அன்புள்ள ஜெ
இந்தப் பேட்டியைப் பாருங்கள்.’இயேசுவை பற்றி இந்து மத வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று இந்தப் பெண்மணி சொல்கிறார். இந்த பேட்டி லட்சக்கணக்கான ஹிட்ஸ் அடித்து மிகப்பெரிய அளவில் புழக்கத்திலுள்ளது. இதை ஒரு கிறிஸ்தவ நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். நான் நீங்கள் எழுதிய விரிவான விளக்கத்தை அவருக்கு அளித்தேன். அவர் அதை படித்தே பார்க்கவில்லை. இப்படி ஒரு தாக்குதல், திரிப்பு தொடர்ந்து இந்து மதம் மேல் எப்படி நிகழ்கிறது? இதேபோல ஒரு பொய்யான திரிப்பை நாம் பைபிளின்மேல் செய்தால் தாங்கிக்கொள்வார்களா?
ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்குமார்,
முதலில் இந்தப் பேட்டியிலுள்ள பெண்மணி பற்றி. அவர் இருக்கும் உளநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. அதை அனுதாபத்துடனேயே பார்க்கிறேன். (நடிகைகள், நடிகர்கள் இந்நிலைக்குச் செல்வதற்கான வாழ்க்கைச்சூழல், அதன் விளைவான உளவியல் ஒன்று உண்டு. நான் அறிந்த இருபது முப்பது உதாரணங்கள் உள்ளன.) அவர் பேய் என்று சொல்வது அவருடையது நம்பிக்கையினால் உருவாகும் நோய்க்கூறு. அதற்கு இறைநம்பிக்கையே மருந்தாகக் கூடும். நலமாக இருக்கட்டும்.
ஆனால் இவர் இந்த எதிர்மனநிலை வழியாக உணர்வது கிறிஸ்துவின் அருளை அல்ல. ஒரு மூர்க்கமான மதநம்பிக்கையை மட்டுமே. கிறிஸ்து ஓர் எளிய பேயோட்டி அல்ல. இன்றைய சிக்கல்கள் அகன்று, நேர்நிலை மனநிலை உருவாகி, அதன் நிறைவையும் நெகிழ்வையும் அவர் அடைவார் என்றால் மெய்யாகவே அவர் கிறிஸ்துவை அறியலாகும். மனிதகுமாரனின் தியாகத்தின் ஒளியை உணரக்கூடும். அவ்வாறு நிகழட்டும்.
*
பிரஜாபதி என்னும் பொய்யான தொன்மம் எப்படி மிக அபத்தமான திரிப்புகள் வழியாக உருவாக்கப்பட்டு பெருஞ்செலவில் நிலைநிறுத்தப்படுகிறது என பலமுறை எழுதியுள்ளேன். நாம் நினைப்பதை விட அதன் செல்வாக்கு எளிமையான கிறிஸ்தவர்களிடையே மிகுதி. படித்த கிறிஸ்தவர்களிலேயேகூட பலர் மிக எளிய ஒற்றைப்படைப் பார்வை கொண்டவர்கள்.
இந்தப் பெண்மணியின் மனநிலையை ஊக்குவித்து, கொண்டாடி, மகிழ்ந்து செய்யப்படும் மதப்பிரச்சாரம் எனக்கு ஒவ்வாமையையே அளிக்கிறது. எந்த அளவுக்கு நான் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவனோ அந்த அளவுக்கு இந்த மதமாற்ற வெறிக்கும் மதமூடத்தனத்துக்கும் எதிரானவன்
இந்தவகையான பிரம்மாண்டமான மூடநம்பிக்கைப் பிரச்சாரங்களே இங்கே இங்கே மிகப்பெரிய அமைப்பு வல்லமைகளுடன் நிகழ்கின்றன. இப்படி பிரச்சாரம் செய்து ஆள் சேர்ப்பது ஓர் அரசியலே ஒழிய எவ்வகையிலும் மதம் அல்ல. இதற்குப் பின்னாலுள்ளது ஆதிக்கநோக்கமே ஒழிய ஆன்மிகம் அல்ல.
இங்குள்ள எந்தப் பகுத்தறிவாளர்களும் எந்நிலையிலும் இந்தப் பிரச்சாரங்களை எளிய முறையில்கூட விமர்சிக்க மாட்டார்கள். ஏனென்றால் இது ஒரு மாபெரும் வணிகம். இவ்வணிகத்தில் இங்குள்ள பகுத்தறிவாளர்களும் பங்குதாரர்களே. நான் இந்த வணிகத்தை மட்டுமே எதிர்க்கிறேன். கிறிஸ்து எனக்கு ஒளிமிக்க வழிகாட்டி. ஆனால் என்னை கிறிஸ்தவ எதிர்ப்பாளர் அல்லது இந்து வெறியர் என இதே பகுத்தறிவாளர்கள் முத்திரை குத்துவார்கள்.
