மழைப்பாடல் – சத்யஸ்ரீ

வெண்முரசு நூல்கள் வாங்க

வெண்முரசு மின்னூல்கள் வாங்க 

ஆயிரம் பக்கங்களைத் தாண்டிய பாகம். இவ்வளவு நீளமான புத்தகத்தை இவ்வளவு சீக்கிரம் படித்து முடித்ததில்லை நான். முதல் பாகத்தை விட இது படிக்க இன்னமும் சுவாரசியமாக இருந்தது. மகாபாரதத்தின் மீது உங்களுக்கு இயல்பான ஈர்ப்பு இருக்கவேண்டியது அவசியம், இதை படித்து ரசிக்க. ஆனால் அதே சமயம் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். வெண்முரசில் தனது கற்பனைகள் பலவற்றைச் சேர்த்தே பயணம் செய்திருக்கிறார் ஜெ.மோ. அதையோ அவரையோ ‘தீர்ப்பு எழுதும்’ பாவனையில் இல்லாமல் சற்று தள்ளி நின்று படிக்க முடிந்தால், உங்களால் அவர் கற்பனை செய்த உலகில் முழுமையாகச் சென்று திரும்ப முடியும். அவ்வாறுதான் என்னால் சென்று திரும்ப முடிந்தது.

இதில் இடம்பெற்ற முக்கிய வசனங்களையே ஒரு தனிப் பதிவாக எழுதலாம்.

திருதராஷ்டிரனும் பாண்டுவும் பருவ வயதை அடையும்போது இந்த பாகம் தொடங்குகிறது. விதுரனும்தான்.

எங்கு முடிகிறது என்று சொல்லி ஆர்வத்தை உடைக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் விரிவான விமர்சனம் எழுதலாம்தான். எல்லோரது நேரத்தின் முக்கியத்துவம் கருதி சுருங்கக் கொடுத்திருக்கிறேன், அதுவே நீண்டுவிட்டது !!

