படிகங்கள் மீது எனக்கிருக்கும் பிரியமென்பது இளம்பருவத்திலேயே தொடங்கியது. அமெரிக்காவில் நான் பல படிகக்கண்காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் கண்மயங்கி, நினைவழிந்து அலையச்செய்யும் அனுபவங்கள்.
படிகங்களில் விலைமதிப்பு மிக்கது வைரம் அருமணிகள் பதினெட்டு என நம் மரபு வகுக்கிறது. நியூயார்க் அருங்காட்சியகத்தில் அருமணிகளான படிகங்களுக்கென்றே ஒரு கண்காட்சியை 2015ல் கண்டேன். நீர்த்துளி போன்ற வைரங்கள். குருதிபோன்ற பத்மராகங்கள், வசியம் செய்யும் நீலம்…
படிகங்கள் கிடைப்பதற்கு அரிதாக இருந்த காலத்தில் ஒவ்வொன்றும் பெரும்செல்வமாகக் கருதப்பட்டன. மன்னர்களின் அணிகளில் சுடர்ந்தன. தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டன.வைரங்களுக்காக போர்கள் நிகழ்ந்தன. வைரங்கள் பண்பாட்டின் அடையாளங்களாகவே ஆயின. கோகினூர், ஷாலிமார் போன்ற வைரங்கள் வெறும் படிகக்கற்கள் அல்ல, அவை வரலாற்றுச்சின்னங்கள். வைரங்களுடன் இணைக்கப்பட்ட தீயசகுனங்கள், தீய சக்திகள், தீயூழ்கதைகள் பல.
அருமணிகள் தெய்வீகமானவை என கருதப்பட்டமைக்கான முதன்மைக் காரணம் அவை அரியவை என்பதே. ஆனால்இன்று அவை கடலடியில் இருந்தும் நிலத்தடியில் இருந்தும் பெருமளவில் அகழப்படுகின்றன. ஆகவே வைரம் தவிர எவற்றுக்கும் விலை மதிப்பு இல்லை. பவளம், கோமேதகம், மரகதம் போன்ற அருமணிகளை பெரியபெரிய பாறைகளாக வெட்டி விற்பனைக்கு வைத்திருப்பதை சிங்கப்பூரில் காண முடியும். வைரம் அதை அகழும் ஆறு தென்னாப்ரிக்க நிறுவனங்களால் செயற்கையாக விற்பனைக் கட்டுப்பாடு செய்து, விலைநிர்ணயம் செய்து வைக்கப்பட்ட்ருக்கிறது என்கிறார்கள்.
படிகங்களிலேயே மலிவானது, நாம் ஒவ்வொருநாளும் கையாள்வது கண்ணாடி. செயற்கைப்படிகம் அது. அது வெறும் மணல்தான் என பலபேருக்குத் தெரியாது. சிறுவர்கள் அதைச் சொன்னால் நம்ப மாட்டார்கள். உயர்வெப்பத்தில் மணல் உருகும்போது ஒளியூடுருவும் கூழாகி, உறைந்தால் படிகமாகிவிடுகிறது என்று மகாபாரதக் காலகட்டத்திலேயே சீனர்கள் கண்டறிந்துவிட்டனர்.
(பொதுவாக கிமு ஒன்றாம் நூற்றாண்டில் சீனாவில் கண்ணாடி தயாரிப்பு தொடங்கியது என்று பல குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அக்கலை சீனாவில் தொடங்கிவிட்டது என்பதற்கான அண்மைக்காலச் சான்றுகள் உள்ளன. கிமு இரண்டாயிரத்திலேயே எகிப்தில் கண்ணாடிப்புட்டிகள் புழக்கத்தில் இருந்தன)
நாம் தொல்காலத்தில் கண்ணாடி தயாரித்தமைக்கான சான்றுகள் இந்திய இலக்கியங்கள் எதிலுமில்லை. யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறலை நாம் நீலநிறக் கண்ணாடிப்புட்டிகளில் வாங்கினோம் என்கிறார் மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார். அப்புட்டிகள் நீலநீர் நிறைந்த குளம்போலிருந்தன என்று ஔவையார் சொல்கிறார்.
கண்ணாடிப்புட்டி தயாரிக்கும் கலை சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது. ரோமாபுரிக் காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் குறிப்பாக துருக்கியில் கண்ணாடிப்பொருட்கள் ஏராளமாக தயாரிக்கப்பட்டன. அரச ஆதரவால் பின்னர் ரோமாபுரி அதில் மெல்ல மெல்ல நிபுணத்துவம் பெற்றது. அக்கலை பிற்காலப் பெல்ஜியத்தில் உச்சமடைந்தது. நீண்டகாலம் பெல்ஜியம் கண்ணாடியின் ஊரென்று அறியப்பட்டிருந்தது.
இந்தியாவில் நாம் கண்ணாடியை முகம்பார்க்கும் ஆடி, புட்டி என்னும் நிலையிலேயே பார்த்துவந்தோம். நம் அரசமாளிகைகளில் எங்கும் கண்ணாடிச்சாளரங்கள் இருக்கவில்லை. அதற்கான தேவை நம் தட்பவெப்பநிலையில் இல்லை.ஆனால் கண்ணாடி வந்ததுமே ஐரோப்பா அதன் முதற்பயன் சாளரத்தில் அமைப்பதே என்று கண்டுகொண்டது. கண்ணாடிச்சாளரங்கள் ஐரோப்பாவின் வாழ்க்கையை, அழகியல்பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தன.
இருண்ட நீண்ட குளிர்காலத்தில் கண்ணாடி பதிக்கப்பட்ட சாளரம் வீட்டுக்குள் வெளியுலகை கொண்டு வரமுடியும். வீட்டுக்குள் அது வானத்தையே திறந்து கொடுக்க முடியும். ஒரு கண்ணாடிச்சாளரத்தின் துணையுடன் வாழ்ந்துவிட முடியும் என்று புகழ்பெற்ற நாடகவசனம் ஒன்றுண்டு. கண்ணாடி என்பது எத்தனை பெரிய வாய்ப்பென அவர்களை கொந்தளிக்கச் செய்திருக்கும் என கற்பனைசெய்ய முடிகிறது.
கண்ணாடிச்சாளரம் என்னும் வடிவின்மேல் ஐரோப்பா பெரும் கற்பனையையும் உழைப்பையும் செலுத்தியுள்ளது. நிறமிலாக் கண்ணாடியை பலவகை உலோகஉப்புகளை கலந்து சுடுவதன் வழியாக வண்ணம் கொண்டதாக ஆக்கமுடியும் என்பது ஐரோப்பியக் கலையின் தொழில்நுட்பப் பாய்ச்சல்களில் முக்கியமானது. அதன்பின் ஐரோப்பிய ஓவியக்கலையே மாறிவிட்டது.
வெளியுலகைக் காட்டும் சாளரம் அந்த வெளியுலகு குளிர்காலத்தின் வெளிறிய சாம்பல்வண்ணம் கொண்டதாக இருக்குமென்றால் அதை மறைத்து வண்ணங்கள் பொலியும் ஒரு கற்பனை உலகை உருவாக்குமென்றால் எப்படி இருக்கும்? வெளியே உறைந்த பனிவெளி உருவாக்கும் வெண் வெளிச்சம் சாளரத்தின் வண்ணக்கண்ணாடி வழியாக வசந்தத்தின் வண்ணமலர்களாக பொலிய முடியும்!
கண்ணாடி உருகும் நிலையில் இருக்கையில் பல்வேறு ஆக்ஸைடுகள் (உப்புநிலை உலோகங்கள்) அதில் கலக்கப்பட்டு வண்ணக்கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. குருதிச் செவ்வண்ணத்துக்கு செம்பு ஆக்ஸைடு அல்லது மயில்துத்தம், நீலத்துக்கு கோபால்ட், ஆழ்சிவப்புக்கு மங்கனீஸ், பச்சைக்கு இரும்பு, மஞ்சளுக்கு அஞ்சனக்கல் எனப்படும் antimony. வண்ணக்கண்ணாடி என்பது வெறும் வண்ணப்பொருள் அல்ல. அது ஒளியுடன் கலந்து சுடர்விடத் தொடங்குகிறது. கண்ணாடியே வைரமாக, நீலமாக, மரகதமாக, கெம்பாக ஆகிவிடுகிறது.
வண்ணக்கண்ணாடிகளை வெட்டி ஒட்டி சாளரங்களில் ஓவியங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் ஒற்றைக் கண்ணாடியிலேயே உலோகக்கலவைகளால் ஓவியங்கள் வரையப்பட்டு சுட்டு உருக்கப்பட்டன. ரோமாபுரி – பைசாண்டிய சாளரக்கண்ணாடி ஓவியங்கள் உலகின் கலைச்செல்வங்கள். பெரும்பாலும் தேவாலயங்களில் இவை அமைக்கப்பட்டன. பைபிள் காட்சிகளே ஓவியங்களாயின. விண்ணின் ஒளி பெருகியிறங்குவதை இந்தக் கண்ணாடி ஓவியங்கள் காட்டுவதுபோல, பின்னர் அக்ரிலிக் வண்ணங்கள் வருவது வரை, எந்த ஓவியமும் காட்ட முடியவில்லை.
ஐரோப்பாவின் குளிர்காலம் மிகப்பெரிய உள்ளறைகளும் கூடங்களும் தேவையென்றாக்கியது. ஆண்டில் பலமாதங்கள் வாழ்க்கையே அங்கேதான். அறைகளும் கூடங்களும் பெரிதானபோது நிறைய ஒளிதரும் விளக்குகள் தேவையாயின. ஆகவே ஐரோப்பா விளக்குகளில் சோதனைகளைச் செய்துகொண்டே இருந்தது
அன்று விலங்குக்கொழுப்பில் விளக்கெரித்தனர்.கொழுப்பு விளக்கு லத்தீனில் கேண்டில் எனப்பட்டது. பின்னர் அது மெழுகுவத்திக்கான சொல் ஆகியது. அச்சொல்லில் இருந்து வந்தது சேண்ட்லியர் ( chandelier ) என்னும் பிரெஞ்சு மொழிச்சொல். சேண்ட்லியர் விளக்கு என்பது இன்றுவரை ஐரோப்பாவின் அழகியல் வடிவங்களிலொன்று. அங்கிருந்து இன்று நம் இல்லங்களிலும் வந்து தொங்குகிறது. (உலகின் மாபெரும் சாண்ட்லியர்கள்)
பெரிய நெருப்பு உள்ளறைகளில் புகையை நிறைத்தது. குளிருக்காக மூடிய அறைகளில் மூச்சடைப்பை உருவாக்கியது.சின்னச்சின்னச் சுடர்கள் கொண்ட மெழுகுவத்திகளை பெருந்தொகுப்பாக வைத்தால் புகை குறைந்து ஒளி மட்டும் வருவதை ஐரோப்பியர் கண்டுகொண்டனர். அந்த ஒளியை முத்துச்சிப்பிகளைக் கொண்டும் உலோகக்குவியாடிகளைக் கொண்டும் பெருக்கமுடியுமென பின்னர் அறிந்தனர். கண்ணாடிக்குமிழிகள், குவியாடிகள் மேலும் பயனுள்ளவை என அதன் பின் அறிந்தனர்
ஐரோப்பாவில் மெழுகுவத்தி விளக்குத்தொகைகளுடன் கண்ணாடி ஆடிகளை சேர்ப்பது வழக்கத்தில் இருந்தாலும் அதில் அடுத்த பாய்ச்சல் நிகழவில்லை. சன்னல்கண்ணாடிக் கலை ஐரோப்பாவில் உச்சமடைந்தபோது துருக்கி தூக்குவிளக்குகளில் சாதனைகளை நிகழ்த்தியது. அங்கிருந்து அந்தக் கலை ஐரோப்பாவுக்கு வந்து அரண்மனைகளையும் தேவாலயங்களையும் கண்ணாடிமலர்க்கொத்துக்களால் நிறைத்தது.
கண்ணாடித்தூக்குவிளக்கு என்பது ஒரு மலர்ச்செண்டை கண்ணாடியில் உருவாக்குவதே. கண்ணாடிக்குமிழிகள், குழாய்கள், சுருள்கள், வெவ்வேறு படிக வடிவங்கள். ஆனால் அடிப்படையில் அவை எல்லாமே அல்லிவட்டம் புல்லிவட்டமாக மலர்கள் அமைந்திருக்கும் ஒழுங்கை, மலர்க்கொத்துக்கள் அமைந்திருக்கும் இசைவை, இலைகளுடன் மலர்கள் கொண்டிருக்கும் ஒருமையை கண்ணாடியில் நகலெடுத்து வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளே.
ஐரோப்பா செல்பவர்கள் பிரான்ஸ், ரோம், ஜெர்மனி நாடுகளில் தவறவே விடக்கூடாதவை அங்குள்ள பெருந்தேவாலயங்களின் கண்ணாடிச் சாளரங்களும், மாபெரும் கண்ணாடிக் கொத்துவிளக்குகளும். பலர் ஒட்டுமொத்தமாக ஒரு முறை கண்ணோட்டிவிட்டு செல்வதை நான் காண்பதுண்டு. பல ஆயிரமாண்டுகாலம் பலநூறு பெருங்கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு பெருங்கனவை நாம் கண்முன் காண்கிறோம் என உணரவேண்டும். அது வெறும் ஆடம்பர அலங்காரம் அல்ல. இறைவன் மலரிலும் நீரிலும் வெயிலிலும் உருவாக்கிய அழகை கைதொடும் பொருளில் அள்ளிவிட மானுடன் செய்த மாபெரும் தொகைமுயற்சி.
வண்ணக்கண்ணாடி ஓவியங்கள், கண்ணாடிக் கொத்துவிளக்குகள் ஐரோப்பியக் கலையில் பரோக் என்னும் அழகியலை உருவாக்கின என்று சொல்வது பிழையல்ல. பரோக் கலை என்பது உரத்த உணர்ச்சிநிலைகளை தீவிரமான வண்ணங்களாலும், சிக்கலும் செறிவும்கொண்ட வடிவங்களாலும் வெளிப்படுத்துவது. அடங்கியகுரல், மென்மை, ஒத்திசைவு ஆகியவற்றை இலக்கணமாகக் கொண்ட கிரேக்கச் செவ்வியலுக்கு நேர் எதிரானது. கண்ணாடி ஓவியத்தில் எப்படி அடக்கமான வண்ணங்களை உருவாக்கமுடியும்?
பரோக் அழகியல் ஐரோப்பிய நிகழ்த்துகலை, இசை ஆகியவற்றையும் பாதித்தது. ஓப்பரா என்னும் கலைவடிவம் பரோக் அழகியல் கொண்டது எனலாம். மிகையழகு அதன் இயல்பு. (ஆகவே இயல்பழகியலின் சுவிசேஷகரான தல்ஸ்தோய் அதை வெறுத்தார்) மிகை என்பதனாலேயே சற்று ஒழுக்கமீறலும் அதிலுண்டு. ஓப்பரா என்னும் கலைவடிவம் கிரேக்க – கிறிஸ்தவ மரபை மீறிச்சென்று கெல்டிக் -நார்ஸ் தொன்மங்களை நோக்கிச் சென்றமைக்கும் இந்த அழகியலே காரணமாக இருக்கலாம்.
அமெரிக்கா இன்று கண்ணாடிக்கலையின் உலகளாவிய மையமாக ஆகிவிட்டிருக்கிறது. உலகின் மகத்தான கண்ணாடிக்கலைஞர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்க கலையார்வலர்களுக்குக் கண்ணாடிக்கலை மேல் தனித்த ஆர்வம் இருக்கிறது. உயர்தர நிறுவனங்களின் அறைகளில்கூட ஒரு கண்ணாடிச்சிற்பமோ அலங்காரப்பொருளோ இருப்பதை நான் பார்க்கிறேன். சாதாரண நுகர்பொருள் கடைகளில்கூட படிகப்பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. படிகம் மேல் அமெரிக்கா மோகம் கொண்டிருக்கிறது.
அதற்கான காரணங்களையும் நாம் யோசிக்கலாம். பரோக் கலைமனநிலையுடன் கண்ணாடிக்கலை கலந்துள்ளது- அடக்கமில்லாத கலை அது. கண்ணாடி ஒளிபட்டாலே கூவிச்சிரித்துக் கொண்டாடி ஆர்ப்பரிக்கும் பொருள். ஐரோப்பா நவீனத்துவம் உருவானதுமே பரோக் கலையை நிராகரிக்கும் உளநிலையை அடைந்துவிட்டது. சார்த்ர் உட்பட நவீனத்துவ முன்னோடிகளெல்லாருமே பரோக் கலை பற்றி இகழ்ந்தும் நிராகரித்தும் எழுதியுள்ளனர்.
ஆனால் அமெரிக்காவில் இன்றும் பரோக் கலை மீதான பற்று நீடிக்கிறது. அமெரிக்காவின் ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக இருக்கலாம். வெற்றியும் செல்வமும்தான் பரோக் கலையின் அடித்தளங்கள். ஐரோப்பாவிலும் அப்படித்தான் அது உருவானது. அல்லது அமெரிக்கா பல்லினக்கலாச்சாரம் கொண்டதாக ஆகி, பல்வேறு ஆசிய ஐரோப்பியக் கலைகளை இணைத்துக்கொண்டதன் வழியாக இருக்கலாம்.
அமெரிக்காவின் தெருக்கலை ( பார்க்க ) பரோக் கலையின் அழகியலைக்கொண்டது என்பதை எண்ணிப்பார்க்கிறேன். ஒரு விரிந்தபார்வையில் ஜாஸ், ப்ளூஸ், ராக் போன்ற இசைமரபுகளும் பரோக் அழகியலைக்கொண்டவையே. கூச்சலிடுபவை, அப்பட்டமானவை, கொந்தளிப்பவை. இதெல்லாம் எண்ணங்களே. கலைவிமர்சகர்கள்தான் எதையேனும் சொல்லமுடியும். இந்த எண்ணங்கள் எனக்கு இவற்றை தொகுக்க உதவுகின்றன.
அமெரிக்காவின் எல்லா முக்கியமான நவீனக்கலை அருங்காட்சியகங்களிலும் கண்ணாடிச்சிற்பங்கள் உள்ளன. அமெரிக்காவின் மிகச்சிறந்த பத்து கண்ணாடி அருங்காடியகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பத்து கண்ணாடி அருங்காட்சியகங்கள்) பத்து சமகாலக் கண்ணாடிக்கலை நிபுணர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர் ( பத்து கண்ணாடிக்கலை நிபுணர்கள்)
2015ல் நான் சிவா சக்திவேலுடன் டொலிடோ நகரின் கண்ணாடி அருங்காட்சியகத்தைப் பார்த்திருக்கிறேன். 1901ல் எட்வர்ட் லிப்பே (Edward Libbey) என்பவர் அமெரிக்காவில் நிறுவிய Libbey Glass Company யின் சேகரிப்புகளை அருங்காட்சியகமாக வைத்தார். ஐந்தாயிரம் கண்ணாடி கலைப்பொருட்கள் கொண்டது இது. ஒருகாலத்தில் டொலிடோ கண்ணாடிக்கலையின் மையமாகவே புகழ்பெற்றிருந்தது.வாஷிங்டன் டகோமாவிலுள்ள உலகின் மிகப்பெரிய கண்ணாடிக்கலை அருங்காட்சியகத்தை 2019ல் பார்த்தேன். (Museum of Glass).
