பாலஸ்தீன் வாழ்வுரிமை

அன்புள்ள ஜெ,

கனடாவில் ஆற்றிய உரைக்குப் பின் கேள்வியின்போது நீங்கள் ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல பேசுகிறீர்கள். இது பற்றி உங்கள் நிலைபாட்டை அறிய விரும்புகிறேன்.

ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவி,

பொதுவாக ஈழத்தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினை ஒன்றுண்டு, அவர்கள் அரசியலை அன்றி வேறெதையும் யோசிக்கமுடியாமல் அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் – ஆனால் அப்படிப்பேசும் 90 சதவீதம் பேரும் அரசியலில் இருந்து பாதுகாப்பாகக் கரையேறி அமர்ந்து வணிகம் அல்லது தொழில் செய்து  வசதியாக வாழ்பவர்கள். அரசியல் அவர்களின் ஒரு அகவிளையாட்டு அன்றி வேறில்லை.

ஆகவே அதில் மிகையுணர்ச்சிகளே அதிகம். பலர் கொதிநிலையிலேயே (அரங்குகளிலும் சமூகவலைத்தளங்களிலும் மட்டும்) காணப்படுவார்கள். ஓர் அரங்குக்கு வந்து ஒரு வகையில் தன்னை புனைந்து முன்வைத்துவிட்டால் தனக்கொரு அடையாளம் அமைந்துவிட்டது என நினைக்கிறார்கள். தங்கள் சமரசங்களும் சரிவுகளும் எல்லாம் பிறரை குற்றம் சாட்டுவதன் வழியாக சரியாகிவிடுமென கற்பனைசெய்கிறார்கள்.

பலர் அந்த விளையாட்டை 30 ஆண்டுகளாகச் செய்கிறார்கள் என்பதை அறிவேன். அவர்களில் பலர் அறுபதை அடைந்துவிட்டனர். அவர்களின் அடுத்த தலைமுறையினரில் அந்த நோய் சற்றுமில்லை. ஆகவே நாடுகடந்த ஈழத்தவர்களில் அதிகபட்சம் இன்னும் ஒரு பத்திருபதாண்டு நீடிக்கும் ஓர் எளிய உளச்சிக்கல் மட்டும்தான் இது.

நான் கனடாவுக்கு சுற்றுலா விசாவில் சென்றவன். ஆகவே அரசியல் பேசலாகாது. சட்டப்படி எனக்கல்ல, என்னை அழைத்தவர்களுக்கு அது சிக்கலாகும். அதிலும் இன்று இந்தியா கனடா உறவு இருக்கும் நிலையில் அது அபாயவிளையாட்டு. அதை அவர்களுக்கு முன்னரே அறிவித்திருந்தேன். மேடையிலும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் முதல்கேள்வியாகவே அரசியல்தான் வந்தது.

நான் எந்த வினாவையும் தவிர்ப்பவன் அல்ல, எனக்கு ஒளிக்க ஏதுமில்லை, மழுப்பவும் ஏதுமில்லை. என் பிழைகளும் குழப்பங்களும் உட்பட. ஆகவே சுருக்கமாக, ஆனால் தெளிவாக என் தரப்பை முன்வைத்தேன். சட்டத்துக்கு உட்பட்டு.

*

இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையில் காந்தி சொன்னதுதான் தொடக்கம். ‘யூதர்களுக்கு ஒரு நிலம்’ என்பது ஒரு சென்றகாலக் கற்பனை. அது நவீன உலகுக்கு பொருந்துவதல்ல. அப்படி ஒரு நிலத்தை ஆக்ரமித்து தேசத்தை உருவாக்கவேண்டியது இல்லை. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு நாடு என அமையவேண்டிய தேவையே இல்லை. யூதர்கள் குடியேறிய எல்லா நாடுகளையும் தங்கள் நாடென அவர்களெ எண்ணலாம். அந்த வகையான நெகிழ்வான, ஒத்திசைவு கொண்ட தேசிய உருவகங்களே இன்று உலகமெங்குமுள்ள யூதர்கள் வாழும் நாடுகளிலுள்ளன.

