என் சாதி பற்றி எனக்கு ஏதேனும் பெருமிதம் இருக்குமென்றால் அது நாய்க்கு அணுக்கமான பெயர் என்பது மட்டும்தான். இந்தியாவில் நாய்கள் நடத்தப்படும் விதம் என்னைப்போன்ற நாயன்பர்களுக்கு பெரும் சலிப்பை அளிப்பது. இந்திய நாய்களில் பெரும்பாலானவை தெருநாய்களே. ஆண்டு முழுக்க தெருநாய்களால் கடுமையாகத் தாக்கப்படுபவர்கள் இரவில் வேலைகள் முடிந்து நடந்துசெல்ல நேரும் ஏழைகள். தெருவில் விளையாடும் ஏழைக்குழந்தைகள்.
தெருநாய்களுக்காக பரிந்துபேசும் ‘மிருகாபிமானிகள்’ இங்கே உண்டு. அவர்கள் பெரும்பாலும் தெருவில் நடந்துசெல்வதையே அறியாத உயர்குடியினர். அந்த மனநிலையின் உச்சம் மேனகா காந்தி. அவர்கள் வெளிப்படுத்துவது உயிர்க்கருணையோ விலங்குநலனோ அல்ல, வெறும் பணத்திமிர் மட்டுமே.
நாய்கள் தெருவில் வாழவேண்டியவை அல்ல. தெருநாய்க்கு உணவிடுபவர்கள் உண்மையில் தெருநாய் என்னும் கொடுமையைப் பேணுபவர்கள்தான். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், நாய்கள் காட்டு விலங்குகள் அல்ல. அவை இயற்கையாக உருவான உயிரினம் அல்ல. முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓநாயிலிருந்தும் காட்டுச்செந்நாயிலிருந்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட விலங்கு அது. மனிதனை நம்பியே அது வாழமுடியும். மனிதன் அதைப் பேணியாகவேண்டும்.
மனிதன் நாயை உருவாக்கிக்கொள்ளவேண்டிய தேவை வேட்டைச்சமூகங்களில் இருந்தது. வேட்டைவிலங்கை மோப்பம் பிடித்துச் செல்ல, சிறு விலங்குகளை துரத்த, இரவில் கொலைவிலங்குகளில் இருந்து தூங்கும் மனிதர்களை பாதுகாக்க. பின்னர் மேய்ச்சல் சமூகங்களுக்கு மந்தைகாவலுக்கு அது தேவையாகியது. அதன்பின் வேளாண் சமூகங்களில் அது காவலனாகியது. நாய் இல்லையேல் மானுட நாகரீகம் இப்படி இங்கே வந்தடைந்திருக்காது.
இன்று, நாய்களின் உழைப்புத்தேவை முடிந்துவிட்டது என அவற்றை காட்டுக்கோ தெருவுக்கோ துரத்துவதென்பது அநீதி. இன்று நாய்களுக்கு முற்றிலும் புதிய ஒரு பணி அமைந்துள்ளது. என்றும் அந்தப் பணியை அது செய்து வந்தது. இப்போது அந்தப் பணி பலமடங்கு கூடியிருக்கிறது. மனிதனின் தனிமையில் மாறாத துணையாவது. மானுடனின் துணை என நாய் என்றுமிருக்கும். அவன் ஏறிச்செல்லும் எந்த சொற்கத்துக்கும் அது உடன் வரும். அதைத்தான் முதலில் விண்ணகத்துக்கு அனுப்பவேண்டும், அதன்பின்னரே நாம் செல்லவேண்டும் என்பது நம் மரபு நமக்குச் சொல்லும் நெறி.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் விழியிழந்தோரின் துணையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அவை ஒரு கணமும் விட்டுச் செல்வதில்லை. ஒரு கணமும் பேரன்பில் ஒரு துளி குறைத்து அளிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடவுளே உடனிருப்பதற்கு நிகர் நாய்கள் துணையிருப்பது.
