புதுமைப்பித்தன், மொழி, சிக்கல்கள்

புதுமைப்பித்தனின் சிடுக்குகள்

இனிய ஜெயம்

தீபாவளி அன்றும் கூட இலக்கிய அடிதடி. என்னே ஒரு இனிய வாழ்வு :). நான் எப்போதும் தொலைபேசியை அணைப்பதில்லை. எந்த அழைப்பையும் தவிற்பதில்லை. கடுஞ்சொல் எதுவும் பேசுவதில்லை. விளைவு? மதுரை புத்தக சந்தை நாளின் போது ஒரு அழைப்பு. மிகுந்த உற்சாகத்துடன் ஒரு குரல்ஜெயமோகன் சார் புக் ஃபேருக்கு வருவாராஎன்று வினவியது. “இல்லிங்க, சார் அமெரிக்கால இருக்கார்என்று நான் சொன்னதும், “சரிஎன்று சோகத்துடன் பதிலிருத்து தொடர்பை துண்டிந்தது. இந்த உரையாடல் நிகழ்ந்தது அதிகாலை 3 மணிக்கு.

இன்று தீபாவளி. மதிய உணவாக குலோப் ஜாமூன் கேசரி. (கால் தவறி குலோப் ஜாமூன் நிறைத்து வைத்திருந்த பேசனில் அது மேலேயே அமர்ந்துவிட்டேன்.என் சிறுபுட்டம் அளாவிய அந்த இன்கூழை எனை ஈன்ற அன்னையும் கூட விரும்பவில்லைஆகவே அது முழுவதையும் கேசரி கிண்டி எனக்கே தந்து விட்டார்கள்) வழித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கையில் ஒரு அழைப்பு.

சீர் வட்டம் வெளியிட்ட புதுமைப்பித்தன் மலிவு பதிப்பு சார்ந்து, நீங்கள் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னா, இவை நான்குடன் கூடிய வன்மத்துடன் செயல்பட்டு  அதில் உள்ள பிழைகளை சுட்டி ஒரு மாபெரும் தியாக செயல் ஒன்றை கொச்சைப் படுத்திவிட்டீர்கள் என்றும் தான் மானாவாரியாக மன வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். கஷ்டம்தான். அவர் ஏதோ பேசிக்கொண்டே இருக்க, சார் கிட்ட சொல்லிடுறேன் என்று ஈனஸ்வரத்தில் முனகி விட்டு தொடர்பை துண்டித்தேன்.

அவர்கள் பக்கமும் ஒரு நியாயம் இருக்கிறது. 100 ரூபாய்க்கு முழு கதைகள்  தருவதே பெரிது அது பிழை அற்ற பிரதியாகவும் இருக்க வேண்டும் என்பது என்ன ஒரு அநியாயம். மேலும் அவர்கள் அதை எங்கிருந்து எடுத்தார்களோ அதில் ஒரு புள்ளி கூட திருத்தம் செய்யாமல் ( எங்கிருந்து எடுத்தோமா அதற்கு சிறு நன்றி கூட தெரிவிக்காமல்) அதை அப்படியே பதிப்பித்த உயர் குணத்தை பாராட்டத்தானே வேண்டும்

அவர்கள் அதை எடுத்தது புதுமைப்பித்தன் பதிப்பகம் வழியே வேத சகாய குமார் அவர்கள் பதிப்பித்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு செம்பதிப்பு நூலில் இருந்து. (உள்ளே முன்னுரையில் அதை செம்பதிப்பு என்றே தொகுப்பாசிரியர் வேத சகாய குமார் குறிப்பிடுகிறார்). எனவே அதிலுள்ள பிழைகள் இதிலும் அவ்விதமே தொடர்கிறது.

அதற்காக வேத சகாய குமார் அவர்களின் பதிப்பையும் குற்றம் சொல்ல கூடாது, அவர் அவற்றை எடுத்தது அதற்கும் முன்பான ஆ.இரா. வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழு தொகுப்பு நூலில் இருந்து. ஆகவே அதில் உள்ள பிழைகள் இதிலும் தொடர்கிறது. அதற்காக அந்த தொகுப்பையும் குற்றம் சொல்ல முடியாது. அவர் எங்கிருந்தெல்லாம் புதுமை பித்தன் கதைகளை சேகரித்தாரோ, அந்த தொகுப்புகளில் ஒன்றை ஜெயகாந்தன் மெய்ப்பு நோக்கியதாகஎதிலோவாசித்திருக்கிறேன்.