தேசமென்பது இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையலாகாது. நிலப்பகுதியின் அமைப்பால் சேர்ந்து வாழ்ந்தேயாகவேண்டியவர்கள் ஒரு தேசமாக ஆகலாம். அது ஒரு பொருளியல் கட்டுமானம் மட்டுமே. எதிர்காலத்தில் தேசமென்னும் அமைப்பு இல்லாமலும் ஆகலாம். இன்றைய தேச உருவகங்கள் எல்லாமே அனைவரையும் உள்ளீடு செய்யும் தன்மை கொண்டிருக்கவேண்டும். எந்த பிறப்பு சார்ந்த அடையாளமும், நம்பிக்கை சார்ந்த அடையாளமும் தேசியத்தை தீர்மானிக்கலாகாது. அது தனிநபரின் வாழ்வுரிமைக்கு எதிரானது.

யூதர்களைப் போல கௌல்களும், கெல்டுகளும், வைக்கிங்குகளும், நார்மன்களும் எல்லாம் அவர்களுக்கான நாடு உருவாக்க  ஆரம்பித்தால் உலகம் இனவாதப் போரில் அழியும். இஸ்ரேல் மிகப் பிழையான முன்னுதாரணம்- மத அடிப்படையிலான தேசிய உருவகங்களைப் போல. இதையே திராவிடதேசியம், தமிழ்த்தேசியம் எல்லாவற்றுக்கும் நான் சொல்வேன்.

*

இரண்டு உண்மைகளே அறுதியாகத் திரண்டு வருபவை. அவற்றை மட்டுமே அந்த உரையின் முடிவில் சுருக்கமாகச் சொன்னேன். பாலஸ்தீன மக்களின் பூர்விக நிலம் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு வேறு நிலம் இல்லை. அதை மீட்க, தங்கள் வாழ்வுரிமைக்காக அம்மக்கள் போரிடுகிறார்கள். இரண்டு, இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய எந்த பொறுப்பையும் இன்றுவரை பேணியதில்லை. ஆயுதம் மட்டுமே அதன் வழியாக இருந்துள்ளது.

இஸ்ரேல் ஒரு நாடு என்பதற்கான எந்த அரசியலறத்தையும் பேணியது அல்ல. ஒரு நாட்டின் அரசு செய்யும் ஒப்பந்தங்கள் அந்த அரசின் தொடர்ச்சிகளால் பேணப்பட்டாகவேண்டியவை. அவற்றை மீறுவது அரசு என்னும் கருத்தை மறுப்பது. குறிப்பாக வெளியுறவுச் செயல்பாடுகளில் . அவ்வாறு ஒரு தேசம் செயல்படுமென்றால் அதை எவ்வாறு தேசம் என்று சொல்ல முடியும்?

இஸ்ரேல் அந்நாடு கையெழுத்திட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தையும் இம்மியும் மதித்தது இல்லை. இன்று வரை அது உலகின் மிக மோசமான ‘பொறுக்கி தேசமாகவே’ இருந்து வருகிறது. நிலமற்ற பாலஸ்தீனத்தையே இந்தியா ஏற்றிருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை பலமுறை கடுமையாக கண்டித்துமுள்ளது. பாலஸ்தீனம் இந்தியாவால் ஏற்கப்பட்ட ஒரு நாடு. அந்த மக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் பேணும் கூட்டுப்பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு.

*

மறுபக்கம், இந்தவகையான உரிமைப்போர்களில் எப்போதுமே நிகழும் ஒரு விளையாட்டுதான் இங்கும் நிகழ்கிறது. ஓரு சமூகம் உரிமைகளுக்காகப் போரிடுகிறது. அதற்கு ஒரு தலைமை அமைகிறது. அந்த தலைமை வலுப்பெற்று, அக்கோரிக்கை வெற்றி நோக்கிச் செல்லுந்தோறும் சில சமரசங்களைச் செய்தே ஆகவேண்டும். ஏனென்றால் பலவகையான வெளி ஆதரவுகளைத் திரட்டிக்கொண்டுதான் அது வெற்றியை அடையமுடியும். ஒவ்வொரு வெளி ஆதரவுக்கும் ஒரு சமரசத்தைச் செய்தாகவேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தாகவேண்டும்.