பார்க்க கட்டுரை பிரஜாபதியும் கிறித்தவர்களும்
நடைமுறையில் என்னுடைய மேற்குறிப்பிட்ட கட்டுரை போன்ற விளக்கங்களால் இங்கே பெரிய பயன் ஏதும் இல்லை. மதவெறிக் கிறிஸ்தவர்கள் இதை வாசிக்கவே மாட்டார்கள், அவர்களின் நம்பிக்கையை அசைக்கும் எந்த தர்க்கமும் அவர்களைப் பொறுத்தவரை சாத்தானின் சொல் என்றே கொள்ளப்படும். கிறிஸ்தவ மதநம்பிக்கைப் படியே பைபிள் குறிப்பிடும் தீர்க்கதரிசிகள் அல்லாதவர்களால் ஏசுவின் வருகை சொல்லப்பட்டுள்ளது என்று சொல்வதே பைபிளுக்கு எதிரானது என்ற உண்மையைக்கூட அவர்களிடம் நாம் சொல்ல முடியாது.
மறுபக்கம், இந்துக்களும் நான் எழுதிய விளக்கத்தைப் படிக்க மாட்டார்கள், பகிரவும் மாட்டார்கள். தன் மதத்தைப் பற்றி மிகமிக எளிய அடிப்படைகளைக்கூட இந்துக்கள் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தங்கள் குழந்தைகளுக்கு எதையுமே சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். தங்கள் மதம் பற்றி ஒரு கேள்வி எழுந்தால் பதில் சொல்லத் தெரிந்திருக்காது. இந்தத் திரிப்பை ஒரு கிறிஸ்தவர் சொன்னால் உடனே சாமானிய இந்து அதை ஏற்றுக்கொள்ளவே செய்வார். அல்லது விழிப்பார். ஏனென்றால் அவருக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது. அந்த அறியாமை தன்னிடமுள்ளது என்பதே தெரிந்திருக்காது.
இந்துக்களின் பரிபூரண அறியாமை பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை கிறிஸ்தவர்களிடையே இருப்பதனால்தான் இந்தப் பொய் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. இத்தகைய ஓர் ‘ஊடுருவலை’ பைபிள் மேல் ஓர் இந்துமத வெறியன் செய்ய முடியாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் எவரானாலும் கொஞ்சமேனும் பைபிள் தெரிந்து வைத்திருப்பார்கள்.
இந்து மதம் பற்றிய அறியாமையை இந்துக்கள் பலர் பகுத்தறிவு என எண்ணுவதுண்டு. ஒருவர் பகுத்தறிவாளராக இருப்பது ஓர் அறிவுநிலைபாடு. மத எதிர்ப்பு என்பது ஒரு வகை நம்பிக்கை. நாத்திகம் என்பது ஓரு வெற்று எதிர்நிலை. ஆனால் பகுத்தறிவு என்பது தத்துவார்த்தமான ஒரு நேர்நிலை. நான் மதிக்கும் மாபெரும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் பகுத்தறிவாளர்களே. ஆனால் பகுத்தறிவாளராகத் திகழ்வதற்கும்கூட ஒருவர் மதங்கள் அனைத்தையும் பற்றி கொஞ்சமேனும் அறிந்திருக்கவேண்டும்.
வரலாற்றை, பண்பாட்டை, ஆன்மிகத்தை விளக்கி ஓர் உரையாற்றினால் சராசரி இந்து அதை கவனிக்க மாட்டார். கற்பிக்க ஒரு வகுப்பை உருவாக்கினால் புறக்கணிப்பார். வெறும் மூளைச்சோம்பல். அதை பகுத்தறிவு நம்பிக்கை என்று சொல்லிக்கொள்வார். அப்படிச் சொல்லிக்கொண்ட பல குடும்பங்களில் குழந்தைகள் மிக எளிதாக இந்தவகை பிரச்சாரங்களுக்கு அடிமையாகிறார்கள் என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். அவர்கள் மூர்க்கமான மதப்பிரச்சாரமும் கொண்ட மதங்களின் மூடநம்பிக்கைக்குள் செல்வார்கள். இவர்கள் அதன்பின் புலம்புபவர்கள் . என் நட்புவட்டத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் அது நிகழ்ந்துள்ளது.
சென்ற மாலையில்கூட ஒருவர் புலம்பி எழுதியிருந்தார். அவர் அதிதீவிர வள்ளலார் பக்தர். ஆனால் அவர் தன் மகனுக்கு ஆன்மிகம், மதம் என ஒன்றுமே சொல்லிக் கொடுக்கவில்லை. பொறியியல் பயிலவும் ,வேலைக்குப் போகவும் மட்டுமே சொல்லிக்கொடுத்தார். தன்னை திராவிட இயக்க ஆதரவாளர் என்றும் சொல்லிக்கொண்டார். இன்று மகன் ‘பேய்களால்’ பீடிக்கப்பட்டு ‘கிறிஸ்துவில் உயிர்த்தெழுந்த’போது பரிதவிக்கிறார்.