லண்டனில் ஒருமுறை வாக்னர் இசைக்கோலம் ஒன்றை கேட்கும்பொருட்டுச் சென்றிருந்தேன். ஏகப்பட்ட நிபந்தனைகள். மென்மையான ரப்பர் செருப்புகள் அணிந்திருக்கவேண்டும், உடைகள் ஓசையிடக்கூடாது, கையில் சில்லறைக்காசுகள் சாவிக்கொத்துகள் போன்றவை இருக்கலாகாது, தும்மல் இருமல் இருந்தால் அனுமதி இல்லை என. ஆனால் ஒரு விழியிழந்தவர் லாப்ரடார் ரெட்ரீவர் நாயுடன் வந்திருந்தார். அப்படியே அச்சு அசலாக நான் வளர்த்த ஹீரோ. மின்னும் கருமுத்து.
என்னருகே அவர் அமர்ந்திருந்தார். நிகழ்வு முழுக்க அவர் அருகே அது அசையாமல் அமர்ந்திருந்தது. செவிகள் மட்டும் இசைக்கேற்ப அசைந்தன். இடைவேளையில் நான் அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். “இது சத்தம்போடாதா?” என்று கேட்டேன். அவர் வயலின் கலைஞர். “இசை என்றால் என்ன என அதற்குத் தெரியும்” என்றார். ஒரு ஒயின்குப்பி வாங்கி பாதி அதற்கும் அளித்து தானும் அருந்திவிட்டு மீண்டும் உள்ளே சென்றார். பலமடங்கு கூர்மையான காதுடன் அது கேட்பது என்ன இசை?
என் நாய் ஹீரோ இசையை விரும்பும். என்னைப்போல அதுவும் தாசேட்டனின் ரசிகன் என நான் நினைத்ததுண்டு. இசைகேட்கும் கணிப்பொறிக்கு கீழே கண்களைச் செருகிக்கொண்டு படுத்துக் கிடக்கும்.
நியூயார்க் நகரில் வீடிலிகள் பலர் நாயுடன் இருந்தனர். அவர்களின் அதிதீவிரத் தனிமையில் அது மொத்த சமூகமே உடனிருப்பதுபோல. சமூகம் அல்ல, இயற்கை. ஒரு வீடிலி தொப்பியை தெருவில் வைத்து அருகே “Two hungry stomachs” என்னும் அட்டையை நீட்டியிருந்தார். அருகே இருந்த லாப்ரடார் ரெட்ரீவர் “Oh, Not really!” என்று குஷியாக அமர்ந்திருந்தது.
ஒரு வீடிலியை நாய் “சோலி கெடக்குல்லா?” என்ற பாவனையில் கூட்டிச் சென்றது. என்னை பார்த்து “வெளியாளாக்கும்” என்னும் ஒரு நோக்குடன் கடந்து சென்றது. அதுவும் நல்ல வளப்பமான நாய்தான். ஜெர்மன் ஷெப்பர்ட்.“அந்த நாய் அவனுக்கும் சேர்த்து சம்பாதித்துத்தரும்” என்று பழனி ஜோதி சொன்னார். இந்தியாவிலும் பிச்சைக்காரர்களும் நாடோடிகளும் நாய்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் நடுத்தரவர்க்கத்தினராகிய நமக்குச் சமூகவாழ்க்கை மிகுதி. ஆகவே நாயின் அருமை தெரிவதில்லை. வெறும் காவல்விலங்காக மட்டுமே நாம் நாயை எண்ணுகிறோம். இந்தியாவில்தான் நாய் மிகமிக மோசமாக நடத்தப்படுகிறது. அதை வெறுக்கிறார்கள். “நாயே” என்பது இங்கே ஒரு வசை. மனிதனை விட மேலான ஓர் உயிர் எப்படி மனிதனை வசைபாடும் சொல்லாயிற்று?