இன்றைய சூழலில் ’எதிரி’யை முழுமையாக ஒழித்து அதன் மேல் முழுமையாக தன் வெற்றியை நிறுவிக்கொள்வது எவராலும் இயலாது. உலகசக்தியான அமெரிக்காவால் கூட. ஆகவே எந்தச் சமரசத்துக்கும் வரமாட்டோம் என்று சொல்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மூடர்கள் மட்டுமே. தங்களுடன் அவர்கள் ஒரு சமூகத்தையே தற்கொலைக்குக் கொண்டுசெல்லக்கூடும்.

உரிமைகள் அரசியல் நடவடிக்கைகள் வழியாகவே அடையப்பட முடியும். போர் என்றால்கூட அது அரசியல்நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கமுடியும். பேச்சுவார்த்தையில் அழுத்தம்தரும் ஓர் உத்தி மட்டும்தான் அது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் போர் என்பது எல்லா தரப்புக்கும் இழப்பு என்பதனால் காலாவதியாகிப்போன பேரம்பேசும் உத்தி என்றே சொல்லலாம்.

ஆகவே, போர் வழியாக மட்டும் எதையும் அடைய முடியாது. அதேசமயம்  ‘முழுமையான’ உரிமையை அரசியல் நடவடிக்கை வழியாக அடையவே முடியாது. போரிட்டாலும்கூட சமரச ஒப்பந்தம் வழியாகவே உரிமைகளை அடைய முடியும். எந்த உரிமையும் ஓர் சமரசப்புள்ளியில் அடையப்படுவதே. என்னென்ன அடையப்படுகிறது என்பதற்குச் சமானமாகவே என்னென்ன விட்டுக்கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியமே. ஏனென்றால் எதிர்த்தரப்புக்கும் உரிமைகள் உண்டு.

ஆனால் இன்றைய சூழலில் ஓர் உரிமை இயக்கத்தின் தலைமை அரசியல் நடவடிக்கை வழியாக, சமரசங்கள் செய்து கொண்டு, ஒரு பொதுத்தீர்வை எட்டியதுமே அந்த தரப்பிலேயே தீவிரநிலைபாடு கொண்ட ஒரு கோஷ்டி உருவாகிறது. அவர்கள் அந்த தலைமை ‘சோரம்போய்’விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். காட்டிக் கொடுத்து விட்டதாகவும் கைவிட்டதாகவும் சித்தரிக்கிறார்கள்.சாகசம் தேடும் மூளைக்கொதிப்பு மிக்க இளைஞர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள்.

பலசமயம் மக்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் ஓர் உரிமை இயக்கத்தின் அரசியல்தலைமை பலகாலமாக இருந்துகொண்டிருக்கும். அவர்களும் தீவிரநிலைபாடுகளைப் பேசியிருப்பார்கள். படிப்படியாக, சர்வதேச ஆதரவைப் பெறுந்தோறும், சமரசமாகியிருப்பார்கள். ஆகவே மக்கள் அவர்களில் சலிப்புற்றிருப்பார்கள். அப்பா தலைமுறை அவர்கள் ஆதரித்தால் மகன் தலைமுறை தீவிரவாதம் பேசுபவர்களை கவனிப்பார்கள். ஆவேசப்பேச்சுக்கள் எப்போதுமே கவற்சியானவை. அவற்றுடன் கொஞ்சம் உயிர்த்தியாகமும் சேர்ந்துகொண்டால் அந்த தரப்புக்கு ஆதரவு பெருகுகிறது.

