எழுத்தாளனின் முதல் வடிவங்களிலொன்று, குலப்பாடகன். சூதன், மாகதன் என சம்ஸ்கிருதம், Bard என ஆங்கிலத்தில். தமிழில் பாணன். உலகமெங்கும், தொல்குடிகளில் கூட குலப்பாடகன் இருக்கிறான். அக்குடியின் தொடர்வரலாற்றை பாடி நிலைநிறுத்துபவன் அவன். சொல்லப்போனால் வரலாறென்பதே அவன் சொல்வழியாக உருவாகி வருவதுதான்.
நான் என்னை ஒரு குலப்பாடகன் என்றே உணரும் தருணங்களுண்டு. ஆனால் குலத்தொடர்ச்சியை, இனப்பெருமையை பாடுபவன் அல்ல. சான்றோரைப் பாடுபவன். வீரகதைப் பாடகனும்தான். ஆனால் நான் பாடும் வீரர்கள் வன்முறையை கைக்கொண்டவர்கள் அல்ல. ஊழை எதிர்த்து நின்றவர்கள். பிறருக்காக வாழ்ந்தவர்கள்.
அத்தகைய நாயகர்களின் கதைகளே அறம் என்னும் கதைத்தொகுதியாயின. அக்கதைகள் இன்று உலகமெங்குமுள்ள வாசகர்களை மொழியாக்கம் வழியாகச் சென்றடைந்துகொண்டிருக்கின்றன. கதையாக அன்றி நினைவுப்பதிவுகளாக அரிய மனிதர்களைப் பற்றி ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. ’இவர்கள் இருந்தார்கள்’.
மாமனிதர்களின் வாழ்க்கைவரலாற்றுக் குறிப்புகள் வழியாக அவர்களை புனைவின் கலையொருமையுடன் முன்வைக்கும் கட்டுரைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு என் இணையப்பக்கத்தில் தொடராக எழுதினேன். இது அக்கட்டுரைகளின் தொகுப்பு. இது முதலில் உயிர்மைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கிழக்கு பதிப்பகம் வழியாக பல பதிப்புகள் வெளிவந்து இப்போது விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ளது.
நீண்டகாலம் முந்தைய நினைவு. காபிரியேல் என்னும் மூத்த காடோடியுடன் பலமுறை பேச்சிப்பாறை காட்டுக்குச் சென்றிருக்கிறேன். புல்வெட்டுபவர்களுடன் சென்று காட்டை வேடிக்கை பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒருமுறை என் வயதொத்த பயல்களுடன் சென்று, வழிதவறிவிட்டேன். சிறிய குளறுபடிதான். ஆனால் குமரியின் மழைக்காட்டில் அதுவே சாவைக் கொண்டுவந்து விடும்.
பதறிவிட்டேன். பதற்றம் மேலும் வழிதவறச்செய்தது. மூளை உறைந்துவிட்டது. எல்லா பக்கமும் பசுமையே இருளாக மாறிச் சூழ்ந்திருந்தது. ஆகவே திசைகள் இல்லை. பாதைகள் இல்லை. வான் இல்லை. பூமியும் இல்லை. பசுமை மட்டும். பசுமை என்றால் உயிர். உயிர் என்றால் நஞ்சும்கூடத்தான். மழைக்காடென்பது யானையின் அரசு. எக்கணமும் இருள் யானையென திரண்டு முன்னால் வந்து நிற்கலாம்.
நான் நேர் எதிர்த்திசையில் சென்றுவிட்டேன். மலையுச்சியைப் பார்த்தபோது மிகவிலகிவிட்டேன் என்று தெரிந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. அழுதபடி தவித்துச் சுற்றிவந்தபோது ஒரு காலடியை சேற்றில் பார்த்தேன். அது காபிரியேலின் காலடி என உடனே என் உள்ளம் உணர்ந்தது. அபாயங்களில் கூர்கொள்ளும் புலன்கள் பல மடங்கு ஆற்றல்கொண்ட கருவிகள்.
அந்த காலடிச்சுவட்டை உற்றுப்பார்த்தேன். அவர் எடைகொண்டு சென்றிருக்கிறார் என உணர்ந்தேன். அது ஒரு வழிகாட்டி போல ஒரு திசையைச் சுட்டிக்காட்டியது. அவ்வழியாக சென்றேன். மிக விரைவிலேயே பாதையை கண்டடைந்துவிட்டேன். என்னை மரத்தின்மேலேறி என் தோழர்களும் கண்டுகொண்டனர்.
முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகுவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவற்றிலுள்ளன ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை விட நமக்கு மதிப்பு மிக்கவை.
இந்தக் கட்டுரைக்கதைகளில் உள்ள வாழ்க்கையை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். ஆம், வாழ்க்கை என நீள்மூச்சுடன் சொல்லிக்கொள்கிறேன்.
ஜெயமோகன்
(விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள முன்சுவடுகள் நூலுக்கான முன்னுரை)