காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெ,
நேற்று காடு நாவலைப் படித்து முடித்தேன்.படித்து முடித்தவுடன் விமர்சனம் (!) எழுத நினைத்தேன்.பொதுவாக காடு பற்றிய சித்திரமும்,அதன் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள் பிரமாதம்.ஆனால் நான் இந்த நாவலில் வரும் குறியீட்டுத் தன்மையை எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறேன் என்று சந்தேகம் வந்தது.அதனால் மற்றவர்களின் விமர்சனங்களை பார்த்தேன்(எல்லாம் தங்கள் வலைத்தளத்தில் வந்தவை).
ஓரளவிற்கு என்னுடைய புரிதல் சரிதான்.ஆனால் தற்செயலாக கரு.ஆருமுகத்தமிழன் அவர்களின் காடு பற்றிய விமர்சனத்தை பிடித்தேன் ஜெயமோகனின் காடு:கரு. ஆறுமுகத்தமிழன்
இந்நாவலைப் போலவே அந்த விமர்சனமும் பிரம்மிப்பூட்டியது.அவர் ஒரு பேராசிரியர்.அவரளவுக்கு இல்லாவிட்டாலும்,இன்னும் ஆழமாக(எல்லா குறியீட்டு தன்மைகளையும் புரியும் அளவிற்கு)வாசிப்பது எவ்வாறு?எல்லா கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் குறிப்பெடுத்து அட்டவணைப்படுத்தி,அதிலிருந்து பெறமுடியுமா?அது வாசிப்பனுபவத் தை பாதிக்காதா?
நான் வெண்முரசின் 26 நூல்களையும் படித்திருக்கிறேன் (குறிப்புகளுடன்). எனக்கு மிகமிக பிடித்த நாவல் வரிசை.எனக்கு அங்கு பெரிதாக புரிதல் பிரச்சினையில்லை(அப்பிடித்தான் நான் நினைக்கிறேன்).ஆனால் காடு மற்றும் ஏழாம் உலகத்தில் சில முக்கிய குறியீடுகளை பிறர் விமர்சனங்களில் இருந்துதான் தெரிந்து கொள்கிறேன்.ஏதேனும் சிறந்த வழி இருந்தால் தெரிவிக்கவும்.
இப்படிக்கு,
R.பிரபு வெங்கட்ரமணன்.
அன்புள்ள பிரபு
எந்தக் கலையையும் புரிந்துகொள்ள அதை தொடர்ந்து கவனிப்பது, அதில் ஈடுபட்டிருப்பது மட்டுமே வழி. ஏனென்றால் கலையின் வழி என்பது கற்பனை. கற்பனையைத் தூண்டும் சில அடையாளங்களையே கலையின் அடிப்படை அலகு என்கிறோம். அவற்றை இன்று படிமங்கள் (இமேஜ்) என்று சொல்கிறார்கள்.
இசை ஒலியாலான படிமங்கள் கொண்டது. ஓவியமும் திரைப்படமும் காட்சிகளாலான படிமங்கள் கொண்டது. இலக்கியம் மொழியால் உருவாக்கப்படும் படிமங்கள் கொண்டது. அந்தப்படிமங்கள் நம் கற்பனையைத் தூண்டி நமக்கு அளிக்கும் அர்த்தங்களும், உணர்ச்சிகளுமே நம் கலையனுபவங்கள். அவற்றுக்கு அகராதி போட முடியாது. இன்ன படிமம் இன்ன பொருள் கொண்டது என்று வகுக்க முடியாது.
சரிகமபதநிஸ என்னும் சுவரங்கள் ஒன்றை விட இன்னொன்று கூடுதலாக ஒலித்தால், ஆரோகணமாக கேட்டால், அது மேலே எழுவதுபோல ஓர் உணர்வை அளிக்கிறது. உணர்ச்சி மேலோங்குகிறது. ஏனென்றால் அது படிமம். சிவப்புநிறம் ஒரு தீவிர உணர்வையும் நீலம் ஒரு ஆழ்ந்த உணர்வையும் அளிக்கிறது. அதுவும் படிமமே.
அதே போல நம் வாழ்க்கையிலும் பல படிமங்கள் உள்ளன. ஒரு வீட்டின் முன் மாவிலைத் தோரணம் இருந்தால் ஒரு மங்கல உணர்வு உருவாகிறது. அது பாரம்பரியமான படிமம். ஒரு நூல் மஞ்சளாக இருந்தால் அது ஏதோ நோன்பு சம்பந்தமானது என உணர்கிறோம். இவை போல பலநூறு படிமங்கள் நம் மனதிலுள்ளன.
வெண்முரசில் மரபான ஒரு தளம் உள்ளது. அதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆகவே எளிதாக அதை படித்துவிடலாம். ஆனால் அதில் நவீனப்படிமங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றை கொஞ்சம் நவீன இலக்கிய வாசிப்பு இருந்தாலொழிய அடிஅயமுடியாது.
பல புதிய படிமங்கள் கலையால் உருவாக்கப்படுகின்றன. அவற்றை அறிய நம் மனதை அந்த முறைமைக்குப் பழக்கப்படுத்துவது மட்டுமே ஒரே வழி. அப்படிப் பழக்கப்படுத்த இலக்கிய உரையாடல்கள், இலக்கிய விவாத அரங்குகள் மிகமிக உதவியானவை. இலக்கியத்துடன் இருப்பது ஒன்றே ஒரே வழி. மிக எளிதாக, ஓராண்டுக்குள் நாம் நம் கற்பனையால் நாமே படிமங்களை உள்வாங்க ஆரம்பித்துவிடுவோம்
ஜெ