விளைவாக சமரசமுடிவை அடைந்த அரசியல்தரப்பு தோற்கடிக்கப்பட்டு, தீவிரத்தரப்பு மேலோங்குகிறது. அது பல ஆண்டுக்கால முயற்சியால் உருவான சமரசத்தீர்வை நிராகரிக்கிறது. உண்மையில், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைச் சக்திக்கும் அதுதான் தேவை. அவர்களும் அந்த ஒப்பந்தத்தை கைவிடவே தருணம் பார்த்திருக்கிறார்கள். தீவிரவாதத்தை சுட்டிக்காட்டி அவர்களும் ஒப்பந்தத்தை தூக்கி வீசுகிறார்கள். மீண்டும் தொடங்கிய இடத்துக்கே ஆட்டம் சென்று சேர்கிறது.

இஸ்ரேல்- பாலஸ்தீன் விஷயத்தில் நிகழ்ந்தது இதுவே. யாஸர் அராபத் தோற்கடிக்கப்பட்டதும் பாலஸ்தீன விவகாரம் தொடங்கிய இடத்துக்கே சென்றுவிட்டது. யாசர் அராஃபத் சமரசம் வழியாகவே வெற்றியை அடைந்தார். அந்த வெற்றியால் அடைந்த நாட்டை இஸ்ரேலுக்கு நிகரான பொருளியல் வல்லமை கொண்டதாக ஆக்கியிருக்கவேண்டும். சர்வதேச ஆதரவைப் பெருக்கியிருக்க வேண்டும்.

அவ்வாறு நிலைகொண்டபின்னர் மெல்ல மேலும் உரிமைகளை கோரி அழுத்தம் அளித்திருக்கவேண்டும். மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அடைந்திருக்க வேண்டும். உலகச்சூழல்கள் மாறுவதை கருத்தில்கொண்டு ராஜதந்திரங்கள் வகுத்து தங்கள் உரிமைகளை நோக்கி சென்றிருக்கவேண்டும். அமர்ந்தபின் காலை நீட்டுவது என்னும் உத்தி அது. ஆனால் தீவிரவாதத் தரப்பான ஹமாஸ் அவரை தோற்கடித்தது.

எல்லா உரிமைப்போர்களிலும் அடக்கும்தரப்பு இதையே செய்கிறது. உங்கள் ஊரில் ஒரு சிறிய மக்கள்போராட்டம் நிகழ்ந்தால்கூட இதையே நீங்கள் காணலாம். கடைசியாக அரசுடனோ அல்லது எதிர்த்தரப்புடனோ ஓர் ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு சாத்தியமான வெற்றி கைக்கு வரும்போது தீவிரக்குரல் எழுந்து அதை அழிக்கும். உலகமெங்கும் இது நிகழ்ந்துள்ளது. இந்தியா வடகிழக்கிலும் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் மிக வெற்றிகரமாக இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறது.

ஹமாஸுக்கே தொடக்கத்தில் இஸ்ரேலிய ஆதரவு இருந்தது, அராஃபத்தை ஒழிப்பதற்காக இஸ்ரேல் அதைச் செய்தது. அராஃபத் குவைத் மீதான ஈராக்கின் தாக்குதலை ஆதரித்து ஒரு பெரிய அரசியல் பிழையைச் செய்தார். ஹமாஸ் அதைப் பயன்படுத்தி அவரை முழுமையாக செல்லாக்காசாக்கியது.

இன்றைய போர் இரு நாடுகளுக்கு இடையே அல்ல. ஹமாஸ் என்பது உலகறிந்த அரசியல்தலைமை இல்லாத ஓர் அமைப்பு. அதன் திட்டங்கள் என்ன என்று, அதன் செயல்களுக்கு எவர் பொறுப்பேற்பார்கள் என்று தெரியாத நிலையில் உலகில் எந்த நாடும் அதற்கு எந்த ஆதரவும் தெரிவிக்க முடியாது. வெளிப்படையான ஆதரவை ஈரான்கூட தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

ஹமாஸ் தொடங்கியது இந்தப் போர். அவர்கள் மக்களுடன் மக்களாகப் பதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும், இஸ்ரேல் என்ன செய்யும் என்று. இஸ்ரேல் காசா பகுதி மக்களை அழிக்கும், அதன் விளைவான அனுதாப அலையைக் கொண்டு அரபு ஒற்றுமையை உருவாக்கி ஆதரவை பெறலாம் என அது எதிர்பார்த்தது. அதாவது தன் மக்களை பலிகொடுத்து வெற்றியை ஈட்ட முயன்றது. அது நிகழவில்லை. அரபுலகில் இருந்துகூட எந்த பெரிய ஆதரவும் அமையவில்லை. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட பெரிதாக ஆதரவு காட்டவில்லை. பாலஸ்தீன மக்கள் பலியாவதுதான் மிச்சம்.

