ஷில்லாங் இலக்கிய விழா

செர்ரி பிளாஸம் என்பது ஜப்பானின் அடையாளம். ஜப்பான் என்னும் மரம் பூப்பது என செர்ரி பிளாஸம் மலரும் பருவத்தைச் சொல்வதுண்டு. நானும் அருண்மொழியும்  ஜப்பான் சென்றபோது செர்ரிபிளாஸம் மலர்ப்பருவத்தைக் காண்பதற்கே திட்டமிட்டோம். பலகாரணங்களால் பயணம் இரண்டுவாரம் தாண்டிவிட்டது, நாங்கள் செல்லும்போது மலர்கள் உதிர்ந்துவிட்டன.

மேகாலாயவின் செர்ரிபிளாஸம் திருவிழா இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாவிழாக்களில் ஒன்று. ஒன்றரை லட்சம்பேர் வரை கலந்துகொள்வதுண்டு. அதையொட்டி நிகழும் ஷில்லாங் இலக்கியவிழாவுக்கு அழைப்பு என்றபோது செர்ரிபிளாஸம் மலர்வதையே நான் எதிர்பார்த்திருந்தேன். அவ்வெண்ணத்துடனேயே 13 நவம்பர் 2023ல் விமானமேறினேன்.

கோவையிலிருந்து விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில் செந்தில்குமார், மீனாம்பிகை மற்றும் செந்தில்குமாரின் மனைவி பார்வதி ஆகியோர் வந்திருந்தார்கள். திருவனந்தபுரத்தில் சௌத்பார்க் விடுதியில் முந்தையநாளே வந்து தங்கியிருந்தேன். அங்கே  அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி 9 மணிக்கு சென்னை விமானத்தை பிடித்தேன். குவாஹாதி விமானம் மாலை நான்கு மணிக்கு. குவாஹாத்தியில் இருந்து காரில் மூன்று மணிநேரம் பயணம் செய்து இரவு பத்து மணிக்கு ஷில்லாங். ஒரு முழுநாள் பயணம்.

ஷில்லாங் தாஜ் விவாண்டா விடுதியில் வசதியான அறைகள். என்னுடைய சூட் அறை பல பகுதிகள் கொண்டது. இரவில் சிறுநீர் கழிக்கச் செல்கையில் பயணம் செய்வதாகவே தோன்றும். ஷில்லாங்கில் சராசரிக்குளிர் 20 பாகை செண்டிகிரேட். பகலில் 22 வரை செல்லும். மாலை நான்கு மணிக்கே பொழுதணைந்து 15 பாகை வெப்பம் வந்துவிடும். குளிராடைகள் கொண்டுசென்றிருந்தேன். பகலில் மெல்லிய ஆடை, இரவில் கனத்த கம்பிளி பதித்த கோட். இரண்டுமே அண்மையில் ஆஸ்டின் சௌந்தருடன் சென்று வாங்கியவை.

ஷில்லாங் நகரில் செர்ரிபிளாஸம் பூத்து நிறைந்திருந்தது. அதன் நிறம் ஒரு வகை பட்டுச்செம்மை. நம்மூரில் பட்டுரோஜா நிறம் என்பார்கள். ஆங்கிலத்தில் அதற்கு செர்ரி பிளாஸம் நிறம் என்றே பெயர். நகரில் இளங்குளிரில் வெயில் உருகிப்பரந்த ஒளிரும் இனிமையென நிறைந்திருந்தது. அந்த வெளிச்சத்தில் ஒவ்வொன்றும் அழகு கொண்டிருந்தது. விழிகளால் தொட்டுத்தொட்டு நோக்கியபடி நடந்தேன்.

ஷில்லாங் நகரைச் சுற்றிவந்து பொதுவான ஒரு சித்திரத்தை அடைய முயன்றேன். அது எப்போதுமே நான் செய்வது. ஊட்டியை நினைவுறுத்தும் ஏற்ற இறக்கமுள்ள சாலைகள். இடுங்கலான சாலைகளுமுண்டு. பல சாலைகள் வார்ட் ஏரியை நோக்கிச் சென்றன. அரசுக்கட்டிடங்கள், விடுதிகள் எல்லாமே ஒரே வட்டத்துக்குள் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் பாதுகாப்புக்காக அப்படித் தேவைப்பட்டிருக்கலாம்.

