தன்வரலாறுகள்

குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழின் சிறந்த அபுனைவுகள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்காக நான் தன்வரலாறுகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன்.  பாரதி, வ.உ.சி ஆகியோர் செய்யுளில் தன்வரலாறுகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.

என் பார்வையில் தமிழில் நல்ல தன்வரலாறுகள் மிகமிகக் குறைவு. சுயசரிதையை எழுதுபவர் தான்வாழ்ந்த காலகட்டத்தை நேர்மையாகப் பதிவு செய்திருந்தாலே அது முக்கியமான நூலாகிறது. ஆனால் பெரும்பாலும் அது நிகழ்வதில்லை. அதற்கு அவருக்குத் தன்னைவிட்டு வெளியே பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். பல பிரபலங்களால் அது முடிவதில்லை

சிறந்த உதாரணங்கள், எம்.ஜி.ஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ மு.கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’.இரண்டுமே வீங்கிப் போன அகந்தை மட்டுமே மாறுவேடமிட்டு ஆடும் மோசமான நூல்கள். தமிழின் பெரும்பாலான தன்வரலாறுகள் இந்த வகையானவை.

இன்னொன்று, ஒரு காலகட்டத்தை ஒரு பெரிய வாழ்க்கைப் பரப்பை எழுதுகிறோம் என்ற பொறுப்பே இல்லாமல் போகிற போக்கில் எழுதுபவை. சிறந்த உதாரணம் கண்ணதாசனின் ’வனவாசம்’.

நல்ல  தன்வரலாறு, ஒரு ஆளுமை தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும் போக்கில் வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு காலகட்டத்தையே எழுதிவிடுபவைதான். தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நுட்பமாகப் பார்த்துச் சொல்லும் ஒருவராலேயே அது சாத்தியமாகிறது.

முட்டிமோதி என் தேர்வுக்குச் சிக்கும் 12 முக்கியமான  தன்வரலாறுகளைச் சொல்லியிருக்கிறேன்

1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாதய்யர்

2. ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன்

3. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை

4. வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்]

5. எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து

6. என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார்

7. எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம்

8. நினைவுகள்- க.சந்தானம்

9. உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்

10. எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்

11. நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன்

12. நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு

மறுபிரசுரம். முதற்பிரசுரம் -Aug 9, 2011

முந்தைய கட்டுரைசீனுவுக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமதங்கள்- இன்னொரு கடிதம்