ஆக,இது எல்லாம் இவ்வாறிருக்க, சென்ற யானையை விட்டு விட்டு சிக்கிய எலியை போட்டு சாத்திவிட்டீர்கள் என்பதே இதன் கண் அறியவரும் உண்மையாகும் :).

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

இணைப்புடன் அனுப்பப்பட்டிருந்த காலச்சுவடு பதிப்பைப் பார்த்தேன். இந்தப்பிழைகள் எல்லாமே அதிலும் உள்ளன. அதிலிருந்து அப்படியே திருப்பி நகல் செய்துள்ளனர்.  

புதுமைப்பித்தன் கதைகளை பல்லாயிரம் பேருக்கு குறைந்த விலையில் கொண்டுசென்று சேர்த்தது மிகப்பெரிய இலக்கியப் பணி. அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். நான் ஒரு பிழை செய்துவிட்டேன். நற்றிணை வெளியிட்ட புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு என்னிடம் ஓராண்டாகவே உள்ளது. இந்த நூலை அண்மையில்தான் பார்த்தேன். ஆகவே நற்றிணை முன்னர் வெளியிட்டதாக எண்ணினேன். அந்தப்பிழை சுட்டிக்காட்டப்பட்டது, திருத்திவிட்டேன். அதில் அவர்களுக்கு வருத்தம் என அறிந்தேன், மன்னிப்பு கேட்கிறேன். 

இந்த தொகுதியை என் இன்றைய மனநிலையில் கூர்ந்து வாசித்தேன். இந்தப் பிழைகள் கண்ணுக்குப் பட்டன. ஆகவே எழுதினேன். இவர்கள் பெரிய அளவில் வெளியிட்டமையால் பிழைநோக்கியிருப்பார்கள் என நான் நினைத்தேன்.  இவர்களும் முன்னர் வெளியிட்டவர்களும் ஆ.இரா.வேங்கடாசலபதி செம்பதிப்பை நம்பியிருக்கிறார்கள். நானும்தான் அவரை நம்பினேன். இப்பிழைகள் அதில் இருக்குமென நினைக்கவில்லை. வருத்தம்தான்.

இவர்கள் மேல் பிழை ஏதுமில்லை. நல்லநோக்கத்தில் செய்த பெருமுயற்சி. பொதுவாக இன்றைய தமிழ்ப்பதிப்புச் சூழலில் பிழைநோக்க பணம் செலவுசெய்ய முடியாது. நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல இன்றைய தமிழ்ச்சூழலில் நூல்களின் விலை என்பது அனேகமாகக் காகித விலை மட்டுமே. உள்ளடக்கம் முற்றிலும் இலவசம். பெரும்பாலான நூல்களில் தட்டச்சு, பிழைநோக்கு இரண்டுமே ஆசிரியரால் செய்யப்படுகின்றனஇலவசமாக. இச்சூழலில் முன்பு வந்த பதிப்புகள் பிழைநோக்கப்பட்டிருக்குமெனில் அவற்றை அப்படியே பதிப்பிப்பதே பின்னர் வந்த பதிப்புகளில் செய்யப்படும். மீண்டும் மீண்டும் பிழைநோக்க முடியாது.

என் படைப்புகளைப் பொறுத்தவரை அவை வெளியாவதற்கு முன்பு நான் ஒருமுறை பிழைநோக்குவேன். ஆனால் மீண்டும் மீண்டும் பிழைநோக்க என்னால் இயலாது. அது ஒரு இயந்திரத்தனமான வேலை. நம் மொழியை நாமே திரும்பத் திரும்பப் பார்ப்பது நமக்கே சலிப்பை அளிக்கும். இலக்கியவாதி ஒருபோதும் மொழியை சற்றும் படைப்பூக்கமனநிலை இல்லாமல் கையாளக்கூடாது.

