தன் வரலாறுகளைத் தொடர்ந்து வாழ்க்கை வரலாறுகளைப் பார்த்தால் இன்னும் பெரிய ஏமாற்றம். நம் அரசியல்தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளெல்லாம் வெறும் குப்பைகள். ஒன்று கறாரான மதிப்பீடுநோக்கு இருக்கவேண்டும். அல்லது அக்காலகட்டத்தைப்பற்றிய உண்மையான சித்திரத்தையவது அளிக்கவேண்டும். நிறையத் தகவல்களைக் கொடுக்கவேண்டும். இரண்டுமே இல்லாமல் ஆசிரியர் தன் பாட்டுடைத்தலைவனைப்பற்றிப் பொங்கிப் பொங்கி ஏதாவது சொல்வதும் அதற்காகத் தெரிந்த தகவல்களைக்கூடத் திரித்து அரைகுறை வரலாற்றை அளிப்பதும்தான் அதிகமாக உள்ளது
ஜீவா, காமராஜ்,அண்ணாதுரை, ஈவேரா பற்றியெல்லாம் உள்ள வரலாறுகளை- என்ன சொல்ல? நம் நடிகர்களைப்பற்றிக்கூட ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு கிடையாது. கலைஞர்கள்,அரசியல்வாதிகள் எவரைப்பற்றியும் நல்ல வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டதில்லை.பாமாலைகளே எக்கச்சக்கமாக கிடைக்கின்றன. பத்துப்பக்கம் படித்தால்கூட ஒரு ஆர்வமூட்டும் தகவலோ உண்மையின் ஒளிகொண்ட நிகழ்ச்சியோ வாசிக்கக்கிடைக்காதென்றால் அது என்ன வாழ்க்கை வரலாறு?
வாழ்க்கைவரலாற்றின் முக்கியமான கச்சாப்பொருள் ஏராளமான தகவல்கள். சுவாரசியமாக அந்தத் தகவல்களை அடுக்குவதே அதன் அழகியல். கதாநாயகனின் பிறப்பு முதல் ஆரம்பித்து காப்பு ,செங்கீரை, சிற்றில், சிறுபறை என்று பாடிச்செல்வது அல்ல. ஆனால் தகவல் திரட்டுவதில் நம்மவர்க்கு ஆர்வமே இல்லை. எது முக்கியமான தகவல் என்றும் தெரியாது. ஒரு ஆளுமை பிறந்து உருவான சூழல், செயல்பட்ட வரலாற்றுச் சந்தர்ப்பம் ஆகியவை விரிவாகச் சொல்லப்படாமல் வாழ்க்கைவரலாறு எழுதப்படமுடியாது. அதில் குறைந்தபட்ச நேர்மை இல்லாமல் எழுதுவது வீண்
சமீபத்தில் டாக்டர் சுப்பராயன் [குமாரமங்கலம்] குடும்பம் பற்றிப் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நிதியுதவியுடன் ஒரு நூல் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட குடும்பம். எவ்வளவு சாகசங்கள் கொண்ட வாழ்க்கைகள். எவ்வளவு அரசியல் காலகட்டங்கள்! ஆர்வத்துடன் வாங்கி வாசித்தால் பெரும் சலிப்பு. ஒரு தகவலும் இல்லை. ஆசிரியர் அவருக்குத் தோன்றியதை எழுதி வைத்திருக்கிறார்.
எழுத நினைப்பவர்கள் ஏன் ஏதாவது ஒர் ஆளுமையை எடுத்துக்கொண்டு கொஞ்சம் ஆர்வமாகப் பின்னால் சென்று தகவல்களைத் திரட்டி நல்ல ஒரு வாழ்க்கைவரலாற்றை எழுதிப்பார்க்கக்கூடாது? சொ.தருமன் அப்படி ஒரு முயற்சி செய்தார். அது ஒரு நல்ல நூல். இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். ஆனால் அந்த அளவிலேயே நல்ல நூல்.
இது ஒரு சிறிய உடனடிப் பட்டியல்
1.எனது குருநாதர்- உ.வே.சாமிநாதய்யர் [மீனாட்சிசுந்தரம்பிள்ளை வரலாறு]
2 எனது குருநாதர்[பாரதியார் வாழ்க்கை] – கனகலிங்கம்
3 .என் கணவர் பாரதி -செல்லம்மாள் பாரதி
4.பாரதி சில நினைவுகள்– யதுகிரி அம்மாள்
6. புதுமைப்பித்தன் வரலாறு – ரகுநாதன்
7. பொன்னியின்புதல்வர்-கல்கிவரலாறு– சுந்தா