மிதவாத இஸ்லாம்
அன்புள்ள ஜெ.மோ,
இந்தோனேசியாவில் மிதவாத இஸ்லாம் தொடர்பான உங்களுடைய பதில் கட்டுரையைப் படித்தேன்.மிதவாத இஸ்லாம். இஸ்லாமியர்களின் சமூக– அரசியல் சிக்கல்களைக் குறித்த காரணப் புள்ளிகளைத் தாங்கள் சரியாகக் கோர்த்துள்ளீர். முஸ்லிம்கள் இன்றளவிலும் ஆற்றிவரும் தவறான எதிர்வினைகள் எவ்வாறு பிறருக்குச் சாதகமாக அமைகின்றன என்பதையும் தாங்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர். 1986 வாக்கில் நடைபெற்ற ஷாபானு வழக்கு முஸ்லிம்களின் தீவிர அரசியல் நிலைப்பாட்டிற்கும் தீவிரப்போக்கிற்கும் திருப்புமுனையாக அமைந்ததையும் அதை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிற இயக்கங்கள் வளர்ந்ததையும் அழகாகச் சுட்டிக்காட்டி உள்ளீர். மிகையுணர்ச்சிப் பேச்சாளர்கள் மிக எளிதாக மக்களை எப்படித் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும், இவர்களுக்கிடையில் கனிந்த முதியோர் எப்படித் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்பதையும், ‘மிதவாதப் போக்கு’ எவ்வாறு கோழைத்தனமாகச் சித்தரிக்கப்படுகிறது என்பதையும் தாங்கள் பகுப்பாய்வு செய்திருப்பது சிறப்பு.
இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மவ்லானா வஹீதுத்தீன் கான் அவர்களுடைய பெயரை முஸ்லிம்கள்கூட பெரிதாக அறிந்திருக்கவில்லை. அந்தக் காலத்திலேயே தாங்கள் ‘சொல் புதிது’ இதழில் நண்பர் சதகதுல்லா ஹசனியின் துணையோடுமவ்லானாவின் கட்டுரையைப் பிரசுரித்திருப்பது மிகவும் வியப்பிற்குரியது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகத்தான் மவ்லானா வஹீதுத்தீன் கான் அவர்களின் எழுத்துதமிழக முஸ்லிம்களிடையே பரவி விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.இன்று பலரும் அவரை விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் (இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள்) தமிழக வாசகர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகத் தற்போது தமிழில் நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மொழிபெயர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமகால இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பெருங்கூட்டத்திற்கிடையே தனிக்குரலாக ஒலித்தவர் மவ்லானா வஹீதுத்தீன் கான் மட்டுமே. உலக வரலாற்றிலேயே முஸ்லிம்களுடைய பிரச்சினைகளுக்கு அவர் முன் வைத்த தீர்வுகளைப்போல் யாரும் முன்வைத்ததில்லை. குறிப்பாக அரசியல் மட்டத்தில் முஸ்லிம்களின் தொடர் தோல்வியே இதற்கான சான்று. எதிர்வினையின் உளவியலிலிருந்து சமூக மக்களைக் காப்பாற்றி அரசியலுக்கு அப்பால் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை நோக்கி அவர்களைத் திசை திருப்பவும் அவர்களிடம் உடன்பாடான சிந்தனையை ஏற்படுத்தவும் அவர் தொடர்ந்து எழுதினார்.அவர் சமய இலக்கியங்கள் மட்டுமின்றி அவர் உலக வரலாறு, நவீன அறிவியல் ஆகியவற்றையும் ஆழமாகக் கற்றறிந்தவராக இருந்ததால் இருநூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் சந்தித்து வரும் பின்னடைவுகளைப் பகுப்பாய்வு செய்து இஸ்லாமிய மார்க்கத்தின் ஆதார நூல்களான திருக்குர்ஆன்– இறைத்தூதர் முஹம்மது அவர்களின் கூற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில், நடைமுறை ஞானத்தோடு தீர்வுகளை வழங்கினார். மார்க்க அறிஞர்கள்– அரசியல் தலைவர்கள் ஆகியவர்களின் தவறான வழிகாட்டல்களையும் முன்னெடுப்புகளையும் தொடர்ந்து விமர்சித்தார். வரலாறு நெடுக முஸ்லிம்கள் தொடர்ந்து செய்து வந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி மாற்றுப்பாதைகளுக்கு வழிகாட்டினார். ஆனால் அவருடைய கருத்துக்களும் அவர் வழங்கிய சிக்கல்களுக்கான தீர்வுகளும் மரபு சார்ந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததால் அவர் சொந்தச் சமூகத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டார். மட்டுமீறிய அரசியல் ஆரவாரங்களுக்கிடையே அவருடையே குரல் யார் காதிலும் விழவே இல்லை. குறிப்பாகப் பாலஸ்தீனப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, பாபர் மசூதி பிரச்சினை, தீவிரவாத நடவடிக்கைகள் போன்றவற்றில் அவர் எதிர்வினையாற்றாமல் ஒருதலைப்பட்சமாகப் பொறுமை காக்கச் சொன்னதையாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக முஸ்லிம்கள் அவரை இஸ்லாமிய வெறுப்பு இயக்கங்களின் நண்பர் எனவும் வலது சாரிகளின் நலம் விரும்பி எனவும் வசை பாடத் தொடங்கினர்.