காலையில் கடைதிறந்து வியாபாரத்தை தொடங்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். தெருவணிகர்களும் பெண்கள்தான். ஆண்கள் வண்டியோட்டிகள் மட்டுமே. பழைய மாருதி 800 மற்றும் ஆல்டோ கார்கள்தான் டாக்சிகள். அண்மையிலுள்ள குன்றுகளுக்குச் செல்ல காலையிலேயே ஆளைத்திரட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஷில்லாங்கில் முன்பெல்லாம் இந்திப்படம் ஓடாது, தீவிரவாத மிரட்டல் உண்டு. திருட்டு டிவிடிதான். இப்போது டைகர் ஓடுகிறது. ஆனால் முன்பு இந்திப்படத்தை தடைசெய்திருந்தமையால் அந்தப்படங்களை அப்படியே திரும்ப காஸி, காரோ மொழிகளில் எடுக்கும் சிறிய திரையுலகம் செயலூக்கத்துடன் இருந்தது. நாற்பது லட்சம் ரூபாயில் எடுத்து அறுபது லட்சம் ரூபாய் வசூல்செய்யும் வெற்றிகரமான உலகம். அது இப்போதும் அதே விசையுடன் உள்ளது என்று தெரிந்தது.

விழாவில் கலாச்சார அமைச்சர் மேகாலயாவின் எல்லா மாவட்டங்களிலும் அரசே திரையரங்குகளை தொடங்கி உள்ளூர் சினிமாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அது தேவையான ஒன்று என்று நினைக்கிறேன். கேரளத்தில் அரசின் 6 திரையரங்குகள்தான் கேரள மாற்றுசினிமாவின் அடிப்படையாகவே உள்ளன. ஆனால் ஊழல் இல்லாமல் அதை நடத்த ஆட்கள் தேவை. தமிழகத்தில் மெத்தக்கடினம்.

ஷில்லாங்கில் நடந்துகொண்டிருக்கையில் நான் சுவரெங்கும் சுவர்க்கிறுக்கல் ஓவியங்களைக் கண்டேன். சர்வதேசச் சுற்றுலாப்பயணிகள் வரும் ஊர்களிலெல்லாம் அவை உள்ளன. போதையர்களின் உலகம். அமைப்பு எதிர்ப்பு மனநிலை வெளிப்பாடு. ஆனால் ஒரு பிடிவாதமான வைரஸ் போல அது உலகமெங்கும் எப்படிச் சென்றுகொண்டே இருக்கிறது என்பது ஆச்சரியமளிப்பதுதான்

அதே விந்தையான எழுத்துருக்கள். கிறுக்கல் உருவங்கள். நியூயார்க் முதல் ஷில்லாங் வரை ஒரே கலை, ஒரே மனநிலை. அது இன்றைய உலகுக்கு எதிராக எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. ஒன்று தோன்றியது ஒரு பெரும்போர் நிகழ்ந்து, அல்லது நோய் நிகழ்ந்து, நாமறியும் மையக்கலாச்சாரமே அழிந்து இந்த ஓவியங்களை வரைபவர்கள் மட்டுமே எஞ்சினால் அவர்கள் எப்படிப்பட்ட உலகை உருவாக்குவார்கள்?

