செயல் எழுக, ஒரு நிகழ்வு

ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும். எவ்வகையிலும் அவநம்பிக்கையும் சோர்வும் அடையாமலிருக்கச் செய்யும். எஞ்சுவது நம் ஆளுமைநிறைவே ஒழிய நாம் இதை செய்தோம், இதை மாற்றியமைத்தோம், இதை சாதித்தோம் என்னும் ஆணவமல்ல என்னும் உணர்வை அளிக்கும். ஒற்றைவரியில் சொன்னால், மேலும் மேலும் பெருகும் ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்காத எதுவும் சேவையோ கல்வியோ இலட்சியவாதச் செயல்பாடோ அல்ல…”

இலட்சியவாதத்தின் அடிப்படைகளில் ஒன்றாக எழுத்தாளர் ஜெயமோகன் சுட்டிக்காட்டும் மேற்கண்ட உளநிலை மிக இன்றியமையாதது. சமூகக் களத்தில் இயங்கும் இளையவர்கள் பெரும்பான்மையான நேரங்களில் உணரநேர்வது, சலிப்பும் சோர்வும் ஆணவமும்தான். ஆனால், இக்கட்டான அந்தக் கொதியுலையைக் கடந்துதான் ஒவ்வொரு இலட்சியவாதியும் தனது அறப்பாதையில் தொடர்ந்து நடக்கிறார். ‘செயல்படுகிறோம்எனும் சுயவுணர்வு அளிக்கிற நிறைவுதான் முக்கியமே தவிர, அதன்பொருட்டு நேர்கிற எவ்வகை பாவனையும் வெறுப்புணர்வும் இலட்சியவாதி ஆட்படலாகாது.

அகக்கொந்தளிப்புகளையும் மிகையுணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி, செயலின் விளைவுகள் மீது உண்டாகும் அவநம்பிக்கைகளைக் கடந்து, வெறுப்பரசியலின் பற்சக்கரத்திற்கு இரையாகாமல், தினசரி வாழ்வியலோடு ஒன்றிணையும் நிறைவும் மகிழ்வும் கலந்த செயல்பாடுதான் தனிமனித லட்சியவாதத்தை அழியாது காக்கும். செயல்வீரர் ஒவ்வொருவரும் முதலில் மீட்டுக்கொள்வது அவரவர் அகத்தைத்தான். தன்னிறைவின் மகிழ்விலிருந்து பிறக்கும் செயல்கள் யாவும் எதிர்பார்ப்புகள் இல்லாதவையாக சமூகத்தில் நிலைகொள்ளும். சமரசமில்லாத கனவும், கவனமான திட்டமிடலும், கருணையால் கனிந்த அன்புள்ளமும் கொண்ட ஓர் இலட்சியவாதியால், தான் நினைத்த இலக்கைவிட நெடுந்தொலைவு பயணிக்க முடியும்.

ஆகவே, இலட்சியவாத வாழ்வுக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு களத்தில் இயங்கும் இளையவர்களுக்காகசெயல் எழல்எனும் ஒருநாள் கூடுகையை நிகழ்த்துகிறோம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, சமகாலத்தில் செயலாற்றும் இளையோர்களுடன் இலட்சியவாதம், அதற்கான ஆயத்தங்கள் மற்றும் அடிப்படைகள் குறித்து உரையாடவுள்ளார். ஒரு கனவையோ அல்லது சிறுவிருப்பத்தையோ ஆதாரமாகக்கொண்டு, சமூகக்களத்தில் பணியாற்றவரும் இளையவர்களுக்கு ஏற்படும் தடைகள் என்னென்ன, முன்னோடி ஆளுமைகள் அத்தடைகளை வென்றுகடந்த வழிகள் என்னென்னஇவ்வாறு வரலாற்று ரீதியாகவும் வாழ்வனுபவ ரீதியாகவும் இவ்வுரையாடல் நிகழும்.  

உண்மையில், இங்கு செயல்படுவோர் அனைவருக்கும் ஆற்றலளிப்பதுதியாகவுணர்வுஅல்லது. ‘நாம் தியாகம் செய்கிறோம்என்ற நம்புதல் நம்மை சோர்விலும் வெறுப்பிலும் கொண்டுநிறுத்தும். இலட்சியவாதியின் புதைகுழி என ஜெயமோகன் அதைச் சொல்கிறார். நாம் ஆற்றும் செயல் நமக்களிப்பது நிறைவுணர்வு. நமது அகத்துக்கு எதிர்ப்பில்லாத செயலைச் செய்யும்போது நம்முடைய பிறப்புநோக்கப் பாதையில் பயணிப்பதாக நாம் ஒருவகை சுயமகிழ்வை அடைகிறோம். அந்த நிறைவுக்கு முன்பு, லெளகீகம் தரும் எல்லா அச்சங்களும் பின்வாங்கும். இந்த அடிப்படையில்தான் இந்த லட்சியவாத முகாமும் பயணிக்கும்.

(இந்நிகழ்வுக்கு வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் முந்தைய இரவும், முகாம் முடிந்தபின் இரவு தங்கி மறுநாள் காலை புறப்படுவதற்கு ஏதுவாக தங்குமிடமும் உணவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இம்முகாமுக்கு கட்டணங்கள் எதுவுமில்லை.)

முகாமுக்கான முன்பதிவு இணைப்புhttps://bit.ly/seyalezhal

தொடர்புக்கு: 95003 84307, 9994846491

நன்றியுடன்

குக்கூ காட்டுப்பள்ளி 

முந்தைய கட்டுரைஅடியடைவு
அடுத்த கட்டுரைகாடு- படிமங்களை புரிந்துகொள்வது…கடிதம்