உண்மையில் இந்தத் தீர்வுகள் அவருடைய சொந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. மாறாக இஸ்லாமிய மார்க்கத்தின் ஆதார நூல்களை அடிப்படையாகக் கொண்டேவழங்கப்பட்டிருந்தன.இத்தனை ஆண்டுகள் கடந்து இன்றைய சமூக, அரசியல் சூழல்கள் அவர் வழங்கிய தீர்வுகள் உண்மையானவை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. விருப்பத்தின் பேரில் அவருடைய ஆலோசனைகளைப் புறம் தள்ளிய முஸ்லிம்கள் தற்போது கட்டாயத்தின் பேரில் அவருடைய வழிகாட்டலை ஏற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
‘மிதவாத இஸ்லாம்’ எனும் சொல்லாடல் உருவாக்கப்படவேண்டிய அளவிற்கு இன்று இஸ்லாத்தினுடைய உண்மை முகம் சிதைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்திற்காக இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாம் தன் அடிப்படையிலேயே ‘சாந்தி மார்க்க’மாகத்தான் இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது. தீவிரவாதம்– மிதவாதம் ஆகிய சொற்களைத் தாண்டி இஸ்லாமிய மார்க்கமானது, தாகத்திற்கு நீரைப்போல ‘இயற்கை மார்க்கமாக’ இருக்கிறது என்பதே உண்மை. இஸ்லாத்தில் தீவிரப்போக்கு இல்லை. அவ்வாறு இருக்குமேயானால் அது முஸ்லிம்களின் உளவியல் சிக்கலே அன்றி இஸ்லாத்தின் சிக்கல் அல்ல.
திருக்குர்ஆன் மோதல்களின் சூழல்களைக் கையாள வினை– எதிர்வினை என்பனவற்றைத் தாண்டி தவிர்த்தல், புறக்கணித்தல் என்ற கோட்பாட்டைத் தருகிறது. திருக்குர்ஆன் ‘சமாதானமே சிறந்தது’ என்கிறது. பொறுமைக்கும், விட்டுக்கொடுத்தலுக்கும், மன்னித்தலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. எதிர்வினையில் முழு ஆற்றலையும் வீணாக்கிக் கொண்டிருப்பது இஸ்லாமிய வழிமுறை அல்ல. அது இடதுசாரிகளின் தாக்கத்தால் இஸ்லாத்திற்குள் நுழைந்த ஒன்று. திருக்குர்ஆன் எந்த ஒரு சிக்கலுக்கான காரணத்தையும் முதலில் நமக்குள் தேடச் சொல்கிறது. சூழ்ச்சிகளின் பேரில் பிறரை வசைபாடி அழுது கொண்டிருக்காமல் சூழ்ச்சிகளைச் செயலிழக்கச் செய்யும் வழிமுறையைக் கற்றுத் தருகிறது. மிகச் சிறந்த நன்மையைக்கொண்டு தீமையைத் தடுக்கச் சொல்கிறது; கடும் பகைவனை உற்ற நண்பனாக்கும் சூத்திரத்தைக் கற்றுத்தருகிறது. சமூகம் சார்ந்து சிந்திக்காமல் மனிதகுலம் சார்ந்து சிந்திக்கச் சொல்கிறது. மனிதர்களின் உண்மையான நலம் விரும்பியாக இருக்கச் சொல்கிறது. ஆனால் இன்று இந்த போதனைகள் அனைத்தையும் மட்டுமீறிய அரசியல் சிந்தனை விழுங்கிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய மார்க்கத்திற்குச் சில அறிஞர்கள் அளித்த அரசியல் விளக்கம் (பொலிட்டிக்கல் இன்டர்பிரேட்டேஷன் ஆஃப் இஸ்லாம்) இந்தச் சமூகத்தைத் தவறான திசையில் செலுத்திவிட்டது. இந்தச் சிந்தனையின்அதல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து இந்தச் சமூகத்தை இஸ்லாத்தின் உண்மையான பாதையில் செலுத்துவதற்காக மவ்லானா அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது.மவ்லானா அவர்கள் யாரையும் வெறுத்ததில்லை அவர் கருத்துச் சுதந்திரத்தையும் உரையாடலையும் பெரிதும் போற்றினார். வலது சாரிகள், பெளத்தர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என்று மட்டுமின்றி அனைத்து சிந்தனைப் பள்ளிகளின் நிகழ்விலும் பங்கேற்று இஸ்லாமிய சிந்தனைகளைக் கலந்துரையாடக் கூடியவராக அவர் இருந்தார். அதற்காகவே அவர் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் தரகர் என்று அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகில் நல்ல தலைமைகள் இல்லாமலில்லை. மக்கள் அவர்களை அங்கீகரிப்பதில்லை என்பதுதான் பிரச்சினையே.
