இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் தந்தையின் நண்பரின் மரணம். அவரும் என் தந்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஆரம்ப கால பணியாளர்கள். கைகளால் வரைபடு மின்னணு தகடுகளை (Printed Circuit Boards) படி எடுத்து செயற்கைகோள்களில் பொருத்திய தலைமுறை. தந்தையின் நண்பர் கணினி பகுதியில் வேலை செய்தவர். கணிதத்தில் நிபுணர். கட்டளைகளை பூச்சியங்களாகவும் ஒன்றுகளாகவும் மின்னணு தொகுப்புகளில் பதியச் செய்யும் பணியில் விற்பன்னர். இறப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து ‘இனி இருந்து என்ன செய்யப் போகிறேன். வந்த பணிகள் அனைத்தும் முடிந்து விட்டனவே‘, எனக் கூறத் துவங்கி இருக்கிறார். அவ்வாறு சொல்லத் துவங்கிய ஆறாவது மாதத்தில் இறைவனடி சேர்ந்தும் விட்டார். உறக்கத்திலேயே மரணம். அவர் இறந்த அன்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தாலுகாவில் இருக்கும் அ.கோவில்பட்டி என்ற ஊரின் ஒரு மடத்தில் இருந்து இரண்டு பேர் அவர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு அவர்களை முன் பின் அறிமுகம் இருந்திருக்கவில்லை. வந்தவர்கள் நேரடியாகவே அவரது மகன்களிடம் உங்கள் தந்தை இறைவனடி சேர்ந்துவிட்டார் என்றும், அவர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது. உண்மையில் அவர்களே அப்போது தான் அவர் இறந்ததை அறிந்திருந்தனர். வந்தவர்களோ ஜீவசமாதி என்று சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கின்றனர். பொதுவாக ஜீவன் மனிதரின் நவத் துவாரங்களில் ஒன்று வழியாக வெளியேறக் கூடுமாம். அபூர்வமாக ஜீவன் வெளியேறாமல் உடலுக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கவும் கூடும் என்றும், அவ்வாறு உடலுக்குள்ளே சமாதி ஆவதே ஜீவ சமாதி என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஜீவசமாதி என்பதில் மருத்துவ கூறுகளின் படி அவர் மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் அவ்வுடலின் இந்திரியங்களை துக்கத்தில் இருப்பவரைப் போல அசைக்க இயலும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தந்தையின் நண்பர் அப்படி ஜீவ சமாதி அடைந்திருப்பதால் அவருக்கு அவர்கள் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யாமல், அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அவர்கள் சொல்லியதைப் போலவே இறந்தவரின் கைகள், கால்களை உயிருடன் இருக்கும் உடலில் நீட்ட, மடிக்க இயல்வதைப் போல செய்ய இயன்றிருக்கிறது. அவர் இறந்த அடுத்த நாள் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், வாயைத் திறந்து வைத்து, ஆறடி குழியில், பச்சிலைகள், வேப்பிலை, வில்வம் மற்றும் குழி நிரம்பும் அளவு விபூதி ஆகியவை கொண்டு அவரை அந்த மடத்தில் அடக்கம் செய்தனர்.
இது என் நேரடி அனுபவம். தந்தையின் நண்பருக்கும், அந்த மடத்தினருக்கும் எப்போதில் இருந்து தொடர்பு இருந்தது, அவரின் மரணம் எப்படி அவர்களுக்கு தெரிந்தது, அதுவும் இந்த ஜீவசமாதி சமாச்சாரத்தை அவர்கள் எப்படி அறிந்தனர், என்பதெல்லாம் நம் நடைமுறை தர்க்கங்களுக்குள் அடங்காதவை. அவற்றைப் பின்தொடர்வது என்பது மேகத்தை எடுத்து சிற்பம் செய்வதைப் போன்றதே. இங்கே இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இதைப் போன்ற புலனறிவுக்கு எட்டாத அனுபவங்கள் இருக்கும். வெண்முரசின் வாசகனாக இந்த நிகழ்வு எனக்கு வியப்பையோ, அதிர்ச்சியையோ அளிக்கவில்லை. ஆயினும் இந்த நிகழ்வுகளை எவ்விதம் பதிவு செய்வது என்பதில் பெரும் குழப்பம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் இவற்றை ஓர் அந்தரங்க அனுபவம் என்ற அளவில் மட்டுமே சொல்லி செல்வது வழக்கம். இந்த குழப்பங்கள் நமக்கு மட்டும் அல்ல, நம் பெரும் யோகிகளின் வரலாற்றை பதிவு செய்த ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருந்திருக்கின்றன. ‘இவை அற்புதங்கள் அல்ல. இவை அவர்களின் உலகின் சாத்தியங்களில் ஒன்று.’ என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரா.கணபதி அவரது ‘அறிவுக்கனலே அருட்புனலே‘ புத்தகத்தில். ஒரு புறம் இந்த வகை சம்பவங்கள் இயல்பானவை என எடுத்துக் கொண்டு, அவற்றை நிகழ்த்தும் அற்புதர்களுக்கென காத்திருக்கும் கலாச்சார பின்னணி, மறுபுறம் நவீன கல்வி கொடுத்த தர்க்க அறிவு இரண்டுக்கும் நடுவே நாம் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். பொதுவில் இவற்றை புனைவு என்றும், அகத்தே இவற்றை ஒருமுறையாவது அனுபவித்து விடும் ரகசிய ஏக்கத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம். மற்றொரு வகையில் இத்தகைய சம்பவங்களை எவ்விதம் எதிர் கொள்வது என குழம்பிக் கொண்டும் இருக்கிறோம் என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது உலகு தர்க்கங்களின் ஒழுங்கில் செயல்படுவது. அதைக் குலைக்கும் எதையும் நாம் ஐயத்துடனே தான் அணுகியாக வேண்டி இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அவற்றை புறந்தள்ளவும் நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். ஏனெனில் இத்தகை நிகழ்வுகளில் ஈடுபடும் முக்கிய நபரின் நம்பகத் தன்மைகள் தொண்ணுறு சதவீதம் போலியாகவே இருந்திருக்கின்றன என்பதையும் மறுக்க இயலாதே. எனவே இவை அந்தரங்க அனுபவங்கள் என்ற வகையில் மட்டுமே மதிக்கப்படுகின்றன.