காரணம், மிக வெளிப்படையானது. இன்றைய உலகம் முற்றிலும் வணிகம் சார்ந்தது. எல்லா நாடுகளையும் ஆள்பவர்கள் மாபெரும் வணிகநிறுவனங்கள்தான். அரசுகளின் அதிகாரம் இருந்த காலம் 2000 த்துடன் மறைந்துவிட்டது. இன்றைய கார்ப்பரேட்டுகள் உலகளாவிய, நாடற்ற, பொருளியல் அரசுகள். ஆகவே எந்த நாடும் தன் பொருளியல் நன்மையை மட்டுமே கருத்தில்கொள்ளும். அவற்றை இனமோ, மதமோ இயக்கவில்லை. அதை ஹமாஸ் புரிந்துகொள்ளவில்லை.

மறுபக்கம் இஸ்ரேல். எண்ணிப்பாருங்கள் பாகிஸ்தான் வாகா எல்லைக்குள் நுழைந்து ஒரு முழுநாளும் தாக்குதல் நடத்த, இந்திய ராணுவம் அங்கே செல்லவே இல்லை என்றால் அதை ‘இயல்பானது’ என்றா எடுத்துக்கொள்வோம்? உலகின் மிகப்ப்பெரிய ராணுவங்களிலொன்று இஸ்ரேலிய ராணுவம். அங்கே எல்லா குடிமக்களும் போர்ப்பயிற்சி பெற்றவர்கள். அணுஆயுத நாடு அது. அதன் காசா எல்லை நம் வாகா எல்லை போலவே ’கொதிக்கும் எல்லைக்கோடு’ கொண்டது. அதை அப்படியே சும்மா விட்டார்களா என்ன?

காசா எல்லையில் இருந்து டெல் அவிவ் மிக அண்மையிலுள்ளது. வாகா எல்லையில் இருந்து டெல்லியும் அருகில்தான். சிலமணிநேரப் பயணத்தொலைவு. ஆகவே இந்த தொலைவை ‘The longest route’ என சொல்வார்கள். அந்த தொலைவை ஹமாஸ் எதிர்ப்பின்றி கடந்துள்ளது. அது இஸ்ரேல் வேண்டுமென்றே தன் மக்களை பலிகொடுத்து ஆடிய ஆட்டம். உலகின் முன் போருக்கு ஓரு வலுவான காரணத்தை அது காட்டியது.

அத்தகைய ஒரு தீவிரவாதத் தாக்குதல், பொதுமக்களைக் கொன்று ஆடிய வெறியாட்டம், எந்த ஒரு தேசத்தையும் பதறச் செய்யும். உடனடியாக இஸ்ரேலுக்கு ஆதரவான மனநிலை உருவாகும். ஏனென்றால் எல்லா நாடும் அதற்கிணையான தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. எல்லா நாட்டுக்கும் அப்போது உலக ஆதரவும் அமைந்துள்ளது.

ஆக, இன்றைய போர் என்பது ஒரு தீவிரவாத அமைப்பும் ஒரு பொறுக்கிதேசமும் தங்கள் மக்களையே பலியாக்கி, மாறிமாறி மக்களைக் கொன்று ஆடும் வெறியாட்டம்.

*

இதில் மிகக்கீழ்த்தரமானது அவரவர் அரசியல், சாதி, மதச்சார்புக்கு ஏற்ப ஒரு பக்க நிலைபாடு எடுத்து களமாடுவதுதான். ஹமாஸை ‘மாவீரர்கள்’ ‘போராளிகள்’ ‘தியாகிகள்’ என புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். பாலஸ்தீன மக்களின் உயிர்வதையை தன் மதவெறியரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் ஒருவரின் உளநிலை என்ன? இந்த வகை கட்டுரைகள் உடனடியாக பல்லாயிரம்பேரை மறுதரப்பு நோக்கி கொண்டுசெல்பவை.