உங்களுடைய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோலஉங்களை முஸ்லிம்களை வெறுக்கும்ஒரு நபராகவே சித்தரித்து வருவதை அறிவேன்.முஸ்லிம் வாசகர்களின் தெளிவிற்காக இந்தக் கட்டுரையின் ஊடாக ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.31-7-2022 அன்று மதுரையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக நடைபெற்ற ற ‘கவிஞர் அபி 80’ எனும் விழாவில் கவிஞர் அபி அவர்களின் மேற்பார்வையில் செம்மைப்படுத்தப்பட்ட தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வந்திருந்த வாசகர்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி கேட்ட பொழுது அதற்கான உதவிகளைச் செய்து அனுமதியும் தந்தீர்கள். மட்டுமின்றி மவ்லானா வஹீதுத்தீன் கான் அவர்களின் பிற நூல்களையும் பார்வைக்கு வைக்க அனுமதி அளித்தீர்கள். இதை நான் வரலாற்றில் குறிக்கப்படவேண்டிய நிகழ்வாகவே கருதுகிறேன். மேலும் இது முஸ்லிம்களிடையே தங்களைக் குறித்துப் பரவியிருக்கும் தவறான பிம்பத்தைஉடைக்கின்ற நிகழ்வும் கூட.எங்களுடைய பணிக் குழுவைச் சேர்ந்த நண்பர் அஸ்ரார் உமரி அவர்கள்இந்த நிகழ்வைக் குறித்துமதுரையில் ஒரு இஸ்லாமியரிடம் தெரிவித்தபோது அவர் “ஜெயமோகனுடைய நிகழ்விலா குர்ஆனை வழங்கினீர்கள்..? அவர் முஸ்லிம்களுக்கு எதிரான நபர் ஆயிற்றே… அவர் வலதுசாரி ஆயிற்றே..”. என்று எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லத் தொடங்கினார். அஸ்ரார் உமரி அவரிடம் “அவர் தாங்கள் குறிப்பிட்டதீபோல் அவர் முஸ்லிம்களுக்கு எதிரான நபராக இருந்திருந்தால் அவர் தம்முடைய இலக்கிய வட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் அனைவருக்கும் இலவசமாகத் திருக்குர்ஆனை விநியோகிக்க எதற்காக அனுமதி தரவேண்டும்? முஸ்லிம்களிடம் இருக்கும் ஆதார நூல் திருக்குர்ஆன்தான். பெரும்பாலும் முஸ்லிம்களுடைய நிகழ்ச்சிகளிலும்கூட திருக்குர்ஆனை விநியோகிக்க அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் தம்முடைய இலக்கிய நிகழ்வில் குர்ஆனை விநியோகிக்க அனுமதித்திருப்பது எதைக்காட்டுகிறது?” என்று வினவி அவருடைய தவறை உணர்த்தினார்.
இஸ்லாமிய மார்க்கம் பகைமையையும் இடைவெளிகளையும் வளர்ப்பதற்குப் பதிலாக நட்பையும் நெருக்கத்தையும் நிறுவுவதற்கான வழிமுறைகளையே போதிக்கிறது. வாக்குவாதம் புரிவது மிகவும் கீழான செயலாகும். திருக்குர்ஆன் உரையாடலையே ஊக்குவிக்கிறது அதை ‘அழகிய விவாதம்’ என்றும் கூறுகிறது. இது விதங்களின் உலகம். இங்கே யாரும் யாருடனும் நூறு சதவீதம் உடன்படவேண்டும் என்ற அவசியமில்லை; அப்படி உடன்படுவது சாத்தியமுமில்லை. ஆனால் அறிவுபூர்வமான– ஆரோக்கியமான உரையாடல்களுக்கான கதுவு மட்டும் திறந்தே இருக்க வேண்டும். இந்த உரையாடல்களின் மூலமாகத்தான் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பணியை நீங்கள் தினந்தோறும் செவ்வனே செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை.
