செவ்விலக்கிய மறுவாசிப்பு, ஓர் உரை- பார்கவி

 

இம்பர்வாரி செவ்விலக்கிய வட்டம்

மதிப்பிற்குரிய ஜெ,

வணக்கம்.

பாலக்காட்டில் இருந்து எழுதுகிறேன். இன்று (நவம்பர் 8, 2023) அரசுக் கல்லூரி சித்தூர் தமிழ்த்துறை & ஆய்வு மன்றம் நடத்தும் மூன்று நாட்கள் தேசிய கருத்தரங்கில் ‘சமகால புனைவுகளில் காவிய மறு ஆக்கம்’ என்ற தலைப்பில் உரை வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன். இந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்தவர் விஷ்ணுபுரம் நண்பரான பேராசிரியர் கதிரவன். நான் அவரை இம்பர்வாரி குழுமத்தின் மூலமாக அறிமுகம் செய்து கொண்டேன். அவரும் பேராசிரியர் இளங்கோ நல்லரசு-இன் மாணவர் என்று அறிந்து கொண்டேன்.  அங்கு சென்ற பின்னர் அது பேராசிரியர் வேதசகாயகுமார் பணி புரிந்த இடம் என்று தெரிய பெற்று மகிழ்ந்தேன்.

நாஞ்சில் நாடன் காலையில் விழாவை தொடக்கி வைத்திருந்தார். அவரிடம் கம்பனில் ஐயாயிரம் பாடல்களை கடந்திருப்பதை ஏதோ நானே  ஐயாயிரம் பாடல்களை இயற்றி அரங்கேற்றியதைப்  போல சொல்லிக்கொண்டேன்.  அவரும் ஆசி கூறினார்.  உரை பற்றிய சிறிய பதட்டமும் விலகியது. எனக்கு முன்னம் எழுத்தாளர்  அகிலா (‘தவ்வை‘ நாவலில் ஆசிரியர்) உரை ஆற்றியிருந்தார். தலைப்பைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த பொழுது என் உரையை மீண்டும் ஒருமுறை தொகுத்துக்கொண்டேன். சமகால நாவல்கள் என்று சொல்லி இருந்ததை சமகால புனைவுகள் என்று விரித்துக்கொண்டேன்.

கம்ப இராமாயணத்திலிருந்து  வெண்முரசு வரைக்குமான காயங்களுக்கான என் காணிக்கையாக உரையை அமைத்துக்கொண்டேன். அல்லது நேரடியாக கம்பனுக்கும் ஜெயமோகனுக்குமான ஒரு இரசனை உரை. வீரகதை மரபிலிருந்து பாடாண் திணை வழியாக தோல் செவ்வியலில் புகுந்து ஆவணப்படுத்தப்பட்ட நாட்டார் கதைகள் வழியாக காவியங்களின் தோற்றம் வரை ஒரு சித்திரம். அங்கிருந்து காவியத்தின் ஒட்டுமொத்த நோக்கிற்கு ஒரு சமூகத்தின், பண்பாட்டின் கனவுகளுக்கும் படிமங்களுக்குமான தொடர்பு.  சமூகத்தின் வளர்ச்சி, வரலாற்றின் இடம், கால மாற்றத்தால் உந்தப்பட்ட அற விவாதங்களின் ஊடாக என்றும் தீராத அற முடிச்சுகள் – இந்த வகையில் எழும் காவிய சீர்திருத்தவாத வகை படைப்புகள். வெறும் தலைகீழாக்கம் செய்யப்படுவதால் இவற்றில் வெளிப்படும் சிக்கலும் போதாமையும். இன்னொரு பக்கம் மேற்சொன்னவற்றோடு தத்துவ தரிசனமும் அனுபவ முதிர்ச்சியில் எழும் சமநிலையும்  விரிந்த வாழ்க்கைப் பார்வையும் கொண்ட காவிய மறு ஆக்கங்கள், அவை வெற்றி பெறும் இடங்கள், அவற்றின் தேவை குறித்தும் விளக்கினேன்.

பாரதியின் பாஞ்சாலி சபதம், குவெம்புவின் சூத்திர தபஸ்வி,  புதுமைபித்தனின் சாப விமோசனம், மகாஸ்வேதா தேவியின் திரௌபதி, அம்பையின் அடவி, ஜெயமோகனின் பத்மவியூஹம், மைதிலி சரண் குப்த்-இன் சாகேத், காண்டேகரின் யயாதி, பைரப்பாவின் பரவா, பி கே பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், எம் டி வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம்,  பிரதிபா ரே-இன் யக்யசேனி, சித்ரா பானர்ஜி திவாகருணி-இன் மயன் மாளிகை, புலவர் குழந்தையின் இராவண காவியம், ஆனந்த் நீலகண்டனின் அசுரா (இராவணன்), அஜயா (துரியன்), வானரா (வாலி, சுக்ரீவன், தாரை) அமிஷ் திரிபாதியின் ராவணா, சீதா, கவிதா கானே-இன் கர்ணனின் மனைவி (உர்வி) என்று சில ஆக்கங்களைப் பற்றிய அறிமுகத்தை என் வாசிப்பிலிருந்து  முன்வைத்தேன்.

ஆலயத்தைப் போல காவியமும் லயமும் கணக்கும் கூடிய காலத்தின் பருவடிவம். நீங்கள் ஒரு கட்டுரையில் காவியத்தை கேரள பாணி ஆலயத்தின் குமபம் என்றீர்கள். அதிலிருந்து பெற்றுக்கொண்டு நான் அதை ஆலயத்தின் கலசம் என்று புரிந்துகொண்டேன். இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு ஒரு வாழ்வை தொடங்குவதற்காக கலசத்தில் சேம நெல் வைத்திருப்பார்கள், அதுவே தான் காவியம் ஒரு பண்பாட்டிற்கு. சொல்வடிவ காலம். சந்தவார்காவியம்.

