லூப்- ஒரு காணொளி

நண்பர் காளிப்பிரசாத் இந்த காணொளியை அனுப்பியிருந்தார். ‘இன்னொரு லூப் கேஸ்’ என்னும் குறிப்புடன். கோவிட் காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளில் ஒன்று லூப். என் பிஎஸ்என்எல் கால வாழ்க்கையைப் பற்றிய கதைகளில் ஒன்று. அவை ‘வான்நெசவு’ என்னும் நூலாக வெளிவந்து இரண்டாவது பதிப்பை அடைந்துள்ளன.

எனக்கு பலவகையிலும் பிரியமான கதைகள் வான்நெசவு நூலில் உள்ளன. ஏன் நான் தொலைத்தொடர்புத் துறையில் இருந்தபோது அக்கதைகளை எழுதவில்லை என எனக்கே நான் கேட்டுக்கொள்வதுண்டு.  அப்போது அவை எனக்கு அன்றாட வாழ்க்கை. அந்த யதார்த்தத்தில் எனக்கு கற்பனைசெய்ய, கண்டடைய ஏதுமிருக்கவில்லை. எனக்கு யதார்த்தங்களை ‘அப்படியே’ எழுதுவதில் ஆர்வமில்லை. அது இலக்கியமும் அல்ல.

ஆனால், நான் வெளியே வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தபின் மெல்ல மெல்ல என் நினைவுகள் உருமாறலாயின. அன்றாடத்தில் மிக முக்கியமானவையாக இருந்த பல நினைவுகள் நிறமிழந்து பின்னகர்ந்தன. எளிய தகவல்கள் மறந்தேபோயின. ஆனால் மிகச்சிறியவையாக, நிகழ்ந்தபோது ஓரிரு நாட்களுக்குமேல் பொருட்படுத்தப்படாதவையாக இருந்த பல செய்திகள் மேலெழுந்து வந்தன. அவை ஏன் அந்த அழுத்தத்தைப் பெற்றிருக்கின்றன என் அகத்தில் என யோசித்தேன். அவையெல்லாம் மேலதிகமாக ஒரு குறியீட்டுத்தன்மை கொண்டிருந்தன. வேறெதையோ சுட்டுவனவாக ஆயின. ஆகவே அவை ஒளிகொண்டபடியே வந்தன.அவையே இலக்கியத்திற்குரிய கருப்பொருட்கள்.

அவை மட்டுமே எழுதப்பட்டன. அவற்றிலொன்று இந்தக் கதை. லூப் கதையின் மலைப்பாம்பு ஒரு வேடிக்கைநிகழ்வு மட்டுமல்ல, அது ஒரு படிமம். வாழ்க்கையின் மிகமிக அடிப்படையான ஒன்றின் கவித்துவமான அடையாளம். வான்நெசவு  தொகுதியின் எல்லா கதைகளும் அத்தகையவையே. அவை தொலைதொடர்பு வாழ்க்கையைப் பற்றியவை, ஆனால் தொலைதொடர்புத்துறையை மட்டும் பேசுபவை அல்ல.அக்களம் இலக்கியத்திற்கான வாழ்க்கைச்செய்திகளையும் படிமங்களையும் அளிக்கும் விளைநிலம் மட்டுமே.

லூப் கதையின் அந்தப் பாம்பின் பல தலைமுறைகள் இன்று கடந்திருக்கும். அந்த வாரிசுகளில் அந்த மின்னூட்டத்தின் நினைவு எஞ்சியிருக்குமா என்ன? இன்னொரு கதை எழுதித்தான் கண்டடையவேண்டும்

 வான்நெசவு மின்னூல் வாங்க

வான்நெசவு வாங்க

முந்தைய கட்டுரைகண்களைக் கண்டடைதல், கடிதம்
அடுத்த கட்டுரைராஜேஷ்குமார்