அன்பும் நன்றியும்
ஃபைஸ் காதிரி
கோவை
அன்புள்ள ஃபைஸ் காதிரி அவர்களுக்கு,
நன்றி. மௌலானா வாஹீத்கான் அவர்களின் நூல்கள் தமிழில் மேலும் விரிவாகச் சென்றடையவேண்டும் என நினைக்கிறேன். மலையாளத்தில் என் பிரியத்திற்குரிய நண்பர் எம்.என்.காரச்சேரி (மொய்ஹுதீன் நடுக்கண்டியில் காரச்சேரி) தொடர்ச்சியாக வாஹீதுகான் உட்பட மிதவாத இஸ்லாமிய அறிஞர்களை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வருபவர். கேரளவரலாற்றிலேயே மொய்து மௌல்வி, சேகன்னூர் மௌல்வி போன்று முக்கியமான மிதவாத இஸ்லாமிய அறிஞர்கள் உண்டு.
நீங்கள் சொன்னபடி குர்–அளித்ததை நான் வரவேற்றது முக்கியமல்ல, அது அங்கு வந்திருந்த எவருக்கும் வியப்பளிக்கவில்லை என்பதையும், அனைவரிடமும் அதற்கு வரவேற்பே இருந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் எழுத்துக்களினூடாக நான் உருவாக்கி வரும் கருத்துவட்டம் அத்தகையது. இணையாகவே எங்கள் பயிலரங்குகளில் பைபிள் வகுப்புகளும் உண்டு. ஆனால் எந்த மதமானாலும் அதை அரசியலாக்கும் போக்கை ஊக்குவிப்பதில்லை. பிறமத கண்டனங்களை ஆதரிப்பதில்லை.
அந்நிலைபாட்டை வலுவாக எடுத்தமையால் விலகிச்சென்ற சில நல்ல நண்பர்களும் வாசகர்களும் உண்டு – குறிப்பாக மோடி பதவியேற்றபின் அவர்களின் மனநிலை மாறிவிட்டது. சிலர் கடும் கசப்பும் ஒவ்வாமையும் கொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் நட்பை ஓர் இழப்பாகவே நினைக்கிறேன். அவர்கள் என்னைவிட இளையவர்கள். ஒருவர் இருக்கும் வரை நீடிக்கும் கசப்புகள் அவர் மறைந்தபின் நீடிப்பதில்லை. ஓர் இந்துவாக நாம் மறைவதுடன் எல்லாம் முடிந்துவிடுவதில்லை என அறிந்தவன் நான். காத்திருக்கிறேன் என எனக்கே சொல்லிக்கொள்கிறேன்.
மதம் சார்ந்த இந்த அணுகுமுறையே எனக்கு இனம், சாதி, மொழி சார்ந்தும் உள்ளது. இனவாத தேசியவாத அணுகுமுறை, மொழிசார்ந்த அடிப்படைவாதம், சாதிக்காழ்ப்புகள் சார்ந்தும் இதே கடும் நிராகரிப்பு உள்ளது. ஆகவே இன்றைய இனவாத, மொழிவாத, சாதிவாத அரசியலை நிராகரிக்கிறேன். அவர்கள் நான் அவர்களின் இனம், மொழி, சாதியை நிராகரிப்பதாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களால் அப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதுதான் அரசியல்வெறி என்பது.
எண்ணிப்பாருங்கள், இன்று பிராமணர்களை வசைபாடுவதென்பது தமிழகத்தின் பொது அரசியல்போக்கு. ஐம்பதாண்டுகளில் அது அபத்தமான குறுகிய வெறியாக அன்றைய தலைமுறைக்குத் தோன்றும். நான் அன்றும் வாசிக்கப்படுவேன். இந்த அரசியல் கும்பலின் பெயர்கள்கூட அன்றிருக்காது. எழுத்தாளன் எழுதவேண்டியது சமகாலத்துக்கானவற்றை அல்ல, என்றுமுள்ளவற்றை. என் சொல்லில் பிராமணக் காழ்ப்பு அல்லது ஏதேனும் ஒரு மதம், இனம் பற்றிய வெறுப்பு அமையமுடியுமா என்ன? நான் பிராமணர்கள் மீதான காழ்ப்புக்கு எதிரனவன் என்றால் உடனே என்னை பிராமண அடிவருடி, வலதுசாரி என முத்திரைகுத்துகிறார்கள்.
