ஒரு வருடத்துக்கு முன்பு நானும் அய்யப்பனும் பதிப்பகம் தொடங்குவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த எண்ணம் செயலாகி இன்று ‘மயூ பதிப்பகம்’ தொடங்கியிருக்கிறோம். இதற்கான விழா சென்னையில் நவம்பர் 25 அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் என்னுடைய ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘மாபெரும் சபை’ என்கிற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் குறித்த இரு புத்தகங்களும் வெளிவர இருக்கின்றன.
தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தினை நான் முன்னோடி எழுத்தாளர்களிடம் இருந்தே பெறுகிறேன். அவர்களில் முதன்மையானவர் நீங்கள். அதே தேதியில் நீங்கள் ஈரோட்டில் வாசகர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இருப்பதாக அண்ணன் ராஜகோபாலன் சொன்னார். பதிப்பகம் தொடங்கும் இந்தத் தருணத்தில் உங்களின் மேலான ஆசிகளை நாங்கள் முக்கியமென கருதுகிறோம். எந்த வகையிலான புத்தகங்களைக் கொண்டு வர வேண்டும் என்கிற ஒரு திட்டமும், கனவும் உள்ளது. அதை செயல்படுத்துவோம் என நம்புகிறோம்.
அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம்.
எங்களது இந்த முயற்சியினை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அன்புடன்
ஜா.தீபா
9094555509
அன்புள்ள ஜா தீபா,
இரண்டுவகை பதிப்பகங்கள் உண்டு. பெரும்பதிப்பகங்கள். அவை எல்லா வகை நூல்களையும் வெளியிடும். அவற்றுக்கு எந்தவகையான தனிப்பார்வையும் இருக்காது. குறைந்தபட்ச தரம் மட்டுமே அளவுகோலாக இருக்கும். அது ஒருவகை பதிப்பு முறை. அவர்களால் பெரிய அளவில் விளம்பரம் செய்ய முடியும். நூல்களை நாடெங்கும் கொண்டுசெல்ல முடியும்.
இன்னொரு வகை பதிப்பகங்களை மாற்று பதிப்பகங்கள் எனலாம். அவை தங்களுக்கென பார்வை கொண்டவை. திட்டவட்டமாக ஒரு கோணத்தை முன்வைத்து அதன்பொருட்டு நூல்களை வெளியிடுபவை. Independent பதிப்பகங்கள் என்று சொல்லத்தக்க அப்பதிப்பகங்களே சந்தையில் பெரிய பதிப்பகங்களை எதிர்கொள்ள முடியும்.
அதற்கு கொஞ்சம் பொறுமை தேவை. உங்கள் வாசகர்களை கண்டடைவது வரை சீரான நீண்டகால பணி தேவை. நூல்களில் தெளிவான தேர்வும் தேவை. உங்கள் பார்வை எனக்கு தெரியும். அதற்கான ஏற்பு நூல்வெளியீடு வழியாக அமையட்டும்
வாழ்த்துகள்
ஜெ