நான் சொன்னேன். “பிழை உங்களுடையது. மனிதர்களுக்கு வாழ்க்கையில் ஆழ்ந்த அலைக்கழிப்புகள், தேவைகள் உள்ளன. அவற்றை வெல்ல ஆன்மிகமான பற்றுகோல்கள் தேவை. ஆன்மிகம் தேவையில்லை என்னும் நிலைபாட்டை இளமையில் எடுக்கலாம். வாழ்க்கையின் இக்கட்டுகளில் அந்த நிலைபாடு சிதறிவிடும். ஆன்மிகம் தேவையில்லை என ஒருவர் ஆழ்ந்த நெருக்கடிகளிலும் உணரவேண்டும் என்றால் மிகமிக ஆழமானதும் விரிவானதுமான தத்துவப்பயிற்சி தேவை. எளிய நாத்திகம் அங்கே உடைந்து விடும். அந்த தத்துவத் தெளிவற்றவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த தெய்வம் தேவையாகும்.”
“உங்கள் மகனை நான் புரிந்துகொள்கிறேன்” என நான் எழுதினேன். “வெள்ளத்தில் செல்பவன் எதையாவது பற்றிக்கொள்ள கைகளால் துழாவுவதுபோல அவரைப் போன்றவர்கள் தவிப்பார்கள். கைக்குச்சிக்கும் எதையாவது பற்றிக் கொள்வார்கள். இங்கே பிரம்மாண்டமான பிரச்சாரங்கள் வழியாக அவர்களிடம் வந்து சேர்வதை தழுவிக்கொள்வார்கள். உங்கள் மகனுக்கு தெப்பமோ தோணியோ அளிக்காமல் வெள்ளத்தில் விட்டுவிட்டீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு தோன்றியதை ஊழ் என்கிறேன். உங்கள் மகன் அவருக்கான வழியில் செல்லட்டும்.அங்கே அவருக்கு அமைதி கிடைக்கட்டும்”
அவர் துயருடன் “ஆனால் அவன் சைவம் பற்றியோ வள்ளலார் பற்றியோ கொஞ்சம்கூட தெரியாமல் அங்கே போய்விட்டானே. அவன் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே அர்த்தமில்லாதவை அல்லவா? என் பேரப்பிள்ளைகளும் மாறிவிட்டார்களே” என்றார்.
“அதுவும் ஊழ்தான். உங்களிடமிருந்து அது தொடங்குகிறது. ஒருவர் மதம் மாறினால் அதிலொன்றும் பிழை இல்லை. எல்லா பாதைகளும் மீட்புக்கானவையே. ஒன்று சரி, இன்னொன்று பிழை என்று இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழி அவ்வளவுதான். உங்கள் மகன் அவருடைய ஆன்மிக அலைக்கழிப்புக்கு விடையாக நம்பிக்கையின் வழியை தேர்வுசெய்கிறார். நம்பிக்கையின் வழி என்பது எந்த அளவுக்கு அந்நம்பிக்கை உறுதியாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இனி அந்நம்பிக்கையை உடைக்க முயலவேண்டாம். அவரை குழப்பி அவரை அங்கும் இங்கும் இல்லாதவராக ஆக்கவேண்டாம்” என்று நான் சொல்லி முடித்துக்கொண்டேன்.
இந்த காணொளியில் அப்பெண்மணி சொல்வதில் பிழையென எதையும் நான் காணவில்லை. அவருக்கு மதப்பிரச்சாரகர்கள் சொன்னதை அவர் சொல்கிறார். அவருக்கு அவருடைய முந்தைய மதம் பற்றி அடிப்படை அறிதல்கூட இல்லை– பிற இந்துக்களைப்போலவே. ஆகவே அவர் அப்படி ஒரு திரிப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த வியப்புமில்லை. அவருடைய நம்பிக்கையின் உறுதி போற்றுதற்குரியது. அது அவரை காத்து, வழிநடத்திக் கொண்டுசெல்லட்டும்.
இத்தருணத்தில் நான் எண்ணுவது நம்பிக்கைகளில் இந்து என இருப்பவர்களைப் பற்றி. இந்து வழிபாடுகள் செய்பவர்கள், இந்து வாழ்க்கைமுறையில் இருப்பவர்கள் கூட மிகமிக எளிமையான அறிதல்கூட இல்லாமல் இருக்கிறார்கள். அப்படியொரு தேவை இருப்பதையே அறியாமலிருக்கிறார்கள். இந்து மதவாத அரசியல், இந்து மத எதிர்ப்பு அரசியல், மதமாற்ற அரசியல் ஆகியவற்றால் அவர்கள் சூழப்பட்டுள்ளனர். நிகரான தீமைகள் இவை. அவற்றை எதிர்கொள்ள தேவையானது கல்வியும் தெளிவும். ஆனால் திரும்பத் திரும்ப இந்துக்களின் உருக்கு போன்ற அறியாமையுடன் மோதிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது. ஓர் இந்துவாக, வேதாந்தியாக, இந்துமதம் பற்றி அறிந்தவன் என்ற நிலையில் இது என் கடமை என்பதனால். என் ஆசிரியருக்கான பணி என்பதனால்.
ஜெ