விஷ்ணுபுரம் அரங்கு, அரசியல்-கடிதம்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தீவிரமான அரசியல்நிலைபாடு கொண்டவர்கள். உதராணமாக வாசு முருகவேல் விடுதலைப்புலி ஆதரவாளராக அறியப்படுபவர். அவரிடம் அரசியல்பேசக்கூடாது என்று மேடையில் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? அவையினரும் அந்தக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டுமா? விஷ்ணுபுரம் அமைப்புக்கு அரசியல் இல்லாமலிருக்கலாம். வருபவர்களுக்கு அரசியல் இருந்தால் அதை ஏன் பேசக்கூடாது? ஒரு படைப்பைப் பேசும்போது அதிலுள்ள அரசியலை ஏன் பேசக்கூடாது?

எம்.கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

அரசியல் பேசக்கூடாதென்பதோ, தவிர்க்கவேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல. இங்கே அரசியலை தவிர்த்து எஞ்சியவற்றைப் பேசலாம் என்பதே எங்கள் நெறி.

ஏனென்றால், இங்கே மிகப்பெரும்பாலானவர்களுக்கு அரசியல் அன்றி வேறேதும் தெரியாது. ஒரு துளிகூட இலக்கிய அழகியலோ, சமூகவியலோ, வாழ்க்கைப்பிரச்சினைகளோ தெரியாது. அவர்கள் அறிந்திருப்பதுகூட எளிமையான கட்சியரசியல் மட்டுமே. அரசியல்சிந்தனைகள் அல்ல.

அந்த கட்சியரசியல் ஏன் அவர்களுக்குத் தெரிகிறது என்றால்  இங்கே அரசியல் கட்சிகளால் மிகுந்த பொருட்செலவில், மிகுந்த ஊடகவல்லமையுடன் அது பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பதனால்தான். எங்கும் அது பற்றியே பேசப்படுகிறது. ஆளும்தரப்பு ஆளவிரும்பும் தரப்பு இரண்டும் பேசிக்கொண்டே இருக்கின்றன.

அந்தக் கட்சியரசியல் ஓர் அவையில் பேசப்படலாமென்றால் அதைத்தவிர வேறேதும் பேசமுடியாது. அதை மட்டும் அறிந்தவர்கள் பேசித்தள்ளிவிடுவார்கள். பிற எவரையும் பேசவிடமாட்டார்கள். கட்சியரசியலின் கோபமும் காழ்ப்பும் முன்முடிவுகளும் முத்திரைகுத்தல்களும் ஒற்றைவரிகளும் மட்டுமே இங்கும் எஞ்சும். அதுதான் சமூகவலைத்தளங்கள் முழுக்க நிறைந்து கிடக்கிறதே. இங்கேயும் எதற்கு அதெல்லாம்?

ஒரு சமூகத்தில் அரசியல் தவிர வேறு விஷயங்களும் பேசப்படவேண்டும் என எண்ணுபவர்களுக்கான அரங்கு இது. அரசியலை வேறு எல்லா மேடைகளிலும் இடைவெளியே இல்லாமல் பேசுகிறார்கள். அதை தவிர எஞ்சியுள்ளவற்றை பேச இன்றிருக்கும் ஒரே மேடை இதுதான். இங்கே அதைப்பேசுவோம்.

ஓர் அரசியல்படைப்பில்கூட அரசியல் அல்லாத அழகியல், உளவியல் , சமூகவியல் உள்ளடக்கங்கள் இருக்குமே. அவற்றை இங்கே பேசலாம். அரசியல்பேச விரும்புபவர்கள் வேறுமேடை அமைத்துப் பேசலாம். அதுதானே நல்லது?

ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைசெறிவின் கதைகள், கடிதம்
அடுத்த கட்டுரையுவன் கட்டுரைகள்