முத்திரையடிப்பதென்பது இன்றல்ல என்றுமே அரசியலின் இயல்பு. அவர்கள் அறிந்ததெல்லாம் நாலைந்து அரசியல் தரப்புகள் மட்டுமே. தனக்கு ஆதரவுத் தரப்பு , எதிரித் தரப்பு என பிரித்துக் கொள்கிறார்கள். தன் எதிரியை அனைவருக்கும் பொதுவான எதிரியாகக் கட்டமைக்க முயல்கிறார்கள். நான் பிராமணர் மீதான காழ்ப்பை ஏற்கமாட்டேன் என்றால் உடனே அப்படியென்றால் நீ இஸ்லாமியருக்கு எதிரி என முத்திரையடிக்கிறார்கள். இந்தச்சிக்கலை இலக்கியவாதிகள் அனைவருமே சந்தித்தாகவேண்டும். பாரதி. புதுமைப்பித்தன் முதல் இன்றுவரை. தன் தரப்பை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும்.
அரசியல்வெறி இருவகையில் செயல்படுகிறது. ஒரு சாரார் அதை உருவாக்கி லாபம் அடைபவர்கள். அவர்களுக்கு எல்லாமே தெரியும். அது அவர்களின் அதிகார வஞ்சவிளையாட்டு. அவர்கள் மிகச்சிறுபான்மையினர். எஞ்சியோர் பெரும்கூட்டம். அவர்கள் அறிந்ததெல்லாம் அவர்களுக்குச் சொல்லப்படுவன மட்டுமே. அவர்கள் எதையும் தாங்களே தெரிந்துகொள்வதில்லை. தாங்களே சுயமாக யோசிப்பதுமில்லை. எளிய காழ்ப்புகள், கட்சிகட்டல்கள், திரும்பத் திரும்ப சில ஒற்றைவரிகள். அவ்வளவுதான் அவர்களின் உலகம்.
ஆனால் ஜனநாயகத்தில் அவர்களே பெரும்பான்மை. அவர்களே அதிகாரத்தை முடிவுசெய்பவர்கள். உண்மையில் அந்த பெரும்பான்மையினரே மெய்யான சமூகஆற்றல். அறிவியக்கத்தில் அவர்களுக்கு இடமே இல்லை. ஆனால் அவர்கள் அறிவியக்கம் மேல் செலுத்தும் அழுத்தம் மிக அதிகம். இந்தியா முழுக்க மத அடிப்படைவாதம் ஒரு ‘கண்காணிப்பு– அடக்குமுறை விசை’யாக மாறியுள்ளது. இஸ்லாம், இந்து இரு மதங்களிலும்.
ஆனால் நாம் கவனிக்காத ஒன்றுண்டு. மொழி அடிப்படைவாதம், வட்டார அடிப்படைவாதம் இரண்டுமே அதேயளவு ஒடுக்குமுறையைச் செலுத்துகின்றன. உதாரணமாக, வடகிழக்கில் மையநில இந்தி எழுத்தாளர்கள் மேல் ஒவ்வாமை உள்ளது. ஷில்லாங் இலக்கிய விழாவில் இந்தி எழுத்தாளர்களே இல்லை. இங்குள்ள பாமர அரசியல் சூழல் இங்குள்ள அறிவியக்கம் மேல் செலுத்தும் அடக்குமுறை இது. இதையே வட இந்திய சூழலில் காணலாம், அவர்கள் வடகிழக்கை ஒவ்வாமையுடனோ இளக்காரத்துடனோ அணுகுபவர்கள். வடக்கே இந்தி அல்லது சம்ஸ்கிருதத்திற்கு எதிராக ஒரு சொல் பேச அறிவுஜீவிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எதிர்ப்பு எழுவது அறிவியக்கத்தில் இருந்தல்ல, அறிவியக்க அறிமுகமே இல்லாத கும்பல்களிடமிருந்தும் அக்கும்பல்களை தூண்டிவிடும் அறிவுஜீவிகளிடமிருந்தும்.
அடிப்படைவாதம் ஓங்கும் சமூகங்களில் முதலில் அடிவிழுவது சுதந்திரசிந்தனை மீதும், புனைவிலக்கியம் மீதும்தான். அடிப்படைவாதம் முதலில் பிற தரப்புகளில் இருந்து தன்மேல் விவாதங்கள் வருவதை எதிர்த்து ஒடுக்கும். பின்னர் தன் தரப்பிலேயே மிதவாத சிந்தனைகளை ஒடுக்க ஆரம்பிக்கும். இறுதியில் தன் ஒற்றைக்குரலை மட்டுமே நிலைநிறுத்தும். அது மதம், மொழி, இனம் என்றெல்லாம் பேசினாலும் ஒற்றைக்குரலை அடைந்தபின் அது கையாள்வது பொருளியல் அதிகாரத்தை மட்டுமே. அதற்கு மதம், மொழி, இனம் எதுவும் ஒரு பொருட்டே அல்ல.