இவற்றை இலக்கியத்தில் எழுதுவது என்பது இரண்டு வகை சிக்கல்களை எழுத்தாளருக்கு கொண்டு வரும். முதலாவது தடை படைப்பில் செயல்படும் புனைவு தர்க்கம். இலக்கியம் என்பது நிகர் வாழ்வே. எனவே ஒரு படைப்பு இலக்கியமா அல்லவா என்பதை அது சொல்லும் வாழ்வில் வாசகர் தம்மை பொருத்திக் கொள்ள இயல்வதிலேயே இருக்கிறது. வாசிப்பை வெளியில் இருந்து செய்கிறீர்களா அல்லது புனைவின் உள் இருக்கிறீர்களா என்பதே படைப்பின் இலக்கியத் தரத்தை நிர்ணயிக்கிறது. ஆனால் எந்த வாழ்வையும் புனைவாக எழுதுகையில் அந்த புனைவிற்கே உரிய, புனைவில் இயங்கும் ஒரு வகை தர்க்க ஒழுங்கை ஆசிரியர் புனைவின் அடிப்படையாக நிறுவியாக வேண்டும். எனவே தான் எந்த ஒரு மாபெரும் இலக்கிய ஆக்கமாக இருந்தாலும் கூட அவற்றின் பாத்திரங்கள் மிகச் சரியான பாத்திரப் படைப்பாக எழுந்து வருகிறார்கள். நிஜ வாழ்வில் அவ்வாறு எவரையும் வரையறுத்து விட இயலாது என்றாலும், புனைவு இயங்க இத்தகைய வரையறைகள் படைப்பின் எல்லைக்குள், அது முன்வைக்கும் புனைவின் எல்லைக்குள், அது சுட்டி நிற்கும் தரிசனங்களின் எல்லைக்குள் நின்றாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வகையில் மேற்குறித்த பரு உலகின் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளில் வாசகர் பொருந்திப் போகும் வகையில் எழுதுவது என்பது இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒரு புறவயமான புனைவு தர்க்கங்களை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எழுத்தாளரைத் தள்ளிவிடக் கூடிய ஒன்று. இரண்டாவது சிக்கல் தமிழ் இலக்கிய உலகிற்கே உரித்தான நவீனத்துவ, அரசியல் சரிகள் சார் வாசிப்பு கொண்ட வாசகர் பரப்பு. நம் இலக்கிய வாசகர்களில் மேற்கூறிய நடைமுறை யதார்த்தத்தின் தர்க்கங்களுக்குள் அடங்காதவற்றை முன்வைக்கும் எழுத்துக்களை முழுமையாகப் புறக்கணிக்கும் வழக்கம் 2000களின் முன்பகுதி வரையிலும் கூட இருந்தது. ஜெயமோகனின் படைப்புகள் மற்றும் அவருடனான நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு புது வாசகர் குழாம் வந்த பிறகே இந்த நிலை பெருமளவு மாற்றம் கண்டது எனலாம்.
இந்த விரிவான பின்புலத்தில் வைத்து தான் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரை நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு வகை சிக்கல்களையும் அவர் எதிர்கொண்ட விதம், இத்தகைய சம்பவங்களை அவர் தன் படைப்புகளில் பேசிய விதம், அவற்றைப் பேச நேர்ந்த அவரது அகம், இசை சார்ந்த அவரது தேடல்கள், இசையும் வாழ்வின் அனுபவங்களும் இணைந்து எழுதி எழுதி அவர் வந்தடைந்த ஒரு தரிசனத்தின் புள்ளி ஆகியவற்றை தொகுத்துப் பார்ப்பதே இத்தகைய ஒரு தருணத்தில் தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளராக அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
[2]
தமிழில் இத்தகைய நிகழ்வுகளை மிகப் பிரம்மாண்டமாக எழுதியவர் என சந்தேகமே இல்லாமல் ஜெயமோகனைச் சொல்லலாம். வெண்முரசு அவ்வகையில் இத்தகைய மறைஞான சம்பவங்களின் களஞ்சியம். வெண்முரசின் செறிவான மொழி இத்தகைய நிகழ்வுகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் வாசகரின் அகமொழியில் கலந்துவிடும் மாயத்தை நிகழ்த்திவிடும். மேலும் இவை ஒருவித அகப் பயணமாகவோ, அல்லது கனவுள்ளம், ஆழுள்ளம் சார் உணர்வெழுச்சிகளாகவோ, அல்லது ஏதோ ஒரு நடைமுறை சாத்தியத்தன்மையை கொண்டதாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தத்துவம், தரிசனத்தின் வெளிப்பாடாகவோ எழுதப்பட்டிருக்கும். ஜெவின் பிற படைப்புகளிலும் இத்தகைய உத்திகளே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டிருக்கும். மாறாக சாமானியர் மொழியில், வெறும் சம்பவங்களாக, பொருள் ஏதும் ஏற்றாமல் ஒரு விலகல் தன்மையுடன், அதே சமயம் அதன் மாயமும், மிரட்சியும் குறையாது எழுதியவர் என தயங்காமல் யுவனைச் சொல்லலாம். ஜெயமோகன் ஒரு பெரும் கோபுரத்தைக் எழுப்பி காட்டுகிறார் என்றால் யுவன் ஒரு செங்கலை சுட்டி இது ஒரு பெருங்கோபுரத்தின் பகுதியாகவும் இருக்கலாம் என போகிற போக்கில் சொல்லி செல்கிறார். என் தனிப்பட்ட ரசனைகளும்,தேடல்களும் இயங்கும் தளங்களில் யுவனும் எழுதி இருக்கிறார். அவ்வகையில் ஜெ க்கு பிறகு நான் முழுமையாக வாசிக்க விரும்பிய எழுத்தாளர் யுவன் தான்.
யுவனின் சிறுகதைகளை விட நாவல்களே என் மனதிற்கு அணுக்கமானவை. சிறுகதைகள் அவை எவ்வளவு செறிவானவையாக இருந்தாலும் அதன் வடிவம் முழுமையான ஒரு வாசிப்பின்பத்தை தரத் தடையாக இருக்கும். முக்கியமாக கதாபாத்திரங்களின் அக ஓட்டங்கள், பிறழ்வுகள், கட்டின்மைகள் போன்றவற்றின் வெளிப்பாடுகள் துவங்கி, விரிவான தத்துவ உரையாடல்கள், சிந்தனைகள், நிகர் வரலாற்று போக்குகள் என ஒரு முழுமையான வாழ்வனுபவமும், வாசிப்பனுபவமும் நாவல்களிலேயே அமையும். யுவனின் சிறப்புத் தன்மையே அவரது நாவல்களின் மொழி தான். எத்தனை செறிவான ஒரு அனுபவத்தையும் அவரால் சந்தை மொழியிலேயே எளிதாகச் சொல்லி விட இயல்கின்றது. இன்னும் ஒரு படி மேலாகச் சொல்லப் போனால் வணிக எழுத்தின் மொழியில் அவரால் ஒரு முழுமையான இலக்கியத்தை படைத்தளிக்க இயல்கிறது. அவரது மொழி கட்டற்று பறப்பதில்லை. சொற்றொடர்கள் பத்திகளாக நீள்வதில்லை. பல மடிப்புகளுடன் கூடிய வார்த்தைகளின் கோர்வைகளாக விழுவதில்லை. ஆயினும் “நான் ஒளியும் அதன் இன்மையும் நிறைந்த ஒரு உலகை நிர்மாணிக்க முயல்கிறேன் அல்லவா? நீங்கள் ஒலியால் மட்டுமேயான வேறோரு உலகைக் கட்டமைக்கிறீர்கள். எங்கெங்கும் விரவிக் கிடைக்கும் ஓசையின் ஒழுங்கின்மையில் இருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட ஒலிக்கோவையை வடிகட்டி ஈட்ட முயல்கிறீர்கள்.”, என மூன்றே சொற்றொடர்களில் ஒரு பெரும் இசை மேதைக்கும், ஒரு நவீனத்துவ ஓவிய மேதைக்குமான அவரவர் கலைகளின் தரிசனம் சார்ந்த ஒரு உரையாடலை சொல்லிவிடுவது என்பது மொழியில் அபாரமான தேர்ச்சியும், இயல்பிலேயே சொற்சிக்கனமும் கொண்ட ஒரு கவிஞருக்கே சாத்தியம். யுவன் கவிதை வழியாகவே இலக்கியத்திற்குள் வந்தார் என்பதை இங்கே நாம் நினைவு கூறலாம்.