என் படைப்புகள் அச்சாகும்போது பதிப்பகத்தாரின் வழக்கமான பிழைநோக்கிகள் பல மாறுதல்களை செய்து, என் கவனத்துக்கு வராமலேயே போயிருக்கிறது. அச்சாகி வந்த பின்னரும் என் படைப்புகளை நான் வாசிப்பதில்லை என்பதனால் அவை பல பதிப்புகள் சென்றுள்ளன. இன்னொரு பதிப்பகம் மாறும்போதுதான் புதிய பதிப்பாளர் சிலசமயம் அப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவார். விஷ்ணுபுரம் நாவலில் அப்படி பல பிழைகள். அவை பிழைகள் அல்ல, ஒரு தமிழாசிரியர் என் மொழியை தானறிந்தபடி தன்னம்பிக்கையுடன் மாற்றியிருந்தார்.

எனக்கு அந்த தமிழாசிரியத்தனம் மீது கசப்பு உண்டு. அவர்களிடமிருப்பது ஒரு உயிரற்ற கடந்தகால மொழி. அது இலக்கணவிதிகளாலும் கடந்தகால முன்னுதாரணங்களாலும் ஆனது. இலக்கிய மொழி எப்போதும் புதியதாகவே வெளிப்படும். விதிகளை மீறும், இலக்கணங்களையும் மீறும். இப்போதல்ல, இளங்கோ மற்றும் கம்பன் காலம் முதல் இது நிகழ்ந்துள்ளது. அன்றும் ஒட்டக்கூத்தர்கள் இருந்தனர்.

படைப்பியக்கத்தின் புதுமையை இலக்கணவாதியின்  இரும்பாலான அளவுகோல் சந்திப்பதன் விளைவுகள் அபத்தமானவை. பெரும்பாலும் புதியன நிகழுமிடங்களை எல்லாம் பழையனவாக மாற்றுவதாகவே அது எஞ்சும். அவர்களால் மொழியில் வெளிப்படும் நுட்பங்களைப் புரிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் அவை வாழ்க்கை நுட்பங்கள், பார்வை நுட்பங்கள்.

அரைப்புள்ளி கால்புள்ளிகள் போடுவதில்தான் பெரும்பாலும் இந்த இலக்கண வன்முறை நிகழ்கிறது. என் வெள்ளையானை நாவலின் முதற்பதிப்பிலேயே ஒரு தமிழாசிரியர் நிகழ்த்திய வன்முறைத்தாண்டவம் உண்டு. ஆங்கிலத்தில் அரைப்புள்ளி கால்புள்ளிகளுக்கு ஒரு மரபான இலக்கணம் உண்டு. ஆனால் அவற்றை மீறுவதும் முற்றிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழில் நமக்கு உரைநடையே பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. ஆங்கிலத்தை முன்னுதாரணமாகக் கொண்டது. அரைப்புள்ளி கால்புள்ளிகளும் அவ்வாறே ஆங்கிலத்தை முன்னுதாரணமாகக் கொண்டவை, ஆனால் ஆங்கிலத்திலுள்ள சொற்றொடரமைப்பு நமக்கு இல்லை. இந்த சிக்கலை நம் மொழியியலாளர் புரிந்துகொள்ளவில்லை.

அரைப்புள்ளி கால்புள்ளிகளை  போடுவதில் செவிதான் அளவுகோல். உதாரணமாக, இந்த வரியிலேயேஅரைப்புள்ளி, கால்புள்ளிகள்என கால்புள்ளியை நடுவே போடவே இலக்கணம் சொல்லும். (காற்புள்ளி என்பதே இலக்கணம். ஆனால் சொற்புணர்ச்சிக்கெல்லாம் எழுத்தை மாற்றிக்கொண்டிருந்தால் நாம் சொற்களைப் பெருக்கிக்கொண்டு சிக்கலான மொழியை அடைகிறோம்) ஆனால் இங்கே அரைப்புள்ளி, கால்புள்ளி என ஒரு பட்டியல் இடப்படவில்லை. அரைப்புள்ளி கால்புள்ளிகள் என வேகமான ஒரு சொல்லோட்டமே உள்ளது. ஆகவே நடுவே கால்புள்ளி தேவையில்லை.

