எலிவளையின் தொழில்நுட்பம்

உலகமெங்கும் ஒரே நாளில் ஹீரோவான ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள்!

பல வாசகர்கள் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்க எலிவளைத் தொழிலாளர்கள் என்னும் தேசியத் தொழில்நுட்ப அணி ஆற்றிய பங்கு பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டு அச்செய்தி என் பத்துலட்சம் காலடிகள் என்னும் சிறுகதையை நினைவூட்டுவதாக எழுதியிருந்தார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பெருமண் என்னும் இடத்தில் காயலுக்குள் ரயில்பெட்டிகள் விழுந்தபோது அவற்றைத் தூக்க அதிநவீனத் தொழில்நுட்பமும் கருவிகளும் தோற்றுப்போன இடத்தில் எப்படி கலாசிகள் என்னும் இனக்குழுவின் தேசியத்தொழில்நுட்பம் வென்றது என அக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. அங்கே நிகழ்ந்ததே இங்கும் நிகழ்ந்துள்ளது.

இது தொழில்நுட்பத்தை விட கைத்திறன் பெரிது என்று நிறுவவில்லை. ஆனால் இரு வகைமைகளுக்கும் இடையே உள்ள அடிப்படையான ஒரு வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. தொழில்நுட்பம் மனிதர்கள் அற்றது. கைத்தொழில் மனிதர்களாலானது. தொழில்நுட்பம் பொறியியல் ஆற்றல். கைத்தொழில் நுட்பம் மானுட ஒத்திசைவின் ஆற்றல்.

அந்த ஒத்திசைவிலேயே வெற்றிரகசியம் உள்ளது. ஆகவேதான் அவர்கள் ஓர் இறுக்கமான தொழில்குழுவாக இருக்கிறார்கள். ஒருவரோடொருவர் நன்கு பழகிய இசைவு கொண்டிருக்கிறார்கள். உள்ளம், உடல் இரண்டிலும். மகத்தான செயல்களை, நம்பமுடியாத செயல்களை, மானுடன் மிகமிகத் தொல்காலத்திலேயே ஆற்றியுள்ளான்.  கற்காலத்திலேயே வெறுங்கைகளால் கற்களை பெயர்த்து மாபெரும் பெருங்கற்களை நாட்டியிருக்கிறான். அடிப்படை என்பது ஒத்திசைவே.

சமூகம் என்னும் கருத்துதான் அந்த ஒத்திசைவை உருவாக்குகிறது. அது நாம் கற்றுக்கொண்டது அல்ல. நம் உயிரியல்பு. மந்தைவிலங்குகள் அனைத்துக்கும் அவற்றுக்குரிய சமூகப்பண்புகள் உள்ளன. அப்பண்பு ஒருவகையில் குரூரமானது, ஏனென்றால் அது சமரசமே அற்றது. அது ஒவ்வொருவரிடமும் தியாகங்களை கோருவதும்கூட. அதையும் மந்தை விலங்குகளில் நாம் காணலாம். அதைத்தான் மனுநீதிசோழன் முதல் நாம் உலகமெங்கும் கண்டு வருகிறோம். தொல் இலக்கியங்கள் எல்லாம் அந்த சமரசமற்ற சமூகவிழுமியங்களை, அதன்பொருட்டான தியாகங்களைப் போற்றுகின்றன.

பத்துலட்சம் காலடிகள் ஒரு துப்பறியும் கதை. ஆனால் அடிப்படையில் அது இந்த சமூகப்பண்பு, ஒத்திசைவுத்தன்மை எப்படிச் செயல்படுகிறது என்பதன் பெருஞ்சித்திரமும்கூட.

பத்துலட்சம் காலடிகள் வாங்க

பத்துலட்சம் காலடிகள் இணையத்தில் 

முந்தைய கட்டுரைசித்திரம் பயில்தல், கடிதம்
அடுத்த கட்டுரைகருத்தியல்கள், அதிகாரங்கள், அரசியல்- ஓர் உரையாடல்