இம்முறை சியாட்டிலில் உள்ள புகழ்பெற்ற Chihuly Garden கண்ணாடிக் காட்சியகத்தைப் பார்த்தேன். அமெரிக்காவின் முதன்மையான கண்ணாடிக்கலை மேதையான டேல் சிகுலே (Dale Chihuly) உருவாக்கியது இந்த மையம். அவருடைய கலைப்படைப்புகள் மட்டும் கொண்டது. வாஷிங்டனின் கண்ணாடிக்கலை அருங்காட்சியகமும் சிகுலே பங்களிப்புடன் உருவானதுதான்.
1941ல் வாஷிங்டன் டகோமாவில் பிறந்த சிகுலே ஸ்லோவாகிய பின்னணி கொண்டவர். சிகுலே வெனிஸ் சென்று ஐரோப்பியக் கண்ணாடிக்கலை நிபுணர்களிடம் நேரில் கண்ணாடிக்கலையை கற்றுத்தேர்ந்தபின் அமெரிக்கா மீண்டு கண்ணாடிச் சிற்பங்களைச் செய்யலானார். சிகுலே புகழ்பெற்ற சில கொத்துவிளக்கு வடிவங்களை உருவாக்கியமையால் புகழ்பெற்றார். கொத்துவிளக்குகள் மேல் தீராத மோகம் கொண்டவர்.
சிகுலேயின் ஆர்வம் கண்ணாடியின் ’குழைவு’ என்னும் இயல்பில் நிலைகொள்வதை காணலாம். கொடிகளின் குழைவு, மலரிதழின் குழைவு ஆகியவற்றை கண்ணாடி அற்புதமாக நடித்துக் காட்டுகிறது. கண்ணாடியில் எழுந்த மலர்கள் மலர்களின் குழைவை மேலும் குழைத்து ஒளிகொள்கின்றன. நெளிந்து நெளிந்துசெல்லும் கண்ணாடி ஓடைகள் சிகுலேயின் கலையின் அடிப்படைகளாக அமைகின்றன.
சியாட்டிலின் சிகுலே கண்ணாடிக் கலை மையத்தின் முதன்மைக்கரு என்பது நீர்த்தாவரங்கள்தான். அவை விந்தையான ஓர் இணைவு கொண்டவை. கொடிகளிலேயே குழைவு உள்ளது. நீரலைகளில் மேலும் குழைவு உள்ளது. நீர்த்தாவரங்களில் அந்த இரு குழைவுகளும் இணைகின்றன.சிற்பம் என்னும் அசைவின்மையில் அசைவின் அத்தனை அழகுகளையும் கொண்டுவந்துவிடத் துடிக்கும் எழுச்சி என சிகுலேயின் இந்த கண்ணாடிக்கலையைச் சொல்லலாம்.
வெவ்வேறு கண்ணாடிச்சிற்பங்கள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தபோது நீருக்கடியில் ஒரு வண்ணத்தாவர உலகுக்குள் சென்றுவிட்டதுபோலவே உணர்ந்தேன். அலையும் குளிர்த்தழல்கள். நாகமென உயிர்கொண்டு நெளிந்து, விழிநிலைத்ததும் கடற்கொடியெனக் காட்டி, ஆம் நான் படிகமே எனத் தெளியும் வழிவுகள். நீர்நீலம். தீச்சிவப்பு. உதயப்பொன். அந்திப்பொன். நீரடியில் நெளியும் சூரிய ஒளியின் அலைவடிவங்கள்.
கலை என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமான ஒரு போட்டி. படைப்பை மறுபடைப்பாக்கும் அறைகூவல். இங்குள்ளவை நாமறியாப் பொருள்கொண்டவை. கலை நமக்காக நாம் சமைத்துக்கொண்டது. ஆகவே மேலும் இனியது.