இணையக் கல்வியும் இணையாக் கல்வியும்

அன்புள்ள ஜெ,

நாலாயிரத் திவ்வியப்பிரபந்த வகுப்புகளை ஏன் இணையவழியில் நிகழ்த்தக்கூடாது? மேலும் பலர் அவற்றில் பங்குகொள்ள அது உதவியாக அமையும் அல்லவா? யோகம் தியானம் போன்ற வகுப்புகளை அவ்வாறு நடத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். அவ்வளவு தூரம் வரமுடியாதவர்களுக்கு உதவும் அல்லவா?

எம்.ஆர்.ராஜா ஶ்ரீனிவாசன்

அன்புள்ள ராஜா,

பலமுறை சொன்ன பதில் . ஆனாலும் மீண்டும். ஏனென்றால் நாலாயிரத் திவ்வியப்பிரபந்த வகுப்பு சார்ந்து இப்படி பல கடிதங்கள். அவ்வறிவிப்பு வெளிவந்ததுமே 70 பேர் உடனே விண்ணப்பித்தனர். கொஞ்சம் ஆச்சரியம், ஆனால் சுதாரித்துக்கொண்டேன்.

அனுபவங்களில் இருந்து எனக்கு தெரியும் ஒன்றுண்டு. எந்த நிகழ்வுக்கும் வருவதாக பதிவுசெய்துவிட்டு ஏதேனும் சில்லறைக் காரணங்களால் அதை தவிர்த்துவிடுவது நம்மவரின் பொது இயல்பு. வருவதாகச் சொல்பவர்களை நம்பி ஏற்பாடுகளைச் செய்தால் பொருளிழப்பு ஏற்படும். வரவிரும்பும் பலரின் இடமும் இல்லாமலாகும். இப்படி தவிர்ப்பவர்கள் சென்ற காலங்களில் தமிழில் நிகழ்ந்த பல கலையிலக்கிய முயற்சிகளை பொருளியல் இழப்பு ஏற்படுத்தித் தோற்கடித்துள்ளனர்.

எனக்கு அவர்கள் மேல் எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் அவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாமே பொய். மெய்யான காரணம் தாமஸ குணம் என மரபில் சொல்லப்படும் ஒன்றுதான். இருண்மைக்குணம். அது சோம்பலை, அக்கறையின்மையை, தீவிரமின்மையை, நிலைகொள்ளமுடியாமையை, கவனமின்மையை உருவாக்குவது. இவர்கள் எதிலும் படியாமல் மேலோட்டமான வம்பு, வளவளப்பு என வாழ்ந்து மடிபவர்கள். அன்றாடத்தின் எளிய சுழல்தான் அவர்களின் உலகம். அதை அவர்களால் மீற முடியாது. மீற விரும்புவார்கள். மீறப்போவதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மீறவேண்டிய கணத்தில் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

(புதுமைப்பித்தன் பல கதைகளில் இத்தகைய மனிதர்களை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். சிவசிதம்பர சேவுகம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம்…)

ஆகவே முன்பே முழுப்பணமும் பெற்றுக்கொள்ளாமல் எந்த நிகழ்வையும் நாங்கள் ஒருங்கிணைப்பதில்லை. வருவதாகச் சொல்லிவிட்டு உரிய காரணம் இல்லாமல் ஒரே ஒரு முறை வராமலிருப்பவரைக்கூட உடனே ஒரு கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவோம். அதன்பின் அவரை எந்த வகையிலும் எதிலும் சேர்க்கமாட்டோம். நட்புப்பட்டியலில்கூட இடமில்லை (சிலர் அதன் பின் கெஞ்சி மன்றாடி வந்துசேர்ந்து மெல்லமெல்ல தீவிரமடைந்ததும் உண்டு) 

