இன்றைய இளையோர்களிடம் எழும் அகச்சோர்வை வென்றுகடப்பதற்கு தன்னுடைய தன்னனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கடிதபதில்களின் தொகுப்பே ‘தன்மீட்சி‘ நூல். இந்நூலுக்காக இன்றளவும் வந்தடையும் வாசிப்பனுபவக் கடிதங்கள் இந்நூலைப் பரவலாக்கம் செய்யவேண்டிய அவசியத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தன. அத்தனை கொந்தளிப்பும், தத்தளிப்பும், தன்னிலையுணர்தலும், செயலேற்றலும் அக்கடிதங்களில் நிறைந்திருந்தன. ‘எளிமையான வழிகளால் இந்த உலகத்தை உலுக்க முடியும்‘ என்ற காந்தியின் வரிகளைப் போல இந்நூலின் கட்டுரைகள் சமகால இளம்வயதினரிடம் ஏற்படுத்தியுள்ள உளத்தாக்கம் மிகப்பெரிது.
தன்னறம் நூல்வெளி வாயிலாக ஏற்கனவே ஆயிரக்கணக்கில் ‘தன்மீட்சி‘ நூலை விலையில்லா பிரதிகளாக வழங்கியிருக்கிறோம். வெறுப்பின் வீரியக்கரம் பரவும் சமகாலச்சூழலில் இந்நூல் இன்னும் அதிகமனங்களைச் சென்றடையும் முக்கியத்துவத்தை உணர்ந்து, ‘தன்மீட்சி நூல்கொடை இயக்கம்‘ என்கிற முன்னெடுப்பைத் தொடங்க முடிவெடுத்தோம். இவ்வியக்கத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள், சமூகம் சார்ந்து இயங்கும் களப்பணி இளைஞர்களுக்கு ‘தன்மீட்சி‘ நூலை ஆயிரக்கணக்கில் விலையில்லா பிரதிகளாக வழங்க முடிவுசெய்துள்ளோம். இந்நூலை மக்கள்பிரதியாக விரிவுபடுத்தும் பெருங்கனவும் இதிலடங்கும்.
தன்மீட்சி நூல்கொடை இயக்கத்தின் நற்தொடக்கம், வருகிற வெள்ளிக் கிழமை திருவண்ணாமலை SKP பொறியில் கல்லூரியில் நிகழவுள்ளது. அன்றையதினம் ‘கல்லூரியில் இல்லாத கல்வி‘ எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் உரைநிகழ்த்த உள்ளார். உரை நிறைவுற்ற பிறகு நூல்கொடை இயக்கத்தின் துவக்கம் நிகழும். கல்வியாளர் SKP கருணா, திரு.அரங்கசாமி, Dr.சக்திகிருஷ்ணன், வழக்கறிஞர் கிருஷ்ணன் ஆகிய ஆளுமைகளின் முன்னிருப்பில் இத்தொடக்கம் நிகழ்கிறது.
சொல்வழியே ஓருள்ளம் அடையும் மீட்பென்பது செயலைநோக்கி நம் அகத்தை வழிப்படுத்துவதற்கான பெருவிசை. தன்மீட்சி நூல் அத்தகைய சொற்திரள். தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூல் முதற்பதிப்பு அடைந்தது காலத்தின் நல்லூழ். நிகழ்வு நல்லதிர்வோடு நிகழ்ந்துமுடிய பேரிறையை வேண்டிக்கொள்கிறோம்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி