பேரழிவின் கதை – வாசிப்பு

வெள்ளையானை மின்னூல் வாங்க

வெள்ளையானை வாங்க

வெள்ளையானை வாழ்க்கை பதிவு மற்றும் வரலாற்று நிகழ்வு எனும் இரண்டு வடிவங்களுக்கும் இடையிலான சமரசம் செய்து கொள்ளாத புள்ளியில் உருவாகி தலித் இலக்கியத்தில் தவறவிடக்கூடாத முக்கியத்துவம் பெறுகிறது.

யானை தன் ஆற்றலை உணராமல்..கட்டப்பட்ட சங்கிலி எனும் அச்சத்தால், மனிதனுக்கு அடிமைப்பட்டுள்ளது.ஆயுதங்களுக்கு மட்டும்தான் அஞ்சவேண்டும் என்பதில்லை, இலகுவான சங்கிலிக்குக் கூட அடிமைப்பட்டு,அச்சப்பட்டு இருக்கலாம்.

இந்த தேசமும் அதன் மக்களும் உண்மையில் அப்படிப் பழக்கப்பட்ட யானைகள்தான் என்கிறார் ஆசிரியர்.இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், நடந்தேறியது.

அந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஏடனின்-ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்ட ஐரிஷ் சமூகக் குழுவினன் பார்வையில் விரித்துப் போகிறது நாவல்.

சென்னையில் வெள்ளை நகரம் கருப்பு நகரம் எனும் பிரிவுகள் இருந்ததாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.இந்த நூல் இதுவரை ஆவணப்படுத்தபடாத கருப்பு நகரத்தின் கதையைப் பேசுகிறது.

கருப்பு நகரம் பஞ்சம் பிழைக்க வந்த அகதிகளால் நிரம்பி வழியும் இருண்ட பிரதேசம். கருப்பு நகரம் எல்லாவற்றையும் தனக்குள் செரித்து வெறுமையையும் இருட்டையும் மட்டும் வெளியில் காட்டும் பாதாளம்.

சென்னையில் பணி புரிய வருபவன், இந்திய சமூகத்தின் மிக கோரமான முகத்தை காண்கிறான் ஏய்டன்.நாவலின் ஆணி வேர் ஐஸ் ஃபாக்டரியில் ஒரு கங்காணியால் இரு தொழிலாளர்கள் கடுமையாக வதைக்கப்படுவதைக் காண்கிறான் ஏய்டன். அதைப் பற்றி விசாரிக்கும் போது அவன் காத்தவராயனைச் சந்திக்க நேர்கிறது.விளக்குகளால்ஒளிரும் நகரத்திற்கு அப்பால் உள்ள இருண்ட சேற்றுக் குழியில் பயணிக்கிறான்.பஞ்சத்தின் மைய நிலப் பகுதிக்குள்-கருப்பு நகரத்திற்குள் பயணிக்கிறான்.உடைந்து சுக்குநூறாகி ஆனால்.. மீண்டு எழுகிறான்.

ஒரு பக்கம் ஊழல் மிகுந்த பிரித்தானிய நிர்வாகம் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது; மறுபக்கம் இந்திய மேட்டுக்குடி அந்த ஊழலின் சுரண்டல்களில் தனக்கான பங்கைக் கோரி நிற்கிறது.தன்னைத் தானே உண்ணலாமா..இந்த விசித்திரமான உயிர் குடிக்கும் கூட்டணி பருகிச் சென்ற உயிர்களின் சாட்சியாகக் கையறு நிலையில் நிற்கிறான்.பஞ்சம் பற்றிய அவனது உருக்கமான அறிக்கை பக்கிங்காம் பிரபுவால் அவருக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப் படுகிறது.

இறுதியில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.வரற்றின் முதல் எதிர்குரல் பதிவாகிறது.திருப்பித் தாக்கிவிடவில்லை, ஆனால் தன்னைச் சுழற்றி வீசி எறியப் புறப்பட்ட அநீதி சாட்டையைத் தடுத்து நிறுத்த துணிவு பிறந்தது.மாற்றத்திற்கான முதல் விதை முளையாய் வெளிப்பட்ட முதல் வரலாற்றுத் தருணம்.

ஏடன் கனவுகண்டது நடந்தது ஆனால் அந்த வரலாற்றுத் தருணம் அவனை மீறிய கரங்களால் அவனைக்கொண்டே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது தான் கொடுமையின் உச்சம்.

ஏடனின் சிக்கல் என்னவென்றால்,ஷெல்லியாக தன்னை கற்பனை செய்து, அதுவாக ஆக முயன்றுத் தோற்பது.ஷெல்லியால் இம்மண்ணில் காலூன்ற முடியாது என உணரும் தருணத்தில் அவனிடம் தோன்றும் நுண்ணிய மாற்றங்களை வாசகருக்கு உணர வைக்கும் இடம் ஆசிரியரின் வெற்றி!மொத்த மானுட இறப்பையும் புள்ளி விவரங்களாக, எண்ணிக்கைகளாக, தகவல்களாக தொகுத்து கொள்ளத் துவங்கிவிடுகிறான்.

குற்ற உணர்வு அலைக்கழிக்க.. ஏடன் மரிசாவிடம் செல்கிறான். அவள் அவனை அரவணைத்து மீட்டிருந்தால் ..அத்தளம் வாசகரை கவர்ந்திருக்காது; அவளுடைய நிராகரிப்புதான் இந்நாவலின் தனித்தன்மை.

இந்தப் பெரும் பஞ்சம் கொண்டு சென்ற பெரும்பாலான அடித்தட்டு மக்களின் உயிர்களுக்கும் பொறுப்பற்ற ஆங்கிலேயச் சுரண்டல் நிர்வாகம் தான் காரணம் எனஅடித்துக் கூறுகிறார் ஆசிரியர் .அவர்களின் நோக்கங்களையும், வழிமுறைகளையும், அதற்கு அவர்கள் உருவாக்கிக்கொண்ட வெற்று, கவைக்கு உதவாத நியாயங்களைப் பற்றியும் மிக விரிவாக பதிகிறார்.

அதிர்ச்சி அளிக்கும் விடயம் என்னவென்றால், சக இந்தியர்கள் இந்த பெரும் பட்டினிச் சாவைப் பொருட்படுத்தாமல் இருந்ததையும் சொல்லாமல் விடவில்லை.அவர்களும் தங்கள் பங்கிற்கு சுரண்டலுக்கு ஒத்துப் போனதையும் கூட பதிவு செய்கிறார்.நாவலின் செந்தழல் பகுதி..கண்களில் குருதி கொப்பளிக்கச் செய்யும் பகுதி-

ஏடன் பஞ்சத்தைப்பற்றிய தனது அறிக்கையை தயாரிக்க கோச்சு வண்டியில் வழித்துணையாக வந்த ஆண்ட்ரூசையும் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டிற்கு செல்லும் பகுதிதான்.

‘சாலைகளில் கையேந்தி அரற்றும் மக்கள், வண்டியையும் வெள்ளைத் தோல் மனிதனையும் கண்டதும் ஒளிவிடும் கண்களுடன் ரொட்டித் துண்டுக்காக உயிரின் கடைசி துளி ஆற்றலையும் திரட்டிக்கொண்டு வரும் ஜீவன்கள், குடல்களை உருவி உணவாக்கி கொண்டிருக்கும் நாய் நரிகள், பிணங்களாலும், பிணமாகிக் கொண்டிருப்பவர்களாலும் நிறைத்திருக்கும்.

“சாவதற்கு நாங்கள் எப்போது வாழ்ந்தோம்..?” ‘

அவர்களையும் மனிதர்களாக கண்ட ஆண்ட்ரூ ரொட்டித் துண்டுகளை வீசிவிட்டு, இறங்கி அந்த ஜனத் திரளில் தன்னை ஒருவனாக்கிக் கொள்கிறான்.