இச்சூழல் பல நாடுகளில் வலிமையுடன் உள்ளது. அண்மையில் யுவால் நோவா ஹராரி பற்றி பலர் தங்கள் ஏமாற்றங்களைப் பதிவுசெய்திருந்தனர். உலகமெங்கும் வாசிக்கப்பட்ட அந்த அறிவியல் எழுத்தாளர் இஸ்ரேலிய தேசியவெறிக்கு ஆதரவாக எழுதியிருந்தார். இஸ்ரேலிய – யூத சமூகத்தின் மனநிலையை, தேசியவெறியை அறிந்த எவரும் அவர் எழுதநேர்ந்தது என்றே சொல்லமுடியும். அது எவருக்கும் நிகழும் நிலைமைதான். உலகமெங்கும் அச்சூழலே உருவாகி வருகிறது.
அதன் மறுபக்கத்தை கவனிக்கவும். நான் ஹமாஸின் இஸ்லாமிய தீவிரவாதச் செயல்பாடுகள் மீதான கண்டனங்களை தெரிவித்தபின் வரலாற்றுரீதியாக இஸ்ரேல் ஓர் ஆக்ரமிப்பு சக்தியாகவும். பாலஸ்தீன விடுதலைப்போரில் கடுமையானா அடக்குமுறைச் சக்தியாகவும், எந்த ஒப்பந்தத்தையும் மதிக்காத தேசமாகவும் உள்ளது என்று சொன்னேன். அது வரலாற்றை அறிந்த நடுநிலையாளர் தரப்பு. ஆனால் மறுநிமிடமே அதை ஹமாஸ் ஆதரவு என திரித்துவிட்டார்கள். அப்படியே பரப்புவார்கள். இதுதான் அரசியல்வெறியின் முகம். இதேதான் திராவிட இயக்கம் சார்ந்தும் செய்கிறார்கள். (பாலஸ்தீன் வாழ்வுரிமை )
நான் முப்பதாண்டுகளாகவே சுதந்திரசிந்தனைக்கும், புனைவிலக்கியத்துக்கும் எதிராக அடிப்படைவாதம் உருவாக்கும் எந்த எதிர்ப்பையும் வெளிப்படையாகவே கண்டித்து நிலைகொண்டுவருகிறேன். எம்.எஃப்.ஹூஸெய்ன் அவரது ஓவியங்களுக்காக தாக்கப்பட்டபோதும் சரி, எம்.எம்.பஷீர் அவருடைய ராமாயண ஆராய்ச்சிக்காகத் தாக்கப்பட்டபோதும் சரி, பெருமாள் முருகன் தாக்கப்பட்டபோதும் சரி வன்மையாக கண்டித்திருக்கிறேன். என்றும் என் நிலைபாடு அதுவே. (எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம் , பஷீரும் ராமாயணமும்)
அரசியல்வெறி மெய்யியல் சார்ந்த உண்மைகளை மறைக்கும். கூடவே சமூகவாழ்க்கையையே சீரழிக்கும்.எழுத்தாளனும் மெய்யியலாளனும் அதற்கு வெளியேதான் நின்றாகவேண்டும். அவன் சொல்லும் அரசியல் கருத்துக்கள்கூட இரு வகையிலேயே அமையவேண்டும். எளிய பொதுமக்களில் ஒருவனாக நின்று அவன் பேசலாம். அல்லது சிந்தனையாளராக, கலைஞனாக நின்று பேசலாம். அரசியல் தரப்பின் குரலாக ஒருபோதும் ஒலிக்கலாகாது. ஒலித்தால் அவன் தன் ஆழத்தின் குரலை இழந்தவனாவான்.
மிதவாத இஸ்லாம் பற்றி தொடர்ந்து பேசிவந்தவர் என் நண்பர் சதக்கத்துல்லா ஹசநீ. மௌலானா வாஹீது கான் கட்டுரையை சொல்புதிதில் வெளியிட்டவரும் அவர்தான். அவர் அன்று தினமணி நாளிதழில் நிறைய எழுதி வந்தார். ஆனால் அன்று உருவாகி வந்த இஸ்லாமிய மதவாதம் காரணமாக அவருக்கு மிரட்டல்கள் எழுந்தன. அவர் முற்றாகவே ஒதுங்கிவிட்டார். உங்கள் வழியாக வாஹீதுகான் தமிழில் மீண்டும் தோன்றியிருப்பது மகிழ்வளிக்கிறது.
