2023 விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய் அளவில் ‘சமகால வரலாற்றாசிரியர்’ என்னும் தகைமையுடன் அறியப்படும் அறிஞர் குகா. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சமகால வரலாறு என்னும் விஷயம் பற்றி பெரிய புரிதல் இல்லை.
வரலாற்றெழுத்து (historiography) என்பது வரலாறை எழுதும் அறிவுத்துறை. வரலாறு என நாம் சொல்வது பல கோணங்களில் எழுதப்பட்ட சென்றகாலநிகழ்வுகளின் தொகுப்பு. வரலாற்றில் பல பார்வைகள் கொள்கைகள் உள்ளன. உதாரணமாக, சோழர்காலம் பொற்காலம் என்பது ஒரு பார்வை. சோழர்காலம் இன்றுள்ள சுரண்டலமைப்புகள் உருவாகி வந்த சூழல் என்பது இன்னொரு பார்வை. வரலாறு என்பது இப்பார்வைகள் நடுவே நிகழும் விவாத முரணியக்கமாக புரிந்துகொள்ளப்படவேண்டியது. இந்தக்கொள்கைகள் வரலாற்றுக்கொள்கைகள் எனப்படுகின்றன.
வரலாற்றெழுத்து என்பது வரலாற்றை எழுதும் முறைமைகள், கொள்கைகள் மட்டும் அடங்கிய அறிவுத்துறை. அதில் பல பார்வைகள் உள்ளன. சென்றகாலத்தை வெறுமே காலவரிசைப்படி ஆவணப்படுத்துவது மட்டுமே வரலாறு என்பது செவ்வியல் பார்வை. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் அப்பார்வை கொண்டவர்கள். வரலாறு ஏன் ஒருவகையில் நிகழ்கிறது, அதன் பொருளியல் அடிப்படைகள் என்ன, சமூக அடிப்படைகள் என்ன என்றெல்லாம் ஆராயவேண்டும் என வாதிடுவது இன்னொரு பார்வை. டி.டி.கோசாம்பி அப்பார்வை கொண்டவர். நீலகண்டசாஸ்திரிக்கு எதிர்த்தரப்பான பர்ட்டன் ஸ்டெயின் அந்த தரப்பினர். இந்த கொள்கைகள் வரலாற்றெழுத்துக் கொள்கைகள் எனப்படுகின்றன.
வரலாற்றெழுத்தில் ஒரு வகைமை சமகால வரலாறு. வரலாறு என்றால் பழைய காலம் பற்றியது என்னும் எண்ணம் நம்மிடையே உள்ளது. அண்மைக்கால வரலாறு, சமகால வரலாறு என்பதும் பண்டைய வரலாறு போலவே முக்கியமானது. விரிவாக ஆவணப்படுத்தப்படவேண்டியது. இப்படிச் சொல்லலாம், ‘செய்திகளால் நாம் அறிந்தவற்றையே தொகுத்து வரலாறாக ஆக்குதலே அண்மைக்கால வரலாறு’ என்பது.
ஆனால் அண்மைக்கால வரலாறு, சமகால வரலாறு ஆகியவற்றை எழுதுவது எளிதல்ல. பண்டைய வரலாறு என்பது மிகக்குறைவான தரவுகள் கொண்டது. உண்மையில் அது ஒரு வசதி. கிடைக்கும் தரவுகளை சேர்த்து ஒரு சித்திரத்தை உருவாக்குவது அதன் வழி. அதாவது விரித்தெடுத்தல். அண்மைக்கால வரலாறு, சமகால வரலாறு என்பது ஏராளமான தரவுகள் அடங்கியது. தேவையற்ற தரவுகளே மிகுதி. பலவகையான கருத்துக்கள், பார்வைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து முக்கியமானவற்றை மட்டும் தேர்வுசெய்து அந்த முக்கியமான நிகழ்வுகள் வழியாக வரலாற்றை உருவாக்கி எழுதவேண்டும். அதாவது குறைத்து எழுதுதல்.
உதாரணமாக இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை எழுத ஆரம்பித்தால் எத்தனை பார்வைக்கோணங்கள். மார்க்ஸியர்கள் ஒரு சித்திரம் அளிப்பார்கள். இந்துத்துவர்களின் சித்திரம் இன்னொன்று. காலனியாதிக்கவாதிகளின் சித்தரிப்பு முற்றிலும் வேறு. காங்கிரஸை முன்வைத்து எழுதினால்கூட காந்தி, போஸ், பட்டேல் என மூன்று வெவ்வேறு புள்ளிகளை மையமாக்கி வேறுவேறு கோணங்களில் அவ்வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. எல்லா தரப்புக்கும் தரவுகளும், விரிவான தர்க்கங்களும் உள்ளன. இந்திய சுதந்திரத்தின் ‘வரலாறை’ எப்படித்தான் எழுதுவது?