நாயை எச்சிலுணவைப் போட்டு வளர்க்கிறார்கள். முழுநாளும் சங்கிலி போட்டு கட்டிவைக்கிறார்கள். தோன்றும்போதெல்லாம் அடிக்கிறார்கள். எதிரே வந்தால் வசைபாடுகிறார்கள், உதைக்கிறார்கள். அதைப்பார்த்து குழந்தைகள்கூட நாய்களை வதைக்கின்றன. பெரும்பாலான நாய்கள் அன்புடன் தாங்கிக்கொள்கின்றன. ஒரு நாயை அடிப்பதென்பது மகாத்மா காந்தியை அடிப்பதுதான். நம் குழந்தைகளுக்கு அது தெரிவதில்லை. எவரும் நாய்களைப் பராமரிப்பதே இல்லை. அனைத்துக்கும் மேலாக கொஞ்சம் அசௌகரியமென்றால் அடித்துத் துரத்தி தெருவில் அலைய விடுகிறார்கள்.
நான் அமெரிக்காவின் அழகென நினைப்பது அங்குள்ள வளர்ப்புநாய்கள். ஆடம்பரமாக நாய் வளர்க்கவேண்டுமென நான் சொல்ல மாட்டேன். அன்பாக வளர்க்கவேண்டும். அமெரிக்க நாய்கள் பெரும்பாலும் சரியாக வளர்க்கப்படுவதனால் நட்பானவை. நல்லது கெட்டது தெரிந்தவை. நாய் வளர்க்கும் அமெரிக்கர்கள் பெரும்பாலும் நட்பானவர்களாகவே இருக்கிறார்கள். நாய் அவர்களுக்கு அந்த நட்பை பயிற்றுவிக்கிறது.
அமெரிக்காவில் புதியவர்களுடன் ஓர் உரையாடலைத் தொடங்கச் சிறந்த வழி அவர் வளர்க்கும் நாய் பற்றி கேட்பதுதான்.சாலையில் கண்ட எந்த நாயும் என்னை நோக்கி ஒரு வாழ்த்து சொல்லாமல் போனதில்லை. நாயன்பர்களை நாய்களுக்குத் தெரியும். நாய்களைப் பார்க்கையிலெல்லாம் நான் நினைத்துக்கொள்ளும் நாய்க்கோட்டிகள் சிலர் உண்டு. பாலு மகேந்திரா, தியடோர் பாஸ்கரன், சுகா, ராஜீவ் மேனன், அழகம்பெருமாள், அனைவருக்கும் மேலாக ஹிந்து இதழின் கோலப்பன்.
நண்பர் ரஜினிகாந்த் ஃப்ளாரிடாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு பிரெஞ்சு சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாளிகையில் வசிக்கிறார். பெரிய தோட்டத்தின் எல்லையில் ஆறு நீர் நிரம்பி ஓடுகிறது. அது வீடு என்பதைவிட அரண்மனை என்றே சொல்லவேண்டும். பல அறைகள். பல கூடங்கள். இணைப்பாக வேலையாட்களுக்கான இடங்கள். அங்கே அவர் மனைவி அபி இந்தியச்செடிகளாலான ஒரு தோட்டம் வைத்திருக்கிறார்.
நாங்கள் இரண்டுநாட்கள் அவருடன் தங்கியிருந்தோம். அவர் வளர்க்கும் நாயின் பெயர் ‘வெற்றி’ .Goldendoodle வகையிலான நாய். பூடில் மற்றும் கோல்டன் ரெட்ரீவர் இன நாய்களின் கலப்பு. டூடிலை விட பெரிதாக வளரும். காது தழைந்து தொங்கும். பூடில் அவ்வளவு சூட்டிகையானது அல்ல. ஆனால் இந்த வகை நாய் லாப்ரடார் வகை நாய்களுக்குரிய எச்சரிக்கை, தர்க்கபுத்தி மற்றும் பிரமிப்பூட்டும் நினைவாற்றல் கொண்டது.