ஆதிக்க சாதியின் முகமாக வரும் முரஹரி ஐயங்கார்,செட்டிகள் மற்றும் நீலமேகம் போன்றோர் தராசின் ஒரு தட்டு என்றால் மறு தட்டில் -சீர்திருத்தவாதியாக..ஒடுக்கப்படும் மக்களின் தரப்பாக அன்று ஒரு குரல் கூட ஒலிக்கவில்லையா.. அல்லது பதிவாகவில்லையா..குழப்பம் தான் மிஞ்சுகிறது.

ஏடன், பார்மர், ஆண்ட்ரு, பிராண்ணன், போன்ற ஆங்கிலேயர்கள் மனித நேய பண்பு மிக்கவர்கள் என்றால் ..மெக்கென்சி, டியுக், ரஸ்ஸல் முதலானோர் அப்படியே ஏகாதிபத்தியத்தின் அச்சாக இருக்கிறார்கள் .இந்நூலை அதிகாரங்களுக்கு இடையிலான போராக கருதலாம்..அல்லதுசுய கண்டடைதல் குறித்தானது என்றும் கொள்ளலாம்.காத்தவராயன் முரஹரி ஐயங்காரை அவன் வணங்கும் பெருமாளின் வடிவில் கண்டு கொண்டதும் வைணவத்திலிருந்து வெளியேறுகிறான்.

கிறிஸ்துவின் முகம் ரோமானிய சீசரின் முகம் என உணர்ந்து, ஆதிக்கத்தின் முகத்தை கொண்ட கிறிஸ்துவை எய்டன் கைவிடுகிறான்.அவனுடைய இயேசுவை ஒரு வெள்ளையானை நசுக்கி கொன்றது என சொல்கிறான்.ஒரு மாயத் திரை விலகிவிட்டது.. அல்லது அவர்களின் மாயை அழிந்துவிடுகிறது.. இதனைசுய கண்டடைதல் ..தான் யார் என உணர்ந்த அற்புதத் தருணம்..அல்லது கடவுளைத் தொலைத்த கணம் ..அல்லதுஆன்மீக ஆதாரப் புள்ளியின் ஆரம்பமும், முடிவும்..என்றும் பெயரிட்டு அழைக்கலாம் போலிருக்கிறது ..!

ஷெல்லி – ஆந்தி கிறிஸ்து ஒப்புமை அருமை.படிமங்களின் பயன்பாட்டை .. தொப்பி, பங்கா, குதிரை, சாரட் வண்டி என எய்டனின் மனநிலையை விளக்குபவையாக நாவலில் உலா வருகின்றன.

டியுக்கின் அலுவலகத்தை, ஆடம்பரத்தை சித்தரிக்கும் விவரணைகள் அக்காலத்திற்கே இட்டுச்செல்கிறது.நியு இங்கிலாந்து ஏரியிலிருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட பனிபாளங்கள்தான் (ஐஸ்) வெள்ளையானை.

இந்திய மக்களை ..இந்த நிலப்பரப்பைச் சுரண்டிக் கொழுத்த மக்களின் மத்தியில் ஏடன்களைப் போன்றவர்கள் , எதற்கோ அஞ்சி, எதற்கோ கட்டுப்பட்டு காலம் தள்ளிய வெள்ளை மக்களின் மனச்சாட்சி தான், தன் தளைகளை அறுத்துக்கொள்ள இயலாத வெள்ளையானை.

அதுமட்டுமல்ல, இன்றும் சக மனிதர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு சாட்சியாக அறவுணர்வு அற்றுத் தூங்கி வழியும் சமூகமும் கூட ஒரு வெள்ளையானை தான்.

“எங்கே நம் நீதியுணர்ச்சி.. என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றில் அணையாது கிடக்கும் அந்த அனல் மீது நம் சமாளிப்புகளையும் வெட்டி தர்க்கங்களையும் அள்ளிப் போட்டு மூடிவிடக் கூடாது.”என்கிறார் ஆசிரியர் .

இந்நாவலை முடித்தபின் வெகு நாட்கள் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர அத்தனை சுலபமாக இருக்கவில்லை

சித்ரா ராஜ்

வாசிப்பை நேசிப்போம்

முந்தைய கட்டுரைஓயா மழை, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநோயும் மீள்வும் – கடிதம்