யானம் (சிறுகதை)

Janet Garcia

”இது இப்போதைக்கு நகராது” என்று கூகிளை பார்த்துவிட்டு ராம் சொன்னான்.

லட்சுமி ஸ்டீரிங்கில் விரல்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் பதற்றமாகவோ எரிச்சலாகவோ இருக்கும்போது அவள் விரல்களில் அந்த தாளம் இருக்கும். பொதுவாக மலையாளிaகள் அனைவருக்குமே விரல்களில் தாளம் இருக்கிறது. செண்டை, திமிலை, தாயம்பகை, இடைக்கா என அங்கே தாளவாத்தியங்கள் ஏராளம்.

சாலை கார்களால் நிறைந்திருந்தது.  அவர்களின் காரின் இருபக்கமும் நெருக்கமாக கார்கள். வலப்பக்கக் காரில் தாடைக்குக் கீழே தவளை மாதிரி மோவாய் உப்பிய ஐம்பது வயது வெள்ளையன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி அவனருகே அமர்ந்திருந்த அதேபோன்று தாடையும் கழுத்தும் கொண்ட தடித்த பெண்ணிடம் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தான். இடப்பக்கக் கார் சற்று முன்னாலிருந்தது. அதில் ஒரு கருப்பினத்தவன் இருப்பது சுருட்டைத்தலைமுடியால் தெரிந்தது.

ராம் பொறுமையிழந்து கால்களை நீட்டி கைகளை தூக்கி சோம்பல் முறித்தான். பின்னிருக்கையில் முகுந்தும் சுருதியும் கம்பிளியைப் போர்த்திக்கொண்டு தூங்கினர். அவர்களின் மூச்சொலிகள் கேட்டன.

“என்ன காட்டுது?” என்று லட்சுமி கேட்டாள்.

“இப்பதானே பாத்தேன்…லாக்ட்…அசைவே கெடையாது…”

“என்ன பண்றது?”

“ஒண்ணும் பண்ணமுடியாது….நகரமுடியாது. நம்மள மாதிரி ஆயிரக்கணக்கானபேர் ரோட்ல சிக்கி நின்னுட்டிருக்கான். அதை நினைச்சு சமாதானமாயிடவேண்டியதுதான்…”

“அதிலே என்ன சமாதானம்?” என்று லட்சுமி உதட்டைச் சுழித்தாள்.

“இத்தனைபேர் மாட்டியிருக்காங்கன்னா ஏதாவது பண்ணுவாங்க”

“யார்?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆயிரம்பேர் போகவேண்டிய ரோடு….அதிலே லட்சம்பேரு திடீர்னு கிளம்பிட்டாங்கன்னா யாரு என்ன பண்ணமுடியும்?” என்றாள்

“ஏதாவது பண்ணியாகணுமே?”

“ஆக்ஸிடெண்டுன்னா ஹெலிகாப்டர் கொண்டுவந்து தூக்கிடுவான்…இது அப்டியும் தெரியலை”

கார்கள் கொஞ்சம் நகர்ந்தன. அதுவே ஓர் ஆறுதலை அளித்தது. உறைந்து நின்றிருந்த உள்ளம், காலம் எல்லாம் அசைவுகொள்வதுபோல.

கார்கள் நகர்வதுபோல ஓர் அசைவை காட்டி மீண்டும் உறைந்தன. “ப்ச்” என்று லட்சுமி சலிப்பொலி எழுப்பினாள். கைகளால் தாளம் போட்டாள். கூந்தலை நீவி பின்னால் ஒதுக்கிக்கொண்டாள்.

ராம் மீண்டும் சோம்பல் முறித்து “மூணுமணி நேரமா ரோட்லயே இருக்கோம்” என்றான்.

