மறுமை, கடிதம்

அடியடைவு

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம் .

தங்களின் அடியடைவு.மிக்க நன்றி.

எனக்கு சடங்குகள் அவ்வளவு முக்கியமென தோன்றவில்லை. இன்று அவை தேவை எனும் அறிதல் (நம்பிக்கை அல்ல, அறிதல்) உருவாகியுள்ளது.  ‘மேற்கண்ட வரிகள் என்னை ஏதோ செய்கிறது.

தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சடங்குகள் செய்ததற்கு பின்புலமாக உள்ள அறிதல்களை தெரிவிக்க பணிவுடன் வேண்டுகிறேன். அது எனக்கும் தனிப்பட்ட முறையில்  பயன்படும், வழிகாட்டும் என்பதற்காக

அன்புடன் ,

கே.எம்.ஆர்.விக்னேஸ்

அன்புள்ள விக்னேஸ்,

என் பெருமதிப்புக்குரிய ஞானிகள் சிலர் முற்பிறப்பு, மறுவாழ்வு போன்றவற்றில் ஏற்பு கொண்டவர்கள். காந்தி, அம்பேத்கர் போல. நான் வணங்கும் குருக்கள் நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி அதை அழுத்தமாகச் சொன்னவர்கள். ஆனால் நான் ஏற்றுக்கொண்டதில்லை. என் தர்க்கபுத்தி அதை மறுத்தது. எனக்கான சான்று கிடைக்கவேண்டுமென எண்ணியது.

சொல்லிப்புரியவைக்க முடியும் என்றால் அவர்களே சொல்லியிருப்பார்கள் அல்லவா? தர்க்கபூர்வமாக நிரூபிக்க முடியும் என்றால் அவர்களை விடவா நான் தர்க்கபூர்வமாக பேசிவிடமுடியும்? அந்த அறிதலை நான் சொல்லிவிடமுடியாது. வெண்முரசு வழியாக அறிந்தவை சில உண்டு. பல என்றும் சொல்லலாம். ஒன்றே என்றும் சொல்லலாம். அந்த அறிதல்களை யோகஞானம் என்றே சொல்வேன். அவற்றைவிளக்கமுடியாது.

இந்தவகை அறிதல்களைப் பொறுத்தவரை முன்னோர், அறிஞர்களை அப்படியே ஏற்கலாம். அதற்கொரு கள்ளமின்மை வேண்டும். அல்லது தன் ஞானத்தைக் கூர்தீட்டி கற்றுக்கொண்டே இருக்கலாம். கணம்சோராமல் விழித்திருக்கலாம், கண்டடையக்கூடும். இரண்டு வழிகளே உள்ளன. நம்பிக்கையை இழந்துவிட்டு, ஞானத்தை தீட்டிக்கொள்ளாமல் எளிய தர்க்கங்களைக்கொண்டு தனக்கான சிற்றாணவங்களை பெருக்கிக்கொள்வதே பெரும்பாலானவர்கள் செய்வது. தேர்ந்தெடுக்கவேண்டிய வழியை கண்டடைக

ஜெ

முந்தைய கட்டுரையோக முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைகனல்தல் – அகரமுதல்வன்