என்னை வலதுசாரி– மதவாதி என்றெல்லாம் சொல்லும் பொதுப்புத்தியாளர்களிடம் இன்னொரு கோணத்திலும் பேச விரும்புகிறேன். 2014 வாக்கில் என் நண்பர் எழுத்துப் பிரசுரம் வெ.அலெக்ஸ் என் இன்னொரு நண்பருடன் ஓர் மலைத்தங்குமிடத்தில் விவாதத்தில் ஈடுபட்டார். இன்று மிக விலகிச்சென்றுவிட்ட அந்நண்பர் ஓர் இந்துத்துவர், பிராமணச் சாதிப்பார்வை கொண்டவர், ஆனால் அறிஞர், இலக்கிய ரசனை கொண்டவர். விவாதத்தில் வெ.அலெக்ஸ் தன் தலித் தரப்பை முன்வைத்துப் பேச அந்நண்பர் கொஞ்சம் அத்துமீறியே தன் மறுப்பை தெரிவித்தார்.
நான் தனியுரையாடலில் அந்நண்பர் பேசிய சில சொற்களுக்காக அலெக்ஸிடம் மன்னிப்பு கோரினேன். அவரிடம் மேற்கொண்டு பேசவேண்டாம் என்றேன். அலெக்ஸ் சொன்ன பதில் என்னை வியக்கச் செய்தது. “நான் பேசவேண்டியது அவரிடம்தானே ஒழிய உங்களிடம் அல்ல. ஒரு ஐந்து நாள் பேச்சில் அவரிடம் என் தரப்பில் பத்து சதவீதத்தை அவர் ஏற்றுக்கொள்ள வைத்தால்கூட அது என் வெற்றிதான். தலித் செயல்பாட்டாளனாக என் பணியே அதுதான். எந்த அளவுக்கு ஆதரவு அமைகிறதோ அந்த அளவுக்கு என் பணி முன்னேறுகிறது. எனக்கு எவரும் எதிரிகளல்ல, எதிர்த்தரப்புதான். நான் எவரையும் எதிர்த்து வெல்லமுடியாது. ஜனநாயகத்தில் ஆதரவுகளை ஈட்டுவதே வெற்றி”
இஸ்லாமியர் இன்று எவரெவரோ சுட்டிக்காட்டும் எதிரிகளை தங்கள் எதிரிகளாகக் கொண்டு காழ்ப்பும் ஒவ்வாமையும் விலக்கமும் கொள்வதை விட்டுவிட்டு ஏன் மேலும் மேலும் நண்பர்களை ஈட்டக்கூடாது? ஏன் பொதுச்சமூகத்தின் பிரிக்கமுடியாத உறுப்பாக ஆகக்கூடாது? அது ஒன்றே வெல்லும் வழி. அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன்.
இன்று சமூகவலைத்தளங்களில் திரும்பத் திரும்ப எல்லா இடங்களிலும் சென்று மாற்றுத்தரப்பினர் என தாங்கள் கருதும் அனைவர் மீதும் கடும் காழ்ப்பை உமிழும் ஒரு சிறு கும்பல் உள்ளது. அவர்களே உண்மையில் இஸ்லாமியச் சமூகத்தின் எதிரிகள். ஓர் இஸ்லாமிய மேடைக்கு வந்து இந்துதெய்வங்களையோ இந்து மரபையோ இகழும் ஒருவர் மறைமுகமாக பாரதியஜனதாக் கட்சியின் செயல்திட்டத்தை நிறைவேற்றுபவர். இந்தப்புரிதலாவது இஸ்லாமியர்கைடம் வேண்டும்.
கேரளத்தில் சென்ற 40 ஆண்டுகளில் என் நட்புக்குழுவில் எந்த சந்திப்பிலும் பல இஸ்லாமியர்கள் இல்லாமலிருந்ததே இல்லை. நக்கல் நையாண்டி எல்லாம் இருக்கும். தமிழகத்தில் எத்தனை நட்புக்குழுமங்களில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என நாமே கணக்கிட்டுக்கொள்ளலாம். இஸ்லாமியர்களின் இலக்கியக்கூட்டம் என ஏன் எவையும் நிகழ்வதில்லை? அவ்வாறு நிகழ்ந்தால்கூட ஏன் பிறர் அதில் இயல்பாக கலந்துகொள்வதில்லை?
ஓர் இஸ்லாமியர் ஏன் இலக்கியம், தத்துவம் எல்லாவற்றிலும் இஸ்லாமியப் பார்வையை மட்டுமே முன்வைக்கவேண்டும்? இலக்கியத்தில் வெவ்வேறு அழகியல்நோக்குகள் உள்ளன. தத்துவத்தில் எத்தனையோ தரப்புகள் உள்ளன. ஏன் அவற்றை எல்லாம் பெரும்பாலானவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அந்த மனநிலையை மறுபரிசீலனை செய்தேயாகவேண்டும்.