“இந்த ரோட்டிலே எப்டியும் மாசத்துக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆயிடுது” என்று லட்சுமி சொன்னாள். “எட்டு பட்டை ரோடு…எல்லா இடத்திலேயும் மேம்பாலங்கள்…அப்றமும் என்னாகுதுன்னே தெரியலை”

“வேணும்னே கொண்டு போயி சாத்துவானுக போல….சிலசமயம் மண்டைக்குள்ள அப்டி ஒரு தினவு வந்திடுது…  அக்ஸிலேட்டரை மிதிச்சு அப்டியே கொண்டுபோயி எங்காவது அறைஞ்சிரணும்னு…”

அவள் திகைப்பு கொள்ளவோ திரும்பிப் பார்க்கவோ இல்லை. கண்ணாடி வழியாக முன்பக்கம் நீண்டு சென்றிருந்த கார்வரிசையை பார்த்தபடி பேசாமலிருந்தாள்.

“நூறு வாட்டியாவது அக்ஸிலேட்டரை மிதிச்சிருப்பேன். ஒரு செகண்ட், என்னென்னமோ வந்துபோகும்….மனசு ஒரு மிஷின்ஹேண்ட் மாதிரி மாறி வந்து உடம்பை புடிச்சு தடுத்திரும்”

அவள் அவனை நோக்கி திரும்பவில்லை

“புள்ளைங்க நினைப்புகூட அப்ப மனசிலே வர்ரதில்லை. என்னைப் பத்திக்கூட இல்லை. ஃப்யூச்சர் லைஃபை பத்திக்கூட இல்லை… இருக்கணும்ங்கிற ஒரு வேகம் மட்டும்தான்… அதான் அடிப்படையானதுன்னு நினைக்கிறேன். எல்லா உயிருக்கும் அதானே ஆதாரம்?”

கார் சிறு உந்துதலுடன் முன்னகர்ந்தது. பின்பக்கம் சுருதி ஏதோ முனகியபடி அசைந்து படுத்தாள்.

“ஆனா ஏன் அந்த தற்கொலை நெனைப்பு வருது? அதைத்தான் நான் நினைச்சுக்குவேன்…பிரச்சினைன்னு ஒண்ணுமே இல்லை. ஆனா அதான் சிக்கலே… எந்தப் பிரச்சினையும் இல்லைன்னா சலிப்புதான் பெரிய பிரச்சினையா ஆயிடுது… பணப்பிரச்சினையோ உடம்புப்பிரச்சினையோ இருந்தா அதுவே வாழ்க்கையை நிறைச்சிரும். போராட்டம், கொஞ்சம் ரிலீஃப் அப்டீன்னு வாழ்க்கை ஓடிரும்” என்று ரவி சொன்னான்.

ஏன் இதையெல்லாம் பேசுகிறோம் என்று தோன்றியது. ஆனால் பேசுவதன் வழியாக சென்றுகொண்டிருக்கும் உணர்வு உருவாகியது. “சலிப்பு அப்டி ஒரு மனநோய் மாதிரி ஆயிடுமான்னு கேட்டா ஆகும். இப்ப கார்கள்லாம் நூறுமைல் ஸ்பீடுக்கு போய்ட்டா மிகப்பெரிய பிரச்சினையே காத்தோட தடைதான். காத்து ஒரு சுவர் மாதிரி கெட்டியா ஆயிடும். கார் அதை கிழிச்சுட்டு முன்னால்போகணும்”

லட்சுமி கியரை விடுவித்து காரை மேலும் கொஞ்சம் நகர்த்தினாள்

“இந்தியான்னா இந்நேரம் ஹாரன் அடிச்சே நாறடிச்சிருவான். இங்க அவனவன் உள்ளுக்குள்ள இருந்து கெட்டவார்த்தை சொல்றான். வெளியே எல்லாம் அமைதியா இருக்கு” என்றான் ராம் “இன் ஃபாக்ட் அதான் பிரச்சினையே. இந்த டிசிப்ளின், ஒழுங்கு, அமைதி…இதான் மனுஷனை மனநோயாளி ஆக்குது… மெட்ராஸ் மாதிரி கத்திக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினா பாதிப்பிரச்சினை சால்வ் ஆயிடும்போல…”