வெற்றி அழகான பொன்னிறம். இளம் வெள்ளைக்க்காரக் குழந்தையின் கூந்தல்போன்ற உடல். கைவிட்டு அளைந்து அளைந்து சலிக்கவே சலிக்காது. வெற்றிக்கும் எந்த நாயையும்போல மனிதர்கள் தொட்டுக்கொண்டிருப்பது பிடிக்கும். அந்த இல்லம் பழைய செவ்வியல் அழகு கொண்டது. மரநிறச் சுவர்கள், மரத்தரை, பொன்னிறமான இருக்கைகள். வெற்றி அங்கே மிக இயல்பாக ஒன்றுகலந்துவிட்டிருந்தான்.
பொதுவாக நாய்கள் குழந்தைகளைப் போல வீட்டுக்கு விருந்தினர் வருவதை விரும்பும். நிறைய விருந்தினர் வரும் வாடகைத் தங்குமிடங்களின் நாய்கள் மகிழ்ச்சியானவை. நான் செல்லும் டீக்கடைகளில் தெருநாய்களே என்னை வரவேற்பதுண்டு. எங்களை வெற்றி உற்சாகமாக வரவேற்றது. தான் எவ்வளவு நல்லவன் என்பதை நிலைநாட்ட முயன்றுகொண்டே இருந்தது.
இரண்டு நாட்களும் வெற்றி எங்கள் கூடவே இருந்தது. “சரி, அப்ப நாம வெளியே போவோம்” என்பதுதான் நிரந்தரமான முகபாவனை. ரெட்ரீவர் வகை நாய்கள் எப்போதும் வாயை திறந்திருக்கும். அது அவை சிரிப்பதுபோலத் தோன்றச்செய்யும். உமிழ்நீர்தான் அதன் குளிர்வித்தல் அமைப்பு. ஆனால் நாயின் உமிழ்நீர் மனிதனின் உமிழ்நீர் போல தீயபாக்டீரியா நிறைந்தது அல்ல. கெட்டவாடை அடிப்பதுமில்லை. வெற்றி கொஞ்சிக்கொண்டே இருந்தது, ஆனால் அடம்பிடிக்கவில்லை, தொந்தரவு செய்யவுமில்லை. நாம் கொஞ்சம் விலக்கினாலும் விலகிச் சென்று நம்மை நோக்கிக்கொண்டிருக்கும். நாம் பார்த்ததும் எழுந்து நம்மை நோக்கி வரும்.
வெற்றி என்பது ஒரு நாய்க்கு எவ்வளவு பொருத்தமான பெயர். கனடாவில் ஒரு நாய்க்கு சேரன் மகிழ் என்று பெயரிட்டிருந்தார். வெள்ளைக்காரியின் நாய். மேகிழ் என அவள் அதை அழைப்பதாகச் சொன்னார். வெற்றி கள்ளமற்றது, ஆகவே இனியது. இவ்வுலகின்மேல் நம்பிக்கை கொண்டது, ஆகவே அச்சமற்றது. வெற்றி ஒவ்வொரு கணமும் சூழலில் கலந்திருக்கிறது, ஆகவே தனிமையே அற்றது. வெற்றி தன்னலமற்றது, ஆகவே நிபந்தனைகளே அற்றது. வெற்றியும் நாம் இங்கு உணரும் அத்தனை நல்விழுமியங்களும் ஒன்றே.
ஃப்ளாரிடாவில் அவ்வளவாகக் குளிர் இல்லை. ஆனால் வெற்றி வகையான நாய்கள் ஆர்ட்டிக் குளிரையே தாங்குபவை. இந்தியாவில்தான் அவை மிகவும் துன்புறும். குளிரூட்ட அறையிலேயே வளர்க்கவேண்டும். உடலில் மயிர்ப்போர்வை சிடுக்காகி சடையாகாமல் பேணிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவில் தெருநாய்களிலிருந்து தொற்றும் பூஞ்சை, ஈஸ்ட், உண்ணிகள் ஆகியவை நாய்களை நோயுறச் செய்பவை. மிகக்கவனமாக இருந்தாகவேண்டும்.