இதற்கு ஒட்டுமொத்த வரலாற்றையும் பார்க்கும் பார்வை வேண்டும். வரலாற்றை தீர்மானிக்கும் அடிப்படை விசைகள் என்னென்ன என்ற புரிதல் வேண்டும். முக்கியமான நிகழ்வுகளை கண்டறிந்து, தெரிவுசெய்வதிலுள்ள தெளிவே சமகால- அண்மைக்கால வரலாற்றாசிரியரின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கிறது. அவற்றை தர்க்கபூர்வமாக அடுக்கி ஒரு பெருஞ்சித்திரத்தை அவர் உருவாக்கவேண்டும். அவ்வகையில் இந்திய சமகால வரலாற்றாசிரியர்களில் ராமச்சந்திர குகாவே முதன்மையானவர். உலக அளவிலேயே கூட அவருக்கு நிகராந தரம் கொண்ட சமகால வரலாற்றாசிரியர்கள் சிலரே.
சமகால – அண்மைக்கால வரலாற்றாசிரியர்களின் சிக்கல் என்பது தனக்கான பார்வையை கொண்டிருக்கையிலேயே, முன்முடிவுகள் கொண்டிருக்காமலிருத்தல்தான். நான் புகழ்பெற்ற அமெரிக்க தேசிய சமகால வரலாற்றாசிரியர்களின் நூல்களை தொடர்ச்சியாக வாசித்த நாட்களுண்டு. அவை மிகப்பெரும்பாலும் வலுவான முன்முடிவுகள் கொண்டவை. அதேசமயம் பிரமிக்கத்தக்க தரவுச்சேகரிப்பும் கொண்டவை. அந்த தரவுகள் எளிய வாசகர்களை பிரமிக்கச்செய்து வாயடைய வைத்துவிடும். அந்த மாபெரும் தரவுத்தொகுப்பை எதிர்கொள்ள நம்மிடையே தரவுகள் இல்லை. மிக எளிதாக நம்மை அவர்கள் தங்கள் முன்முடிவுகளை நோக்கிக் கொண்டுசென்றுவிடுவார்கள். ஆகவே அத்தகைய நூல்கள் பற்றிய அமெரிக்க மதிப்புரைகளை, மேலோட்டமான குறிப்புகளை கருத்தில்கொள்வதே இல்லை என்னும் முடிவை எடுத்தேன். இன்று அவற்றை தொட்டுக்கூட பார்ப்பதில்லை.
சமகால வரலாற்றாசிரியர் தனக்கான பார்வை கொண்டிராதவராக இருக்கவே முடியாது. ஏனென்றால் சமகால வரலாறு என்பது கிடைக்கும் வரலாற்றுச்சான்றுகளை புள்ளிகளாக இணைத்து ஒரு கோலத்தைப்போடுவது அல்ல. அதற்குமுன் எது முக்கியமான வரலாற்று நிகழ்வு என்று தேர்வுசெய்தாகவேண்டும். பரபரப்பான நிகழ்வுகள் உண்டு. பல்லாயிரம்பேர் கலந்துகொண்ட நிகழ்வுகள் உண்டு. சிலநிகழ்வுகள் கவனிக்கப்படாமலேயே சென்றிருக்கும். அவற்றிலிருந்து மெய்யான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வை தேர்வுசெய்யவேண்டும்.அதற்கு அளவுகோலாக அமைவது ஆசிரியரின் வரலாற்று ஆய்வுமுறைதான். வரலாறு என்றால் என்ன என அவர் அறிந்திருக்கவேண்டும். வரலாறு எப்படி இயங்குகிறது என்னும் புரிதலும் வேண்டும்.
உதாரணமாக, ராமச்சந்திர குகா சமகால இந்தியவரலாற்றில் முதன்மை நிகழ்வாகக் கருதுவது இந்தியா நடத்திய முதல் பொதுத்தேர்தலை. அனைத்து வயது வந்தோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட அந்தத் தேர்தலில்தான் உலகின் வரலாற்றிலேயே மிக அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களித்தனர். அதை விரிவாக இந்தியா- காந்திக்குப்பின் நூலில் விவாதிக்கிறார். இதற்குக் காரணம் ஜனநாயகத்தை அவர் சமகால வரலாற்றின் அடிப்படையாக கருதுகிறார் என்பதுதான். அதேபோல இந்தியாவை இணைத்துள்ள விசைகளில் கிரிக்கெட், சினிமா போன்ற வெகுஜன கேளிக்கைகளுக்கு பெரும்பங்களிப்பு உண்டு என்று அவர் கருதுகிறார். இது அவருக்கே உரிய பார்வை.