அவள் கவனிக்காதது போல் இருக்க ,அவன் வெவ்வேறு வண்ணங்களில் அரையிருட்டில் மின்னியபடி சென்ற கார்களைப் பார்த்தபின் சொன்னான் “இங்க கார்களுக்கே மனநோய்னு தோணுது..ஆரனே அடிக்காம இருந்தா கார்களுக்கு டிப்ரஷன் வந்திரும்…”

அவன் அவளை கவனிக்காமல் வெளியே பார்த்து பேசினான். “ஒரு ஆக்‌ஷன் படத்திலே வந்த வசனம் ஞாபகம் வருது…ஒவ்வொரு காரும் ஒரு வெடிகுண்டு…. மொத்தமா வெடிக்காம துளித்துளியா வெடிக்கிறதுதான் அதோட எஞ்சினோட ஆப்பரேஷன்…”  புன்னகைத்து “அமெரிக்காவிலே கார்கள் வெடிச்சு சிதறாத ஆக்‌ஷன் சினிமாவே இல்லை. ஒரு நாளிலே எப்டியும் நாலைஞ்சு கார் வெடிக்கிறத ஸ்கிரீனிலே பாத்துடறோம்” என்றான்

லட்சுமி “இப்ப என்ன காட்டுது?” என்றாள்.

அவன் பார்த்துவிட்டு “அதேதான்…ஒண்ணும் பாஸிட்டிவா இல்லை…ஆமா, ஆக்ஸிடெண்ட்தான் ஆகியிருக்கு” என்றான்.

“நெனைச்சேன்” என்று அவள் சொன்னாள்.

அவள் முகத்தை பார்த்தான். அவள் சாலையில் நின்ற கார்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இந்தக் கார்தான் உண்மையிலே பிரச்சினை… அமெரிக்காவிலே ஜனங்கள் வாழ்க்கையிலே நேர்ப்பாதி நேரத்தை கார்களுக்குள்ள செலவிடறாங்க… நாடு ரொம்பப் பெரிசு. வீடுகள் பெரிசு… ஆனா நம்ம வாழ்க்கை நடக்கிறது பெரும்பாலும் இந்த சின்னச்சின்ன கார்களுக்குள்ள…. ” அவன் சிரித்து “வேடிக்கையாத்தான் இருக்கு. ஒரு சயன்ஸ்ஃபிக்‌ஷன் மாதிரி யோசிச்சுப் பாக்கலாம். மக்கள் இப்டி சின்னச்சின்ன ஃபைபர் குமிழிகளுள்ள ஒண்டிக்கிட்டு வாழ்க்கையைச் செலவிடுவாங்கன்னு முந்நூறு வருஷம் முன்னாடி நம்ம முப்பாட்டன்கிட்ட சொல்லியிருந்தா வெடிச்சுச் சிரிச்சிருப்பாரு….”

கார் மெல்ல உருண்டு உருண்டு சென்றுகொண்டிருந்தது. அது நகர்வதே ஆறுதலை அளித்தது. அவன் பேசாமல் அமர்ந்திருந்தான். ஆனால் இருபக்கமும் இருந்த இரண்டு கார்களும் மாறாமலிருந்தன. கருப்பினத்தானின் முகம் தெரிந்தது. நடுவயதானவன். மெல்லிய மீசை வைத்திருந்தான்.

“கார்களுக்குள்ள உக்காந்துட்டு ரொம்ப வேகமா ரொம்ப தூரமெல்லாம் போகறதா நினைச்சிட்டிருக்கோம்… நாம எங்கேயுமே போகலை…இந்த ஃபைபர் உருண்டைக்குள்ளேயே தான் உக்காந்திட்டிருக்கோம். விண்டோஸ்ல சீன் மாறிட்டிருக்கு, அவ்ளவுதான்”

மீண்டும் வரிசை உறைந்தது.

