ஒரு சிறு சிலந்தி

 

வாழ்விலே ஒருமுறை வாங்க

வாழ்விலே ஒருமுறை மின்னூல் வாங்க 

(வாழ்விலே ஒருமுறை நூலுக்கான முன்னுரை) 

வாழ்விலே ஒருமுறை என்பது அசோகமித்திரனின் புகழ்பெற்ற சிறுகதையின் தலைப்பு. அதை ஒரு நூலின் தலைப்பாக நான் வைத்துக் கொண்டேன். ஏனென்றால் இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. வாழ்விலே ஒருமுறை எவருக்கும் நிகழலாம் என்பதனால் இந்த தலைப்பு பொருத்தமாக இருப்பதாகப் பட்டது. இவை தீராநதி இதழில் தொடராக வெளிவந்தவை. அப்போது அசோகமித்திரனிடம் கேட்டுவிட்டு இந்த தலைப்பை போட்டேன்.

இக்கட்டுரைகள் அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை. இத்தகைய வடிவம் அன்று தமிழில் பரவலாக இருக்கவில்லை. இக்கட்டுரைகள் அவ்வகையில் முன்னோடி முயற்சிகள். சங்கசித்திரங்கள், நிகழ்தல், முகங்களின் தேசம்,  போன்ற நூல்களில் கட்டுரைக்கதை என்னும் அந்த வடிவை தொடர்ந்தேன்.

நான் எழுதவந்தபோது செய்த ஒரு இலக்கியப் பங்களிப்பு கட்டுரை – கதை இரண்டுக்குமான எல்லைகளை மழுங்கடிப்பது. அன்று உலகமெங்கும் அது நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு பின்நவீனத்துவப் போக்கு. என் கதைகளான ரதம், மூன்று சரித்திரக் கதைகள் போன்றவை கதையில் கட்டுரை வடிவை கொண்டவை. இவை கட்டுரையில் கதை வடிவை கொண்டவை. சுஜாதா இந்த வடிவை மிகவும் பாராட்டி அன்று எழுதியிருக்கிறார்.

நேரடி அனுபவத் துளிகள் இவை. அனுபவங்களிலிருந்து ஒரு அகநகர்வு நிகழ்ந்துள்ளமையால் கலையாகின்றன. ஆனால் ஒரு தீவிரமான சிறுகதைக்குரிய உள்ளடுக்குகள், உசாவல்கள் இவற்றில் நிகழவில்லை. ஆகவே சிறுகதைநோக்கிச் செல்லவில்லை. அனுபவத்தின் நம்பகத்தன்மை இங்கே கலை உருவாக்கும் மாற்றுலகின் நம்பகத்தன்மை என்னும் இடத்தை தான் எடுத்துக்கொள்கிறது.

இந்தக் கட்டுரைகளை திரும்ப வாசிக்கையில் என் முன் எழுந்து வருபவை முகங்கள். எழுதியவை மட்டுமல்ல, இன்னும் எழுதாதவையும்கூட. எனக்கு அறுபதாகிறது. நான் இளமையிலறிந்தவர்கள் ஒவ்வொருவராக மறைந்துகொண்டிருக்கிறார்கள். பல முகங்கள் என் நினைவிலேயே இன்று எஞ்சியுள்ளன. அனைத்தையும் அனைவரையும் பற்றி எழுதிவிடவேண்டும் என்னும் பெரும் உந்துதலை அடைகிறேன்.

இளமையில் அன்றாட அனுபவங்களாக தெரிந்தவை ஒவ்வொன்றும் இன்று ஆழமானவை ஆகிவிட்டன. ஒரு காலத்தில் இவர்களெல்லாம் மிகச் சாதாரணர்கள் என எண்ணியவர்கள் எல்லாருமே குறைந்தபட்சம் ஒரு கதையுடன் தென்படுகிறார்கள். மனிதர்கள் தேனீக்கள் போல. முதிய வயதில் அவர்களெல்லாம் கூடு திரும்புபவர்கள், உடலில் நிறைத்த தேனுடன்.

அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்கதைகள் எளிய மனிதர்களின் கதைகள். கதை என்றவகையில் அவர்களுள் எந்த வேறுபாடுமில்லை. மனிதர்களை கருவாக்கி இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் மாபெரும் கதை ஒன்று உள்ளது. அதன் ஒரு சிறுமூலையை தன் உயிர்ச்சத்தால் பின்னி விரிக்கும் சிறு சிலந்தி என என்னை உணர்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைபழ அதியமான்
அடுத்த கட்டுரைகாடு- பதிவுகள்