ALTA விருது வியட்நாம் நாவலுக்கு…

நேற்று (11 நவம்பர் 2023)ல் நடைபெற்ற அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க மாநாட்டில் சர்வதேச இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. வியட்நாம் நாவல் Chinatown-Thuân பரிசு பெற்றது.அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True இறுதிப்பட்டியலில் ஆறு நூல்களிலொன்றாக இருந்தது. 

நண்பர்கள் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது என தெரியும். எனக்கு நிலவரம் இன்னும் தெரியுமென்பதனால் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. தமிழ்ப்படைப்பு ஒன்று அந்த எல்லைக்குச் சென்று அவ்வாறு ஒரு மேடையில் முன்வைக்கப்படுவதே ஒரு பெரிய தொடக்கம். அவர்களின் இலக்கியப்புரிதலில் இந்திய  மொழி இலக்கியத்துக்கு ஒரு சதவீத இடம்கூட இல்லை. எந்த இந்திய எழுத்தாளரும் அங்கு சென்று சேர்ந்ததில்லை- தாகூருக்குப் பின். தமிழிலக்கியம் அதிலும் ஒரு மீச்சிறு துளி. தமிழ் நவீன இலக்கியத்துக்கு இந்தியச் சூழலிலேயே இப்போதுதான் இடம் உருவாகி வருகிறது.நம்மை அவர்கள் கவனித்ததே ஆச்சரியம்.

ஒரு மொழியின் இலக்கியம் ஏற்பு பெறுவது தன்னிச்சையான செயல் அல்ல. அம்மொழி நிகழும்  பண்பாடு முன்னரே அவர்களுக்குச் சற்றேனும் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் படைப்புகளை முழுமையாக உள்வாங்க முடியும். உலக அளவில் கவனிக்கப்படும் ஜப்பானிய, துருக்கியப் படைப்புகள் எல்லாம் அந்தந்த ஊர் அரசுகளாலும் கல்விநிறுவனங்களாலும் முன்வைக்கப்படுபவை. அப்பண்பாடுகள் அங்கே அறிமுகமானவை. வியட்நாம் போருக்குப்பின் வியட்நாம் அமெரிக்காவில் நன்றாக அறியப்பட்ட நாடு. இலங்கை, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம் போன்ற நாடுகள்கூட தங்கள் நவீன இலக்கியப் பரப்பை இன்று தொடர்ச்சியாக முன்வைக்கின்றன.

நான் பலமுறை சொன்னதுபோல சரியான மொழியாக்கங்கள் வழியாக பல படைப்புகள் அச்சில் கிடைத்து, பல வகையான வாசிப்புகள் நிகழ்ந்தாலொழிய நம் பண்பாடு அறிமுகமாக முடியாது. அதற்கு நம் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சதவீதம்பேரேனும் தமிழ் மொழியாக்க நூல்களை வாங்கவேண்டும். எதிர்காலத்தில் அது நிகழலாம்

நம் அரசுகள் நம்மை முன்வைக்க வாய்ப்பில்லை. நம் அரசியல் சூழல் நவீன இலக்கியத்திற்கு எதிரானது. அரசியலை மட்டுமே முன்வைப்பது. இங்கே புதுமைப்பித்தனே இன்னும் ஏற்கப்படவில்லை. நம் வாசகச்சூழலும் முக்கால்வாசி அப்படித்தான். நமக்கு இங்கேயே வாசகர்கள் மிகக்குறைவு. வாசித்தாலும் புரிந்துகொள்பவர்கள் குறைவு. அறியாமலேயே தாழ்வுணர்ச்சியால் இங்கு இலக்கியமே இல்லை என்று பேசும் எளிய உள்ளங்களும் உண்டு.

இச்சூழலில் இந்நூல் அங்குவரை சென்றதே சாதனை என நினைக்கிறேன். வரும் காலங்களில் மேலும் முன்னகர்வுகள் நிகழும், அதற்கான களம் அமைந்து வருகிறது. நான் எப்போதுமே என்னை மட்டும் கொண்டு செல்பவன் அல்ல. என் மொழிச்சூழலையே கொண்டுசெல்ல முயல்பவன். எல்லா மேடைகளிலும்.

இந்த விழாவில் பிரியம்வதா கலந்துகொண்டதும் நன்று. அங்கே Stories of the True நூலின் மிகச்சிறந்த வாசகர்களைச் சந்திக்க முடிந்தது.அந்த அரங்கிலேயே நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலக்கிய முகவர்கள் உட்பட பலரின் கவனமும் உருவானது. நன்றே தொடர்க

முந்தைய கட்டுரைஇலக்கிய ஆவணப்பட விழா
அடுத்த கட்டுரைஅறியப்படாத தத்துவசிந்தனையாளர் – கடிதம்