அமெரிக்காவின் இல்லங்கள் பெரியவை. தெருவில் குறைந்த நேரமே மானுட நடமாட்டம். ஆகவே நாய்களைப்போல பெருந்துணை வேறில்லை. அதிலும் குழந்தைகள் வேலைநிமித்தம் பிரிந்தபின் வயதானவர்கள் நாய்களுடனேயே வாழ்கிறார்கள். நாய்களைப்போல அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உடனிருப்பது இன்னொரு உயிர் இல்லை. நாய் இருக்கும் இல்லத்திற்கு திரும்பி வருவது பேரானந்தம். அந்த வீடே நம்மைநோக்கி களிநடனமிடுவதுபோலிருக்கும்.
அமெரிக்காவிலிருந்து வந்தபின்னரும் நினைவில் ஆழமான நின்றிருப்பவன் வெற்றிதான். அன்பு என்பது இரு கண்களாக திரண்டிருந்தன. கள்ளமின்மையும் அன்பும் வேறுவேறல்ல. அவனுடைய ஊக்கம், நம்பிக்கை. நான் எப்போதுமே சொல்வதுதான். இந்த உலகம் முழுக்க நிறைந்துள்ள மாபெரும் உயிர்ப்பெருக்கின் மிகச்சிறிய துளிதான் நாம். அந்த உயிர்ப்பெருவெளி நமக்கு நுழைவாசல் அற்றது. ஆனால் ஒரே ஒரு சிறு ரகசியப்பாதை உண்டு, நாய்.
நம்மை ஒரு நாய் அடையாளம் காண்கிறது, நம்முடன் உரையாடுகிறது என்பது அழிந்த டைனோசர்களில் இருந்து சிற்றுயிர் வரையிலான இப்புவியின் மாபெரும் உயிர்க்குலமே நம்முடன் உரையாடுவதற்கு நிகர். அது பிரம்மத்தின் அணுக்கம் அன்றி வேறல்ல.
நியூயார்க் நகரில் நடக்கும்போது ஓரிடத்தில் பலர் அவரவர் நாய்களை கொண்டுவந்திருந்ததைக் கண்டேன். தற்செயலாகக் கூடுபவர்கள் அல்ல, நாய்களுடன் வரும் ஒரு நிரந்தரச் சந்திப்பு அது. ஒவ்வொரு நாயும் பரபரப்பாக இருந்தது. ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தது.
ஒரு குட்டி பூடிலுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. தரை, பெஞ்சு, மனிதர்கள் நாய்கள் எல்லாவற்றையும் முத்தமிட்டது. உடம்பெல்லாம் சந்தோஷம். ஒவ்வொரு மயிர்க்காலிலும் சந்தோஷம். எந்த தனிக்காரணமும் இல்லை. நாயாக இங்கே வந்ததே முதன்மைக் காரணம். மற்ற எல்லா உயிர்களையும் பிடித்திருக்கிறது என்பது இன்னொரு காரணம். அதைவிட படைப்புசக்திக்கு எப்படி ஓர் உயிர் தன்னை ஒப்புக்கொடுக்க இயலும்?
அதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.சட்டென்று உணர்ந்தேன், என்னுள் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது அவர்தான். மறைந்த பாகுலேயன் பிள்ளை எனக்கு சொத்து எதையும் விட்டுச்செல்லவில்லை. வாழ்நாள் முழுக்க என்னுள் நீடித்து, என் வாழ்க்கையை ஒளிமிக்கதாக்க்கும் நாய்ப்பிரியத்தை, அதன் வழியாக விலங்குகள் மீதான பெரும்காதலை அளித்துச் சென்றிருக்கிறார்.