உரையாடும் காந்தி வாங்க
அன்புள்ள ஜெ,
நீங்கள் “உரையாடும் காந்தி”யில் காந்தி அனைவரையும் எப்படி சமமாக நடத்தினார் என்பதை கூறியிருந்தீர்கள். எல்லோரும் சொல்வதுதான் இது, காந்தி அடிகளுக்கு எல்லோரும் சமம், உயர்வு தாழ்வு எதையும் அவர் மனிதர்களிடையே பார்ப்பதில்லை என்று. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியது முற்றிலும் வேறு.
வைஸ்ராய் ஒருவர் தன் கடிதம் ஒன்றில் காந்தியை பற்றி குறிப்பிடுகையில், அவர் அனைத்து மனிதர்களையும் தனக்கு நிகரென நடத்துகிறார். எளியவர்களை மட்டுமல்ல, உயர்ந்த அதிகாரிகளைக் கூட அவர் அப்படித்தான் நடத்துகிறார் என்று குறிப்பிடுகிறார்.
இந்த கூற்று என்னுள் ஒரு உளநடுக்கை ஏற்படுத்தியது. நான் இது நாள் வரை அனைவரும் சமம் என்ற எண்ணத்துடனேயே வாழ்ந்து வந்திருக்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவ்வாறல்ல நீ என்பதை அந்த வைஸ்ராயின் கூற்று எனக்கு தெள்ளத்தெளிவாக காட்டிற்று.
நான் என்னை போன்றவர்களிடமும், என்னைவிட எளியவர்களிடமும் மட்டுமே “எல்லோரும் சமம்” என்று கருதி பழகி இருக்கிறேன், ஆனால் என்னைவிட “உயர்ந்தவர்கள்” என்று நான் நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் என்னால் அவ்வாறு நடந்துகொள்ள முடியவில்லை.
தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காவலர் கடந்து சென்றாலே என் உள்ளம் திடுக்கிடுகிறது. என்னையும் அறியாமல் உடல் குறுகிவிடுகிறது. வங்கி மேலாளரை பார்க்க போனால் கூட இதுதான் நிலைமை.
இங்குதான் காந்தி அனைவரிடமிருந்தும் வேறுபடுகிறார். நோயுற்றிருக்கையில் அவரால் நெற்றியில் களிமண் பற்று போட்டுக்கொண்டு ஒரு வைஸ்ராயை சென்று பார்க்க முடிகிறது, அரை நிர்வாண உடையில் சென்று இங்கிலாந்து அரசரையும் பார்க்க முடிகிறது.
இப்படி களிமண் பற்றுடனமும், அரை நிர்வாண உடையுடன் செல்லும் போதும் கூட அவருக்கு எந்த வேறுபாடும் தெரிவதில்லை. காரணம் என்னவென்றால் அவர் உண்மையிலேயே “அனைவரும் சமம்” என்று நினைத்திருக்கிறார். அது வைஸ்ராயாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து அரசராகவே இருந்தாலும் சரி. எப்படிப்பட்ட கிறுக்கு கிழவர் இவர்.
எனக்கு ஜார்ஜ் ஆர்வெல்லின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
//எல்லா விலங்குகளும் சமம். ஆனால் சில விலங்குகள் மற்றவற்றை விட அதிக சமம்//
நான் இப்படித்தான் இந்நாள் வரை வாழ்ந்து வந்திருக்கிறேன் போல.
– மணிமாறன்
அன்புள்ள மணிமாறன்.
பெரியோரை வியத்தலும் இலமே என்று கணியன் பூங்குன்றன் சொல்வது இதையே. அதன் பொருள் மதித்தலும் இலமே என்று அல்ல. காந்தி அவர் காலகட்டத்தின் அறிஞர்கள், ஞானிகள் மேல் பெருமதிப்பு கொண்டவராகவே இருந்தார். பலருக்கு மிகுந்த வழிபாட்டுடன் கடிதங்கள் எழுதியுள்ளார். தாகூரையே காந்தி குருதேவ் என்றுதான் அழைத்திருக்கிறார். ஆனால் அவரிடம் தான் யார் என்னும் உணர்வு இருந்தது. இப்பெரும் உலகப்பெருக்கில் தன் இடம் என்ன என்றும் தெரிந்திருந்தார். ஆகவே தாழ்வுணர்ச்சி அவரிடம் இருக்கவில்லை.
இன்று பலர் ‘வியத்தலும் இலமே’ என்று சொல்லிக்கொண்டு தன்னைவிடப் பெரிய அனைவரையுமே மதிக்காமல் பேசுவதை காணமுடிகிறது. அவர்களிடம் ஒன்றே சொல்லமுடியும். மெய்யாகவே ஒரு கணம்கூட ஒரு துளிகூட ஒருவர் தன்னைவிட எளியோர் முன் உயர்வுணர்வை அடையவே இல்லை என்றால் அவர் எவர் முன்னும் பணியவேண்டியதில்லை. அவர் ஒரு ஞானநிலையை அடைந்தவர்
ஜெ