யுவனின் முதல் நாவல் ‘குள்ளச் சித்தன் சரித்திரம்‘ 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நாவல் என்னும் வடிவை அவர் தெரிவு செய்தமை பற்றி தமிழ் விக்கி “யுவன் சந்திரசேகர் தன் மாற்றுமெய்மை சார்ந்த பார்வையை முன்வைக்க கவிதைகள் உகந்த வடிவமல்ல என்று கண்டுகொண்டார். ஆகவே புனைவிலக்கியத்திற்குத் திரும்பினார். யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் மேல்தளத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போல நிகழ்ந்துகொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அடியில் வேறொரு தர்க்கமுறையால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை, அதன் வழியாக அன்றாடவாழ்க்கையால் அறியமுடியாத ஒரு மெய்மை வெளிப்படுவதை காட்டும் தன்மை கொண்டவை.”, என்று சொல்கிறது. யுவனின் படைப்புகளில் முதல் பத்தியில் சொல்லியிருப்பதை போன்ற நடைமுறை தர்க்கங்களுக்குள் அடங்காத நிகழ்வுகள் மிக இயல்பாக, கதையோட்டத்தின் பகுதியாக வந்து செல்கின்றன. இவற்றை முன்பே சொல்லியது போன்று பொருள் ஏற்றி யுவன் விவரிப்பதில்லை. கதை மாந்தர்களின் அனுபவங்களாவே, உடனிருந்து கதை கேட்பவருக்கு சொல்வதைப் போல இச்சம்பவங்களை சொல்லிச் செல்ல அவரால் முடிகிறது. அப்படி எனில் புனைவின் தர்க்கம் என்பது இங்கே மீறப்படுகிறதோ எனத் தோன்றலாம். பெரும்பான்மையான வாசிப்புகளும் யுவன் கலைத்தடுக்குபவர், உடைத்துச் செல்பவர் என்றே சொல்கின்றன. ஆனால் யுவன் அப்படி உடைத்துச் செல்வதில்லை என்றே எனக்குப் படுகிறது. குள்ளச்சித்தன் சரித்திரம் முழுவதிலுமே அவர் யோக மார்க்கத்தில் பயணிக்கும் அல்லது அந்த பயணத்தில் உடனிருக்க வாய்ப்பிருக்கும் மாந்தர்களின் பார்வைகளில் கதை நகர்கிறது. யுவன் தன் கதை கொத்து என்ற வடிவை முழுமையாக பயன்படுத்திய நாவல் என குள்ளச்சித்தன் சரித்திரத்தை சொல்லலாம். பிற அனைத்து நாவல்களிலும் ஒரு மைய கதாபாத்திரம், அதன் வாழ்வின் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் அல்லது அந்த பாத்திரத்தின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு தம் வாழ்வின் சில புள்ளிகளை சந்திக்க தந்தவர்கள் என ஒரு விரிவான புனைவு பின்னல் விரிக்கப்பட்டிருக்கும். ஆனால் குள்ளச்சித்தன் சரித்திரம் இத்தகைய ஒரு மையச் சரடு என்பது இல்லாமல் எழுதப்பட்ட நாவல். அல்லது அப்படி வாசகர்களை நம்ப வைத்த நாவல். உண்மையில் அதில் மையச் சரடு என்பதே இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது. அதைக் கண்டறிய யுவனின் அந்தரங்க தரிசனங்கள், அவரது மறைஞான நிகழ்வுகளை பற்றிய புரிதல்கள் போன்றவற்றை சற்றே கண்டடைய வேண்டியிருக்கும். இலக்கிய படைப்பு பொதுவாக அதன் ஆசிரியரை பாதித்த ஏதேனும் ஒன்றில் இருந்து முளைத்துக் கிளம்புவது வழமை. உலகின் பெரும்பாலான படைப்புகளின் விதைகள் இவ்வகையிலானவையே. இதற்கு நேர்மாறாக ஒரு படைப்பாளி தன்னுள் இருந்து முளைக்கும் வினாக்களுக்கான தேடல்களில் கண்டடைந்த ஒரு தரிசனம் படைப்பின் விதையாக மாறக் கூடும். நம் மரபும் காவிய ஆசிரியனும், முழு நேர யோகியும் யோக மார்க்கத்தின் முதல் நிலை வரை ஒன்றாக பயணிப்பவர்கள் என்று தானே சொல்கிறது. இது மிக விரிவாகவே கிராதத்தில் பிட்சாண்டவருக்கும், அவரை தன் குருவாக ஏற்றுக் கொண்ட வைசம்பாயனுக்கும் இடையேயான உரையாடல்களில் வெளிப்படுகிறது. யோக