கூடுமானவரை நவீன இலக்கிய மொழியில் அரைப்புள்ளி, கால்புள்ளி ஆகியவற்றைப் போடலாகாது. போடாவிட்டால் பொருட்சிக்கல் வருமெனத் தோன்றினால் மட்டுமே போட்டால் போதும். நான் அரைப்புள்ளியை இரு அரைச்சொற்றொடர்களை இணைப்பதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறேன்.  வாசகர்கள் வாசிக்கும்போதே அந்த சொல்லடைவெளிகள்,  மௌனங்கள்உருவாகி வந்துவிடும். இலக்கியநடை என்பது செய்தி நடையோ அறிவிப்பு நடையோ அல்ல. அது புறவயமானது அல்ல, எப்போதுமே வாசகனால் உருவாக்கப்படுவது, அவன் அகத்தில் உருத்திரள்வது. 

என் படைப்புகளில் நீங்களே அரைப்புள்ளி கால்புள்ளிகளைப் போடாதீர் என நான்  மன்றாடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பிழைநோக்குபவர்கள் அள்ளிப்போட்டுவிடுவார்கள். என் இணையக்கட்டுரைகளிலேயே அவ்வகையில் நிறைய நான் ஏற்காத திருத்தங்களை காண்கிறேன். என் நூற்றுக்கணக்கான நூல்களின் மறுபதிப்புகளை எல்லாம் பிழைநோக்கிக்கொண்டிருந்தால் நான் எஞ்சிய வாழ்நாளை அதற்கே செலவிட வேண்டும்.

இன்னொரு பக்கம் இலக்கணவாதிகளின் நச்சரிப்பு. புத்தகக் கண்காட்சியில் ஒருவர் என் நூல்களில்ஏராளமானபிழைகள் உள்ளன என்று சொல்லி திருத்தம்போட்டு கொண்டுவந்து காட்டினார். சகட்டுமேனிக்கு அரைப்புள்ளி கால்புள்ளி போட்டிருந்தார். ஒற்றுகளை அள்ளிக்குவித்திருந்தார். மொத்த அர்த்தமே மாறிவிடுமளவுக்கு. அவை பிழைகள் அல்ல, என் நோக்கம் இது என விளக்கினேன். பாதி விளக்கத்திலேயே கிளம்பிச் சென்றுவிட்டார். 

இதைப்போன்ற இன்னொரு சிக்கல் ஒற்று. இயந்திரத்தனமாக வல்லினம் புணரும் இடத்திலெல்லாம் ஒற்று போடவேண்டியதில்லை. அது செய்யுளுக்கான இலக்கணம். உரைநடைக்கு தேவையில்லை. (உதா: இங்கே ஒற்று தேவையில்லை) சொல்லிப்பார்த்து அங்கே மொழியில் அழுத்தம் விழுமென்றால் ஒற்று சேர்க்கலாம். (உதா:சொல்லிப்பார்த்து எனும் சொல்லிணைவில் ஒற்று தேவை) கூடுமானவரை ஒற்று தவிர்க்கப்படுவதே நல்லது. 

அதேபோல சொற்களைப் பிரிப்பது. அதற்கு நமக்கு இலக்கணமே இல்லை. சம்ஸ்கிருதம், தமிழ் போன்ற கீழைமொழிகளில் ஒரு சொற்றொடர் என்பது சொற்கள் இணைந்து ஒரே சொல்லென ஆவதுதான். அதற்கே இலக்கணம் உள்ளது என்று உணர்க. (அதற்கேயிலக்கணமுள்ளதென்றுணர்க). சொற்பிரிப்பை நாம் இருநூறாண்டுகளுக்கு முன் ஆங்கிலத்திலிருந்து நகலெடுக்கலானோம். அச்சுத்தேவைக்காக. பண்டைநூல்களை எல்லாம் அசை பிரித்து எழுதிக்கொண்டோம்.