அவர்கள் எதையும் உருவாக்கப்போவதில்லை என்று தோன்றியது. அவர்கள்  வைரஸ்கள்போல. நல்லதோ கெட்டதோ, வைரஸ்கள். இன்னொரு உயிரை நம்பியே அவர்களால் வாழமுடியும். அவர்களின் எல்லா அழகியலும், மனநிலையும் அவர்கள் எவற்றையெல்லாம் எதிர்க்கிறார்களோ அவற்றாலெல்லாம் எதிர்மறையாக உருவாக்கப்பட்டதுதான்

ஷில்லாங்கின் பழைய இல்லங்கள் பெரும்பாலும் தகரக்கூரை போடப்பட்டவை. கீழே மரத்தாலான கால்களின்மேல் நிலைகொள்பவை, மரச்சுவர்கள் கொண்டவை. இன்று அனேகமாக அவை இல்லை. தேடித்தேடிச் சிலவற்றைக் கண்டடைந்தேன். சில கட்டிடங்கள் இடிந்து சரிந்து நின்றிருந்தன. புதியவை எல்லாமே நம்மைப்போன்ற கான்கிரீட் கட்டிடங்கள். ஷில்லாங் ஒரு சுற்றுலாநகரம் என்பதனால் அதன் பழைய கட்டிடக்கலையை அப்படியே பேணியிருந்தால் அது ஒரு பெரிய செல்வமாக இருந்திருக்கும்.

ஷில்லாங்கில் தெருநாய்கள் என கண்ணுக்குப்பட்டவை எல்லாமே நம்மூர் கணக்கில் உயர்ரக நாய்கள். தெருவில் ஒரு லாப்ரடார் ரெட்ரீவரைக் கண்டேன். இமையமலைப்பகுதிகளில் பொதுவாக உயர்ரக நாய்களையே தெருவில் காணமுடியும். அந்தக்குளிரை அவையே தாக்குப்பிடிக்க முடியும். நாம் இங்கே உயர்வகை நாய்கள் என்பவை ஐரோப்பிய நாய்கள். இங்கு ஐரோப்பியர் கொண்டுவந்த நாய்களின் வம்சம் அவை. ஐரோப்பிய இந்தியர்கள்.

நான் முதல்நாளே தற்செயலாக விவேகானந்தரின் மாணவர் அளசிங்கப்பெருமாள் பற்றி ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்து, அதிலிருந்து மண்டயம் மரபு என்னும் வைணவப்பெருங்குடும்பம் பற்றி வாசிக்கச் சென்று அவற்றை தமிழ்விக்கி பதிவுகளாக போட்டுக்கொண்டிருந்தேன். மூன்றுநாளில் பத்து பதிவுகள், 300 பக்க வாசிப்பு. இந்த விழாவின் சற்றுமேலோட்டமான தன்மையை நிகர்செய்ய அது எனக்கு தேவைப்பட்டது. என்னால் தீவிரமனநிலைகளில் மட்டுமே வாழமுடியும்.

இலக்கியவிழா ஷில்லாங்கில் வார்ட் ஏரி (Ward’s Lake)யைச் சுற்றியிருந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரிய ஒளியை உள்ளே விடும் கூடாரங்களில் புத்தகக் கடைகள், உணவகங்கள், ஓய்வறைகள், மற்றும் சந்திப்பு நிகழும் கூடம். செர்ரிபிளாஸம் மலரின் நிறத்தில் பெரும்பாலான கூடாரங்கள் அமைந்திருந்தன. ஏரியைச் சுற்றி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைய பெரிய தோட்டம். அந்த இடம் ஏற்கனவே ஒரு சுற்றுலா மையமென நினைத்துக்கொண்டேன்.

பூங்கா முழுக்க காலைமுதலே இளைஞர்களின் பெருந்திரள். அவர்கள் இதை ஒரு கேளிக்கையாகவே கருதுவது தெரிந்தது. கணிசமானவர்கள் பிற வடகிழக்குப் பகுதிகளில் இருந்து சுற்றுலா வந்தவர்கள். எங்கு பார்த்தாலும் நின்று படம் எடுத்துக்கொண்டனர். தழுவிக்கொண்டு அலைந்தனர். விதவிதமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பெண்கள் இங்கெல்லாம் மிகச்சிறப்பாக அலங்காரம் செய்துகொள்கின்றனர். மேலைநாட்டுப்பெண்களை விடவும் ஒரு படி மேலாகவே. நல்ல உடைகள், காலணிகள். மிகச்சிவப்பான உதட்டுச்சாயம். கண்மைகள். பெரிய கண்ணாடிகள்தான் இப்போது மோஸ்தர் போல. முன்பெல்லாம் வெறும் சில்லு மட்டுமான விளிம்பற்ற மெல்லிய கண்ணாடிகள் மோஸ்தராக இருந்தன.குட்டை ஆடை மங்கோலிய மஞ்சளினத்துப் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானது. அவர்கள் உயரம் குறைவானவர்கள், அவர்களின் உடல் பருமனனானதுமல்ல என்பதனால்.