இருளில் மூழ்கும் வைசம்பாயனின் வானில் ஒரு நிலவு மட்டும் தோன்றுவதை அறியும் பிட்சாண்டவர் அவனது பாதை காவியம் என்று சொல்லி விலகிச் செல்கிறார். இங்கே குள்ளச்சித்திரனிலும் முத்துச்சாமி தன் நண்பரான ஹாலாஸ்யத்தை நூல் எழுதச் சொல்கிறார். வெண்முரசு போன்ற ஒரு பெருங்காவியத்தில் ஞானத் தேடல் என்பது ஒரு மிக முக்கியமான சரடு. ஆனால் அதுவும் , பரந்து விரிந்த இப்பாரத பெருநிலத்தில் இருந்த தேசங்கள், இனக்குழுக்கள் போன்றவற்றுக்கிடையேயான பூசல்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் சிக்கல்கள் என மானுடர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அன்றாடத்தின் பின்னணியில் பொருத்திப் பார்க்கப்பட்ட ஒன்றாக எழுந்து வந்த வகையிலேயே வாசகர்களுக்கு முழுமையான ஒரு தரிசனத்தைத் தருகிறது என்பதைக் காணலாம். இதற்கு நேர் மாறாக யுவன் அந்த ஞான மார்க்கத்தின் ஒரு பாதையில் நிகழும் சில சம்பவங்களை மட்டுமே சொல்லி ஒரு படைப்பை நம்முன் வைக்கிறார். இந்த சிறிய அலகை முன்வைக்கும் தன்மையே இங்கே உடைத்து பேசுதல் என்ற வகையில் வாசிக்கப்பட்டிருக்கிறது.
இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்ற மீமானுட நிகழ்வுகள் நம் இளமையில் (இதை எழுதுபவர் அவரின் நாற்பதுகளின் முன்பாதியில் இருக்கிறார் என்பது உபரி தகவல்) நாம் நிறைய கேள்விப்பட்டிருப்பது தான். குறிப்பாக தமிழகத்தின் கிராமங்களில் தங்கள் பள்ளி காலத்தை கழித்தவர்களுக்கு இத்தகைய கதைகளுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் இவை நம் வாழ்வில் செலுத்திய பாதிப்புகள் என்ன? இதை விட முக்கியமான ஒரு கேள்வி, இத்தகைய சம்பவங்கள் ஏன் முதலில் நடக்க வேண்டும்? அப்படி நடந்தாலும் அதை நம்புகின்ற வகையில் நாம் ஏன் கேள்விப்பட வேண்டும்? இன்னும் தெளிவாகச் சொன்னால் என் தந்தையின் நண்பரின் மரணம் நடைபெற்றதோ கொரானா காலத்தில். அதை நான் ஏன் இப்போது கேள்விப்பட வேண்டும்? அதைக் கேள்வியுற்ற சில நாட்களிலேயே நான் ஏன் குள்ளச் சித்தன் சரித்திரத்தை வாசிக்க வேண்டும்? இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லை தற்செயலா?
[3]
தமிழ் விக்கி யுவன் சந்திரசேகரைப் பற்றிய ஒரு விரிவான ஒரு பதிவினைக் கொண்டுள்ளது. அதே போன்று அவரின் முக்கியமான ஆக்கங்களைக் குறித்த பதிவுகளும் உள்ளன. அவை யுவனின் படைப்புலகு, அவர் முன்வைக்கும் மாற்று மெய்மை எண்ணம் கருதுகோள், அவர் படைப்புகளில் எழுந்து வரும் தந்தையர்களுக்கும் அவரது தனி வாழ்விற்குமான தொடர்பு என அவரைப் பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் முழுமையான பார்வையை தருபவை. என்னளவில் அவரது முதன்மையானதும், முக்கியமானதுமான பங்களிப்பு என்பது வாழ்வின், பொருண்மை உலகின் தர்க்கங்களை அப்பாற்பட்ட நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே எவ்வாறு ஒரு இலக்கிய படைப்பிற்குள் கொண்டு வர இயலும் என்பதை எழுதிக் காட்ட்டிய விதம் தான். அதை அவர் இரு விதங்களில் கட்டமைக்கிறார். ஒன்று, மிக எளிய தினசரி புழக்கத்தில் இருக்கும் மொழி. இரண்டாவது இந்த சம்பவங்களை ஒரு கதைச் சரடில் தொகுத்துச் சொல்லாமல், ஓவியத் தூரிகையை வண்ணங்களில் முக்கி ஓவிய பலகையில் உதறி அடிப்பதன் வரையப்படும் அருவ வெளிப்பாட்டு வகை ஓவியத்தைப் போல கதை கொத்தாக எழுதிச் செல்வது.
