விஷ்ணுபுரம் விருந்தினர், இன்னொரு ஐயம்

அன்புள்ள ஜெமோ

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன். கோபம் அடையமாட்டீர்கள் என நினைக்கிறேன். அதில் அழைக்கப்படுபவர்கள் எந்த அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள் என்ற சந்தேகம் என்னைப்போலவே பலருக்கும் உள்ளது. அதில் நீங்கள் இன்று சிறப்பாக எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரதீப் , விஷால்ராஜா , மயிலன் ஜி. சின்னப்பன், ஷம்சுதீன் ஹீரா போன்ற பலரை அழைக்காமல் இளம் படைப்பாளிகளாக வேறுபலரை அழைத்துள்ளீர்கள். மூத்த எழுத்தாளர்களாக பாவண்ணன் போன்றவர்கள் அழைக்கப்படவில்லை. இதற்கெல்லாம் உங்களிடம் விளக்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.

முருகபூபதி குலசை

அன்புள்ள முருகபூபதி,

கோபம் கொள்வதில்லை, சொல்லவேண்டியதைச் சற்று அழுத்திச் சொல்வேன். அவ்வளவுதான்.இப்போதும் அப்படிச் சொல்ல விரும்புகிறேன்.

பாவண்ணன், விஷால்ராஜா, சுரேஷ்பிரதீப் எல்லாம் எங்கள் நிகழ்வுகளில் ஏற்கனவே பங்குகொண்டு பேசிவிட்டனர். கடிதமெழுதும் முன் என் தளத்திலேயே ஒருமுறை பார்த்திருக்கலாம். அப்படி பார்த்துவிட்டு எழுதுபவர்களுக்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது – புரியுமென நினைக்கிறேன்.

இன்னும் அழைக்கப்படவேண்டிய பலர் உண்டு. ஓர் ஆண்டில் ஏழுபேர். வெவ்வேறு களங்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் அமைந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் உண்டு என்பதனால் சிலர் அழைக்கப்படுவது கொஞ்சம் பிந்தும், அவ்வளவுதான்.

எங்களைப் பொறுத்தவரை அரசியல் நிலைபாடு இல்லை. ஆகவே எங்களுக்கு எதிரான அரசியல் கொண்டவர்களை அழைப்பதிலும் தயக்கமில்லை. அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் அவ்வளவுதான். அவர்கள் நல்லெண்ணம் கொண்டிருந்து, தங்களை எதிர்கொள்ளும் வாசகர்கள் மேல் மதிப்பும் கொண்டிருந்தால் வரலாம்.

அழைப்பதிலுள்ள சில சிக்கல்களை உணர்ந்துள்ளோம். எங்கள் வாசகர்வட்டம் மட்டுமல்ல, அந்த அரங்குக்கு வரும் வாசகர்களும் நுண்ணிய ரசனையும் விரிவான வாசிப்பும் கொண்டவர்கள். அவர்களில் பலர் எழுதி எழுந்துவரும் படைப்பாளிகள். அவர்களுக்கு மதிப்பில்லாத ஒருவர் மேடையில் தோன்றினால் எத்தனை கட்டுப்படுத்தினாலும் கூரிய விமர்சனங்கள் எழும்.  ஆகவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரையுவன் நாவல்கள் – தன்யா
அடுத்த கட்டுரைகாலம் அறுபது: பேராசிரியர்.மா. சின்னத்தம்பி