சொற்களை பிரிக்காமல் நவீன உரைநடை இல்லை. எங்கே சொல் பிரியவேண்டும், எங்கே ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையும் ஆசிரியனே சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். முடிவெடுக்கவேண்டும் என்பதே நாம் சொல்லும் முறை. முடிவெடுக்க வேண்டும் என எழுதலாம்.

ஏனென்றால் எதிர்கால உரைநடை இயந்திரங்களால் வாசிக்கப்படும்போது அவை சொற்களையே புரிந்துகொள்ளும். ஒற்று போடப்பட்ட சொல்லை இன்னொரு சொல்லாக அது வாசிக்கலாம். இணைக்கப்பட்ட சொல்லை இன்னொரு புதுச்சொல்லாக அது எடுத்துக்கொள்ளலாம். தமிழ் நவீனமயமானது பல மொழிச்சீர்திருத்தங்கள் வழியாகத்தானே ஒழிய பழைய இலக்கணத்தை அள்ளிப்பற்றிக்கொண்டதனால் அல்ல. பல இந்திய மொழிகள், உதாரணமாக மலையாளம் இன்னும் தமிழின் நவீனத்தன்மையை அடையவில்லை.

ஆகவே சொற்பிரிவினை இன்றியமையாதது. இன்றைய வாசகனுக்கு அதை சேர்த்து  வாசித்துக்கொள்ள முடியும்.   (வாசித்துக்கொள்ளத்தானே ஒழிய வாசித்துக் கொள்ள அல்ல).

நவீன உரைநடை என்பது மாறத இயந்திரத்தனம் கொண்ட இயக்கம் அல்ல. அது நாமொழியை நுணுக்கமாகப் பின்தொடர்கிறது. பேச்சுமொழிக்கு அணுக்கமான ஒரு சீர்மொழியைத்தான் அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் எல்லா மாற்றங்களும் புதுமைகளும் பேச்சிலிருந்து வருவன. பேச்சு தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. அத்துடன் அதற்கு வட்டாரத்தனித்தன்மைகளும் உள்ளன. இயந்திரத்தனமான இலக்கணவாதம் அந்த மாற்றங்களை எல்லாம் தடுக்கும். 

உதாரணமாக, லக்ஷ்மி மணிவண்ணன் எழுதும்போதுஇதற்கு ஏராளம் உதாரணங்கள் உள்ளனஎன்று எழுதுவார். ஏராளமான என எழுதவேண்டும் என்பதே இலக்கணம். ஆனால் ஏராளம் உள்ளன என்பது கன்யாகுமரி வட்டாரப் பேச்சுமொழியில் இருந்து வந்த சொல்லாட்சி. அது சீர்மொழிக்கு ஒரு புதுவரவு, கொடை. பிழை அல்ல. அதை பிழையெனக் காணும் இலக்கணவாதி படைப்பியகத்தின் எதிரி.  

ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்குத் தெரியும், ஆங்கிலம் தொடர் மீறல்கள் வழியாக, தொடர்ச்சியான உள்வாங்கல்கள் வழியாகத்தான் நவீனமாகிக்கொண்டே செல்கிறது என. நம் பள்ளிக்கல்வி ஆங்கிலப்புலமை கொண்டவர்களுக்கு அது பிழையாக தெரிகிறது, இவர்களின் ஆங்கிலத்தை அவர்கள் பொருட்படுத்துவதுமில்லை. Stories of the True வெளிவந்தபோது அது இலக்கணப்பிழை என இங்கே எத்தனைபேர் எழுதியிருந்தனர் என்பதை நினைவுகூர்க. 

இதேபோல இன்னொரு வகை வன்முறையும் புனைவுமொழி மேல் நிகழ்கிறது. அதைசராசரிப்படுத்தல்எனலாம். செய்திமொழி சராசரித்தன்மையுடன் மட்டுமே இருக்கவேண்டும். ஏனென்றால் செய்தி குழப்பமின்றி சென்று சேரவேண்டும். சட்டம் போன்ற துறைகளிலும் மொழிக்கு ஒரு சராசரிப் பொதுத்தன்மை அவசியம். வணிக இலக்கியத்திலும் அந்த சராசரிப்பொதுத்தன்மை பேணப்படும்.