“நாம் காணும் உலகநிகழ்வுகள் நாம் பார்க்கும்படி அல்லாமல் முற்றிலும் வேறுவகையில் கோக்கப்பட்டிருக்கலாம் என்றும், தற்செயல் என நாம் நினைப்பவை நமக்கு புரியாத வேறு ஒரு அடுக்கும் தர்க்கமுறையும் கொண்டவை மட்டுமே என்றும் உணர்ந்துகொண்டதாக சொல்கிறார். அதை மாற்றுமெய்மை (Alternate Reality) என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்.” என்கிறது யுவனின் தமிழ் விக்கி பக்கம். இதுவே ஆசிரியரின் தரிசனம் எனலாம். இந்த தரிசனத்தையே அவர் தன் படைப்புகள் வழியே முன்வைக்கிறார். அவ்வகையில் யுவன் சந்திரசேகர் தன்னை பெரு மதிப்பிற்குறிய, பெரும் படைப்புகளை வழங்கிய தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கான இடத்தை அழுத்தமாக உறுதி செய்கிறார்.
மீண்டும் குள்ளச் சித்தரிடமே வருவோம். அந்த நாவலின் மையச் சரடு என்பது சித்தரைப் பற்றிய ஒரு புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் இரு வகை பிரதிகள் ஒரு நூலகரின் கைகளில் கிடைத்து அவர் அதை வாசிப்பது தான் நாவலின் மையச்சரடு. அந்த சரடின் ஒரு முனையில் ஞானத்தின் பாதையில் இறங்கிய ராம. பழனியப்பன் என்னும் நூலகர் இருக்கிறார். அதன் மறுபுறத்தில் குள்ளச் சித்தர் இருக்கிறார். இங்கே நம் மண்ணில் தர்க்கங்கள், தேடல்கள் என விரியும் ஞான மார்க்கத்திற்கும், நம்பிக்கை, அனுஷ்டானங்கள் என விரியும் பக்தி மார்க்கத்திற்கும் இணையான இடம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. நாவலிலும் பழனி, ஹாலாஸ்யம் அய்யர், மவுண்ட் பேட்டன் என ஒரு தரப்பு ஞான மார்க்கத்தின் தேடல்களில் இருந்தால், சிகப்பி, நீலகண்டன், பலவேசம் முதலியார், தாயாரம்மாள் என பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இருவருக்கும் சாமானிய அன்றாடம் என்பது வேறு, விஷேஷ அன்றாடம் வேறு என்பதைச் சுட்டும் வகையில் குள்ளச்சித்தரும், ஸ்ரீ முத்துசாமியும் இருக்கிறார்கள்.
இந்த நாவலின் சிறப்பம்சமே இந்த மையச் சரடு தான். அது வாசகரான நம்மை நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறது. மையச் சரடு என்பது ஒரு மனிதரின் வாழ்வின் நிகழ்வுகளாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? ஒரு கதையின் பயணமாக இருக்கலாகாதா? ஒரு கதை எப்படி தலைமுறைகள் தாண்டி உங்களை வந்து தீண்டுகிறது என்பதையே ஒரு மையச் சரடாக வைக்கலாகாதா? அது தீண்டும் முறையே விஷேஷ தளத்தில் இருந்து நம் சாமானிய தளத்திற்கு நீளும் ஆசீர்வாத கரம் என கொள்ளலாகாதா? இக்கேள்விகளுக்கான பதிலை நாம் தேடித் செல்கையில் நமக்கேயான ஒரு விடை, ஒரு தரிசனம் கிடைக்கும். எரிந்து கொண்டிருக்கும் ஒரு திரியில் இருந்து ஒளி மற்றொரு திரிக்குத் தாவுவதைப் போல எழுத்தாளரின் தரிசனத்தின் ஒரு சாயை நம்மிடமும் வந்து சேரும்.
இப்படி ஒரு நாவலை எழுதுகையில் ஆசிரியராக அதன் வடிவத்தின் மீது அவருக்கு ஒரு கட்டுப்பாடு கண்டிப்பாக இருந்திருக்கும். அவரே சொல்வது போல ஒரு நாவல் அவருள் அதன் இலக்கிய வடிவமாகதான் முதலில் எழுந்து வருமாம். அப்படி ஒரு வடிவம் கிடைத்த பிறகு நாவலின் கதாபாத்திரங்களே நாவலை முன்னெடுத்துச் சென்று விடும் என்கிறார் யுவன். அப்படி என்றால் அவர் நாம் கண்டடைந்த சரடுகளை அவரும் அறிந்திருப்பார் அல்லவா? நிச்சயம் அறிந்திருப்பார். அப்படி அவர் அறிந்தவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை வாசிகரென நாமும் அடைகையிலேயே அந்த படைப்பு அதன் இலக்கை அடைகிறது என்று சொல்லலாம். அதாவது எழுத்தாளர், புனைவு, வாசகர் என மூன்று தரப்புகள் இருந்தாலும் வாசிப்பின் ஏதேனும் ஒரு புள்ளியில் வாசகர் எழுத்தாளரை நெருக்கமாக அறிய இயல்வதே புனைவின் உச்ச பட்ச சாதனை. இதுவும் யுவனின் தரிசனங்களில் ஒன்று தான். இதை அவரது இசை தொடர்பான கருத்துக்களில் இருந்தும் அவரது இசை பற்றிய இரு நாவல்களில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம். நினைவுதிர்காலம் நாவலில், ‘நிகழ்த்துதலின் போக்கில் இசைஞனுக்குள் ஒருவித சுதந்திர உணர்வு உருவாகிறது. நுகர்கிறவனும் அதை எட்டாத வரை அந்தரங்க அனுபவமாக மாறுவதற்கில்லை இசை‘ என்கிறார் யுவன்.
