அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவை ஒட்டி அமையவிருக்கும் எழுத்தாளர் சந்திப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். 2017 முதல் இச்சந்திப்புகளில் பங்கு கொள்கிறேன். மிகுந்த கூச்சத்துடன் இவற்றில் பங்குகொள்வது என் வழக்கம். நான் எதையும் கேட்பதில்லை. ஏனென்றால் எனக்கு இலக்கிய அறிமுகமே இல்லை. ஆனால் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை கவனிக்கையில் எனக்கு மிகப்பெரிய தொடக்கம் அமைந்தது. நானே சொந்தமாகச் சிந்திக்கிறேன் என்று தோன்றும்போதெல்லாம் அடாடா இதெல்லாமே அந்த நிகழ்ச்சிகளில் பேசியவற்றிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை அல்லவா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இந்த வகையான உரையாடல்கள் எல்லாம் ஆரோக்கியமான மனநிலையுடனும் தீவிரமாகவும் நிகழ்வது இங்கே மிகக்குறைவு. இவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் வெறுமே வேடிக்கைபார்க்கத்தான் நானும் வந்தேன். ஆனால் இன்று இவையெல்லாம் எந்த அளவுக்கு முக்கியமானவை என்று தெரிகிறது. என் மொழிநடையே மாறிவிட்டது. எனக்கு இதுவரை நிகழ்ந்தவற்றில் மிகச்சிறந்ததாகத் தோன்றிய சந்திப்பு ஜெனிஸ் பரியத் பேசியதுதான்.
இந்த ஆண்டு பா.ராகவன் அரங்கை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். எனக்கு அவருடைய புனைவல்லாத எழுத்து நிரம்பப்பிடிக்கும். அவருடைய பூனைக்கதை நாவலை இப்போது வாசிக்கிறேன். குழப்பமான கதையானாலும் பகடிகளெல்லாம் நன்றாக இருக்கின்றன.
மா.செல்வக்குமார்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விருந்தினர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் எழுத ஆரம்பிக்கும் ஒரு எழுத்தாளர். இன்னும் உருப்படியாக ஏதும் எழுதவில்லை. எழுதவேண்டுமென்ற ஆர்வம்தான் மிகுந்துள்ளது. ஆனால் கனவுகள் குறைவே இல்லை. நான் அந்த சந்திப்புகளில் என்னை மேடையிலே கற்பனைசெய்துகொள்வேன். ஒருநாள் நானும் இப்படி அமர்ந்துகொண்டு கேள்விகளுக்குப் பதில்சொல்லவேண்டும் என்று நினைப்பேன். அந்நினைப்பே மனக்கிளர்ச்சியை அளிப்பதாக இருக்கும்.
ராஜா முருகேஷ்
விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்
விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா
விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்
விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்
விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி
விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா
விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்