நவம்பர் பதின்நான்காம் தேதி காலை 10 மணிக்கு நிகழ்வு மேகாலயாவின் கலாச்சார- சுற்றுலாத்துறை அமைச்சர் பால் லிங்டோ அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. ஜெனிஸ் பரியத் மேடையில் எனக்குத்தெரிந்த ஒரு முகம்.

இலக்கியநிகழ்வுகள் பலகோணங்களில் ஒருங்கமைக்கப்பட்டிருந்தன. இலக்கியவாதிகளின் விவாத அமர்வுகள், நூல்வெளியீடுகள், கிராஃபிக் நாவல்கள், கேலிச்சித்திரங்கள் பற்றிய அமர்வுகள், குழந்தையிலக்கிய அமர்வுகள். நாட்டார் வாய்மொழிக் கலைகளுக்கான அரங்குகள் இருந்தன. குழந்தைகளுக்கான கதைசொல்லும் அரங்கும், பெரியவர்களுக்கான கவியரங்கு ஒன்றும் பெருந்திரளாக மக்களைக் கவர்வதைக் காணமுடிந்தது.

இரு அரங்குகள் சுவாரசியமானவை. ஒன்று, காஸி ,கெரோ பழங்குடிகளில் மூங்கிலால் வீடுகட்டும் கலைஞர் ஒருவருடனான சந்திப்பு. இன்னொன்று மேகாலயாவின் மரபான வேர்ப்பாலம் அமைப்பவர்களுடனான ஒரு சந்திப்பு. காஸிகளின் மரபான உடையில் காஸி மொழியில் அந்த கலைஞர் பேசினார். காஸி, கரோ இருமொழிகளும் நம் செவிக்குச் சீனமொழி போலவே ஒலிப்பவை.

ஒருவகையில் மேகாலயாவின் இரு முகங்களை காட்டுவதாக இந்த விழாவை கண்டேன். ஒருபக்கம் கிட்டத்தட்ட அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் என்றே சொல்லத்தக்கவரும், ஆங்கில எழுத்தாளரும், மேகாலயாவில் பிறந்தவருமான ஜெனிஸ் பரியது. மறுபக்கம் போன்ற மேகாலயாவின் நாட்டார் கலைஞர்கள். மேகாலயாவில் காஸி, கேரோ மொழிகளில் எழுதும் படைப்பாளிகள் பலர் உள்ளனர். ஓர் விற்பனையரங்கே அவர்களுக்கானது. கூடவே ஆங்கிலத்தில் எழுதுபவர்களும் மிகுதி

நிகழ்ச்சி நடுவேநடுவே இசைநிகழ்வுகளும் உண்டு. இசைநிகழ்வுகளில் ஒன்றை கவனித்தேன், முழுக்கமுழுக்க மேலையிசை. மேலைச்செவ்வியலிசை அல்ல, மேலைப்பரப்பிசை. மேகாலயாவுக்கு உரிய நாட்டாரிசையோ மரபிசையோ எங்கும் காதில் விழவில்லை. மக்களும் அதில் முழுமையாக ஈடுபட்டுக் களிப்பதைக் காணமுடிந்தது.

இங்கே நிகழ்ந்த மாபெரும் கிறிஸ்தவ மதமாற்றத்தின் விளைவு. ஜப்பான் சென்றபோதும் இதே விஷயத்தை உணர்ந்தேன். முழுமையான ஐரோப்பியமயமாதல் ஜப்பானின் மாபெரும் பண்பாட்டின் சாயலே எங்குமில்லை. ஆனால் இங்கே இதனால் பழங்குடியினரின் இனவுணர்வு எவ்வகையிலும் குறைந்துவிடவில்லை. அயலவர் மேல் விலக்கமும் தங்களுக்குள் உள்ள இனப்பகைமையும் அவர்களிடம் வலுவாகவே உள்ளன.