  1. அஸ்தினபுரியின் நிதிநிலமை, சுங்கவரி நிலமை பற்றி விதுரன் களஞ்சியக் காப்பாளர் மற்றும் வரித்தொகுப்பாளரிடம் நடத்தும் உரையாடலின் மூலம் ஜெமோ நாட்டின் சூழல் பற்றி பல விஷயங்களை நன்கு விளக்குகிறார். செல்வம், மக்கள் தொகை, உழைப்பின் விளைவு, வீரர்கள் மற்றும் உழைப்பாளர்கள் விகிதம் போன்ற பலப்பல காரணிகளை விளக்கி ‘போர்’ என்பதன் மூலத்தேவை வரை ஆராய்கிறார்.
  2. அம்பாலிகையின் பக்குவமில்லாத பேச்சு, நடத்தையை சுவாரசியமாக விளக்குகிறார். அதே சமயம் இறுதி அத்தியாயங்களில் அம்பாலிகையிடம் காணும் மாற்றங்களையும் நயம்பட விளக்குகிறார்.
  3. மகாபாரதத்தை முதன்முதலாகப் படித்தது முதல் எனக்குப் பிடித்த முதல் கதாபாத்திரம் — விதுரன் !! அவரது அறம், அறநெறி, அரசாளும் முறை, தீர்க்கதரிசி பார்வை, போன்ற பல திறன்களும் குணங்களும் கவர்ந்தன. ஆனால் மகாபாரத புத்தகங்களின் நீளத்தைச் சுருக்கவேண்டி விதுரனின் பகுதிகள் மிகக் குறைவாகவே இடம்பெற்றிருக்கும். அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் ஜெமோ. எந்தப் பிரச்சனையை ராஜதந்திரத்துடன் விதுரன் எப்படிக் கையாள்கிறார் என விலாவாரியாக விவரித்திருக்கிறார்.
  4. திருதராஷ்டிரியன் அரியணை ஏறப்போகும் அத்தியாத்தின் பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அதிலும் சகுனியை பீஷ்மர் அடக்கும் நிகழ்வுகள். பீஷ்மரின் எண்ண ஓட்டங்களை ஜெமோ, பீஷ்மர் இடம்பெறும் அத்தியாயங்களில் எல்லாம் ஆழமாக விவரிக்கிறார். சகுனி, சத்யவதி, விதுரன், குந்தி, பாண்டு போன்ற பலரின் எண்ண ஓட்டங்களையும் விட்டுவிடாமல்.
  5. மகாபாரதத்தில் பல சமயங்களில் பலர் ராஜதந்திரத்துடன் சிந்தித்து செயல்பட்டிருப்பார்கள். அதில் பலவற்றை மேலோட்டமாகத்தான் படித்திருப்போம். இதில் தன் கற்பனையால் ஜெமோ அத்தகைய ராஜதந்திரங்கள் பலவற்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். உதாரணங்கள் — (1) நாகசூதனிடம் சகுனி கதை கேட்டபின் அதைப்பற்றி தன் தமையர்களிடம் நிகழ்த்தும் உரையாடலும் அவர்களின் பதிலும்.(2) காந்தாரத்துடன் மண உறவு வேண்டும் என்பதற்கு சத்யவதியும் விதுரனும் அடுக்கும் காரணங்களும், அதைத் தவிர்க்க பீஷ்மர் சொல்லும் காரணங்களும். (3) மார்த்திகாவதியின் எதிர்காலம் குறித்து பிருதை (குந்தி) சிந்தித்து எடுக்கும் முடிவும், அதை தன் தந்தை அரசர் போஜராஜரிடமும் அமைச்சர்களிடமும் உரைக்கும் நிகழ்வும்….
  6. மன்னித்து பெருந்தன்மையைக் காட்டும் குணத்தால் தன் பெண்மையின் மேன்மையை காந்தாரி காட்டும் காட்சி அருமை… தன்னை மணக்கச் சம்மதிக்காத மகத அரசனின் தூதுக்கு பதில் நடவடிக்கை தன் பெண்மைக்குப் பெருமை சேர்ப்பதுபோல் இருக்க விழையும் அவளின் விருப்பம் அருமை.
  7. திருதராஷ்டிரனின் அக உலகத்தில் இப்புதினம் நிறையப் பயணிக்கிறது. அவனை அவனது அகத்தை முழுதும் காந்தாரி படிப்படியாக அறியும் தருணங்கள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
  8. பாண்டுவைப் பற்றி பொதுவான மகாபாரத நூல்கள் அவ்வளவாக விவரிப்பதில்லை. அவனது அகத்திற்குள் எவையும் சென்று பார்த்ததேயில்லை. அம்மாபெரும் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் ஜெமோ. பாண்டுதான் பிற்பாதி அத்தியாயங்களை முழுதுமாக ஆக்கிரமித்திருக்கிறார். அவரது உலகம், அகம் எல்லாம் ஒட்டுமொத்தமாக நம்மை ஆட்கொள்கின்றன.
  9. மணம் முடிந்து திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் அனைவரும் காந்தாரத்தில் இருந்து அஸ்தினபுரிக்குப் பயணப்படுவது விரிவாக அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வசுதேவன் மற்றும் குந்தியின் சிறு வயது முதல் குந்திக்கு மணம் ஆகும் வரையிலான காலகட்டங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சுவாரசியமாக உள்ளன. அரசியல் சூழ்ச்சிகள் ஏதும் அறியாத மிக எளியவராக மட்டுமே இதுவரை நாம் அறிந்திருந்த (கிருஷ்ணரின் தந்தை) வசுதேவரைப் பற்றிய விரிவான அத்தியாயங்கள் சுவாரசியமாக உள்ளன (அவை எல்லாம் உண்மையா என்ற ஆராய்ச்சியில் இறங்க விருப்பமில்லை). குந்தியின் அரசியல் நிலை, எண்ணங்கள், மேலாண்மை, மனப்பாங்கு எல்லாம் அருமையாக உரைக்கப்பட்டுள்ளன.
  10. அதுவரை பதுமைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்த அம்பாலிகை தன் மைந்தனுக்கு முடிசூடல் இன்றி திருதராஷ்டிரனுக்குச் சூடப்படும்போது, தன் மைந்தன் கௌரவமாக பிறரை அண்டி வாழாமல் இருப்பதற்கான தீர்வை, விதுரனையும் மிஞ்சி, பலப்பல கோணங்களில் ஆராய்ந்து முன்வைப்பதில் இருந்து உயர்ந்து நிற்கிறார். அந்த நிகழ்வுகளில் இருந்து அறிய முடிவது ஒன்றுதான் — ஒரு தாய் நினைத்தால் தன் மக்களுக்கான உரிமையை நிலைநாட்ட எவ்வளவு தூரமேனும் போராடுவாள் !!
  11. தன் மகனுக்குரிய நிலம் வழங்கப்படவேண்டும் என்று அம்பாலிகை விதுரனிடம் சொன்னபிறகு, மந்தண அவை கலந்துரையாடலுக்கு சாதுர்யமாக திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரை வரவழைத்து, நிலத்தைப் பகிர்ந்தளிப்பது பற்றிய பேச்சை லாவகமாக ஆரம்பித்து வைத்து எல்லோரது கவனத்தையும் அந்த விஷயத்தை நோக்கி மடைதிருப்பி, சுமுகமாக அதை முடித்து வைத்ததன் மூலம், தன்னைவிடச் சிறந்த அரசியல் மதியூகி வேறொருவர் இருக்கமாட்டார் என நிரூபித்திருக்கிறார் விதுரன். அந்நிகழ்வுகள் அனைத்தையும் யூகித்து எழுதியதில் வென்றிருக்கிறார் ஜெமோ.
  12. திருதராஷ்டிரனுக்கு மணிமுடி சூட நடைபெறும் முயற்சிகளைப் பற்றிய அத்தியாயங்களின் விரிவான விவரிப்புகள் அசத்துகின்றன. பீஷ்மர் எல்லா உணர்வுகள், பரிமாணங்களிலும் உயர்ந்துவிடுகிறார்.
  13. வெய்யோனின் கதிர்கள் படாமலே இருந்த பாண்டு, வனம் புகுந்தது முதல் முழுமுதல் மானிடனாக சுற்றித் திரிவது இனிய திருப்பம். ஒரு கட்டத்தில் அவரது நோய் பற்றியே நாம் மறந்துவிடும் அளவுக்கு இயல்பாகிவிடுகிறார், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையால்.
  14. குந்தி மாபெரும் ஆளுமை கொண்டிருக்கிறார், அவர் அறிமுகம் ஆகும் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை. ஒவ்வொரு சிறு தடையையும் கடக்க அவரது ஆளுமை எப்படி யோசிக்கிறது என்று அவரது அகத்தினுள்ளேயே நம்மை அழைத்துச் செல்கிறார் ஜெமோ.

இலக்கியம் பிடித்தவர்கள்…..

மகாபாரதம் பிடித்தவர்கள்…..

புதினம் பிடித்தவர்கள்…..

இயற்கை பிடித்தவர்கள்…..

வரலாறு பிடித்தவர்கள்……

என எவரும் வாசிக்கலாம் இந்நூலை.

சத்யஸ்ரீ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது
அடுத்த கட்டுரைஎன் கண்களின் மழை