ஆனால் வரலாற்றாசிரியனின் பார்வை என்பது வரலாற்றில் இருந்து உருவாகி வந்ததாக இருக்கவேண்டும். தலைகீழாக, அவனுடைய பார்வையில் இருந்து அவர் எழுதும் வரலாறு உருவாகி வரக்கூடாது. அது வரலாற்றை திரிப்பதாக ஆகிவிடும். அரசியல்வாதிகள் எழுதும் வரலாற்றின் பிழையே இதுதான். (ஆச்சரியமாக இ.எம்.எஸ் எழுதிய வரலாற்று நூல்களில் வரலாற்றாசிரியனே வெளிப்படுகிறான். அரசியல்வாதி அல்ல) குகாவின் சிறப்பு என்பது அவர் எப்போதுமே வரலாற்றைச் சார்ந்திருக்கிறார், வரலாற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறார் என்பதுதான். ஆகவே அவர் இடதுசாரியோ வலதுசாரியோ அல்ல. இரு தரப்பினரும் அவரை உரிமைகொண்டாட முடியாது. ஆகவே இருசாராரும் அவரை எதிர்த்தரப்பினர் என குற்றம் சாட்டியதுமுண்டு
குகா சமகால வரலாற்றாசிரியர் மட்டுமே. வரலாற்றாய்வுப் பார்வைக்கு அவர் ஆதாரமாகக் கொண்டிருப்பது அரசியல் அல்லது சமூகவியல் சார்ந்த ஏதேனும் கொள்கைகள், அல்லது நம்பிக்கைகளை அல்ல. கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஆய்வுமுறை அல்லது கோட்பாடுகளையும் அல்ல. அவர் தன் பார்வையின் அடிப்படையாக கொண்டிருப்பது அடிப்படை விழுமியங்கள் சிலவற்றையே. அவற்றை ஜனநாயகம், மானுட உரிமை, ஒத்திசைந்த வாழ்வு என்று சொல்லலாம்.
அவ்வகையில் அவருடன் ஒப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்கள் மிகக்குறைவு. இந்தியாவில் சமகால வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிப்பார்வை கொண்டவர்கள். அமெரிக்க சமகால வரலாற்றாசிரியர்கள் வலதுசாரிப் பிடிவாதம் கொண்டவர்கள். வரலாற்று விதிகளை மட்டுமே பார்க்கும் பார்வை கொண்ட ஒருவரை அணுக, புரிந்துகொள்ள நம் சூழலுக்கு மிகப்பெரிய தடை உள்ளது. அவரை வலதுசாரியா இடதுசாரியா என்ற வினா இல்லாமல் நம்மால் ஆராய முடியவில்லை. இங்குள்ள சூழல் அம்முத்திரைகளில் ஒன்றை எவர்மீதும் போட்டுக்கொண்டேதான் இருக்கும்.நாம் அந்த எளிமையான இருமைப்பார்வையைக் கடந்து ஆராய்ந்து அறியவேண்டிய வரலாற்றறிஞர்களில் ஒருவர் குகா.
அந்த பார்வை நிகழ குகா நம் முன் கோவைக்கு வந்தமர்வது ஒரு தருணமாக அமையட்டும்.
ராமச்சந்திர குகா- தமிழ் விக்கி
ராமச்சந்திர குகா கட்டுரைகள் அருஞ்சொல் இதழ்
குகா பற்றிய கட்டுரைகள்
டி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்
காந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்…
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள்
- இந்திய வரலாறு- காந்திக்குப்பிறகு (இரு பகுதிகள்) தமிழாக்கம் ஆர்.பி.சாரதி
- இந்தியா எதைநோக்கி? – (தமிழாக்கம் செ.நடேசன்)
- சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு (மொழியாக்கம்: கே.ராஜையன் )
- தென்னாப்ரிக்காவில் காந்தி ( மொழியாக்கம் சிவசக்தி சரவணன்)
- நவீன இந்தியாவின் சிற்பிகள் (மொழியாக்கம் வி.கிருஷ்ணமூர்த்தி)
- நுகர்வெனும் பெரும்பசி ( மொழியாக்கம் போப்பு)
- வெரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் ( மொழியாக்கம் வேலு ராஜகோபால் )
- இந்திய வரலாற்றில் சிறுபான்மையினர் (தமிழாக்கம் ஆர்.பி.சாரதி)