அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
சென்ற வாரம் நடந்த ஏ.வி.மணிகண்டன் அவர்களின் நவீன ஓவிய கலை வகுப்புக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. வகுப்பில், ஓவியம் மற்றும் கலை பற்றி இதுவரையில் எனக்கு இருந்த புரிதல் முற்றிலும் தவறு என்று உணர்ந்தேன். பார்ப்பதை எல்லாம் அப்படியே வரைவது தான் ஓவியம் என்று நினைத்தேன். ஆனால் ஓவியம் என்பது வண்ணங்கள் மட்டும் கொண்டு வரைவது அல்ல, அது எண்ணங்கள் கொண்டு வரையப்படும் ஒரு தத்துவ முடிவிலி என்று உணர்ந்தேன்.
ஒரு சமூகத்தின் cultural associationனை புரிந்தது கொள்ளாமல் அவர்களது கலைகள் பற்றி புரிந்து கொள்ள முடியாது, பிற நாட்டு கலாச்சாரத்தை அறியாமல் அவர்களை பற்றி படைக்க படும் கலைகள் அனைத்துமே அவர்களை இழிவு படுத்தும் படைப்புகளாக ஆகிறது. சரியான விழிப்புணர்வு இல்லாமல் இது போன்ற புகைப்படங்களை பார்த்து பார்த்து அதுதான் நம் கலை என்று நாமே ஆண்டாண்டுகளாக நம்பி ஏமாந்து கொண்டு இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை பார்க முடிகிறது.
மணிகண்டன் அவர்கள் வகுப்பினை மிக நேர்த்தியாக வடிவமைப்த்து இருந்தார், முதலில் ஒரு ஓவியத்தை பார்க்கும் போது நம் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை விலக்கி விட்டு, எப்படி ஓவியத்தை அணுகவேண்டும் என்று கூறினார். இந்த கூற்றை அறியாமல் ஒருவர் என்ன முயன்றாலும் அந்த கலையை உள் வாங்க இயலாது. பின் ஓவியங்கள், சிற்பங்களில் உள்ள நுணுக்கமான சாராம்சத்தை உணர தத்துவ ஞானம் ஏன் தேவைப்படுகிறது என்றும் தெளிவாக விளக்கினார்.
விளக்கக்காட்சியை பார்த்த போது இந்த வகுப்பிற்காக மணிகண்டன் அவர்களின் பல மாத கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிந்தது. அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
கற்கால ஓவியத்தில் ஆரம்பித்து, இன்றைய காலகட்டத்தில் படைக்க படும் நவீன ஓவியங்கள் வரை கலையையும், கலை வடிவங்களும் எப்படி பரிணமித்து உள்ளது என்பதை பார்த்தோம்.
ஒரு சமுதாயத்தை கட்டமைப்பதில் கலைஞர்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். சிறந்த கலை படைப்புகள் அடிப்படைகளை கேள்வி கேட்டு மக்களை சிந்திக்க தூண்டி நம்மை வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கிறது. இப்படி அந்த சமுகம் பல மேல் நோக்கிய சிந்தனை உள்ள ஆளுமைகளை உருவாக்கிக் கொள்கிறது. நம் நாட்டில் கலை படைப்புகள் குறைந்த விட்டது ஒரு வகையில் நம் சிந்தனை ஆற்றலை பாதித்து இருக்குமோ என்று தோன்றுகிறது. பின் புரட்சியை ஏற்படுத்திய சில ஓவியங்களை காண்கையில் நம் சமூகம் இத்தகைய கருத்துக்களை ஏற்று கொள்வதற்கு தயாராக உள்ளதா என கேள்வி எழுகிறது. மற்ற துறைகள் போல் ஓவியத்திலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
பேனாவுக்கு நிகரான ஆயுதம் ஒன்று இருக்குமெனில் அது தூரிகையாக தான் இருக்க முடியும். இனி எதையாவது வரையலாம் என்று நினைத்தாலே சற்று நடுக்கமாக தான் இருக்கிறது.
அன்புடன்,
ஜெய்ஸ்ரீ