ஆனால் இலக்கியம் எப்போதுமே அதை மீறித்தான் செல்லும். சொல்மயக்கமும் பொருள்மயக்கமும் சராசரி நடைக்கு பிழைகள். இலக்கியத்தில் அவை அழகுகள். வில்லியம் எம்ஸன் இலக்கிய அழகு என்பதே பொருள்மயக்கம்தான் என தன் புகழ்மிக்க கட்டுரையில் வாதிடுகிறார். 

சராசரிப் பொதுமொழியில்தெளிவாகஅமைந்த நடை எனக்கு எப்போதும் சலிப்பூட்டுகிறது. பாரதியும் சரி, புதுமைப்பித்தனும் சரி அவர்களின் காலகட்ட சராசரிப் பொதுமொழியை நொறுக்கி மேலெழுந்தவர்கள். ‘மூடா!” என ஒரே சொல்லில் ஒரு சொற்றொடர் அமையலாம் என பாரதி எழுத கண்டறிந்த அன்றைய தமிழறிஞர்கள் குமுறினர். புதுமைப்பித்தனின் எல்லா சொற்றொடர்களும் அன்றைய பொதுமொழி இலக்கணத்தின்படி பிழையானவை. 

நாம் பேச்சில் பயன்படுத்தும் பல சொற்றொடர்கள் அந்தத் தருணத்தால்தான் பொருள்கொள்ளப்படுகின்றன. “முதல்ல நாராயணன் முருகனை அடிச்சான்.  அவன் திருப்பியடிச்சான். உடனே அவன் போயி ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டான்என ஒரு சொற்றொடர் காதில் விழுகிறது. அதன் அமைப்பிலேயே அடித்தவனே ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டான் என தெரியவருகிறது. இது இப்படியே புனைவிலும் வரமுடியும், புனைவின் சூழலும் ஆசிரியரின் இயல்பும் சேர்ந்து அச்சொற்றொடரை பொருளாக்குகின்றன. அந்த சின்ன தாவலை வாசகன் நடத்துவதே கற்பனையின் இன்பம். 

இங்கே அவன் என்பது யாரை? இது சொற்றொடர்க்குழப்பம். மொழிப்பயிற்சி இல்லைஎன்று சொல்லும் இதழாளர்களை எனக்குத் தெரியும். அவர்கள் புனைவை திருத்தியும் அமைப்பார்கள். இப்படிசொற்றொடர்ப்பிழை  கண்டுபிடிப்பதை இலக்கியவிமர்சனம் என்று சொல்லிக்கொள்ளும் அசடுகளும் நிறையவே உண்டு. எனக்கு வாரம் ஒரு கடிதமாவது வந்துகொண்டிருக்கிறது. அவர்களின் வாசிப்பில் புதுமைப்பித்தனின் எல்லாச் சொற்றொடர்களும் பிழையானவை, அவருக்கு தமிழிலக்கணமே தெரியாது.

சரிதான், புதுமைப்பித்தனின் தீவிரமான புனைவுநடையை நம் சூழலின் தமிழாசிரியத்தனமும் சராசரித்தனமும் சேர்ந்து எதிர்கொண்டு இன்னொரு பிரதியை உருவாக்கியிருக்கின்றன என்று கொள்ளவேண்டியதுதான். நவீன இலக்கியம் புரியும் எவரேனும் ஒரு நல்ல செம்பதிப்பு எதிர்காலத்தில் கொண்டுவரவேண்டும். எனக்கும் அந்த அதிர்ஷ்டம் எதிர்காலத்தில் அமையவேண்டும். 

(நல்ல இலக்கியம் புரியும் என்பதில்இலக்கியம் புரியும்என்பதற்கு இலக்கியச் செயல்புரியும் என பொருள் இல்லை, இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் என்று பொருள் என புரிந்துகொள்பவனே இலக்கியம் புரிந்து இலக்கியம் புரியும் இலக்கியவாசகன்)

ஜெ

முந்தைய கட்டுரைலா.ச.ராமாமிர்தம்
அடுத்த கட்டுரைஷில்லாங் இலக்கிய விழாவுக்கு…