ஆனால் இலக்கியம் அந்த எளிய உணர்வுகளுக்கு அப்பால் எழுந்து நின்றிருக்கும் ஒரு தொலைநோக்கை எப்போதும் கொண்டிருக்கிறது. நிகழ்வுகளிலொன்றில் கேலிச்சித்திரக் கலைஞரான தன் ஓவியங்களை காட்டினார். அதிலொன்று மீய்த்தி இனத்தவர் ஒருவர் கம்ப்யூட்டரில் ஏதோ பக்கத்தைப் பார்க்கையில் Accept all cookies என்று கண்டதும் திகைக்கிறார். அரங்கு முழுக்க சிரிப்பொலிகள்.

மேகாலயாவின் குழந்தையிலக்கியம் சார்ந்த அரங்குகளும் சுவாரசியமானவை. காஸி குன்றுகளின் கதைகளை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தும் நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. மேகலாயவின் குகைகளுக்குள் செல்லும் பயணம் பற்றிய ஒரு சிறுவர்க்கதை அரங்கில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன்.

இன்னொரு சுவாரசியமான அரங்கு சாம் மில்லர் நடத்தியது. அவருடைய Migrants என்னும் நூல் உலகமெங்கும் நிகழும் மக்கள் இடப்பெயர்வு என்பதை வரலாறு முழுக்க நிகழ்ந்த இயல்பான ஒரு நிகழ்வாகச் சித்தரிக்கிறது. அதுவே மானுடப்பண்பாட்டை உருவாக்கிய அடிப்படை என்கிறது. புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதென்பது சென்ற முக்கால் நூற்றாண்டாக நிகழ்ந்துவரும் ஒருவகை அரசியல் செயல்பாடுதானே ஒழிய என்றுமிருந்தது அல்ல. இதற்குத் தேசியவாதமே காரணம், அது ஓர் எதிர்மறைச் சக்தி என்று அவர் வாதிட்டார்.

அவர் அரங்கை நடத்திய ஜெனிஸ் பரியத் சிக்கலுக்குள்ளானார். “ஆனால் பழங்குடி பூர்வநிலங்கள் அத்தகைய குடியேற்றங்களால் பறிபோகலாமே” என்றார். “நீங்கள் சொல்வது இலட்சியவாதம். அது சரிதான், ஆனால்…” என்று சொல்ல ஆரம்பிக்க _ உறுதியாக அதை மறுத்து “இல்லை, ஓர் இடத்தில் வாழ்வதனால் அந்நிலம் மேல் எவருக்கும் அறுதியுரிமை அமைவதில்லை” என்றார்.

ஜெனிஸ் பரியத்தின் Everything the Light Touches என்னும் புதிய நாவல் வெளியாகியுள்ளது. ஷில்லாங்கின் இயற்கையை அறிய வரும் ஒரு ஐரோப்பியனுடனான பயணமாக அமைந்த நாவல். அதைப்பற்றிய விவாதம் பெரும்பாலும் அறிவியலுக்கும் கலைக்குமான ஊடாட்டம் எந்த அளவில் என்னும் வகையிலேயே நிகழ்ந்தது. ஜெனிஸ் இனிமையே உருவெடுத்தவர் போலிருந்தார். மென்மையான குரல், நடனம்போன்ற உடலசைவுகள், சிறுமிக்குரிய சிரிப்பு.