காவியம் சார்ந்த அனைத்து படைப்புகளும் உண்மையில் ‘காவிய’ மறு ஆக்கம் என்று சொல்லத் தகுந்தவையா என்ற கேள்வியோடு நிறைவு செய்து கொண்டேன். நேரம் கருதி இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்பதோடு சுருக்கிக்கொண்டேன். என்றாலும் சிலப்பதிகாரம் பற்றிய கேள்வி எழுந்ததால் கொற்றவை பற்றி கூறினேன்.

உரையின் தரம் குறித்து நேர்நிலையான எதிர்வினைகளும் பாராட்டுகளும் வந்தன.  ஏதோ ஒரு காரணத்தினால் மதிய உணவிற்கு அடுத்த முதல் உரையாக  நான் பேச வேண்டி இருந்தது.  என்றாலும் மாணவர்கள் கவனத்துடன் செவிமடுத்தனர் என்று குறிப்பிட்டார்கள். இலக்கிய கூட்டத்தில் பேசுவதை விட சவாலானது இது. இவர்கள் வேறு தலைமுறையினர். இத்தனை மதிப்பையும் எனக்கு நல்கியவர்கள் ஜெயமோகன் உள்ளிட்ட என் ஆசிரியர்கள் என்று  பதில் இறுத்தேன, அது உபசார மொழி அல்ல. நீங்கள் ஜனவரியில் சித்தூரில் பேராசிரியர் வேதசகாயகுமார் நினைவு  உரையை நிகழ்த்த உள்ளீர்கள் என்று அறிந்தேன்.

திருமணம் போன்ற விழாக்களில் கை ரேகைகளை வைத்து ஓவியம் உருவாவதை சமீபத்தில் பார்த்தேன் – கோட்டோவியம் போல ஒரு வடிவத்தை வரைந்திருப்பார்கள், உதாரணத்திற்கு மயில், மரம், மலர் போன்றவை, வந்திருப்பவர்கள் வண்ணக் குழம்பில் தங்கள் விரலை நனைத்து அந்தபரப்பில் ஒற்றி விடுவார்கள். விதவிதமான வண்ண அச்சுகள் சேர்ந்து ஒரு கூட்டோவியம். பல வண்ணங்கள் கொண்ட தோகை கொண்ட பறவை, பல்நிற இலைகளால் ஆன மரம், பல்லிதழ் கொண்ட வண்ண மலர். அப்படி காவியப் பித்தை நிலை நிறுத்திய இம்பர்வாரி வாசகர் வட்டத்தின் அனைத்து நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உரை முடிந்த பின் இம்பர்வாரி ஸ்ரீநிவாஸ்-இடம் மட்டும் பகிர்ந்து கொண்டேன். ஹம்பி பயணத்தை சேர்த்துக்கொண்டால்  இம்பர்வாரிக்கு இது இரண்டாவது வெளி மாநில நிகழ்வு. ஸ்ரீநிவாஸ் ஹைதராபாத்-இலிருந்து வருகிறார் என்பதால் நாம் ஒருங்கிணைந்த ஆந்திராவையும் சேர்த்துக்கொண்டு திராவிட விஜயமாக எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டாக சொன்னாலும், செல்ல வேண்டிய பாதை இன்னும் நெடியது என்பதை அறிகிறேன். தொடர்க என்று எங்களுக்குக் கிடைத்த ஒரு சொல். அது வீணாகாது. அதை ஒரு முறை சத்தமாக எங்களுக்கே சொல்லிக் கொள்வதற்காக தயக்கங்களை விடுத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழை மலையாளத்தில் பேசும் சித்தூர் தமிழ் மாணவர்கள் துணையோடு சித்தூர் காவு, கொடும்பு முருகன் கோயில், திப்பு சுல்தான் கோட்டை ஆகிய இடங்களைச்  சுற்றிப் பார்த்தோம். தமிழக பல்கலைக் கழகத்திற்கு வந்து மேற்படிப்பு செய்யும் எண்ணமிருக்கிறதா என்று அவர்களைக் கேட்டேன். பாலக்காட்டைத் தாண்டும் எண்ணமில்லை என்றார்கள். மலம்புழா அணை நாங்கள் செல்வதற்குள் மூடப்பட்டு விட்டது. கேரளாவில் மலைகள் அற்ற சமவெளியில் வழுவழுப்பான தார் சாலையின் வழியாக தூறல் சிந்தச் சிந்த ஒரு விரைவுப் பயணம். இங்கிருந்து வெளியேற முடியாது தான்.

புதன் இரவு வழக்கம் போல் இம்பர்வாரியின் அமர்வு. அனுமன் சீதைக்கு ராமனுடைய அழகை பாதாதி கேசமாக வர்ணிக்கிறான். ராமனின் கால் விரல் நகத்திற்கு நிலவின் அழகைச் சொல்வதா அல்லது வைரத்தின் கிளர் ஒளியைச் சொல்வதா? நிலவென்ன சிறியதும் பெரியதுமாகவா இருக்கும்? அல்லது வைரம் தான் இவன் நகத்தின் திரள் ஒளியை கொண்டிருக்குமா? நிறைவான அமர்வு. நிறைவான நாள்.

நன்றி.

பார்கவி.

எது கொல் தோழி? – பார்கவி
முந்தைய கட்டுரைடொரெண்டோ, கடிதம்
அடுத்த கட்டுரைஸ்ரீதர் நாராயணன்