மதிப்பிற்குரிய ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு,
இதுவே எனது முதல் கடிதம். உங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்.
நீங்கள் இந்து மதத்தை இந்து மெய்ஞான மரபு என்று கூறுகிறீர்கள்.
அதற்கான அர்த்தம் என்ன என்று விளக்கம் வேண்டும்.
அன்புடன்
அன்புள்ள கிருஷ்ணா,
இந்து மதம், இந்து மரபு, இந்து மெய்ஞானமரபு ஆகிய மூன்றையும் வேறுவேறாகப் பிரித்துக்கொண்டு பார்ப்பது பலவகையான குழப்பங்களில் இருந்து பாதுகாக்கும். எந்த விஷயத்திலானாலும் புரிதல் என்பது மேலும் மேலும் நுட்பமாகப் பிரித்துக்கொள்வதேயாகும்.
இந்து மரபு என நாம் இன்று சொல்வது பல்லாயிரமாண்டுகளாக இங்கே இருந்து வரும் ஒரு வாழ்க்கை முறை. அதில் இறைவழிபாடு, அன்றாட ஆசாரங்கள், சமூகக்கொள்கைகள், மரபான சிந்தனைகள் எல்லாம் அடங்கும். அதை ஒரு பொதுச்சொல்லாகப் பயன்படுத்துகிறோம்.
அதில் இறைவழிபாடு, ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், கொள்கைகள் மட்டுமே அடங்கிய அமைப்பையே இந்து மதம் என்கிறோம். அதற்குள் மூன்று அடுக்குகள் உண்டு. சைவம், வைணவம், சாக்தம் உட்பட ஆறு பெருமதங்கள் ஓர் அடுக்கு .அதற்குக் கீழே குலதெய்வ வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும். இரண்டுக்கும் மேல் மதம் சார்ந்த உயர்தத்துவமும் அதைப் பயிலும் வெவ்வேறு தியான, யோகமுறைகளும் உள்ளன.
இந்து மெய்ஞான மரபு என்னும் போது இந்து மரபிலுள்ள ஞானத்தேடல், ஞானக்கொள்கைகள் மட்டுமே கருத்தில்கொள்ளப்படுகின்றன. வழிபாடுகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவை அதில் கருத்தில்கொள்ளப்படுவதில்லை. ஞானமரபில் இறைக்கொள்கைகள் மட்டும் இல்லை, இறைமறுப்புக் கொள்கைகளும் உண்டு. உதாரணமாக, சார்வாகம் முழுமையான நாத்திகவாதம். அதுவும் இந்து மெய்ஞானமரபில் அடக்கம்தான்.
இந்தத்தெளிவுக்காகவே இந்து மெய்ஞான மரபு என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது
ஜெ