இலக்கிய விழாக்களென்பவை ஒருவகையில் ‘ஷோ’க்கள் தான் ஒவ்வொரு மொழியிலும் என்னென்ன நிகழ்கிறதென்பதைக் காட்டுபவை. கூடவே அந்நிகழ்வை நடத்தும் மாநிலத்தின் இலக்கியவெளிப்பாட்டை உலகின்முன் வைப்பவை. ஷில்லாங் லிட்ஃபெஸ்டும் அப்படித்தான். அதன் முதன்மைநோக்கம் காஸி- காரோ எழுத்துக்களை முன்வைப்பது. அதைச் சிறப்பாகவே செய்தார்கள்.

கேரளத்தில் ஆண்டுதோறும் இரண்டு மூன்று பெரிய இலக்கியவிழாக்கள் நிகழ்கின்றன. கே லிட் ஃபெஸ்ட் , மாத்ருபூமி லிட்ஃபெஸ்ட், கொச்சின் ஹே லிட் ஃபெஸ்ட். ஒவ்வொன்றும் பத்துகோடி ரூபாய் செலவில் நிகழ்பவை. பெங்களூர், வடோதரா, ஜெய்ப்பூர் , டெல்லி என இலக்கியவிழாக்கள் இந்தியாவெங்கும் உண்டு. ஒவ்வொன்றிலும் உலக இலக்கியவாதிகள் கலந்துகொள்வார்கள். கூடவே அந்த வட்டார இலக்கியம் முன்வைக்கப்படும்.

சென்னையில் ஒரே இலக்கியவிழாதான் நடந்துவந்தது ஹிண்டு லிட் ஃபெஸ்ட். அது சிலரால் கையகப்படுத்தப்பட்டு தமிழிலக்கியத்தை எவ்வகையிலும் முன்வைக்காத ஒன்றாக, தமிழ்ச்சூழலுக்கு என்னவென்றே தெரியாத நிகழ்வாக பல ஆண்டுக்காலம் நடைபெற்றது. அதில் பல ஆண்டுகளாக பங்குகொண்ட அயல்நாட்டு எழுத்தாளர் ஒருவருக்கு அது நிகழும் ஊரில் பேசப்படும் மொழி தமிழ் என்றும் அங்கே நவீன இலக்கியம் உள்ளது என்றும் தெரியவில்லை என்பதை ஒரு லிட்ஃபெஸ்டில் அவரிடமிருந்து அறிந்து துணுக்குற்றிருக்கிறேன். ஹிண்டு லிட் ஃபெஸ்ட் இப்போது நிதிப்பற்றாக்குறையால் நின்றுவிட்டது.

பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்களுக்கான அமர்வில் விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில் செந்தில்குமார் கலந்துகொண்டார். இந்திய மொழிகளில் பொதுவாக வாசிப்புப் பழக்கம் குறைவது பற்றிய புகார்கள் இருந்தாலும் மேகாலயாவின் காஸி (Khasi) காரோ (Garo) மொழிகளில் எழுதுபவர்கள் தங்கள் நூல்கள், இதழ்களுக்கு ஓரளவு வரவேற்பு வளர்ந்திருப்பதாகவே சொன்னார்கள். பொதுவாகவே காஸி- காரோ மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கங்கள் செல்வதும் மிகுதி. வடகிழக்கு பற்றிய ஒரு சித்திரத்தை இந்திய அளவில் உருவாக்க அவர்களால் இயன்றுள்ளது.

செந்தில்குமார் இலக்கியத்தை ஒரு வாசிப்பு- விற்பனை என்ற அளவில் அணுகாமல் ஒரு சமூக இயக்கமாக- அறிவியக்கமாக முன்னெடுப்பதே சரியான வழி என்று பேசினார். விஷ்ணுபுரம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகளையும் முன்வைத்தார். செந்தில்குமார் மேடைகளில் பேசிப்பழக்கமானவர். வணிகப்பேச்சும் அறிந்தவர். ஆகவே சுருக்கமான, ஆனால் பயனுள்ள, மெல்லிய நகைச்சுவை கொண்ட பேச்சு.

