடைய ஜெ.மோ. இணையதள வாசகர்களுக்கு கனமான வாசிப்பனுபவத்தை தரும்.  எப்படி – “ஜெயகாந்தனுக்குப் பின்…..?” என்கிற எங்களைப்போன்ற பலரது கேள்விக்கு ஜெயமோகன் என்ற பதிலை காலம் தந்ததோ அதே போல… பா.ராகவன் அவர்களுக்கும் காலம் இன்னும் பெரிய ஓர் இடத்தைக் காட்டும் என்பது என் கணிப்பு.

ஆ. குமரவேள்

நாமக்கல்

அன்புள்ள ஜெ,

நலம்தானே? இந்த ஆண்டு இரண்டு முக்கியமான மொழியாக்கநிபுணர்களை கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. லதா அருணாசலம், இல.சுபத்ரா இருவரின் நூல்களையும் வாசித்துள்ளேன். (தீக்கொன்றை மலரும் பருவம், ஆயன்) இரண்டுமே மிகச்சரளமான மொழியாக்கங்கள். சிற்றிதழ்க்காரர்கள் செய்யும் மொழிக்குளறுபடிகளே இல்லை. நேராகச் செல்லும் மொழிநடை காரணமாகவே இயல்பாக வாசிக்க முடிந்தது. மொழியாக்கத்தில் இந்த வாசிப்புத்தன்மையே அடிப்படை. அது இல்லையேல் எந்த மொழியாக்கத்துக்கும் அர்த்தம் இல்லை. நீங்கள் இந்த இருவரையும் அந்த அடிப்படையிலேயெ முன்வைக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

அரு. பழனி 

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

முந்தைய கட்டுரைமாயங்களின் கதை சொல்லி – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அடுத்த கட்டுரையுவன் பேட்டிகள்