“நான் வாய வச்சிருக்கக்கூடாதோ” என்று அவன் சிரித்தான்

லட்சுமி சிரிக்கவில்லை.

“ஊர்ல படிக்கிற காலத்திலே கார்னா மோகம். எல்லா பிராண்ட் காரையும் அசப்பிலே பாத்தாலே தெரிஞ்சுக்கிடுவேன். சொந்தமா ஒரு கார் வாங்கணும்கிற கனவு அப்டி ஒரு தீவிரத்தோட இருந்தது… இப்ப நான் வெறுக்கிற ஒண்ணு உண்டுன்னா இந்த கார்தான்… ஆனா கார்லதான் வேலைக்கு போயாகணும்…கார்லயே சாப்பாடு தூக்கம்… காருக்குள்ள ஷிட் அடிக்கிற வசதி மட்டும்தான் வரலை… லிமசோன்ல அதுவும் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்”

“எவ்ளவு கார்” என்று லட்சுமி தனக்குள் முனகலாகச் சொன்னாள்

“லாங் வீக்கெண்ட்னா கெளம்பிடறாங்க” என்று ராம் சொன்னான். “சரி, நாமளும் அப்டித்தான் கெளம்பினோம். வேற வழியில்லை. ஒவ்வொரு லாங் வீக்கெண்டுக்கும் இதுங்க ஏதாவது பிளானை போட்டிருதுங்க… என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

”அவங்களுக்கும் போர்டம்தான் போல”

“யா… அமெரிக்காவோட தேசியப்பிரச்சினையே போர்டம்தான்… வேலையிலே மூழ்கணும். இல்லேன்னா பணம் செலவழிக்கணும்… சம்பாதி, செலவழி… ரெண்டே வழிதான்”

லட்சுமி ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து மார்பில் கட்டிக்கொண்டாள். கார் மெல்ல முன்னகர்வதுபோல் இருந்தது. ஆனால் அது மனப்பிரமைதான், நகரவில்லை.

“ராம்” என்றபோது அவள் குரல் வெளிவரவில்லை. இருமுறை செருமிக்கொண்டு “ராம், நான் உங்கிட்ட பேசணும்” என்றாள்.

“என்ன புதிசா? அதான் பேசிட்டே இருக்கோமே”

“ஐயம் பிளானிங் டு லீவ்”

ராம் “அதே மாதிரித்தான் காட்டுது கூகிள்…ஒண்ணுமே நடக்கலை” என்றான்

“நான் சொல்றத கவனிச்சியா?”

“என்ன?”

“சொன்னேனே, நான் போறதா இருக்கேன்”

“எங்க?”

அவள் அவனை திரும்பி கூர்ந்து பார்த்து ”மடையன் மாதிரி நடிக்காதே…நான் சொல்ல வர்ரது என்னன்னு உனக்குத் தெரியும்” என்றாள்.

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. அவன் உள்ளம் செயலிழந்தது.

”பிரபா சொன்னான், அவனாலே இனிமே காத்திருக்க முடியாது….வர்ரியா இல்லியான்னு கேட்டான். நான் வரேன்னு சொல்லியாச்சு”

அவன் தோள்கள் தொய்ந்தன. இருக்கையில் உடல் அழுந்தச் சாய்ந்தது.

“இப்ப உனக்கு மலையாளத்தான் கேக்குது…இந்த வயசிலே… உன்னைவிட அவனுக்கு எட்டு வயசு கம்மி…”

“ஷட் அப்… அதெல்லாம் உனக்கு எதுக்கு?”

“நீ முட்டாள்… அவனுக்கு ஒழுங்கா வேலையில்ல. உன்னைவிட பாதிச்சம்பளம் அவனுக்கு”

”இதோபாரு, நாம இதை நிறையவே பேசியாச்சு”

“சரி, போ”

“ஓகே”

காரை கிளப்புவதுபோல அவள் ஏதோ செய்தாள். ஆனால் கார் வரிசை நகரவே இல்லை.