என் அரங்கு 16 மாலையில், இலக்கியவிழாவின் கடைசி நிகழ்ச்சி. அது முடிந்ததுமே முதல்வர் அரங்குக்கு வருவதாக இருந்தது. நிகழ்வை ஒருங்கிணைக்கவேண்டியவர் அவசரப்பணியாக தெலுங்கானாவுக்குச் சென்றுவிட்டிருந்தார். ஆகவே செந்தில்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஓர் உரையாடலாக நிகழ்ச்சியை அமைத்துக்கொண்டோம். என் நாவலான The Abyss குறித்து நான் விவாதித்தேன்.

இலக்கிய விழாக்களில் பொதுவாக ஒருவகையான நகாசுத்தனமான பேச்சுக்களே இருக்கும். பொதுவான அரசியல், பொதுவான சமூக அக்கறை, பொதுவான சொற்றொடர்கள், கலைச்சொற்கள். அவற்றை மீறி தனிவாழ்க்கையை ஒட்டி, என் தத்துவநிலைபாடுகளை முன்வைத்துப் பேச எப்போதும் நான் முயல்வேன். அது வாசகர்களில் ஒரு தீவிரமான பாதிப்பைச் செலுத்துவதைக் கண்டிருக்கிறேன். அது இங்கும் நிகழ்ந்தது என நினைக்கிறேன்.

அரங்கில் நான் சொன்ன கருத்துக்களில் எனக்கு முக்கியமாகத் தோன்றியவை இரண்டு. ஒன்று, இலக்கியம் ஓர் உயர்தரக் கேளிக்கை, அதுசார்ந்த வணிகம் என்னும் நோக்கே ஆங்கிலப்பிரசுரங்களைச் சார்ந்தவர்களிடமுள்ளது. அது வாசகர்களின் வாழ்க்கையை மாற்றும் என்றால் அதன் விற்பனை பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. அவ்வாறுதான் என் படைப்புகள் என் வாசகர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளன.

இரண்டாவது, நான் ஏழாம் உலகம் நாவலை எழுதியது இரக்கம், அனுதாபம் ஆகியவற்றை அந்த மக்கள் மேல் உருவாக்குவதற்காக அல்ல, எனக்கு ‘மனிதாபிமானம்’ என்பதில் நம்பிக்கையுமில்லை. நான் எழுதியிருப்பது ஒரு மானுடச்சூழல். மனிதன் எச்சூழலிலும் மனிதப்பண்புகளுடன் வாழ்வான் என நான் கண்டறிந்ததையே எழுதியுள்ளேன்.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் 16 மாலையில் நிறைவு விழா நடைபெற்றது. என் நூல்களை செந்தில்குமார் முதல்வருக்கும் கலாச்சார அமைச்சருக்கும் மரியாதை நிமித்தமாக அளித்தார்.

அன்று மாலை தாஜ் விவாண்டாவில் நடைபெற்ற பார்ட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை.  பார்ட்டிகளில் திளைக்காதவர்களால் உண்மையில் இந்த விழாக்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு கோப்பை ஒயின்கூட அருந்தாதவர்களுக்கு பார்ட்டிகள் பெரிய அலுப்புக்களங்கள். நான் அறையிலேயே இருந்து அளசிங்கப்பெருமாள், மண்டயம் மரபு என தொட்டுத் தொட்டுச் சென்று நள்ளிரவு வரை விழித்திருந்தேன்.

மறுநாள் அதிகாலை கிளம்பி தூக்கத்திலேயே கௌஹாத்தி. தூக்கத்திலேயே சென்னை.சென்னை விமானநிலையத்தில் விமானம் ஏறப்போகும்போது வானில் ஒரு விந்தையான மேக அமைப்பைப் பார்த்தேன். உலகவரைபடம் போலத் தோன்றியது. நான் அப்போது ஓர் உலகப்பயணம் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த காட்சி பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது.

அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோயில். மழையில் குளிர்ந்து நனைந்து விளக்கொளிகளில் சுடர்ந்துகொண்டிருந்த பார்வதிபுரம்.என் சிறிய உலகம்.

முந்தைய கட்டுரைகுத்தி கேசவபிள்ளை
அடுத்த கட்டுரைமாற்றுக் கழிவறை : கட்டிடக்கலை போட்டி