மறுபக்கம், மொத்த பாலஸ்தீன தேசியக்கோரிக்கையையே மதத்தீவிரவாதமாகப் பார்க்கும் பார்வை.  அது இந்தியாவுக்கு எதிரானது என்னும் பார்வை. அதிலிருந்து எழும் குரோதங்கள். இஸ்லாமிய எதிர்ப்பரசியலையே இஸ்ரேலிய ஆதரவாக ஆக்கிக்கொள்ளும் மனச்சிக்கல்.

இரு சாராருக்குமே மக்கள் பெரிதல்ல. அவர்களுக்கு போர் என்பது கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு. அன்றாடச் சலிப்பை நீக்கும் ஒரு சுவாரசியம். தன் தரப்பு ஜெயிக்கவேண்டும், அவ்வளவுதான்.

இன்றுநிகழும் இந்தப் போர், இதில் கொல்லப்படும் குழந்தைகள், உலகநாகரீகத்தின் அவமானம் என நான் நினைக்கிறேன். அதன் பழி இஸ்ரேல் மேல் என்றுமிருக்கும். எதுவும் எப்போதும் இஸ்ரேலை நியாயப்படுத்த முடியாது. இப்படியொரு பொறுக்கிநாடு உலகில் திகழமுடியும் என்பதே நீண்டகால அளவில் உலக ஒழுங்குக்கே எதிரானது. நாளை அந்நாடு எந்த சர்வதேச சூழியல், இணையவெளிச் சட்டங்களையும் மதிக்கவில்லை என்றால் உலகம் என்ன செய்யமுடியும்?

இஸ்ரேல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதன்மேல் ஐநா கட்டுப்பாடு வரவேண்டும். நீண்டகால அளவில்கூட அக்கட்டுப்பாடும் கண்காணிப்பும் நீடிக்கவேண்டும். ஹமாஸ் தீவிரவாத இயக்கம், அதை பாலஸ்தீனத்தின் பிரதிநிதியாக எந்த நாடும் எவ்வகையிலும்  கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பாலஸ்தீனத்தின் அரசியல்பிரதிநிதியாக ஓர் அமைப்பு, ஆளுமை அடையாளம் காணப்படவேண்டும். யாசர் அராபத் போல. அந்த அரசியலமைப்பின் பக்கபலமாக உலகம் நிலைகொள்ளவேண்டும். அவர்கள் இஸ்ரேலால் அழிக்கப்பட அனுமதிக்கக்கூடாது.

பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அதுவே இன்று உலகம் செய்யவேண்டிய முதல் கடமை. அதில் எந்த நியாயவாதத்துக்கும் இடம் இல்லை. அத்துடன் இப்போர் நிறுத்தப்பட்ட பின் இஸ்ரேல் மீது போர்க்குற்ற விசாரணையும் நிகழவேண்டும். இல்லையேல் எவரும் எதையும் செய்யலாமென்றே ஆகும்.

இவை என் கருத்துக்கள். ஓர் இலக்கியவாதியாக இதில் என் தரப்பு என்ன என்பதனால் பதிவுசெய்கிறேன். ஆனால் நான் நிபுணன் அல்ல. நிபுணர் அல்லாதவர்கள் செய்யும் விவாதங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆகவே விவாதிக்க விரும்பவில்லை. இவற்றையும் பிக்பாஸ் விவாதம்போல ஒரு பொதுவெளிக்களியாட்டாக ஆக்குவதே அருவருப்பூட்டுகிறது.

ஜெ

பிகு- இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையை முழுமையாக தமிழில் எளிதாக வாசிக்க பா.ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் ஒரு நல்ல நூல்

நிலமெல்லாம் ரத்தம் வாங்க

முந்தைய கட்டுரைபெ.சு.மணி
அடுத்த கட்டுரையோகம், கடிதம்