ஆகவே இம்முறையும் நாலாயிரப்பிரபந்த வகுப்புக்கும் எழுபதுபேருக்கும் பணம் கட்டும் அறிவிப்பு அனுப்பப்பட்டது. பதினைந்துபேர் தவிர பிறர் பணம் கட்டவில்லை. வழக்கமாக மூன்றிலொருவர் பணம் கட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உறுதியாக வர எண்ணவில்லை, ‘சும்மாவிண்ணப்பிக்கிறார்கள் என தெரியும். பலர்  அறிவார்ந்த  எதுவும் இலவசமாகக் கிடைக்கும் என்னும் எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் வகுப்புக்கு வருவதே நமக்குச்செய்யும் உதவி என நினைப்பவர்கள். ஆனால் இம்முறை அந்த விகிதாச்சாரம் மிக அதிகம்.

என்ன காரணம் என யோசித்தேன். நித்யா குருகுலம் உட்பட முந்தைய நிகழ்வுகளில் தொடர்புகொண்டிருந்த ஆன்மிகசாதகர் ஒருவரிடம் பேசியபோது அவர் வெடித்துச் சிரித்துவிட்டார். “நாலாயிரப்பிரபந்தம் என்றதும் பக்தர்கள் பாய்ந்து வந்துவிட்டனர். ஆனால் பக்தி என்பது தமோகுணத்தின் இன்னொரு வடிவம். அடுத்த நிமிடம் அது கணக்குபார்க்க ஆரம்பித்துவிடும்…என்றார். அவர் வேதாந்தி. அவர் அப்படித்தான் சொல்வார். ஆனால் அதில் உண்மை இல்லாமலில்லை என்று தோன்றியது.

பொதுவாகப் பக்தர்கள் முற்றிலும் உலகியல் சார்ந்தவர்கள். முழுக்க முழுக்க தான், தன்குடும்பம் என்னும் எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் பணம் செலவிடுவார்களா? பயணங்கள் செய்வார்களா? கோடிக்கணக்கில் பணம் செலவிடுவார்கள். இமையமலை உச்சிவரைக்கும் கூட செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு உலகியல் பிரச்சினைகள் இருக்கவேண்டும், வேண்டுதல்கள் இருக்க வேண்டும், அவற்றை தீர்ப்பதற்காக மட்டும் எங்கும் செல்வார்கள், பணத்தை அள்ளி இறைப்பார்கள். எதற்கும் அவர்களைப் பொறுத்தவரை  நேரடியான உலகியல் நன்மைகள் இருக்கவேண்டும். அது ஒருவகை விலைகொடுத்துப் பொருள் வாங்குதல்தான். அதிக விலை கொண்ட பொருள் மதிப்பு மிக்கது.  

பக்தர்கள் ஆலயம் செல்வார்கள், ஆனால் அந்த ஆலயத்தின் வரலாறு, கலை பற்றி எந்த அறிதலும் இருக்காது. ஆர்வமும் இருக்காது. அந்த ஆலயத்தை இடித்தால்கூட  அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. இன்னொன்று கட்டிக்கொண்டால் போயிற்று என்பதே மனநிலையாக இருக்கும். முழுக்க முழுக்க ஞானத்திற்கு எதிரான மனநிலை அது. முழுக்கமுழுக்க ஒருவகை வணிகம்.

ஒருவர் மின்னஞ்சல் செய்தார். ‘கட்டணம் வைத்திருப்பீர்கள் என நினைக்கவில்லைநான் அவரை புரிந்துகொள்ள முயன்றேன். நீங்கள் மாணவரா என்றேன். இல்லை. நீங்கள் வறுமையில் இருக்கிறீர்களா? இல்லை, அரசூழியர். அப்படியென்றால் ஏன் கட்டணம் இருக்கலாகாது என்று எண்ணுகிறீர்கள்? அவர்பிரபந்தம் சொல்லிக்கொடுக்கிறது புண்ணியம்என்றார். “சரி, ஆனால் உங்களுக்கு நான் ஏன் இலவசமாகச் சோறு போடவேண்டும்?” என்றேன்.  அவருக்கு என் எரிச்சல் புரியவில்லை. “கட்டணம் இருக்குன்னு நினைக்கலை…” என்றார்.