“ஆனா பின்னாடி ரெண்டு படுத்திருக்கே… அதுகளை என்ன பண்ணப்போறே?”

“ஹாஸ்டலிலே விட்டுடலாம்”

“ரைட்… அப்ப அவங்ககிட்ட நீயே பேசிடு”

“நான் எதுக்குப் பேசணும்?”

“பின்ன நானா பேசணும்? ஓடிப்போறவ நீ”

“ஷட் அப்…. என்ன பேசுறே நீ? யாரு ஓடிப்போறது? நான் லீகலா பிரிஞ்சுபோறேன்”

”அப்ப அதை நீயே உன் குழந்தைகள்கிட்ட சொல்லிடு…”

“உன் குழந்தைங்க கெடையாதா?”

“என் குழந்தைங்களும்தான்… நான் பிரிஞ்சுபோறதானா நானே அவங்க கிட்ட சொல்வேன்”

“ஏலைன் கிட்ட உனக்கு ரிலேஷன் இருந்ததைச் சொல்லவேண்டியதுதானே?”

“ஏன் சொல்லணும்? நான் என்ன பிரிஞ்சா போனேன்?”

“நீ அயோக்கியன்… நீ சீட் பண்ணினே… நான் நேர்மையா சொல்றேன்”

“யெஸ், நேர்மையா அவங்ககிட்ட நீயே சொல்லிடு”

அவள் மீண்டும் ஸ்டீரிங்கை பிடித்து அதில் தாளம்போடலானாள்.

“இப்ப நீ யோசிக்கிறேல்ல, அதான் நானும் யோசிச்சேன். என்னாலே அவங்கள ஃபேஸ் பண்ண முடியாது”

அவள் உதட்டைச் சுழித்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தாள்.

“இங்கேயே பிறந்து வளந்த குழந்தைங்க… ஆனா அவங்க வெள்ளைக்காரங்க இல்ல. அவங்களோட சர்க்கிள் முழுக்க இண்டியன்ஸ்தான்… நாம அவங்களை அப்டித்தான் வளத்திருக்கோம்…”

“நான் சொல்லத்தான் போறேன்…”

‘சொல்லு…” என்று ராம் சொன்னான். “முடிஞ்சா சொல்லு. எல்லாம் சரியா முடிஞ்சா நல்லதுதானே?”

கார் மீண்டும் நகர தொடங்கியது. அரைமணி நேரத்துக்கும் மேல் உருண்டு உருண்டு சென்றது. அந்த நகர்வு இல்லை என்றால் காரை உடைத்து வெளியே பாய்ந்துவிடுவோம் என அவன் நினைத்தான்.

மீண்டும் கார் நின்றபோது அவன் அவள் நெற்றியில் நீலநரம்புகள் புடைத்திருப்பதைக் கண்டான்.

“லுக், பிரச்சினை அவங்க இல்ல, நாமதான்.  நீ அதைச் சொன்னா அவங்களாலே சாதாரணமா எடுத்துக்க முடியாது. அவங்களோட படிப்பு எதிர்காலம் எல்லாம் நாசமாயிடும். அதைப்பத்தி வெள்ளைக்காரன் கவலைப்பட மாட்டான். நாம கவலைப்படுவோம். நம்மாலே குற்றவுணர்ச்சி இல்லாம இருக்கவும் முடியாது.”

அவள் பெருமூச்சுடன் உடல்தளர்ந்தாள். தலை ஸ்டீரிங் நோக்கி தழைந்தது, தூக்கம் தள்ளுவதுபோல.

“நம்ம அப்பா அம்மாக்களும் ஒண்ணும் சந்தோஷமா இல்லை. எங்கம்மா எல்லாத்தையும் சகிச்சுட்டு வாழ்ந்தது எனக்காக… அதே விதிதான் நமக்கும். ஏன்னா நாம இண்டியன்ஸ்… அமெரிக்கா வந்து காருக்குள்ளே உக்காந்துட்டா மட்டும் நாம லிபரேட் ஆயிட மாட்டோம்”

“லிபரேஷன்” என்று அவள் மூச்சுக்குள் சொன்னாள்.

