திருமயம்- கடிதம்

 அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகனுக்கு,

எப்படி இருக்கீங்க சார், சென்ற வாரம் நண்பருடன் புதுக்கோட்டை செல்ல நேர்ந்தது செல்லும் வழியில் எதார்த்தமாக திருமயம் கோட்டையை பார்த்தவுடன் மதுரைக்கு திரும்பும்பொழுது போய் பார்க்கலாம் என்று நண்பருடன் சென்றேன். நாங்கள் சென்றது மாலை ஐந்து மணிக்கு சற்று பிந்தியே அதனால் கோட்டைக்கு செல்லும் நேரம் முடிந்துவிட்டதால் சிறிது ஏமாற்றம். ஆனால் கோட்டையுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலின் வண்ணங்கள் அடிக்கப்படாத கோபுரத்தை பார்த்தவுடன் ஒரு ஈர்ப்புடன் உள்ளே சென்றேன். பொதுவாக எனக்கு கோவிலில் அடிக்கப்படும் வண்ணங்களின் மேல் பெரும் ஒவ்வாமையும் அந்த செயலால் பெறும் கோபமும் உண்டு. எனவே வண்ணங்கள் இல்லாத கோபுரத்தை பார்த்தவுடன் ஆவலாக உள்ளே சென்ற அடுத்த நொடியே அங்குள்ள சிலைகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். உங்கள் மாணவன் என்பதால் அது இயல்பான ஒன்றுதானே

ஆனால் அங்கு கருவறைக்கு சென்றவுடன் உறைந்து நின்றுவிட்டேன். எந்தவித முன் எதிர்பார்ப்புமில்லாமல் சென்றதால் மட்டுமல்ல அந்த நெகிழ்ச்சி, அந்த கருவறையின் பாறையில் செதுக்கப்பட்ட சிற்ப்பங்களையும்  ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் பெருமாளை பார்த்த அந்த நொடியை இப்பொழுது நினைத்து பார்த்தால் கூட அந்த நெகிழ்ச்சியை என்னால் உணர முடிகிறது. என்னால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை சார். நீண்ட நேரம் கழித்தே அந்த உணர்விலிருந்து விடுபட்டு பின் ஒவ்வொரு சிற்பமாக கவனிக்க ஆரம்பித்தேன். அது ஒரு பெரும் கலைஞன் தன் கனவை கல்லில் கலையாக செய்துவிட்டு சென்றதுதான்

நீங்கள் அப்பொழுது அங்கு இருக்கக்கூடாதா என்று தோன்றியது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று தோன்றியது அதனால் வெளியே எடுத்த சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். அங்கு உள்ளே கருவறையில் பிரம்மாவின் அருகே வலதுபுறம் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறதே அது விலங்கு கதையில் வரும் செங்கிடாயன் தானா சார்?. அந்த சிற்ப்பத்தை பார்த்தவுடன் எனக்கு சிறிது பயமும் ஏற்ப்பட்டது

மன்மதன் கதையும் முக்கியமாக கருவறை விட்டு வந்த பின்பு திருமுகப்பில் கதையும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து சென்றது. மதுரை வரும் வரை என் நண்பருடன் சரியாக பேசகூட இல்லை. உங்கள் கதைகளின் மூலம் அடைந்த நெகிழ்வான தருணங்களுக்கும் அதே நெகிழ்வை வாழ்க்கை அனுபவமாக உணரும் தருணங்களுக்கும் நன்றி சார்.

அன்புள்ள

மிதுன் சக்கரவர்த்தி

முந்தைய கட்டுரைபோதாமைகளின் ஒத்திசைவு : அருணசலம் மகாராஜன்
அடுத்த கட்டுரைஷாகீர், மலேசியச் சாளரம்