இந்த வகுப்புகளை பக்தியை பெருக்கவோ, மதப்பிரச்சாரம் செய்யவோ ஒருங்கிணைக்கவில்லை. தன்னைத்தானே நகர்த்திக்கொள்ள முடியாமல் அமிழ்ந்து கிடப்பவர்களை உத்தேசிக்கவுமில்லை. இவ்வகுப்புகள் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே. இன்றைய வாழ்க்கை ஒருவகை அர்த்தமின்மை கொண்டது. உலகியல் போராட்டம் மட்டுமேயான வாழ்க்கை அளிக்கும் சோர்வும் சலிப்பும் பலருடைய வாழ்க்கையை சுமையென ஆக்கியுள்ளது. அந்த சுழற்சியிலிருந்து சற்றேனும் விடுபட விரும்புபவர்களுக்கானவை இந்த வகுப்புகள்.அதற்கு அவர்கள் தங்களை விடுவித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தேயாகவேண்டும்.

உலகியல் மட்டுமல்ல வாழ்க்கை, வாழ்க்கையின் தரம் என ஒன்று உண்டு. quality of life என்பது இயல்பாக அமைவது அல்ல. ஒவ்வொருவரும் பயின்று உருவாக்கிக் கொள்ளவேண்டியது அது. கலை, இலக்கியம், அறிவியக்கம், ஆன்மிகம் என அதன் களங்கள் நான்கு. ஒட்டுமொத்தமாகக் கலாச்சாரப் பயிற்சி என அவற்றைச் சொல்லலாம். அப்பயிற்சியே உயர்நிலை கேளிக்கையாகவும் ஆகமுடியும். அப்பயிற்சி இல்லையேல் பொதுவாகச் சமைக்கப்பட்டு அனைவருக்குமாகப் பரிமாறப்படும் வணிகக்கலாச்சாரத்தின் எளிய நுகர்வோர் ஆக நாம் அகம் தேங்கிவிட நேரிடும். 

வணிகக்கேளிக்கை என்பது ஒரு சுரண்டல். நம் உணர்வுகளை அது நம்மையறியாமலேயே பயன்படுத்திக் கொள்கிறது. தொடர்பிரச்சாரம் வழியாக நமது ரசனைகளை அது தட்டையாக ஆக்கிவிடுகிறது. நம் தனித்தன்மையை முழுமையாக அழித்து நம்மை கோடானுகோடி சராசரிகளில் ஒன்றாக அது ஆக்குகிறது. அப்படி நம்மை ஆக்கினால்தான் அதனால் சராசரி விஷயங்களை நம்மிடம் விற்கமுடியும். பெருந்தொழிலான கேளிக்கைச் சந்தையின் ஆற்றல் அளவிறந்தது. பெருநிபுணர்களால் உருவாக்கப்படுவது அது.

நம் சூழலில் தனித்தன்மை கொண்டவர்கள் உண்டு. ரசனைக்கூர்மையும் அறிவுத்திறனும் கொண்டவர்கள் உண்டு. குறிப்பாக இளைஞர்கள். அவர்கள் இந்த பிரம்மாண்டமான பொது அமைப்புக்குள் பொருந்த முடியாமல் சோர்வுற்றிருக்கிறார்கள். ஆனால் பிறிதொரு வழி இல்லாமலும் இருக்கிறார்கள்.  கலைகளை அறிமுகம் செய்துகொள்ள, இலக்கியங்களை பயில, மரபுக்கலைகளையும் மரபிலக்கியங்களையும் அணுக அவர்களுக்கு இங்கே அமைப்புகள் இல்லை. அவற்றை உருவாக்கி அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