[4]
யுவனின் படைப்புலகில் அவரது மாற்று மெய்மை என்ற தரிசனத்திற்கு நிகரான பங்கு அவரது இசை ரசனைக்கும் உண்டு. அவரது ‘கானல் நதி‘ மற்றும் ‘நினைவுதிர் காலம்‘ என்ற இரு நாவல்களும் இசைஞர்களைப் பற்றியவை. எந்த ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் பெரும் சவால் என்பது கட்டற்று பாயும் படைப்புக்கு மனநிலைக்கும், மிகத் தெளிவான கட்டுப்பாடுகளோடு கூடிய சமூக சூழலின் அழுத்தங்களை சமாளித்து, உலகியல் வெற்றிகளை அடைந்ததாக வேண்டிய தர்க்க புத்திக்கும் இடையேயான ஊசல். பெரும் படைப்பாளிகளையே குப்புறத் தள்ளி, குழியையும் பறித்த அடங்காத புரவி அது. பெரும்பாலான படைப்பாளிகள், கலைஞர்கள் அக்குதிரைக்கு கடிவாளமிட அஞ்சி அதன் போக்கிலேயே சென்று அழிந்து போன வரலாறுகள் நிறையவே உண்டு. ஜெயமோகன் தன்னுடைய குருவுடன் கொண்டிருந்த உறவு மற்றும் அவரின் யோக மார்க்கத்தில் செய்த பயணங்கள் போன்றவற்றால் அக்குதிரையைக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றால் யுவன் இசையால் அதை கட்டுப்படுத்தி இருக்கிறார் என்றே எனக்கு தோன்றும்.
அவரது இரு இசை குறித்த நாவல்களும் அவருடைய முக்கியமான ஒரு வினாவின் பதில்கள் தான். அவ்வினா, இசைஞன் தான் இசைக்கப் போகும் ராகம், அதன் ஸ்வர வரிசைகள், அதற்கான இலக்கணங்கள் ஆகியவற்றின் மீது கவனம் கொண்டு, அவற்றின் கட்டுகளில் கட்டுண்டிருக்க வேண்டுமா அல்லது தன் மனோதர்மப் படி அனைத்தையும் மீறி இசைத்து அதில் தோய்ந்து, சுதந்திரத்தை அடைய வேண்டுமா என்பதே. குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு பெரும்பாடகனும் சரி, கானல் நதியில் வரும் தனஞ்செய் முகர்ஜியும் சரி, நினைவுதிர் காலத்தில் வரும் ஹிமான்ஷு மித்ராவும் அந்த சுதந்திரத்தை அனுபவித்தவர்கள். தமது சங்கீதத்திலும் சரி, வாழ்விலும் சரி கட்டற்றவர்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் நடைமுறை வாழ்விடம் தோற்றவர்கள். தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாறாக ஹரிஷங்கர் தீட்சித், சிவசங்கர் தீட்சித் போன்றவர்கள் தனி வாழ்விலும் சரி, தமது இசையிலும் சரி மிகக் கறாரான கட்டுப்பாட்டை அனுஷ்டித்தவர்கள். நடைமுறை வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். ஆனால் ஹரிஷங்கர் தீட்சித் ஹிமான்ஷுவையே மிகப் பெரிதாகக் கொண்டாடுகிறார். அவன் அடைந்த அந்த அனுபவத்தை தம்மால் அடைய இயலாது என்பதாலேயே அவனது இடம் இசையில் தம்மை விட பலமடங்கு அதிகமானது என்கிறார்.