”ஆமா, லிபரேஷன்தான்…  பாண்ட் இருந்தா லிபரேஷன் இல்லை…. பாண்டை உதறுறதுதான் லிபரேஷன்… பாசம், அன்பு எல்லா செண்டிமெண்டுகளிலே இருந்தும் விடுதலை… ஃப்ரீடம்னா என்ன? ஃப்ரீடம்னா லோன்லினெஸ்… வெள்ளைக்காரனுக்கு அதுக்கான துணிச்சல் இருக்கு. நமக்கு இல்லை. நாம கோழைங்க. நமக்கு எதையுமே விட முடியாது. ஆனா விடுதலையும் வேணும்…நாம அறிஞ்ச விடுதலை எல்லாமே டே டிரீமிங் மட்டும்தான்”

“நான் போகலை…” என்று அவள் சொன்னாள். “என்னாலே குழந்தைங்க கிட்ட சொல்ல முடியாது. அட்லீஸ்ட் அவங்க யூனிவர்சிட்டி போறது வரைக்காவது”

“குட்” என்று அவன் புன்னகைத்தான்.

“ஆனா நான் பிரபா கூட போவேன்…அவன்கூட இருப்பேன்”

“யூ…” என்று அவன் திரும்பி அவளை நோக்கி அறியாமல் கைதூக்கினான்

“ம்ம்” என்று அவள் உறுமினாள்.

அவன் கையை தாழ்த்தினான். உடல் பதற வெறிகொண்டவன்போல கதவைத் திறக்க முயன்றான். ஆனால் பக்கவாட்டுக் கார் மிக அருகே நின்றிருந்தது. அவன் சோர்வுடன் தலையை பற்றிக்கொண்டான்

“இந்தப் பக்கம் என்னாலேயும் இறங்க முடியாது…” என்று அவள் சொன்னாள்.

ராம் ஒன்றும் சொல்லவில்லை.

“இது ஒண்ணுதான் வழி… நான் அவன்கூடயும் இருப்பேன். நீ சொன்னது சரி. அவனுக்கு என்னோட பணம் தேவை. நான் சொல்ற கண்டிஷனுக்கு அவன் சம்மதிப்பான்”

“கோ டு ஹெல்” என்று ராம் சொன்னான்.

“தேங்க்யூ” என அவள் புன்னகைத்தாள். அவளுக்குள் ஒரு வஞ்சம் கொண்ட மகிழ்ச்சி உருவாவதை முகம் காட்டியது. மலர்ந்தபடியே சென்றாள்.

அவன் அவளை பார்ப்பதை தவிர்த்து பக்கவாட்டில் பார்த்தான். வெள்ளையன் அப்போதும் அந்தப்பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்தான்.

“ஒரு சீக்ரெட் இருந்தா நல்லதுதான்…லைஃப் கொஞ்சம் சுவாரசியமா ஆயிடும்” என்று அவள் சொன்னாள்

“ஷிட்” என்று அவன் சொன்னான்.

அவள் மெல்ல காரை நகர்த்தினாள். சாலையில் பதிந்திருந்த அவள் முகம் அமைதியடைந்திருந்தது. நீண்ட நேரம் கார் சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது. மீண்டும் நின்றது.

“என்ன சொல்றான்?” என்று லட்சுமி கேட்டாள்.

அவன் பார்த்துவிட்டு ”ஒண்ணும் போடலை…எவ்ளவு நேரமாகும்னே தெரியலை” என்றான்.

(காலம் இதழ் (கனடா) டிசம்பர் 2023)

முந்தைய கட்டுரைநீலி பிப்ரவரி இதழ்
அடுத்த கட்டுரைகொஞ்சம்பித்து – கடிதம்