உண்மையில் தனித்தன்மையும் ரசனையும் அறிவுத்திறனும் கொண்டவர்களைக்கூட நம் சூழலின் பொதுவான தேக்கமனநிலை வலுவாக ஆக்ரமித்துள்ளது. சூழலின் மேல் சலிப்பு கொண்டிருந்தாலும்கூட அதை மீறிச்செல்லும் ஊக்கம் அவர்களுக்கு உருவாவதில்லை. ஆசைப்பட்டு அதன் பின் தயங்குகிறார்கள். தொடர்ச்சியாக ஒத்திப்போடுகிறார்கள். அவர்களைக் கட்டிப்போட்டிருக்கும் சேறு என்பது நம் சூழலில் உருவாக்கப்பட்டுள்ள வம்பு, அரட்டை மனநிலை. அரசியல், சினிமா, கிரிக்கெட் என வணிகரீதியாகவே வம்பும் அரட்டையும் உருவாக்கப்பட்டு அவர்கள் அதில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். அதை கிழித்து வெளிவருவது எளிதல்ல. நாங்கள் எண்ணியதைவிட மிகச்சிலராலேயே வெளிவர முடிகிறது.

ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு, ஒரு புதிய சூழலை அறியும்பொருட்டு, ஒரு தொடக்கத்தின் பொருட்டு கிளம்பி வருபவர்களை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிளம்புதலே ஒரு பெரிய விடுதலை. கல்வி அதன் அடுத்த படிதான்.   அப்படி வருபவர்களுக்குச் செல்ல ஓர் இடமில்லாமல் ஆகக்கூடாது, ஒன்று தயாராக இருக்கவேண்டும், அதன்பின் நிகழ்வது நிகழ்க என்பதே எங்கள் எண்ணம். அதற்காகவே ஓவியம், திரைப்படம், தத்துவம், மரபுக்கலைகள், மரபிலக்கியங்கள் என எல்லா களங்களிலும் வகுப்புகள். 

இவை வெறும் தகவல்கல்வி அல்ல. வெறுமே தெரிந்துகொள்ளுதல் அல்ல. ஏற்கனவே தெரிந்துவைத்திருக்கும் பலவற்றுடன் ஒன்றை சேர்த்துக்கொள்ளுதல் அல்ல. ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய வாழ்க்கை. இங்கே வேறொரு சூழல் அமைகிறது. உங்களைப்போல ரசனையும் தேடலும் கொண்டவர்களுடன் தொடர்புகள் உருவாகின்றன. உரையாடல்கள் தொடர்கின்றன. சந்திப்பதற்கான ஒரு மையம் அமைகிறது. அதற்குரிய இடம் ஒரு மலைப்பகுதியில், நாகரீகங்கள் அனைத்துக்கும் அப்பால், மட்டுமே இருக்க முடியும். அங்கு சென்றே அகாவேண்டும்.

நம் சூழலுக்குள் நம்மை வந்தடைவது மெய்யான கல்வி அல்ல. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாமல் சென்றடையும் இடத்தில் எந்த அகவளர்ச்சியும் அமைவதில்லை.  இங்கேஆன்லைன்கல்வி என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். திருகாணியைச் சுழற்றுவதையோ ,கணக்கு அறிக்கை தயாரிப்பதையோ அப்படி கற்பிக்க முடியும். ஒருவரின் ஆளுமையில் மாற்றத்தை உருவாக்கும் ஒரு quality education அவ்வாறு நிகழவே முடியாது.

ஒருபக்கம் கணிப்பொறியில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஓட, இன்னொருபக்கம் செல்பேசியில் செய்தி பார்த்தபடியோ , இன்னொரு கணிப்பொறியில் அலுவலக வேலை பார்த்தபடியோ, தொலைக்காட்சியில் கிரிக்கெட்டையும் அவ்வப்போது கவனித்தபடியோகற்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் அதற்காக நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

ஜெ 

முந்தைய கட்டுரைசுபா செந்தில்குமார்
அடுத்த கட்டுரைசித்திரம் பயில்தல், கடிதம்