யுவனின் முதல் தரிசனமாக மாற்று மெய்மை என்பதற்கும், படைப்பூக்கத்தின் கட்டின்மை மற்றும் கட்டுகள் என்ற தேடலுக்குமான பொதுமை என சுதந்திரம் என்ற கருதுகோளைச் சொல்லலாம். நம் மரபு மீண்டும் மீண்டும் சொல்வது அறிதலே விடுதலை என்பது தான். குள்ளச்சித்தனில் வரும் ஸ்ரீ முத்துசாமி தன்னுடைய முற்பிறவிகள் பற்றி ஹாலாஸ்யத்திடம் சொல்லும் இடம் வரும். அதில் பெங்குவினாக, ஒரு பெண் புலியாக, கழுகாக, போர் வீரனான, ஆங்கிலேய மௌண்ட்பேட்டனாக, குள்ளச்சித்தனாக, முத்துசாமியாக, கரட்டுப்பட்டி கண்தெரியாத குறி சொல்பவராக பிறவி என்பது புகுந்து புறப்படும் கதைகளை சொல்லியிருப்பார். இந்த பிறவிகளில் எல்லாம் ஞான மார்க்கத்தில் செல்பவர்கள் அடையும் சுதந்திரத்தையும் அதை அவர்கள் கையாளும் விதங்களையும் முன்வைத்திருப்பார். மானுட சேவை, மானுட நலன்களை, இயற்கையை பேணும் ஒரு சமன்வயத்தை உருவாக்க தன் ஆன்ம வல்லமையை பயன்படுத்துதல் என்ற வகையில் அவர்கள் தமது சுதந்திரத்தையும், சித்திகளையும் கையாள்வது பற்றி எழுதியிருப்பார் யுவன். இதற்கு நேர் மாறாக சாமானிய தளத்தில் வாழ்பவர்கள் கனிதலின் மூலம், பிறர் துன்பங்களையும் தன் துன்பங்களாக ஏற்றுக் கொள்வதன் மூலம், தமது துக்கத்தின் காரணிகள் தீர்ந்து விடுதலை கொள்வதை பேசியிருப்பார். இரண்டு வகைகளிலும் இருக்கும் ஒரே ஒற்றுமை செயலாற்றுதல் மற்றும் மனத்தால் கனிததல் என்பவை தான். மாறாக சுதந்திரத்தை அனுபவித்த இசைக்கலைஞர்கள் அனைவருக்குமே அதை எவ்விதம் கையாள்வது என்பதில் இருந்த குழப்பங்கள், போதாமைகள் அவர்களை தோல்வியுற்றவர்களாக, ஏதோ ஒரு புள்ளியில் செயலின்மை நோக்கி தள்ளிவிடப்பட்டவர்களாக மாற்றி விடுவதையும் விரிவாக எழுதியிருக்கிறார் யுவன்.
இந்த சுதந்திரத்தை கையாளுதல் என்பது மிக மிகச் சிக்கலான விஷயம். ஏனெனில் மானுட மனது கொள்ளச் சாத்தியமான உச்ச நிலை என்பது இந்த விடுதலை தான். அனால் மலையுச்சியில் வீடமைத்து தங்க இயலாதே. மீண்டும் சமவெளிக்கு வந்து தானே ஆக வேண்டும். இந்த இடத்தில் தான் சிக்கல்களே ஆரம்பிக்கின்றன. இரண்டு கால்களை சேர்த்து வைக்கவே இடம் இல்லாத உச்சத்தின் விதிகளையும், அனுபவங்களையும் பரந்து விரிந்த சமவெளியில் பயன்படுத்த இயலாதே. இங்கே தான் அவர்கள் வெறுமை கொள்கிறார்கள். ஒரு வகையில் இது ஒரு ஆன்மிக வெறுமை. இந்த ஆன்மிக வெறுமையை இன்றைய நுகர்வு கலாச்சாரத்தின் உச்சத்தில், தன்னால் சாதிக்க இயன்ற அளவு சாதித்தவர்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆன்மிக வெறுமையை அடிப்படைவாதம் எடுத்துக் கொண்டால் சுயவதையும், எவ்வாறேனும் மரணத்தை அடைந்து விடத் தூண்டும் வெறியும் வந்து சேரும். மாறாக அந்த சுதந்திரத்தை அறிய நாம் முயல வேண்டும் என்ற புள்ளியில் தமது படைப்புகளை எழுதியவர் யுவன். நம் வாழ்வில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போல் நிகழும் சம்பவங்கள், நாம் அறியாத வேறோர் தளத்தில், வேறோர் கால, இட பரிமாணத்தில், ஒரே சரடில் கோர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கண்களுக்கும், கருத்துக்களுக்கும் காட்சி தராமல் இருந்திருக்கலாம். நமக்குத் தெரியவில்லை என்பதாலேயே அப்படி ஒரு சரடு இல்லாமல் போகவில்லை, அதைக் கண்டடைய நாம் தான் மெனக்கெட வேண்டும் என இந்த நடைமுறை உலகின் தரிசன போதாமைகளுக்கிடையேயான ஒத்திசைவை உருவாக்க முனைந்தவர். அப்படி ஒரு ஒத்திசைவை உருவாக்க ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும், அவ்வழியில் அவர்களுக்குள் நிரம்பி நிற்கும் ஆன்மிக வெறுமையை கடக்கவேண்டும் என தமது புனைவுகளின் பேசுபொருள் மற்றும் உத்திகள் வழியாக வாசகர்களைத் தூண்டியவர் என்ற வகையில் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவராகிறார் யுவன் சந்திரசேகர். அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பது அவரின் தரிசனம் சார் படைப்புகளின் மீது புது தலைமுறை வாசகர்களின் வாசிப்புகள் நிகழ வழிவகுக்கும். அவருக்கு என் வணக்கங்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்