ஓர் இஸ்லாமிய எழுத்தாளரின் ஒரு நாவல் அழகியல்குறைபாடு உடையது என நான் சொல்கிறேன் என்று கொள்ளுங்கள். நான் அழகியல் விமர்சகன், நாற்பதாண்டுகளாக என் பார்வை எல்லா இடங்களிலும் அதுவே. அந்த இஸ்லாமிய எழுத்தாளர் உடனே என்னை இஸ்லாமிய வெறுப்பாளர், இந்துத்துவர் என்பார் என்றால் அதன் விளைவு என்ன? அவரை நாலைந்து அரசியலசில்லுண்டிகள் சென்று தூண்டிவிடுகிறார்கள் என்றால் அவர்கள் செய்வதென்ன? இஸ்லாமியர் எல்லா இடங்களிலும் விவாதங்களில் இருந்து வெளியே தள்ளப்படுவதுதானே?
ஓர் இஸ்லாமியர் எழுத்தாளர் என்றால் அவர் எழுத்தாளர்தான், தத்துவவாதி என்றால் தத்துவவாதிதான். எங்கும் எப்போதும் அவர் ‘இஸ்லாமியச் சகோதரர்’ அல்ல. அந்தவகையான விலக்கம் கொண்ட ‘அணைக்கும் பார்வை’யை நான் ஏற்பதே இல்லை. தலித்தோ பிராமணரோ கூட அப்படித்தான் பார்க்கப்படவேண்டும். அது அவர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கலாம், அவரே அப்படிச் சொல்லிக்கொள்ளலாம், அப்படி எப்போதும் பார்க்கவேண்டியதில்லை. அது விலக்கிவைக்கும் பார்வை, அதுவே ஓர் அடக்குமுறையும்கூட.
என் நீண்டகால நண்பர் குளச்சல் யூசுப் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது அவருக்கு ஒரு பாராட்டுவிழாவை என் செலவில் நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் நாகர்கோயிலில் ஒருங்கிணைத்தோம். ஓர் இஸ்லாமியர்கூட கலந்துகொள்ளவில்லை. சிலநாட்கள் கழித்து ஓர் இஸ்லாமிய அமைப்பு அவருக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தியது. அதில் இஸ்லாமியர் கலந்துகொண்டனர். யூசுப் விஷ்ணுபுரம் விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டபோது கடும் எதிர்ப்பு சிலரிடம், சிலருக்கு ஆச்சரியம். அவர் என் முப்பதாண்டுக்கால நண்பர், அவர் மொழியாக்கத்துறைக்கு வந்தமைக்கு நானும் ஒரு காரணம், அதை அவரே சொன்னாலும் அதே எதிர்ப்பும் வியப்பும் நீடித்தது.
சில காலம் முன்பு இஸ்லாமியர் திருமணங்களில் இந்துக்களை விலக்கும்போக்கு உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். அதிலிருந்ததும் இதே ஆதங்கம்தான். அந்த விலக்கம் நிகழலாகாது என்னும் பதற்றமும்தான். அதை ‘இஸ்லாமியர் மீது ஜெயமோகனின் அவதூறு’ என திரித்துப் பரப்பியது ஒரு கூட்டம். வெறும் சில்லறை எழுத்தாளர்கள், அரசியல் காழ்ப்பாளர்கள் செய்த பிரச்சாரம் அது. உண்மையி, அவர்களைப்போல சொந்தக்காழ்ப்புகளுக்கு இஸ்லாமியரை பயன்படுத்திக்கொள்ளும் அயோக்கியர்கள் எவர்? இஸ்லாமியச் சமூகம் அதைப்புரிந்துகொள்ள வேண்டாமா என்ன?
இந்த விலக்கம் வழியாக அடைவது நீண்டகால அரசியல்தோல்வியை. இதை உருவாக்கும் தீவிரத்தரப்புகள் தொடர் அரசியல் –சமூகவியல் அழிவுகளை மட்டுமே இஸ்லாமியச் சமூகத்துக்கு உருவாக்கியுள்ளனர்.
விஷ்ணுபுரம் விழாவில் இஸ்லாமியநூல்களுக்கான கடை என்பது ஒரு நல்லெண்ணச் சலுகை அல்ல. அது இயல்பாக, சாதாரணமாக நிகழவேண்டிய ஒன்று. கேரள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தில் குமரிமாவட்டம், தமிழ் இஸ்லாம் பற்றிய ஏராளமான கட்டுரைகள் நான் எழுதியவை. என்னைப்போல பல இந்துக்கள் அதில் எழுதியிருக்கின்றனர். இதெல்லாம் ஓர் அபூர்வ நிகழ்வாக இருக்கலாகாது. அதுவே அன்றாடமென, எவரும் தனியாக கவனிக்காததாக ஆகுமென்றால்தான் நாம் ஒரு சமூகமாக வெல்கிறோம்.
ஜெ